மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • EWS இடஒதுக்கீடு சமத்துவத்திற்கு எதிரான தீர்ப்பு, உண்மையை உலகறியச் செய்த பத்திரிகையாளர், யூசுஃப் நபியின் ஏழாண்டு பசுமைப் புரட்சித் திட்டம் போன்ற புதுமையான தலைப்புகளுடனும் செய்திகளுடனும் வெளிவருகிறது டிசம்பர் 1-15 இதழ்.
  • டிசம்பர் 1-15 இதழில் வரலாற்றாய்வாளர் செ.திவான் அவர்களின் சிறப்பு நேர்காணலும் வெளிவருகிறது.

முழுமை இஸ்லாம்

சாப்பிட்டீங்களா?
முஹம்மது முஜம்மில், , நவம்பர் 16-30


மனிதன் படைக்கப்பட்ட காலத்திலிருந்து அவனுடைய அடிப்படைத் தேவை உணவாகவே இருந்துள்ளது. அந்த ஒரு தேவையை பூர்த்தி செய்ய அவன் ஆயுதங்களைத் தயார் செய்தான். வேட்டையாடினான். பின்பு விவசாயம் என்று காலங்கள் மாற மாற அவனுடைய உணவு தேடும் பழக்கங்களும் உணவுப் பழக்கங்களும் மாறின. ஆனால் அந்தத் தேவை மட்டும் மாறவில்லை. இந்த உலகம் இருக்கும் காலம் வரை மாறவும் மாறாது. இது நாம் எல்லோரும் அறிந்த உண்மையே!

சுமார் இருபது அல்லது இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எல்லோரும் குடும்பத்தோடு சேர்ந்து ஒரு நாளில் ஒரு முறையாவது உண்பார்கள். வார இறுதியில் குறைந்தது நான்கு அல்லது ஆறு முறையாவது அதே விஷயத்தைக் கடைபிடிப்பார்கள். அப்பொழுதெல்லாம் ஹோட்டல் சாப்பாடு என்றால் வெளியில் செல்லும்போது மட்டும்தான். அதுவும் மிக மிகக் குறைவு.

காரணம் நடுத்தரக் குடும்பங்கள் அதை விரும்பாதவர்களாகவே இருந்தார்கள். விலையும் அதிகம். வீட்டில் மதியம் சமைத்த குழம்பு இருக்கின்றது. மாவும் இருக்கின்றது. தோசை சுட்டு விடலாம் அல்லது ஏதோ ஒன்றைச் சமைக்கலாம் என்று எண்ணி சற்று தாமதமானாலும் பரவாயில்லை என்று திரும்பி விடுவார்கள். எந்த அளவுக்கு என்றால், ஒருவர் தன்னந்தனியாக இருந்து அவர் ஹோட்டல் சாப்பாடு சாப்பிடும் பழக்கம் உடையவராக இருந்தால், அதே நபர் கொஞ்சம் கோபமோ ஆணவமோ வெளிப்படுத்தினால் போதும். உடனே, ’இவன் ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டே இவ்ளோ பேசுறானே, இன்னும் வீட்டு சாப்பாடு சாப்பிட்டால்...' என்று கூறி விடுவார்கள்! அப்படி ஒரு காலம் இருக்கத்தான் செய்தது.

ஆனால், தற்பொழுது அந்தப் பழக்கம் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. ஒன்று வீட்டில் சமைத்த உணவு. மற்றொன்று குடும்பத்தோடு உணவு உண்பது. இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு இரண்டின் அருமையும் தெரியாமல் போய்விட்டது.

இன்று எத்தனை பேருக்கு மூன்று வேளை உணவு கிடைக்கின்றது? அப்படியே கிடைத்தாலும் அது வீட்டில் சமைத்த உணவா?

வீட்டில் சமைத்த உணவாக இருந்தாலும், அதை வீட்டில் அமர்ந்து தன் குடும்பத்தோடு உண்ண முடிகிறதா? அப்படி அதை வீட்டில் உண்ண வேண்டும் என்று நினைத்தால் குடும்பத்தில் எல்லோரும் இருப்பார்களா?

இப்படி கேள்விகளை எழுப்பிக் கொண்டே சென்றால், எல்லா கேள்விகளுக்கும், ’இல்லை' என்ற கசப்பான பதில்தான் கிடைக்கும். ஏனென்றால், அதுதான் நிதர்சனமான உண்மையும்கூட!

மூன்று வேளை உணவு என்பது இன்றைக்கு நம்மில் பலருக்குக் கனவாகத்தான் இருக்கின்றது. அதிலும் வீட்டில் சமைத்த உணவு கிடைக்க வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. அதை ஆற அமர வீட்டில் அமர்ந்து உண்ணவும் முடியாது. மேலும் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் ஒன்றாய் கூடி இருக்க சாத்தியக் கூறுகள் மிக மிகக் குறைவு.

நிலைமை இவ்வாறிருக்க, நம் குழந்தைகள் அதிகம் விரும்புவது வெளியில் சென்று உண்ண வேண்டும் அல்லது வெளியிலிருந்து கொண்டு வந்து வீட்டில் உண்ண வேண்டும் என்பதுதான். வீட்டில் செய்த உணவின் அருமையும் தெரியவில்லை, குடும்பத்தினரோடு சேர்ந்து உணவருந்தும் அருமையும் புரியவில்லை.

கொரோனாவுக்கு முன்பும் சரி, பின்பும் சரி, வேலை தேடி எத்தனை ஆயிரம் மக்கள் வட மாநிலங்களிலிருந்து இங்கு வந்து குடிபெயர்ந்தார்கள். அவர்களுக்குக் குடும்பம் என்று ஒன்று உண்டா அல்லது அவர்களுக்கு அவர்களின் தாய் அல்லது மனைவி சமைத்த உணவு இங்கு கிடைக்க வாய்ப்புகள் உண்டா?

பள்ளியில் படிக்கும் குழந்தைகள் தினமும் ஒரு வேளை உணவுதான் வீட்டில் சுடச் சுட சாப்பிட முடியும். அதுவும் தன் தந்தையோடு சாப்பிட முடியாது. காரணம் அவர் வீட்டிற்கு வருவதற்குத் தாமதம் ஆகலாம். தாயும் வேலை செய்கிறார் என்றால் அதுவும் சிரமம். அவர்களே சமாளித்தாக வேண்டும்.

கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் வீட்டில் இருந்து செல்வதில்லை. ஹாஸ்டலில் தாங்கித்தான் படிக்கிறார்கள். அந்த உணவு எப்படி இருக்கும் என்று நம்மில் பலரும் அறிந்ததே.

பள்ளி மாணவர்கள், கல்லூரிக்குத் தினமும் பயணிக்கும் மாணவர்கள், வேலை செய்யும் ஆண்கள், பெண்கள் அதிகம் உண்பது புளி சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், இன்ன பிற உணவுகள். தொட்டுக் கொள்வதற்கு ஊறுகாய் வைத்துக்கொள்வார்கள். ஒரு வீட்டில் கணவன்  மனைவி இருவரும் வேலை பார்த்தால் கண்டிப்பாக இதுதான் மதிய உணவாக இருக்கும்.

மருத்துவர்களால் சரியான நேரத்தில் உணவு உண்ண முடிகிறதா? காவல் துறையினர் நிலையும் கவலைக்குரியதே! உணவும், ஓய்வும் ஒரு பக்கம் இருக்கட்டும். இவர்களால் நிம்மதியாக உட்கார முடிகிறதா? எப்பொழுதும் நிற்க வேண்டும் அல்லது நடக்க வேண்டும் அல்லது பயணம் செய்ய வேண்டும். அப்படி இருக்கும்போது நேரத்தில் உணவு என்பது இவர்களுக்கு ஒரு கனவே!

நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் குறித்த நேரத்தில் உணவு உண்ண முடியாது. காரணம், ஒரு வழக்கு சம்மந்தமாகக் குறிப்பு எடுத்தாக வேண்டும் என்ற கட்டாயம் அல்லது அந்த வழக்கு சம்மந்தமாக ஒருவரைச் சந்தித்துப் பேச வேண்டும். இப்படி ஒரு சில கட்டாயங்கள். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஏன், நமக்கு உணவு அளிக்கும் உணவகங்களில் வேலை பார்க்கும் சகோதர, சகோதரிகள் அங்கு சமைத்துப் பரிமாறப்படும் சுவையான உணவையும் உண்ண முடியாது. அவர்களுக்கு என்று சமைக்கப்படும் உணவும் நேரத்தில் உண்ண முடியாது. அந்த உணவகத்தின் முதலாளி உட்பட எல்லோரும் தாமதமாகத்தான் உண்பார்கள்.

கிடைத்த உணவு  அது வீட்டில் சமைத்த உணவாக இருந்தாலும் சரி அல்லது ஹோட்டலிலிருந்து வாங்கப்பட்ட உணவாக இருந்தாலும் சரி, சூடாக இருந்தாலும் சரி இல்லை என்றாலும் சரி, சுவையாக இருந்தாலும் சரி இல்லை என்றாலும் சரி, நேரத்துக்கு நம் அடிப்படை வயிற்றுப் பசியைப் போக்க உணவு கிடைத்ததற்கு இறைவனுக்கு நன்றி செலுத்தி கோபம் கொள்ளாமல் அந்த உணவை விரயமும் செய்யாமல் மகிழ்ச்சியாக உண்போம். எப்பொழுதும் இறைவனுக்கு நன்றியுள்ள அடியார்களாகத் திகழ்வோம்! 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

Good information.
NICE INFORMATION

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்