உலகில் மிக மிகச் சிறிய நாடுகளில் கத்தாரும் ஒன்று. பரப்பளவில் மட்டுமல்ல, மக்கள் தொகை எண்ணிக்கையிலும் சிறிய நாடுதான். நாட்டின் மொத்த மக்கள் தொகையே முப்பது இலட்சத்துக்கும் கீழ்தான். நம்ம ஊர் திருச்சியைக் காட்டிலும் சிறிய ஊர்.
அதிலும் எழுபத்தைந்து விழுக்காட்டினர் வெளிநாட்டில் இருந்து கத்தார் நாட்டுக்குப் பிழைக்க வந்தோர். அப்படியென்றால் அந்த நாட்டின் பூர்வகுடிகள் எவ்வளவு பேர் இருப்பார்கள் என்பதைக் கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.
மத்திய கிழக்கு நாடுகளில் கத்தார் என்ற சிறிய நாடு என்ன கருத்தைச் சொன்னாலும், அது ஆழ்ந்து பார்க்கப்படுகிறது. மற்ற நாடுகளைக் காட்டிலும் அந்த நாட்டில் தெரிவிக்கப்படும் கருத்துக்கு மட்டும் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
அது ஏன்?
வளைகுடா நாடுகளில் மெத்தப் படித்த மக்கள், மனித வளம், ராஜதந்திரம், விளையாட்டு, பொருளாதாரம் உள்ளிட்ட பல விஷயங்களிலும் முன்னேறிய நாடாக கத்தார் பார்க்கப்படுகிறது. மிகவும் முன்னேறிய சிவில் சமூகமாக அந்நாட்டு மக்கள் இருப்பதாலேயே அந்நாட்டில் இருந்து எந்தக் கருத்துச் சொல்லப்பட்டாலும் அது உலக முக்கியத்துவம் பெறுகிறது.
பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, அந்த நாடு தன்னிறைவு பெற்ற நாடாகவே இருக்கிறது. உலகின் மூன்றாவது பெரிய இயற்கை எரிவாயு, எண்ணெய் ஆதாரங்களைக் கொண்டுள்ளது. உலகிலேயே தனிநபர் வருமானத்தைப் பொறுத்தவரை, கத்தார் நாட்டைச் சேர்ந்தோருக்குத்தான் முதல் இடம். மேற்சொன்ன காரணங்களினாலேயே ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் கத்தார் நாட்டில் பல பில்லியன் டாலர்களை பல்வேறு தொழில்களிலும், பொருளாதாரக் கட்டமைப்பிலும் முதலீடு செய்துள்ளன. அதே போல் கத்தாரும் பல ஐரோப்பிய நாடுகளில் முதலீடு செய்துள்ளது.
வர்த்தகம் தொடர்பான ஆலோசனைகள், கருத்தரங்கம், கருத்துருவாக்கம் உள்ளிட்ட பல விஷயங்களுக்காகக் கத்தாரில் அடிக்கடி மாநாடுகள் நடக்கின்றன. மாநாடு என்றதும், ஒரு முக்கியமான மாநாடு குறித்தும், அதன் விளைவுகள் குறித்தும் சொல்லித்தான் ஆக வேண்டும்.
"ஜி7' நாடுகளின் மாநாடு கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்தது. கடந்த 2001இல் வாஜ்பாய் இந்தியப் பிரதமராக இருந்தபோது, வர்த்தகத்துறை அமைச்சராக இருந்தவர் முரசொலி மாறன். அப்போது நடந்த "ஜி7' நாடுகள் மாநாட்டுக்கு முரசொலி மாறன் இந்தியாவின் சார்பில் வாஜ்பாயால் அனுப்பி வைக்கப்பட்டார்.
அந்த மாநாட்டுக்குச் சென்று முரசொலி மாறன் பேசிய பேச்சு இன்றும் உலக அளவில் விவாதிக்கப்படும் ஒரு பேச்சாக அமைந்துள்ளது.
உலக வங்கியின் திட்டங்கள், செயல்பாடுகள் அனைத்தும் வளர்ந்த நாடுகளுக்குச் சாதகமாகவும், வளரும் நாடுகளுக்குப் பாதகமாகவும் இருக்கிறது. அதை மாற்ற எந்தெந்த திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என முரசொலி மாறன் அந்த மாநாட்டில் பேசினார். இப்படிப் பேசியதால் வளரும் நாடுகள் எல்லாம் ஒன்று திரண்டு அமெரிக்காவின் திட்டங்களை முறியடிக்க உதவின.
முரசொலி மாறனை கத்தார் மாநாட்டில் பேச அனுமதித்து ஊக்கம் அளித்தது கத்தார் என்பதை யாரும் மறந்துவிட முடியாது. அதன்பின் உலக வங்கியின் திட்டங்கள் வளரும் நாடுகளை நோக்கியும் அமைந்தன. இதற்கு முரசொலி மாறனின் பேச்சு ஒரு பக்கம் என்றால், கத்தாரின் அனுமதியும் இன்னொரு பக்கம் பேருதவியாக இருந்தது. உலக வங்கியின் பின்னணியில் இருந்து திட்டங்களைச் செயல்படுத்தும் அமெரிக்காவின் திட்டங்களும், முரசொலி மாறன் பேச்சுக்குப் பின் உலகப் பொருளாதாரத்தில் பெரும் மாற்றத்தையும்; தாக்கத்தையும் ஏற்படுத்தியது.
ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளை ஆசியாவுடன் இணைக்கும் பாலமாகவும் மிகச் சிறந்த முன்னணி நிறுவனமாகவும் `கத்தார் ஏர் வேஸ்' உள்ளது.
எல்லா நாடுகளும் ஒரு பக்கம் இருந்தாலும், தான் விரும்பினால் எல்லோருக்கும் எதிராகவும் யாரையும் ஆதரிப்பேன் என்ற துணிச்சலும் தைரியமும் மிக்க ஒரு நாடு கத்தார்.
ஐந்தாண்டுகளுக்கு முன் வளைகுடா நாடுகளெல்லாம் ஒன்றிணைந்து சிறிய நாடான கத்தார் மீது பொருளாதாரத் தடை விதித்தன. சவூதியுடனான தரைவழி வர்த்தகத்தைப் பெரிதும் நம்பி இருந்த கத்தாருக்கு இந்தத் தடை சோதனையாக அமைந்தது. அன்றாடத் தேவைக்காக உணவுப்பொருள்கூட கிடைக்காத நிலை ஏற்பட்டது.
வான்வெளிப் போக்குவரத்திலும் வளைகுடா நாடுகளின் தடையால் கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் பெரும் இழப்பை எதிர்கொண்டது.
காரணம் வளைகுடா நாடுகளுக்கு வேண்டாத நாடான ஈரான் உடனான நட்புறவு, துருக்கியுடனான ஆயுதப் பயிற்சி என 18 நிபந்தனைகளை முன்வைத்து தடையைக் கொண்டு வந்தது. கால அவகாசம்கூட கொடுத்துப் பார்த்தன வளைகுடா நாடுகள். ஆனால், துளியும் தலை சாயாமல், தலை நிமிர்ந்து நின்றது கத்தார்.
நான்கு ஆண்டுகள் வளைகுடா நாடுகளின் துணை துளியும் இன்றி இந்தியா, ஓமன், ஈரான், துருக்கி போன்ற நாடுகளின் உதவியுடன் பொருளாதாரக் கட்டமைப்பை நிலை யாக உருவாக்கிக் கொண்டது கத்தார். உலக வங்கியின் அறிக்கையின் அடிப்படையில் கத்தாரின் உள்நாட்டு உற்பத்தி விகிதம் பிற வளைகுடா நாடுகளை விடப் பல மடங்கு அதிகரிக்க இந்தத் தடை காரணமாக அமைந்தது.
தனித்து விடப்பட்ட கத்தாரின் தன்னெழுச்சி வளைகுடா நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்தது. 2021 ஜனவரி மாதத்தில் சவூதியில் நடந்த வளைகுடா நாடுகளின் உச்சி மாநாட்டில் கத்தார் கலந்து கொள்ள வேண்டும் என வளைகுடா நாடுகளே அழைப்பு விடுத்தது. தடைகளும் தகர்ந்தது. மூடப்பட்ட எல்லைகள் திறக்கப்பட்டது.
கத்தார் நாடு உலக அளவில் பெரிய நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு உயர்ந்து நிற்பதற்குப் பல்வேறு காரணிகள் இருந்தாலும் முக்கியமான காரணம் கத்தார் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் "அல்ஜஸீரா' தொலைக்காட்சிச் சேனல்தான்.
1996 முதல் உலக அளவில் பலராலும் விரும்பிப் பார்க்கக்கூடிய நம்பகமான தொலைக்காட்சி நிறுவனமாக இயங்கி வருகிறது அல்ஜஸீரா. 25 கோடி மக்களின் தாய்மொழியாக இருக்கும் அரபி, 30க்கும் மேற்பட்ட நாடுகளின் ஆட்சி மொழியாகவும் இருக்கிறது. அந்த அரபிமொழி, ஆங்கில மொழியில் அல்ஜஸீரா தொலைக்காட்சி இயங்கி வருகிறது.
அரபுலகச் செய்திகளைப் பிற நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தியதே அல்ஜஸீராதான். இந்தச் சேனலில் நடத்தப்படும் விவாதங்கள் உலக அளவில் பெரும் கருத்தாக்கத்தை உருவாக்குகிறது. இதனால் சில நாடுகளின் ஆட்சியாளர்கள் சில சமயங்களில் தங்கள் நாட்டில் அல்ஜஸீரா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் தடை செய்கின்றனர்.
இதையெல்லாம் மீறி, சமூக வலைதளம் வாயிலாக அரபுலகையும் தாண்டி, பல நாட்டு மக்களையும் அல்ஜஸீராவின் நிகழ்ச்சிகள் அன்றாடம் சென்று சேர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
அல்ஜஸீராவின் செய்தி, விவாதம் எப்போதுமே விளிம்பு நிலை மக்களின் பக்கமும், ஆதிக்க, அடக்குமுறைக்கு எதிராக இருப்பதாலும் எல்லோரையும் நிகழ்ச்சிகள் விரைவாகச் சென்றடைகின்றன. அமெரிக்காவின் படைத்தளம் கத்தாரில் இருந்தாலும் அமெரிக்காவைச் சாடுவதிலும் அல்ஜஸீரா கொஞ்சமும் குறை வைத்ததில்லை.
மனிதநேயப் பணிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபைக்கு உதவுவதில் கத்தார் உலக அளவில் 6ஆவது இடத்தில் உள்ளது. மேலும் பல ஆப்ரிக்க நாடுகளுக்குக் கத்தார் நேரடியாக உதவி வருகிறது. பல நாடுகளுக்கு மத்தியில் ஏற்படும் பிரச்னைகளுக்கு, போராட்டக் குழுக்கள் மத்தியில் கத்தார் சமாதானத் தூதுவராகச் செயல்பட்டு பிரச்னைகளைச் சுமூகமாக முடித்திருக்கிறது. அவர்களுக்குத் தேவையான பொருளாதார உதவிகளையும் செய்து வருகிறது.
காட் அமைதி ஒப்பந்தம், சூடான் அரசு தார்ஃபூர் குழுக்களுக்கிடையேயான அமைதி ஒப்பந்தம், ஆஃப்கன் அமெரிக்க அமைதி ஒப்பந்தம் 2020, இப்படிப் பல்வேறு நாடுகளின் மத்தியஸ்தம், இவை எல்லாமே "தோஹா ஒப்பந்தம்' என்றே ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
ஆஃப்கன் நாட்டின் ஆட்சி அதிகாரம் போராளிக் குழுவாகச் செயல்பட்ட தாலிபான்கள் வசம் போவது வரை, அமெரிக்காவுக்கு எவ்வித சிக்கலும் இன்றி முடித்துக் கொடுத்தது கத்தார் நாடுதான்.
இப்படித்தான் வெளியுறவுக் கொள்கைகளில் கத்தார் நாடு தவிர்க்க முடியாத சக்தியாக வளைகுடாவில் உருவெடுத்துள்ளது.
இப்படி உலக அளவில் பெரிய நாடுகளையே தன்னுடைய ஆளுமையால் பணிய வைக்கும் கத்தாருக்குக் கெட்ட பெயரும் உண்டு. அது அடுத்த நாட்டு உள் விவகாரங்களில் தலையிடுவது, தீவிரவாதிகளுக்கு உதவுவது, முற்போக்குச் சிந்தனை கொண்டோருக்குச் சொந்த நாட்டில் பிரச்னை என்றால் கத்தாரில் அடைக்கலம் கொடுப்பது, பிற வளைகுடா நாடுகளின் கருத்தை ஏற்காதது போன்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன.
பரப்பளவிலும் மக்கள் தொகைக் கணக்கிலும் திருச்சி மாநகராட்சி அளவுக்கே இருக்கும் கத்தார் என்ற ஒரு சிறிய நாட்டின் எதிர்க்குரலுக்கு இந்தியா போன்ற மிகப் பெரிய நாடுகளே மதிப்புக் கொடுக்கிறது என்றால் அந்நாட்டின் ஆட்சியாளர்களின் ஆளுமை, தொலைநோக்குத் திட்டம், ராஜதந்திர வெளியுறவுக் கொள்கை, எந்த ஒரு கருத்தையும் நொடியில் உலக அளவில் தனக்கு ஆதரவாகக் கொண்டு செல்லும் வல்லமை போன்ற காரணிகளால் கத்தார் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது.
கத்தாரின் வளர்ச்சிக்குப் பின்னால் இலட்சக்கணக்கான இந்தியர்களின் உழைப்பும் உள்ளது என்பதை மறுக்க முடியாது.