மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • EWS இடஒதுக்கீடு சமத்துவத்திற்கு எதிரான தீர்ப்பு, உண்மையை உலகறியச் செய்த பத்திரிகையாளர், யூசுஃப் நபியின் ஏழாண்டு பசுமைப் புரட்சித் திட்டம் போன்ற புதுமையான தலைப்புகளுடனும் செய்திகளுடனும் வெளிவருகிறது டிசம்பர் 1-15 இதழ்.
  • டிசம்பர் 1-15 இதழில் வரலாற்றாய்வாளர் செ.திவான் அவர்களின் சிறப்பு நேர்காணலும் வெளிவருகிறது.

முழுமை இஸ்லாம்

பெண்ணியம்: தடுமாற்றமும் சீர்படுத்தலும்
அஃப்ஃபான் அப்துல் ஹலீம், , நவம்பர் 16-30


மனிதன் என்பது ஒரு பொதுச்சொல். அதில் பால் வித்தியாசங்கள் எதுவும் இல்லை. எனக்கு அறிமுகமான நான்கு மொழிகளிலும் இப்படி 'மனிதன்' என்ற பால் வித்தியா சங்கள் அற்ற சொல்லுக்குச் சமமான சொற்கள் இருக்கின்றன. சிங்களத்தில் 'மானவயா' என்ற சொல், அரபியில் 'இன்ஸான்' என்ற சொல், ஆங்கிலத்தில் 'ஹியுமன்' என்ற சொல், என மனித இனத்தைக் குறிப்பதற்கான பால் வேறுபாடுகளற்ற பொதுச் சொற்கள் புழக்கத்தில் இருக்கின்றன. உலகத்தில் மொத்தம் எத்தனை மொழிகள் புழக்கத்தில் இருக்கின்றன என்பது எனக்குத் தெரியாது. ஆனால் எல்லா மொழிகளிலும் இப்படியான ஒரு சொல் நிச்சயம் இருக்கலாமென்றே உள்ளுணர்வு சொல்கிறது.

பொதுவாகவே ஆண்பெண் வித்தியாசங்கள் ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான ஏற்றத்தாழ்வுகளாகப் பார்க்கப்படும் நிலையே தற்போதைய உலகில் புழக்கத்தில் இருந்து வருகிறது. என்னதான் ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான சமவுரிமைக் கோஷம் உச்சத்தில் ஒலித்தாலும் நிஜத்தில் அந்த ஏற்றத்தாழ்வுதான் உலகில் பரவலாக நடைமுறையில் இருக்கிறது.

ஆண்கள் தம்மை மனித இனத்தின் உயர் சாதிகளாகவும் பெண்களைத் தாழ்த்தப்பட்டவர்களாகவும் கருதும் மனோநிலையை எங்கும் பரவலாகக் காணலாம்.

ஆண்களைப் பற்றி பெண்களும், பெண்களைப் பற்றி ஆண்களும் தமது கருத்துகளை ஒருதலைப்பட்சமானதாக அமைத்துக் கொண்டிருப்பதைப் பொதுவாக அவதானிக்கலாம்.

உலகெங்கும் பரவலாகப் பகிரப்படுகின்ற நகைச்சுவைத் துணுக்குகளில் முக்கிய இடத்தை கணவன், மனைவி நகைச்சுவைகள் வகிக்கின்றன. இவ்வகையான நகைச்சுவைகள் யாவும் ஆண், பெண் வித்தியாசங்களை சிரிப்புக்கான கருப்பொருட்களாக மாற்றி, அந்த உறவின் சீரியஸான தன்மையைத் தாக்கும் வகையில் தொழிற்படுகிறதோ என்ற உணர்வு பலமாகவே ஏற்படுவதுண்டு.

ஆணின் சில இயல்புகள் பெயரளவிலான வெற்றிக்குரிய அடையாளங்களாகப் பொதுப் புத்தியில் உறைந்திருப்பதையும், அதை பலபோது பெண்கள்கூட தமது முன்னேற்றத்தை அளவிடுவதற்கான அளவுகோலாக மாற்றி வைத்திருப்பதையும் காணலாம்.

பெண்மையின் இயல்புகளைச் சிலாகிக்க வேண்டுமென்றால் ஆண்மையின் இயல்புகளைச் சாட வேண்டுமென்பதும், ஆண்மையின் இயல்புகளைப் பாராட்ட வேண்டுமென்றால் பெண்மையின் இயல்புகளை நையாண்டி செய்ய வேண்டுமென்பதும் எழுதப்படாத விதியாக மாறியிருக்கிறது.

ஆண்மை பலத்தின் அடையாளமாகவும் பெண்மை பலவீனத்தின் அடையாளமாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன.

மொத்தத்தில், ஒருவரையொருவர் முழுமைப்படுத்துவதாக இருக்கவேண்டிய உறவானது ஒருவரோடொருவர் போட்டி போடும் உறவாக மாறியிருக்கிறது. ஆண்கள் உலகமும் பெண்கள் உலகமும் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி போல செயற்கைத்தனமான பரபரப்பொன்றுக்குள் எப்போதுமே தடுமாறிக் கொண்டிருக்கின்றன.

இன்றைய உலகம் இந்தக் களேபரங்கள் காரணமாக நிறையவே இழந்திருக்கிறது. பெண்மை தன்னோடு கொண்டுவரும் அழகியல்கள் வழக்கொழிந்து போயிருக்கின்றன. மனித நாகரிகத்தின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு, அவர்களது சிறப்பியல்புகள், சிறப்புத் தேர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டதாக இல்லாமல் "பெண்மை எனும் பலவீனத்தை வென்ற' பெண்களின் முன்மாதிரிகளாகவே சந்தைப்படுத்தப்படுகிறது.

இந்த உலகுக்குள் ஒரு புதிய மனிதன் வர வேண்டுமென்றால் அங்கு ஓர் ஆணும் ஒரு பெண்ணும் வித்தியாசமான தமது பங்களிப்புகளை வழங்க வேண்டுமென்பது நம்மனைவருக்கும் தெரியும். ஒரு மனிதனின் பூவுலகப் பிரவேசமே ஆண், பெண் இருபாலரின் பங்களிப்புடன் நிகழ்வதில் நமக்குப் பெரும் படிப்பினைகள் உண்டு. நாம் சிந்தனைச் சோம்பேறிகள் என்பதால் பெரும்பாலும் படிப்பினைகள் நமக்குப் புலப்படுவதில்லை.

நாமனைவருமாகச் சேர்ந்து மனித இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். இங்கு ஆண்களைப் பூஜிக்க வேண்டியதுமில்லை, பெண்களைக் கொண்டாட வேண்டியதுமில்லை. ஆணா? பெண்ணா? என்ற விவாதங்கள் தேவையில்லை. ஆண்கள் ஆண்களாகவும் பெண்கள் பெண்களாகவும் இருக்கும் உலகம் எத்தனை அழகானது!

பெண்மையின் அத்தனை இயல்புகளும் ஆண்மையின் பலவீனங்களை ஈடு செய்யக்கூடியவை. அவ்வாறே ஆண்மையின் அத்தனை இயல்புகளும் பெண்மையின் பலவீனங்களை ஈடு செய்யக்கூடியவை. உலகத்தின் பல்வேறு வலிகளுக்கான ஒத்தடம் பெண்மையில்தான் இருக்கிறது. பெண்களையெல்லாம் ஆண் தோல் போர்த்த வைத்துவிட்டு இப்போது வலிகள் மாறாமலேயே உலகம் சுற்றுகிறது.

’பெண் சுதந்திரம்' என்ற கோஷத்தால் பெண்கள் அடைந்த சுதந்திரத்தை விடவும் ஆண்கள் அடைந்துகொண்ட ’நலவுகள்' அதிகமென்பது தெள்ளத்தெளிவு. பெண் பெண்ணாக இருக்க எந்தத் தடையுமில்லாத ஓர் உலகத்தை விட பெண்களுக்கு வேறென்னதான் நலவிருக்கிறது?

பெண்கள் பெண்களாக இருப்பதற்கும் பெண்களுக்கிடையில் ஆண்கள் உலகம் ஏற்படுத்தி வைத்திருக்கும் தடைகள் இருக்கின்றன. அரசியலின் பெயராலும், மதங்களின் பெயராலும், நாகரிகங்களின் பெயராலும் அந்தத் தடைகளுக்கு சட்டபூர்வ அந்தஸ்துகளும் வழங்கப்பட்டுள்ளன. எனவே பெண்களின் சுதந்திரமென்பது ஆண்களின் காலனித் துவத்துக்கு எதிராகப் போராடிப் பெறவேண்டிய ஒன்றாக மாறியிருக்கிறது. ஆண்களோடு போராட வேண்டுமானால் ஆண்களின் இயல்போடும் அவர்களது பலத்துக்குச் சமமாகவும் வந்து மோதினால்தான் வெற்றியுண்டென நினைத்து பெண்மையின் இயல்புகளை வலுக்கட்டாயமாக வெற்றி கொண்டே பெண்கள் களத்துக்கு வருகின்றனர்.

பெண்மையின் விடுதலைக்கானப் போராட்டத்தில் வெல்ல வேண்டுமானால் பெண்மையைத் தொலைத்துவிட்டுத்தான் களம் காண வேண்டுமென்ற முரண்நிலைக்கே இறுதியில் பெண்கள் தள்ளப்படுகின்றனர். தனது உயிரைக் காப்பாற்ற வேண்டுமென்றால் அதனை மாய்த்துக்கொண்டால் மட்டுமே சாத்தியம் என்ற ஒரு நிலை மிகப் பெரும் முரண்நகையாகத் தெரியவில்லையா?!

இங்கு அனைத்துமே தலைகீழாக மாறியுள்ளதாகத்தான் நான் புரிந்து கொள்கிறேன்.

ஆண்களும் பெண்களும் பரஸ்பர எதிரிகளல்ல; ஆனால் மோதுகிறார்கள். மோதினாலும்கூட ஒருபோதும் ஆண்மையை ஆண்மையின் இயல்புகள் கொண்டு வீழ்த்த முடியாது. ஆண்மையோடு ஒத்துவாழ்வதற்கும் சரி, மோதுவதற்கும் சரி பெண்மையை விடப் பெரிய கருவி வேறெதுவும் கிடையாது. ஆனால் பெண்களோ, உலகின் அதிசக்திவாய்ந்த ஆயுதத்தைக் கையில் வைத்துக்கொண்டு, வேறெதன் பின்னாலோ அலைகிறார்கள்.

பெண் விடுதலை, பெண்களுக்கான சுதந்திரம், ஆண்பெண் சமத்துவம் போன்ற கவர்ச்சியான சுலோகங்களின் நிழலில் மனித வரலாற்றில் முன்னெப்போதுமில்லாத வகையில் பெண்மை நசுக்கப்படுகிறதென்பதே யதார்த்தம். பெண்மையின் இயல்புகள் எதனையும் களையாமல் ஒரு பெண் வாழும் வாழ்க்கையோ, சாதிக்கும் சாதனைகளோ உலகின் கவனத்தை ஈர்ப்பதில்லை. அப்படி ஈர்க்காதவாறுதான் உலக ஒழுங்கு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பெண்ணுக்கான மிகப் பெரும் தடை பெண்மைதான் என்றே உலகம் நம்புகிறது. எந்தக் கணத்தில் ஒரு பெண் தனது பெண்மை எனும் சிறப்பைத் துறக்கிறாளோ அந்தக் கணத்தில் அவளை நோக்கி உலகின் கவனம் திருப்பப்படுகிறது.

எனவே சாதிக்க நினைக்கும் பெண்கள் தம்மைத்தாமே பெண்மை நீக்கம் செய்து கொள்வதில் அதீத ஆர்வம் காட்டுகின்றனர். பெண்மையின் சிறப்பம்சங்களையெல்லாம் பெண்களே பலவீனங்களாகப் பார்க்கத் தொடங்கிவிட்டனர்.

’ஆணோடு சரிக்குச் சமமாக நிற்பது' எனும் இலட்சியமொன்றே பெண்களின் விடிவுக்கான ஒரே வழி என்ற போலி இலட்சியவாதமொன்று நவீன பொருள்முதல்வாத வரலாற்றின் தொடக்கத்திலிருந்து மெல்ல மெல்ல கட்டமைக்கப்பட்டு வந்திருக்கிறது. மனிதம் எனும் சமத்துவத்துக்கும், மனித இயல்புகள் எனும்  வித்தியாசத்துக்குமிடையிலான அழகிய திரைகள் கிழித்தெறியப்பட்டுள்ளன.

மனிதன் என்ற இனத்துக்குள் ஆணும் பெண்ணும் சம அந்தஸ்துள்ள சம பாதியினர். ஆண் ஆணாகவும் பெண் பெண்ணாகவும் இருக்கையில் மனித இனம் பூரணமடைகிறது. ஒரு சாராரின் இயல்புகளில் பிறழ்வுகள் ஏற்படுமிடத்து, மனிதம் முழுமையடைய முடியாமல் தொங்கிக் கொண்டிருக்கிறது.

அல்லாமா இக்பால் சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே எத்தனை தூரநோக்குடன் இருந்திருப்பாரென்றால் இப்படி ஒரு வார்த்தையைக் கூறியிருக்க முடியும்? ’எந்த அறிவின் விளைபயனாக பெண் பெண்ணல்லாதவளாக மாறுகிறாளோ, அந்த அறிவானது ஞானமிக்க அறிஞர்களின் பார்வையில் அழிவாகவே கருதப்படுகிறது.'

இந்த நவீன பொருள்முதல்வாத நாகரிகம் பெண்களை எங்கு கொண்டுவந்து நிறுத்துமென்ற இக்பாலின் துல்லியமான கணிப்பை வியக்காமல் இருக்க முடியவில்லை.

பெண்ணின் பெண்மையைத் தரித்திரமாகவும், குழப்பங்களுக்கான வாசலாகவும் பார்த்து அவளைப் பூட்டி வைக்கும் மதத்துவத் தீவிரத்துக்கிடையிலும், அவளின் பெண்மையை பலவீனமாகவும், போதாமையாகவும் பார்த்து அவளைப் பெண்மை நீக்கம் செய்து சந்தியில் நிறுத்தும் அரசியல், பொருளாதாரத் தீவிரத்துக்கிடையிலும் சிக்கி, மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் பெண்மையை மீட்டெடுப்பதன்றி வேறெதுதான் உண்மையான பெண் விடுதலையாக இருக்க முடியும்?! https://www.facebook.com/affanaleemi 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்