மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • EWS இடஒதுக்கீடு சமத்துவத்திற்கு எதிரான தீர்ப்பு, உண்மையை உலகறியச் செய்த பத்திரிகையாளர், யூசுஃப் நபியின் ஏழாண்டு பசுமைப் புரட்சித் திட்டம் போன்ற புதுமையான தலைப்புகளுடனும் செய்திகளுடனும் வெளிவருகிறது டிசம்பர் 1-15 இதழ்.
  • டிசம்பர் 1-15 இதழில் வரலாற்றாய்வாளர் செ.திவான் அவர்களின் சிறப்பு நேர்காணலும் வெளிவருகிறது.

முழுமை இஸ்லாம்

மழை தரும் செய்தி.!
. டி. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ், , நவம்பர் 16-30


வடகிழக்குப் பருவ மழை தொடங்கிவிட்டது. மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கின்றது. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இந்த ஆண்டின் முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கின்றது. மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்க மாணவ, மாணவிகள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள். மழை தருகின்ற செய்திகள்தாம் என்னென்ன?

1. மழை தருவது மகிழ்ச்சி..! மலர்ச்சி..!

இன்றைய நவீன காலத்தில் மழையால் பற்பல சிரமங்கள் ஏற்படுகின்றன என்றாலும் தொன்றுதொட்டு மழை மக்களுக்கு மகிழ்ச்சியையே அளித்து வந்துள்ளது. மழைக்கால மேகங்களைப் பார்த்து மக்கள் ஆடிப் பாடியிருக்கின்றார்கள். மகிழ்ந்திருக்கின்றார்கள். மழையைப் புகழ்ந்து கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன.

தூறல் நிற்காத மதியப் பொழுதில் மழைநீர் கணுக்கால் வரை முட்டி மோதிக் கொண்டிருக்க அதன் ஊடே குடை பிடித்தவாறு ஆடை நனையாதவாறு நடந்துபோவது சிலருக்குப் பிடிக்கும். மழை பெய்து ஓய்ந்த தார்ச்சாலையைப் பார்ப்பதும் சிலருக்குப் பிடிக்கும். ஒரு கணம் மழை. மறுகணம் இல்லை என மழை கண்ணாமூச்சி விளையாடுவதும் சிலருக்குப் பிடிக்கும்.

இதனால்தான் சுவனத்து இன்பங்கள் குறித்து கோடிட்டுக் காட்டுகின்றபோது இறைவன் தண்ணீர் தரும் மகிழ்ச்சியை இணைத்தே சொல்கின்றான்: ’ஆனால் இறை யச்சமுடையவர்கள் சுவனங்களிலும் நீரூற்றுகளிலும் இருப்பார்கள்' (திருக்குர்ஆன் 15:45)

இதே கருத்து 26:134,147; 44:51,52; 51:15; 52:17,18; 54:54; 77:41 ஆகிய வசனங்களிலும் சொல்லப்பட்டிருக்கின்றது.

2. மழை தருவது பண்பாடு..!

தொன்றுதொட்டு மழைதான் பண்பாடுகளின் வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் வித்திட்டு வந்துள்ளது. மக்கள் நடமாட்டத்தின் திசையை நிர்ணயித்திருக்கின்றது. மக்களின் நாகரிக வளர்ச்சியைக் கட்டமைத்து வந்துள்ளது. மனித வாழ்வின் அடிப்படை ஆதாரமாக இருந்து வந்துள்ளது.

மாயன் நாகரிகத்திலிருந்து சிந்துச் சமவெளி நாகரிகம் வரை, நைல் நதி நாகரிகம் முதல் கங்கை யமுனை பண்பாடு வரை நதிகள்தாம் மனித வாழ்வைப் பண்படுத்தி வந்திருக்கின்றன.

அகழி, அருவி, ஆறு, ஊருணி, ஊற்று, ஏரி, ஓடை, கடல், கால்வாய், கிணறு, குட்டம், குட்டை, கேணி, சுனை, இலஞ்சி, மடு, மடை, மதகு, வலயம், வாளி, கூவம், வாய்க்கால், தாங்கல், பொய்கை, சேங்கை என நீர் நிலைகள் குறித்து தமிழில் மட்டும் 48 சொற்கள் இருக்கின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

3. மழை ஓர் அருட்கொடை..!

மழை மிகப் பெரும் அருட்கொடை. அதற்கு ஈடான அருள்வளம் வேறு எதுவும் இல்லை. இதனால்தான் நம்முடைய முன்னோர்கள் ’நீரின்றி அமையாது உலகு' என்று ஓங்கி முழங்கினார்கள்.

இறைவன் தன்னுடைய அருள்வளங்களைப் பட்டியலிடுகின்ற போதெல்லாம் தவறாமல் மழையையும் குறிப்பிடுகின்றான். குறிப்பாக அத்தியாயம் அந்நஹ்லில் 65 இலிருந்து 82 வரையிலான வசனங்களில் இறைவன் தன்னுடைய அருள்வளங்களைப் பட்டியலிடுகின்றபோது மழையைத்தான் முதலில் குறிப்பிடுகின்றான். முத்தாய்ப்பாக "லஅல்லக்கும் தஸ்லீமூன்'  "இதனால் நீங்கள் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தவர்களாகத் திகழ்வீர்கள்' என்று குறிப்பிட்டிருக்கின்றான்.

பொதுவாக லஅல்லக்கும் தஷ்குரூன், லஅல்லக்கும் தஹ்ததூன் என்றே குறிப்பிடப்படும். இங்கு அதற்குப் பதிலாக லஅல்லக்கும் தஸ்லிமூன் எனச் சொல்லப்பட்டிருப்பது பொருள் பொதிந்ததாகும். ஆய்ந்து பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

4. மழை ஒரு சான்று..!

இறைவன் இருக்கின்றான் என்பதற்கான அழுத்தமான, அழகான சான்றுதான் மழை. இதனை மழைக்கால கொண்டாட்டத்தில் நாம் மறந்தே போய்விடுகின்றோம்.

அத்தியாயம் அர்ரூமில் அல்லாஹ்வின் சான்றுகளை விவரிக்கின்றபோது மழையைக் குறித்தும் இறைவன் அழுத்தம் திருத்தமாக எடுத்துரைக்கின்றான். அச்சமும் ஆர்வமும் கொள்கின்ற விதத்தில் மின்னல் வெளிப்படுவதும் மேலும் வானிலிருந்து மழை பொழிவதும் இறைவனின் சான்றுகளாகச் சொல்லப்படுகின்றது.

அற்புத விவேகம்

இதே போன்று அத்தியாயம் அந்நூரிலும் மழை பொழிகின்ற விதம் குறித்து விரிவாக விவரிக்கப்படுகின்றது. மழையின் பின்னால் இருக்கின்ற அற்புத விவேகத்தைப் புரிந்துகொள்ளும்போது அது எத்துணை பலமான அத்தாட்சியாக இருக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ள முடியும். வானிலிருந்து கொட்டுகின்ற மழையில் ஒவ்வொரு க்யூபிக் சென்டி மீட்டரிலும் ஐம்பது முதல் ஐநூறு மழைத் துளிகள் இருக்கின்றன. பெய்கின்ற மழையின் அடர்த்தி இடத்துக்கேற்ப மாறுபடும்.

உயரே உயரே வானத்தில் மேகங்களில் நீர்த்துளிகள் திரண்டு உருவாகின்றபோது அவை கனத்திலும் சரி, பருமனிலும் சரி பெரிதாகவே இருக்கின்றன. அவை அந்த உயரத்திலிருந்து அதே கனத்துடனும் பருமனுடனும் வேகத்துடனும் வந்து விழுமேயானால் பூமியில் விழுகின்ற இடம் பள்ளம் ஏற்பட்டுவிடும். மனிதர்கள் மீது விழுந்தால் படுகாயமடைவார்கள். உயிரையும் பறி கொடுப்பார்கள்.

ஆனால் இறைவன் எத்துணை அழகான ஏற்பாடு செய்திருக்கின்றான் தெரியுமா? இதனை பெர்கர்ஸன்(BERGSON), ஃபெண்டீஸன்(FENDEISON) ஆகிய ஜெர்மன் விஞ்ஞானிகள் ஆய்ந்து கணித்திருக்கின்றார்கள். இந்த விஞ்ஞானிகளின் கணிப்புப் படி, இவர்கள் வகுத்துக் கொடுத்துள்ள தியரியின் படி மழைநீர்த் துளிகள் உருவாகும்போது கொண்டிருக்கின்ற கனமும் பருமனும் அவை பூமியில் விழத் தொடங்குகின்றபோது வேகமாக மாறத் தொடங்கிவிடுகின்றன.

முதலில் மழைத் துளியின் பருமன் விரிவடைகின்றது. அதனால் அதன் கனம் எடை குறைகின்றது. வேகமும் குறைகின்றது.

போதாக்குறைக்கு காற்று ஏற்படுத்துகின்ற தடையால் அவற்றின் வேகம் இன்னும் மட்டுப்படுகின்றது. பாராசூட்டில் மனிதர்கள் ஹாயாக மிதந்துகொண்டே இறங்குவதைப் போன்று மிதமான வேகத்தில் மழைத்துளிகள் தரையை வந்து தொடுகின்றன.

இதனால் அத்துணை பெரும் உயரத்திலிருந்து விழுந்தாலும் அதனால் மனித உடலில் எந்தக் காயமும் ஏற்படுவதில்லை.

மாறாத நீர் அளவு..!

சென்னையில் அடைமழை. செங்கல்பட்டில் கனமழை. பெங்களூரில் மிதமான மழை என்கிற ரீதியில், நுங்கம்பாக்கத்தில் 30 செ.மீ மழை, திருச்சியில் 70 செ.மீ மழை, கோவையில் 20 செ.மீ மழை என்கிற ரீதியிலும் நாம் நினைவு தெரிந்த நாளிலிருந்து மழை பற்றிய செய்திகளைக் கேட்டுக்கொண்டே வருகின்றோம். அடைமழையால் பெரு வெள்ளங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

மழை இல்லாமல் வறட்சியும் பஞ்சமும் உருவாகி மக்களை வாட்டியிருக்கின்றன. மழையை அதிகமாகப் பொழியச் செய்தும் அவன் சோதிக்கின்றான். மழையை மறுத்தும் வறட்சியால் அவன் சோதிக்கின்றான். ஆனாலும் வியத்தகு உண்மை என்ன தெரியுமா? நாம் வாழும் இந்தப் பூமியில் இருக்கின்ற தண்ணீரின் அளவு எந்தக் காலத்திலும் மாறுவதே இல்லை. காலங்காலமாக அது ஒரே அளவில் நீடிக்கின்றது. அது குறைவதுமில்லை. அது அதிகமாவதுமில்லை.

இதனையும் இறைவன் தன்னுடைய அத்தாட்சியாக சுட்டிக்காட்டி இருக்கின்றான். ’எந்தப் பொருள்களாய் இருந்தாலும் அதன் கருவூலம் நம்மிடம் இல்லாமல் இல்லை. எந்தப் பொருளையும் ஒரு குறிப்பிட்ட அளவிலேயே நாம் இறக்கி வைத்திருக்கின்றோம்.' (திருக்குர்ஆன் 15:21)

மழையைப் பற்றிய ஞானம்

எம்ஜிஆர் காலத்தில் செயற்கை மழையை உருவாக்குவதற்கான முயற்சிகளும் நடந்தன. ஆனால் வழக்கம்போல் அறிவியல் பூர்வமாக ஊழல் செய்வதற்கான வழியாக அது அமைந்ததே தவிர ஒரு சொட்டு மழையைக்கூட அதனால் உருவாக்க முடியாமல் போனது. என்னதான் அறிவியலும் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வளர்ந்து விட்டாலும் மனிதனால் மழையைக் குறித்து மட்டும் தீர்க்கமாக கணிக்கவே இயலாது என்பதுதான் உண்மை.

இதனால்தான் வானிலை அறிக்கைகள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ’வரும், ஆனால் வராது' கணக்காக முற்றிலும் திட்டவட்டமாகவோ, ஆணித்தரமாகவோ அல்லாமல் பட்டும் படாமல் நெகிழ்வுத் தன்மையோடு சொல்லப்படுகின்றது.

கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்று சொல்வார்கள். வெயில் சுளீரென்று கொளுத்தும். மிதமான மழையும் மேகமூட்டமுமாகவும் இருக்கும் என்பார்கள். பேய்மழை வெளுத்து வாங்கும்.

மழையைப் பற்றிய ஞானம் இறைவனிடம் மட்டுமே இருக்கின்றது. இது அத்தியாயம் 31 லுக்மானில் கடைசி வசனத்தில் தெள்ளத்தெளிவாக, திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

5. மழை தரும் மிகப் பெரும் செய்தி..!

உலக வாழ்க்கைக்கு உதாரணமாக மழையையும் அது ஏற்படுத்துகின்ற மாற்றங்களையும் எடுத்துரைக்கின்றான், இறைவன்.

உலக வாழ்வுக்கான உவமை

’...மழை பொழிந்திடும்போது அதன்மூலம் விளைகின்ற தாவரங்களைப் பார்த்து விவசாயிகள் மகிழ்ச்சியடைவது போன்றதாகும். பின்னர் அதே பயிர் காய்ந்துவிடுகின்றது. அது மஞ்சளித்துப் போவதையும், பின்னர், பதராகிவிடுவதையும் நீர் பார்க்கலாம்...' (திருக்குர்ஆன் 57:20)

’(நபியே!) இவர்களுக்கு இம்மை வாழ்வின் உண்மைநிலையை இந்த உதாரணத்தைக் கொண்டு விளக்குவீராக!: நாம் (இன்று) வானத்திலிருந்து மழை பொழியச் செய்கின்றோம். பிறகு, அதன் மூலம் பூமியில் செடிகொடிகள் நன்கு அடர்ந்து வளர்ந்தன. (நாளை) அதே கொடிகள் காற்றடித்துச் செல்லும் காய்ந்த பதராகிவிடுகின்றன. அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றல் கொண்டவனாக இருக்கின்றான்.' (திருக்குர்ஆன் 18:45)

இதுதான் மழை தருகின்ற மிகப் பெரும் செய்தியாகும். உலக வாழ்க்கையின் யதார்த்தத்தை ஆண்டுதோறும் மழை நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கின்றது. நம் கண் முன்னாலேயே மழை நிகழ்த்துகின்ற இந்தக் காட்சி மாற்றங்கள் ஆண்டுதோறும் நிகழ்ந்தவாறு இருக்கின்றன. படிப்பினை பெறுகின்றோமா? நல்லுணர்வு பெறுகின்றோமா?

6. மழை தரும் உறுதியான செய்தி..!

எல்லாவற்றையும் இறைவன் தன் வசம் வைத்திருக்கின்றான் என்பதுதான் மழை உணர்த்துகின்ற உறுதியான, திட்டவட்டமான செய்தியாகும்.

நாம் என்னதான் அறிவியலிலும் தொழில் நுட்பத்திலும் வியத்தகு வளர்ச்சி கண்டிருந்தாலும் சாதனைச் சிகரங்களை எட்டிப் பிடித்திருந்தாலும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் நாம் அல்லாஹ்வையே சார்ந்திருக்கின்றோம். எல்லாமே அல்லாஹ்வின் கையில்! எல்லாமே அல்லாஹ்வின் பிடியில்! இதுதான் மழை தருகின்ற உறுதியான, திட்டவட்டவமான செய்தியாகும்.

இறைவனே அறிவிக்கின்றான்: ’அல்லாஹ் எந்த ஓர் அருள் வாயிலை மக்களுக்கõகத் திறந்துவிட்டாலும் அதனைத் தடுக்கக்கூடியவர் யாருமிலர். மேலும், அவன் அதனை அடைத்துவிட்டால், அதற்குப் பிறகு அதனைத் திறக்கக்கூடியவர் வேறு யாருமிலர். அவன் யாவற்றையும் மிகைத்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.' (திருக்குர்ஆன் 35:2)

நெஞ்சை உலுக்கிவிடக்கூடிய கேள்வியையும் இறைவன் எழுப்பி இந்த யதார்த்தத்தை உணர்த்தி எச்சரிக்கின்றான்: ’(இவர்களிடம்) கேளும்: ’உங்கள் (கிணறுகளின்) நீர் பூமிக்குள் போய்விட்டால் பிறகு தண்ணீர் ஊற்றுகளை உங்களுக்கு வெளிக் கொணர்பவன் யார் என்பதையும் நீங்கள் எப்போதேனும் சிந்தித்தது உண்டா?' (திருக்குர்ஆன் 67:30)

சென்னை போன்ற பெருநகரங்களில் நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் தாழ்ந்து வருகின்ற சூழலில் அல்லாஹ்வின் இந்தக் கேள்வி நம்முடைய நெஞ்சங்களை உலுக்கக்கூடியதாக இருக்கின்றது.

7. மழை தரும் இன்றையச் செய்தி..!

இத்துணை சிறப்புகளைக் கொண்ட மழையை, நம்முடைய வாழ்வின் அருள்வளங்களிலேயே தலையாய இடத்தைப் பெற்றிருக்கின்ற மழையை, நம்முடைய இருப்புக்கும் வாழ்வுக்கும் உயிரோட்டமாக இருக்கின்ற மழையை நாம் இன்று எப்படிப் பார்க்கின்றோம்?

நிறைய பீதியோடும் கொஞ்சம் பதற்றத்தோடும் கலவரத்தோடும் துளியூண்டு மகிழ்ச்சியோடும்தானே பார்க்கின்றோம்; எதிர்கொள்கின்றோம்.

மழைக்காலம் என்றாலே சேறும் சகதியும் நிறைந்த குண்டும் குழியுமான சாலைகளும், ஆங்காங்கே சாக்கடை நீர் தேங்கிக் கிடக்கின்ற அவலங்களும், சில இடங்களில் முட்டிக்கால் வரை, சில இடங்களில் இடுப்பு வரை மழைநீர் வடியாமல் நாள் கணக்கில் தேங்கி நிற்கின்ற கொடுமைகளும், பேருந்து சேவை முடக்கப்படும் துயரமும், இரு மடங்கு கட்டணம் கேட்டு அலைக்கழிக்கின்ற ஆட்டோக்காரர்களின் அடாவடித்தனங்களும், பவர் கட்களும், கிடுகிடுவென ஏறிவிடுகின்ற காய்கறிகளின் விலைவாசியும், ’நிலைமை எப்படி இருக்கின்றது, ரமேஷ்?' என்கிற ரீதியில் ஓயாமல் அவலச் செய்திகளை அலற விடுகின்ற தொலைக்காட்சி சேனல்களும்தானே மனத்தை நிறைக்கின்றன. பீதியும் கவலையும் தொற்றிக் கொள்ளச் செய்கின்றன.

ஏன் இந்த அவலம்? மகிழ்ச்சியாகக் கொண்டாடப்பட வேண்டிய மழைக் காலம் இப்படி அவலங்களும் துயரங்களும் சோகங்களும் இடர்ப்பாடுகளும் நிறைந்த கஷ்டகாலமாய் மாறிப் போனதேன்? குர்ஆனே இதற்கான காரணத்தைச் சொல்கின்றது.

’மக்கள் தங்கள் கைகளால் எதைச் சம்பாதித்தார்களோ அதன் காரணமாக தரையிலும் கடலிலும் அராஜகமும் குழப்பமும் தோன்றிவிட்டிருக்கின்றன. அவர்கள் செய்த சில செயல்களின் விளைவை அவர்கள் சுவைப்பதற்காக!' (திருக்குர்ஆன் 30:41)

ஏரிகளையும் மழைநீர் போகின்ற பாதையையும் குடியிருப்புப் பகுதிகளாய் அமைத்துக் கொண்டது மட்டுமா இந்த அவலத்துக்குக் காரணம்? மனித வாழ்வின் அனைத்துத் துறைகளிலும்  தனிப்பட்ட வாழ்விலிருந்து கூட்டு வாழ்வு வரையில், அரசியல் செயல்பாடுகளிலிருந்து பொருளாதாரக் கொடுக்கல் வாங்கல்கள் வரையில், குடும்பத் தொடர்புகளிலிருந்து சமூக உறவுகள் வரையில் நம்பிக்கை சார்ந்த விவகாரங்களிலிருந்து செயல்ரீதியான சமாச்சாரங்கள் வரையில் அனைத்திலும் குழப்பமும் வரம்பு மீறலும் மிகைத்துவிட்டதும்தாம் காரணம்.

எல்லாவற்றுக்கும் மேலாக நம்பிக்கையின் அலங்கோலங்களும் சீர்கேடுகளும்தாம் முக்கியமான காரணம். ஏனெனில் மனிதனின் சிந்தனை, பார்வை, கருத்தோட்டம், உணர்வு, அறம் ஆகிய அனைத்தின் நலமும் சிறப்பும் அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையையே சார்ந்து இருக்கின்றன. மேலும் செயல்களின் அழகும், வனப்பும், நிலைத்தன்மையும் இஸ்லாத்தை மட்டுமே சார்ந்திருக்கின்றன. ஈமானும் இஸ்லாமும் சமூகத்தில் அரிதாகிவிடும்போது அராஜகமும் குழப்பமும் மலிவாகாமல் இருக்குமா என்ன?

ஈமான்தான் சிந்தனையை, கருத்தை, உணர்வைச் செம்மைப்படுத்தும். ஈமான் இல்லையேல் சிந்தனைகள் சீர்குலையும். இஸ்லாம்தான் செயல்களை அழகுபடுத்தும். இஸ்லாம் இல்லையேல் செயல்கள் அலங்கோலமாகும்.

இவையிரண்டும் இல்லாமல் சிந்தனையும் செயலும் எப்போதேனும் எங்கேனும் சீர் பெற்றால் அது தற்காலிகமானவையாய்த்தாம் இருக்கும்.

சிந்திப்போம்! மாறுவோம். மாற்றி அமைப்போம், இன்ஷா அல்லாஹ்.

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்