மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

அரசியல்பொருளாதாரம்

தமிழ்நாட்டில் தட்டச்சு மறுமலர்ச்சி
வாஜித் ஷா (கல்வியாளர்), நவம்பர் 16-30


தமிழ்நாட்டில் தட்டச்சு கற்பதில் மிகப் பெரிய அளவில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதற்கு தட்டச்சுத் தேர்வெழுதுவோரின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதே முக்கிய சான்றாக உள்ளது. தமிழ்நாட்டில் தேர்வெழுதுவோரின் எண்ணிக்கையை மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டுப் பார்ப்போம். தெலுங்கானாவில் சுமார் 7000, 8000 பேரும், கர்நாடகாவில் சுமார் 12,000 பேரும், மகாராஷ்டிரத்தில் சுமார் 6,000 பேரும் தேர்வெழுதுகின்றனர். தமிழகத்தில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை 3 இலட்சம் பேர் தட்டச்சு அரசுத் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு எழுதுபவர்களைப் போலவே பல மடங்கு மாணவ, மாணவிகள் தட்டச்சு கற்கின்றனர்.

கணினியின் தாக்கம் ஏற்பட்ட தொடக்கத்தில் தட்டச்சு கற்பவர்கள், தேர்வெழுதுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்தது. அதாவது ஆறு மாதத்திற்குத் தேர்வெழுதுபவர்கள் சுமார் 40,000 என்கிற நிலைக்குச் சரிவு ஏற்பட்டது. ஆனால் தொடர்ந்து மேற்கொண்ட நீண்டகால நோக்கினைக் கருத்தில் கொண்டு எடுத்த பெருமுயற்சியின் விளைவாக தட்டச்சின் முக்கியத்துவம் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது.

ஏன் தட்டச்சு கற்க வேண்டும்?

கணினி விசைப்பலகையை வேகமாக இயக்க தட்டச்சுப் பயிற்சி அவசியமானது. முன்பு தட்டச்சுப் பணிக்கு மட்டுமே தட்டச்சு தேவை. ஆனால் இப்பொழுது கணினி சார்ந்த அனைத்துப் பணிகளுக்கும் விசைப் பலகையை இயக்க தட்டச்சு தேவைப்படுகிறது.

தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவதற்குத் தேவைப்படும் மொழி அறிவு, கம்யூனிகேஷன் திறனைப் பெறுவதற்குத் தட்டச்சு பயன்படுகிறது. குறிப்பாகக் கடிதம் எழுதும் ஆற்றலை அதிகரிக்க தட்டச்சு இரண்டாம் தாள் பயிற்சி தேவைப்படுகிறது. தட்டச்சு பாடமுறைத் தேர்வில் அலுவலகத் திறனை வளர்ப்பதற்கு முக்கியத்தும் உள்ளது. எனவே தட்டச்சு கற்றவர்களால் திறமையாக தனியார் நிறுவனங்களில் வேலை செய்ய முடிகிறது.

அரசுப் பணியில் சேருவதற்கு அரசு தட்டச்சுத் தேர்வுச் சான்றிதழ் பெருமளவு பயன்படுகிறது. உதாரணமாக டி.என்.பி. எஸ்.சி. குரூப் 4 தேர்வில் சுமார் 5,000 பணியிடங்களுக்கு 20 இலட்சத்திற்கும் மேலாக விண்ணப்பிக்கின்றனர். இதில் சில பணிகள் தட்டச்சு சார்ந்தவை. தமிழ், ஆங்கில தட்டச்சு முதுநிலை சான்றிதழ் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்தப் பணிகள் வழங்கப்படும். தட்டச்சு சான்றிதழ் பெற்றவர்களுக்குப் போட்டி ஓரளவு குறைவதுடன் குறைந்த கட் ஆஃப் மதிப்பெண்களுக்கு அரசு வேலை சாத்தியமாகிறது. இந்தக் காரணத்திற்காகவே தமிழ்நாட்டில் பலர் தட்டச்சு முதுநிலைத் தேர்வில் பங்கேற்கின்றனர் என்றால் அது மிகையாகாது.

வேகமாகத் தட்டச்சு செய்ய என்ன செய்ய வேண்டும்?

தொடுமுறைப் பயிற்சியால் வேகமாகத் தட்டச்சு செய்ய முடியும். விசைப்பலகையை பார்த்துப் பார்த்து இரு விரல்களைப் பயன்படுத்தி டைப் செய்யும்போது வேகம் குறைவாக இருக்கும். ஆனால் தொடுமுறை பயிற்சியில் அதாவது விசைப்பலகையைப் பார்க்காமல் டைப் செய்யும்போது வேகமாக டைப் செய்ய முடியும்.

உதாரணமாக திருக்குறளை மாணவர்களை எழுதச் சொன்னால் பார்த்துப் பார்த்து எழுதும்போது வேகம் குறைவாக இருக்கும். நாற்பது ஐம்பது முறை எழுதினால் வேகம் அதிகரிக்கும். பிறகு புதிதாக ஒரு திருக்குறளை எழுதச் சொன்னால் மீண்டும் வேகம் குறைந்துவிடும். நாற்பது ஐம்பது முறை எழுதினால் வேகம் அதிகரிக்கும். அதாவது திரும்பத் திரும்ப எழுதுவதன் மூலமாகத் திருக்குறள் மனப்பாடம் ஆகிவிடுகிறது. மனப்பாடமான திருக்குறளைக் கை வேகமாக எழுதுகிறது. பலமுறை எழுதிய பிறகு கிடைக்கும் வேகம் ஏன் தொடக்கத்தில் வருவதில்லை? சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் வேகமாக எழுதுவது கையின் திறன் என்பதை விட மனப்பாடம் செய்யும் திறனைப் பொறுத்தது. மனப்பாடம் ஆன ஒன்றைக் கையால் வேகமாக எழுத முடியும்.

இதே போல விசைப்பலகையில் எழுத்து இருக்குமிடத்தைத் தொடு உணர்வு மூலமாக மனப்பாடம் செய்துவிட்டால் கை வேகமாக டைப் செய்யும். இதற்குத் தேவையான, முறையான பயிற்சியைத் தட்டச்சு பயிலகங்களில் மாணவ மாணவிகள் பெறுகின்றனர்.

புதியதோர் கீ போர்டு செய்வோம்

குறிப்பிட்ட தேவைக்காகப் புதிய கீ போர்டைப் பயன்படுத்தலாம். வெகுஜன பயிற்சிக்கும் அரசுத் தேர்வுக்கும் தற்போதைய டைப்ரைட்டர் நடைமுறையைத் தொடர வேண்டும். பின்வரும் ஆலோசனைகள் நீண்டகால நலனிற்காகக் கூறப்படுகிறது. தட்டச்சுப் பயிலக வகுப்பறைப் பயிற்சிக்கு எந்தத் தொழில்நுட்பமும் ஈடாகாது. டைப் ரைட்டர்கள் உள்ளவரை தற்போதைய நடைமுறைகளை மாற்றக்கூடாது.

டைப்ரைட்டர்களில் பயன்படும் 135 ஆண்டு பழமையான (குவர்டி கீ) போர்டு இன்றளவும் தாக்குப் பிடித்திருப்பது வியப்பான ஒன்றாகும். லன்தம் ஷோல்ஸ் என்பவர்தான் தற்போதைய கீ போர்டை உருவாக்கினார். அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பிறகு துப்பாக்கிகளைத் தயாரிக்கும் இயந்திரங்களை என்ன செய்வது என்கிற கேள்வி எழுந்தது. லன்தம் ஷோல்ஸ் குழுவினர் டைப்ரைட்டர்களை வணிக ரீதியாக உற்பத்தி செய்வதற்குத் திட்டம் மேற்கெண்டனர். 1,000 டைப்ரைட்டர்களை உருவாக்கத் துப்பாக்கி தயாரிக்கும் இயந்திரங்களைப் பயன்படுத்தி வெற்றி பெற்றனர். தற்போதைய விசைப்பலகை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அகர வரிசையில் அமைக்காமல் அறிவியல் ரீதியாக அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. நமது விரலின் வலிமை விரலுக்கு விரல் மாறுபடுகிறது. ஆங்கில எழுத்தில் சில எழுத்துகள் பல முறையும் சில குறைவான முறையும் வருகிறது. அடுத்தடுத்து வருவதற்கு முக்கியத்துவம் அளித்து உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கணினிக் காலத்திலும் மெக்கானிக்கல் கீ போர்டு பயன்படுத்துவதில் பல சாதகங்கள் உள்ளன. எனினும் சில மாற்றங்கள் தேவைப்படுகின்றன. குறிப்பிட்ட தேவைகளுக்காகப் புதிய கீ போர்டுகள் தேவைப்படுகின்றன.

சிலருக்கு ஒரு கை மட்டுமே இருக்கும். சிலர் சில விரல்களை இழந்தவர்களாக இருப்பார்கள். அவர்களின் நிலைக்கேற்ப தட்டச்சு செய்வதற்குப் பர்சனல் கீ போர்டு தேவை. சாதாரணமாக இரு கைகளைப் பயன்படுத்தி டைப்ரைட்டரில் தட்டச்சு செய்கிறோம். சிலருக்கு பிரத்யேகமான டைப் ரைட்டர் தேவைப்படுகிறது. இருசக்கர வாகனங்களை மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ப மாற்றி பயன்படுத்துவதுபோல கீ போர்டிலும் சில மாற்றங்கள் செய்து பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இதனால் மாற்றுத் திறனாளிகளும் தட்டச்சு சார்ந்த பணிகளை மேற்கொள்ள முடியும்.

வேகமாக டைப் செய்வதற்குத் தடையாக தற்போதைய கீ போர்டில் சில குறைகள் உள்ளன. லன்தம் ஷோல்ஸ் கீ போர்டை உருவாக்கும்போது ஏற்பட்ட முக்கிய பிரச்னை கீ போர்டு ஜாம் ஆவதுதான். எனவே வேகத்தைக் குறைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

1. வலது கைக்கு நாற்பது விழுக்காட்டை விட குறைவான தட்டச்சுப் பணியும் இடது கைக்கு 60 விழுக்காட்டிற்கும் அதிகமான தட்டச்சுப் பணியும் ஒதுக்கி கீ போர்டு அமைக்கப்பட்டுள்ளது.

2. ஆங்கிலத்தில் அதிகமாக வரும் எழுத்து E இதற்குக் குறைந்த முக்கியத்துவம் உள்ள மேல் வரிசையில் இடது கையில் நடுவிரலுக்கு ஒதுக்கப்பட்டது.

3. அதிக வலிமையுடைய வலது கையின் ஆள்காட்டி விரலுக்கு ஆங்கிலத்தில் குறைவாக வரும் U எழுத்து ஒதுக்கப்பட்டது. எனவே தற்போதைய கீ போர்டு வேகமாக டைப் செய்யப் பயன்படுகிறது என்பதை விட வேகத்தைக் குறைக்கும் ஸ்பீடு பிரேக்கராக உள்ளது என்கிற கருத்து நிலவுகிறது. கணினியில் கீ போர்டில் ஜாம் ஆகும் பிரச்னை இல்லை. எனவே மிக வேகமாக இயக்க கீ போர்டில் பல மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். புதிய கீ போர்டு தேவை என்கிற போதிலும் தட்டச்சுத் தேர்வை கணினியில் நடத்துவது ஏற்புடையது அல்ல. தட்டச்சுப் பயிலகங்கள் பலவற்றிற்குப் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் கணினியை வேகமாக இயக்கும் பயிற்சிக்கும் இடையூறாக அமையும். புதிய கீ போர்டை சமூக அக்கறையுடனும் விவேகத்துடனும் நடைமுறைப்படுத்தலாம்.

மதுரை உயர்நீதிமன்றம் தட்டச்சுத் தேர்வை தடை செய்தது ஏன்?

தட்டச்சுத் தேர்வில் முதல் தாள் இரண்டாம் தாள் என இரண்டு பகுதிகள் உள்ளன. வேகமாக டைப் செய்வதை முதல் தாள் சோதிக்கிறது. அலுவலகத்தில் வேலை செய்யப் பயன்படும் தகவல்களை அட்டவணையிடுவது, கடிதம் டைப் செய்வதை இரண்டாம் தாள் சோதிக்கிறது. சுமார் 75 ஆண்டுகளாக வேகத்தாள் முதலிலும் அட்டவணை, கடிதம் இரண்டாவதாகவும் வரிசைப்படுத்தித் தேர்வை தொழில்நுட்ப இயக்ககம் நடத்தி வந்தது. கடந்த பிப்ரவரி 2022 தேர்வில் இந்த முறையை மாற்றி இரண்டாம் தாளை முதலாவதாகவும் வேகத்தைச் சோதிக்கும் தாளான முதல் தாளை இரண்டாவதாகவும் நடத்தியது.

இந்த மாற்றத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. தனி நீதிபதி பழைய முறையைத் தொடர உத்தரவிட்டார். மேல்முறையீட்டில் தனி நீதிபதியின் உத்தரவிற்குத் தடை விதிக்கப்பட்டதுடன் தட்டச்சுத் தேர்வை நடத்தவும் மதுரை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. எனவே செப்டம்பர் 24, 25ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த தட்டச்சுத் தேர்வு நடைபெறவில்லை.

புதிய தட்டச்சுப் பயிலகங்களுக்கு அங்கீகாரம் 23/09/2022 அன்று தொழில்நுட்பக் கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையின் படி தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களிலிருந்து 1,945 விண்ணப்பங்கள் பெறப்பட்டன எனவும் இவற்றில் 1,702 தட்டச்சு பயிலகங்களுக்கு வருடாந்திர அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. எனவே தமிழ்நாட்டில் தட்டச்சுப் பயிலகங்களை நடத்த பலர் ஆர்வமாக உள்ளனர் என்பது தெரிகிறது. தட்டச்சு கற்பதில் மறுமலர்ச்சி தொடர்கிறது.

மேலும் விவரங்களுக்கு:
9884227669


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்