மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை இஸ்லாம்

குற்றம் பார்க்கில்..!
மு.முகம்மது யூசுஃப், நவம்பர் 16-30


"இறைநம்பிக்கை கொண்டவர்களே! அதிகமாக சந்தேகம் கொள்வதைத் தவிர்த்து விடுங்கள். ஏனெனில், சில சந்தேகங்கள் பாவமாக இருக்கின்றன. மேலும் துப்பறிவதில் ஈடுபடாதீர்கள். இன்னும் உங்களில் ஒருவர் மற்றவரைப் பற்றி புறம் பேச வேண்டாம்.' (திருக்குர்ஆன் 49:12)

இறைவனை ஏற்றுக்கொண்ட ஒரு நல்லடியான் இவ்வுலகில் மற்ற சகோதரர்களோடு எப்படி வாழவேண்டும் என்பதற்குச் சரியான வழிகாட்டுதலையும் அதன் அளவுகோல்களையும் மிகத் தெளிவாக மேலே குறிப்பிட்ட திருமறை வசனம் மூலம் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

ஒட்டுமொத்த மனித குலமும் படைக்கப்பட்டது உலகத்தில் அவர்கள் சுபிட்சத்தோடும் அமைதியோடும் சகோதர, சமத்துவத்தோடும் வாழவேண்டும் என்பதற்காகவே! மனிதர்கள் தவறு செய்பவர்களாகவும் குற்றம் செய்யக்கூடியவர்களாகவும் இருப்பதில் வியப்பு ஒன்றும் இல்லை. ஒருவரோடு ஒருவர் ஒப்பிட்டுப் பார்க்கும்போது விகிதாச்சார அடிப்படை மாறுமே அன்றி குற்றமற்ற ஒருவனை இவ்வுலகில் காண்பது அரிதிலும் அரிதான செயல். ஏனென்றால் வெளித்தோற்றத்திற்குப் புலப்படாத அவனுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையே உள்ள விஷயங்கள் ஏராளம் ஏராளம். அந்தரங்கமான விஷயங்களை அறிந்தவன் அல்லாஹ் ஒருவன்தான்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு மனிதனின் நல்ல விஷயங்களை ஏற்றுக் கொண்டு அவனை மதிக்கத் தெரிந்தவனே உண்மையான நண்பன். ஒரு சகோதரனிடம் இருக்கும் நல்லவற்றைப் பாராமல் அவனைத் துருவித் துருவி ஆராய்ந்து அவற்றில் ஏதாவது குற்றம் குறைகள் உள்ளனவா என்று ஆராய ஒருவன் முனைவானேயானால் குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பதற்கிணங்க அவனைச் சுற்றிச் சூழ்ந்த உறவுகளும் நட்புகளும் விலகிப் போய்விடும்.

அதை விடுத்து ஒருவரின் குணநலன்களில் உள்ள நிறை குறைகளை எடை போட்டுப் பார்த்து அவரிடம் உள்ள நல்ல குணங்களை அதிகமாய் கணக்கிட்டு அவரோடு நட்பு பாராட்டத் தலைப்படுவது ஓர் ஆரோக்கியமான சமுதாய கட்டுக்கோப்பை ஏற்படுத்தித் தரும். மாறாக ஒருவன் மற்றவனின் குறைகளையே குறியாகக் கொண்டு இருப்பானேயானால் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் நயவஞ்சகத்தனத்திற்கு அது அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து விடும். சைத்தான் அந்த வழியிலேயே அந்த மனிதனை வழிநடத்தி அவனை இறுதியில் துக்கத்திலும் துயரத்திலும் ஆழ்த்தி, தவிர்க்க முடியாத பிரச்னைகளுக்கு ஆளாக்கி விட்டு விடுவான்.

"..இன்னும் உங்களில் ஒருவர் மற்றவரைப் பற்றி புறம் பேச வேண்டாம். உங்களில் எவரேனும் இறந்துவிட்ட தன் சகோதரரின் இறைச்சியை உண்ண விரும்புவாரா, என்ன? பாருங்கள்! நீங்களே அதனை அருவருப்பாய்க் கருதுகின்றீர்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; திண்ணமாக, அல்லாஹ் பாவமன்னிப்புக் கோரிக்கையைப் பெரிதும் ஏற்றுக் கொள்பவனாகவும், பெரும் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.' (திருக்குர்ஆன் 49:12)

அதனால்தான் பிறர் குறைகளைப் பற்றி எண்ணத் தலைப்படாதே! தன்னிடம் உள்ளது அதைவிட மிக அதிகமானதாக இருக்கும். ஆனால் பிறரிடம் உள்ள நல்லவற்றிலிருந்து நீ உனக்குப் பாடத்தை எடுத்துக்கொள் என்று மிக அழகாகக் கூறிவிட்டு அடுத்ததாகப் புறம் பேசுதலை மிக வன்மையாகக் கண்டிக்கிறது திருக்குர்ஆன். பிறரிடம் உள்ள குறைகளை மற்றவர்களிடம் பேசுவது என்பது புறம் ஆகாது. ஏனென்றால் அவனிடம் உள்ள குறையைத்தானே சொல்கிறேன் என்ற கருத்து பரவலாக நம்மிடையே நிலவி வருகிறது. ஒருவனிடம் இருப்பதைச் சொல்வதுதான் புறம். அவனிடம் இல்லாததைச் சொல்வது இட்டுக்கட்டுதல், அபாண்டம், பழி சுமத்துதல் ஆகும்.

இறைவன் புறம் பேசுதலையே மன்னிக்க முடியாத பெரும் பாவமாக எடுத்துரைக்கும்போது இட்டுக்கட்டுதல், அவதூறு செய்தல் என்பது அதைவிடப் பல மடங்கு தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும். ஒருவன் தன் சகோதரன் பிணமான நிலையில் அவனது மாமிசத்தை உண்ண விரும்பினால் அவன் புறம் பேசட்டும் என்றும் அல்லாஹ் எச்சரிக்கை விடுக்கின்றான். அப்படியானால் அப்படிப்பட்ட கல்நெஞ்சம் கொண்டவன்தான் புறம் பேசுவான். அதற்கு மிகப் பெரிய தண்டனை காத்திருக்கிறது. ஒருவன் உஹத் மலை அளவு நன்மைகளை மறுமையில் கொண்டு சென்றாலும் அதனை முழுமையாக கரையான் தின்பதுபோல புறம் தின்றுவிடும். நாளை இறுதித் தீர்ப்பு நாளில் மிகவும் கைசேதப்பட்டவனாக கவலையோடு தவித்துக் கொண்டு இருப்பான்.

"ஓர் அடியான் பிறரின் குறைகளை இவ்வுலகில் மறைத்தால் இறைவன் மறுமையில் அவனுடைய குறைகளை மறைத்து மன்னித்து விடுகின்றான்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

"இறையில்லம் கஅபாவின் புனிதத்தை விட ஓர் இறைநம்பிக்கையாளனின் அந்தரங்கம் புனிதமானது' என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

புறம் பேசுதலைத் தவிர்த்து அறத்தை தன் வாழ்வில் கொண்டு சிறப்பது இறைநம்பிக்கையாளரின் அடையாளங்களில் ஒன்று.

 

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்