மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை இஸ்லாம்

உஹதில் நபிகளார்(ஸல்)..!
மௌலவி முஹம்மது சித்தீக் மதனி, நவம்பர் 16-30


நபி(ஸல்) அவர்கள் உஹத் போரில் கொல்லப்பட்டு விட்டார்கள் என்ற வதந்தி பரவியது. அதைக் கேட்ட சில நபித்தோழர்கள் போர்க்களத்தை விட்டுச் சென்றனர். அப்போது கஅப் பின் மாலிக்(ரலி) நபிகளார் எங்கே இருக்கிறார்கள் என்று தேடி வந்தார். இறுதியில் கண்டுபிடித்து விட்டார். உடனே அவர் உரத்த குரலில், "முஸ்லிம்களே! இதோ நற்செய்தி! நபி(ஸல்) அவர்கள் உயிருடன்தான் இருக்கிறார்கள்' என்று கூற முயன்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், அவரை அவ்வாறு அறிவிக்க வேண்டாம் என்று தடுத்தார்கள்.

இந்தச் செய்தியை அறிந்து கொண்ட சில நபித்தோழர்கள் மீண்டும் போர்க்களத்திற்கு வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் இருக்கும் இடத்திற்கு விரைந்தார்கள். அந்த நேரத்தில் உபை இப்னு கஅப் வந்தான். முஹம்மது(ஸல்) எங்கே? என்று கேட்டான். "அவர் உயிருடன் இருந்தால் நான் உயிருடன் இருப்பதில் அர்த்தமில்லை!' என்று கூறினான். நபி(ஸல்) அவர்கள் ஓர் ஆயுதத்தை எடுத்து அவனைத் தாக்கினார்கள். அவன் ஓடிவிட்டான். பின்னர் அவன் மக்கா திரும்பும்போது இறந்து விட்டான். (முஹாளரா, பக்கம் 152)

நபி(ஸல்) அவர்கள் இந்தப் போரில் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். ஆனால் இறைவன் அவர்களுக்கு அளித்த மன வலிமையைக் கொண்டு அவற்றைத் தாங்கிக் கொண்டார்கள். அபூ ஆமிர் என்பவன் ஆழமான பல பள்ளங்களைத் தோண்டினான். அதன் மேல்புறத்தை மூடினான். அதில் முஸ்லிம்கள் விழவேண்டும் என்பதற்காக! ஆனால் நபியவர்கள் ஒரு பள்ளத்தில் விழுந்து விட்டார்கள். இதனால் மயக்கமுற்றார்கள். அவர்களின் இரண்டு கால் முட்டிப் பகுதியில் படுகாயம் ஏற்பட்டது.

அலீ(ரலி) நபியவர்களின் கையைப் பிடித்தார்கள். தல்ஹா(ரலி) நபியவர்களைப் பள்ளத்திலிருந்து தூக்கினார்கள். அப்போது திடீரென உத்பா பின் அபீ வக்காஸ் நபி(ஸல்) அவர்கள் மீது கல் எறிந்தான். அது நபியவர்கள் மீது பட்டது. பற்கள் உடைந்து விட்டன. அவனை ஹாத்திப் பின் அபீ பல்தஆ(ரலி) பிடித்துக் கொன்றுவிட்டார்.

அண்ணலாரின் திருமுகத்தை இப்னு கமீஆ என்பவன் தலைக் கவசத்தால் அடித்தான். அதன் இரண்டு வளையங்கள் நபி(ஸல்) அவர்களின் கன்னத்தில் குத்தியது. அதனால் கன்னத்தில் காயம் ஏற்பட்டது. அபூ உபைதா(ரலி) குத்தியதை வெளியில் எடுத்தார். அப்போது நபி(ஸல்) அவர்களின் இரண்டு பற்கள் உடைந்தன.

அல்லாஹ்வின் அதிகாரம்

அப்போது நபி(ஸல்) அவர்கள் "தங்களுக்கு அனுப்பப்பட்ட நபியையே காயப்படுத்திய சமூகம் எவ்வாறு வெற்றி அடையும்?' எனக் கூறியபோது அல்லாஹ் பின்வரும் திருக்குர்ஆன் வசனத்தை இறக்கினான். "(நபியே! தீர்ப்பு வழங்குவதற்கான) அதிகாரத்தில் உமக்கு யாதொரு பங்குமில்லை; அவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதோ அல்லது அக்கிரமக்காரர்களாய் இருப்பதால் அவர்களுக்குத் தண்டனை அளிப்பதோ அல்லாஹ்வின் அதிகாரத்திற்கு உட்பட்டவையாகும். (திருக்குர்ஆன் 3:128)

நபி(ஸல்) அவர்கள், சஃது பின் அபீ வக்காஸ்(ரலி), சஃது பின் உபாதா(ரலி) ஆகிய இரு தோழர்களுக்கு இடையில் கணவாயை நோக்கி நடந்தார்கள். அபூபக்கர்(ரலி), உமர்(ரலி), அலீ(ரலி), ஸுபைர்(ரலி), ஹாரிஸ் இப்னு அஸ்சிம்மா(ரலி) ஆகியோர் உடன் இருந்தனர்.

காயத்துக்கு மருந்து

நபி(ஸல்) அவர்கள் கணவாயை அடைந்தபோது ஃபாத்திமா(ரலி) ஓடி வந்தார். நபி (ஸல்) அவர்கள் மீது படிந்திருந்த இரத்தக் கறையைக் கழுவினார். அலீ(ரலி) நபியவர்கள் மீது தண்ணீரை ஊற்றினார். பின்னர் ஃபாத்திமா(ரலி) கோரைப்பாயின் ஒரு துண்டை எடுத்து அதை எரித்து அதன் சாம்பலை காயத்தின் மீது வைத்தார்கள். இரத்தம் நின்று விட்டது.

நபி(ஸல்) அவர்கள் கணவாயில் இருந்த ஒரு பாறையின் மீது ஏறுவதற்கு முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்களால் ஏறி நிற்க முடியவில்லை. காரணம் அதிகமான இரத்தம் நபி(ஸல்) அவர்களின் உடலிலிருந்து வெளியேறிவிட்டது. நபியவர்களை தல்ஹா பின் உபைதுல்லா சுமந்து சென்று மலையின் மீது அமர வைத்தார். அந்த மலையின் மீது இணைவைப்பாளர்களின் ஒரு கூட்டம் இருந்ததை நபி(ஸல்) அவர்கள் கண்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் "அவர்கள் இங்கே இருப்பது சரியில்லை! இறைவா உன்னைக் கொண்டே தவிர எங்களுக்கு வேறு சக்தி இல்லை!' என்று கூறினார்கள்.

பின்னர் நபி(ஸல்) அவர்கள் உமர் பின் அல் கத்தாப்(ரலி) அவர்களை ஒரு குழுவோடு அனுப்பினார்கள். அந்தக் குழு அங்கிருந்த  இணைவைப்பாளர்களைத் துரத்தி அடித்து மலையை விட்டும் கீழே இறக்கிவிட்டார்கள். (நூருல் யகீன்; பக்கம் 131)

இவ்வாறாக நபி(ஸல்) அவர்கள் இந்தப் போரில் பல துன்பங்களை அனுபவித்தார்கள். அவர்களுக்குப் பெரிய பாதிப்பு ஏற்பட்டது.

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்