மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சட்ட அமைப்பைச் சீர்குலைக்கும் புதிய குற்றவியல் சட்டங்கள் - பத்திரிகையாளர் சந்திப்பில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கண்டனம்

முழுமை இஸ்லாம்

நோயாளருக்கு ஒரு சுபச் செய்தி!
அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மது, நவம்பர் 16-30


மனிதர்கள் நோய்களைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்கின்ற, அஞ்சிப் பயப்படுகின்ற ஒரு காலம் இது.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். உடல் ஆரோக்கியம் மிகப் பெரியதோர் அருள் என்பதில் இரண்டு கருத்துகளுக்கு இடமில்லை. ஆயினும் ஓர் இறைநம்பிக்கையாளரைப் பொறுத்தவரையில் அவர் உடல் ஆரோக்கியத்தை ஓர் அருளாகப் பார்ப்பதுபோல நோயையும் ஓர் அருளாகவே காண்பார்.

நோயினால் தீங்குகள் ஏற்படுவதுபோல பல நன்மைகளும் கிடைக்கின்றன. நோயினால் விளைகின்ற நன்மைகளை ஒரு நோயாளி அறிந்து கொண்டால் அவர் நோயை ஒரு சாபமாகப் பார்க்கமாட்டார்; நோயின்போது அதிகம் வேதனையடைய மாட்டார்; விரக்தி கொள்ளமாட்டார்.

துருக்கிய அறிஞர் பதீஉஸ் ஸமான் ஸஈத் நூர்ஸி(ரஹ்) அவர்களின் புகழ்பெற்ற ரஸாஇலுன் நூர் கிரந்தத்தில் ஒரு பகுதி நோயால் பாதிக்கப்பட்டவரை விளித்துப் பேசுகின்றது. ஒரு நோயாளிக்கு நோயினால் விளையும் இருபத்தைந்து நன்மைகளையும் பயன்களையும் அது விளக்குகின்றது. இருபத்தைந்து பயன்களையும் இருபத்தைந்து மருந்துகள் என்று வர்ணிக்கிறார் ஸஈத் நூர்ஸி.

பல அறிஞர்களும் நோயினால் விளையும் நன்மைகளைப் பற்றி பேசியிருக்கின்றார்கள். நோய் என்பது ஒரு பிணியல்ல; அதுவே ஒரு மருந்தாகும். ஆயுள் என்பது ஒரு மூலதனம். அது வீணாகக் கரைந்து கொண்டிருக்கிறது.

ஒருவர் அதனை முதலீடு செய்யத் தவறினால் அது முழுமையாக அழிந்து விடும். சுகத்திலும் ’கப்லா' எனும் மதிமயக்கத்திலும் ஒருவரது ஆயுள் என்ற மூலதனம் வீணாகி விடக்கூடாது. நோய் ஒருவரது மூலதனத்துக்கு பெரும் இலாபத்தை ஈட்டித் தரக்கூடியது. இப்படிச் சொல்பவர் ஸஈத் நூர்ஸி.

நோய் ஒருவகை இபாதத்(வழிபாடு) ஆகும் என்றும் விளக்குகின்றார் நூர்ஸி. இபாதத்துகள் இரு வகைப்படும். நேர்மறையான இபாதத்துகள் முதல் வகை. தொழுகை, திக்ர் முதலியன இப்பகுதியில் அடங்கும்.

எதிர்மறை இபாதத்துகள் இரண்டாம் வகை. ஒரு நோயாளி நோய்க்கு முன்னால், தான் எதிர்கொண்டுள்ள துன்பத்துக்கு முன்னால் தனது பலவீனத்தையும் இயலாமையையும் ஆழமாக உணர்கின்றான்.

அன்பும் கருணையும் கொண்ட தனது படைப்பாளனை நாடுகின்றான்; அவனிடம் புகலிடம் தேடுகின்றான். அல்லாஹ்வுக்கு முன்னால் அவனது இந்த அடக்கமும் பணிவும் அடிபணிதலும் அவன் செய்யும் மிகப் பெரிய இபாதத்தாகும்.

ஓர் அடியான் நோயுற்ற நிலையில் அதிருப்தி கொள்ளாமல், முறையீடு செய்யாமல் ஸப்ருடனும்(பொறுமை) ஷுக்ருடனும்(நன்றியுணர்வு) நடந்து கொள்கின்றபோது அவனது நோயுடன் கூடிய வாழ்வு இபாதத்தாக மாறிவிடும்.

இந்த வகையில் ஒரு நோயாளியின் ஒரு நிமிடம் சிலபோது ஒரு மணி நேர வணக்கமாகவும், சிலபோது ஒரு நாள் முழுக்க நிறைவேற்றிய வணக்கமாகவும் அமைந்து விடக் கூடும்.

உண்மையில் உலக வாழ்க்கை என்பது சுகம் அனுபவிக்கும் இடமல்ல; மாறாக நிலையான மறுமை சுகத்தைப் பெற்றுக் கொள்ளும் நோக்கத்தோடு, தான் பெற்றுள்ள ஆயுளைப் பயன்படுத்தி தியாகத்துடன் போராடும் இடம்; கஷ்டப்பட்டு உழைக்கும் இடம். ஒருவர் நோய் முதலான சோதனைகளுக்கு முகம் கொடுக்காதபோது அவர் தான் அனுபவிக்கும் சுகபோகம், ஆரோக்கியம் காரணமாகத் தன்னிலை மறந்து விடுவார். மதிமயக்கம் அவரைப் பீடித்து விடும். மண்ணறையை, மறுமையை, மஹ்ஷரை எல்லாம் மறந்து விடுவார். அவற்றை வெறுப்பார். தனது வாழ்வை வாழ்க்கை என்ற மூலதனத்தை வீணாக்கிவிடுவார்.

நோயோ அவரைத் தட்டி எழுப்பும்; விழிப்படையச் செய்யும்; உலக வாழ்வின் உண்மை நிலையை அவருக்கு உணர்த்தும். இந்த வகையில் நோய் ஓர் அற்புதமான உபதேசி; வழிகாட்டி.

எனவே நோயை அதிகம் அலட்டிக்கொள்ளலாகாது. மாறாக அதற்காக நன்றி உணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். தாங்க முடியாத நிலையில் அல்லாஹ்விடம் பொறுமையைக் கேட்க வேண்டும். இப்படி வழிகாட்டுகிறார் நூர்ஸி.

இவ்வாறு நோயினால் விளையும் மேலும் 22 பயன்களை நூர்ஸி விளக்கியுள்ளார். பெருமை, கர்வம், தலைக்கனம் தகர்க்கப்படுவதற்கு நோய்கள் காரணமாக அமை கின்றன. ஒரு நோயாளி நோயின் வேதனையை அனுபவிக்கின்றான். அதற்காக அவனால் யாரிடமும் கோபப்பட முடிவதில்லை. உள்ளம் உடைந்துபோய், பெருமை, கர்வம் பறந்து போய் விடுகிறது.

நோயின் காரணமாக ஒருவர் அடைகின்ற மற்றுமொரு நன்மைதான் பாவங்கள் மன்னிக்கப்படுவது. ’ஓர் இறைநம்பிக்கையாளனுக்குச் சிறிய சோதனையோ, கவலையோ, துக்கமோ, ஒரு முள் குத்துவதால் வரும் சிறிய வேதனையோ, எது வந்தாலும் சரி அதன் மூலம் அல்லாஹ் அவனுடைய பாவங்களை மன்னிக்கின்றான்' என்பது நபி(ஸல்) அவர்களின் நற்செய்தி.

நோய்கள் நாளை மறுமையில் நோயாளருக்கு நன்மைகளைப் பெற்றுக் கொடுக்கும். ஒருவர் உலகிலே சோதிக்கப்படுகின்ற அளவுக்கு மறுமையில் நன்மைகளைப் பெற்றுக் கொள்வார்.

இவ்வாறு நோயினால் கிடைக்கும் பயன்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். எல்லாம் வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் உடல் ஆரோக்கியத்தைத் தந்தருள்வானாக!

நமக்கு மத்தியில் உள்ள நோயாளிகளுக்கு நோயைத் தாங்கிக் கொள்ளும் சக்தியையும் பொறுமையையும் வழங்கியருள்வானாக! அவர்களுக்கு ஷிஃபா எனும் சுகத்தையும் நிவாரணத்தையும் கொடுத்தருள்வானாக!

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்