மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

அரசியல்

பல்கலைக்கழகங்களைச் சூழ்ந்துள்ள ஆறு அபாயங்கள்
முனைவர் மு.அப்துல் ரசாக், நவம்பர் 16-30


 

எட்டு ஐஐடிகளில் இயக்குநர்கள் இல்லை. பணி நிறைவு பெற்ற அந்த இடங்களில் புதிய இயக்குநர்களை நியமனம் செய்வதற்கான செர்ச் (Search) கமிட்டிகள் உருவாக்கப்பட்டது. ஆனால் அவர்கள் பரிந்துரைத்த ஒருவரைக்கூட நியமனம் செய்ய ஒன்றிய அரசு முன்வரவில்லை. அந்தத் தேர்வுக்குழு பரிந்துரை செய்த எட்டுப் பேரும் தனிப்பட்ட முறையிலும் அறிவு ரீதியாகவும் கருத்து வேறுபாடு காரணமாக அந்தப் பெயர்களை ’நாக்பூர்' ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் காரணம். ஆகச் சிறந்த உயர் கல்வி நிறுவனங்களின் உயர் பதவி வகிப்பவர்களுக்கு எத்தகைய தகுதிகள் வேண்டுமென்பதற்கு இந்த நிலைமை சிறந்த உதாரணமாக உள்ளது. கல்வியை அடித்தட்டிலிருந்து காவிமயமாக மாற்றும் ஃபாசிஸ நடவடிக்கை புதிய தலைமுறையை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டிருக்கிறது. மைய பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதிலும், பல்கலைக்கழக மானியக் குழுவில் உயர் அதிகாரிகளை நியமனம் செய்வதிலும், அத்தகைய துணை வேந்தர்களை ஆட்டி வைப்பதற்கு உகந்த வேந்தர்களான ஆளுநர்களை நியமித்ததன் வேடிக்கைகளை தமிழகத்திலும் கேரளாவிலும் உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. தகுதி அடிப்படையில் அறிவியல் துறைகளில் ஆழ்ந்த புலமையும் ஆட்சி நிர்வாகத்தில் ஆளுமையும் மிக்கவர்கள் இதுவரையிலும் மையப் பல்கலைக்கழகங்களிலும் தொழில் நுட்ப நிறுவனங்களிலும் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டார்கள். அதனால்தான் நேருவும், அபுல்கலாம் ஆசாதும் உருவாக்கிய அந்த உயர்கல்வி நிறுவனங்கள் உலகத்தரம் வாய்ந்ததாக இன்று வரை தலை நிமிர்ந்து நிற்கின்றன. சுதந்திரச் சிந்தனையையும் திறந்த விவாதங்களையும் மறுதலிக்கிற, அறிவுக்கு எதிரான அரசாக கடந்த எட்டு ஆண்டு நடவடிக்கைகள் உள்ளன. இந்தக் காலகட்டத்தில் நடந்த அரசும் அரசுசார் அரசியல் தலைவர்களும் நடத்திய அத்துமீறல்களைத் தொகுத்து பட்டியலிட்டு தில்லிப் பல்கலைக்கழக சமூகவியல் துறை ஆசிரியர்களும் மாணவர்களும் ஓர் ஆய்வறிக்கை அளித்துள்ளனர். ஆறு வகையான தகவல்களை அவர்கள் தந்துள்ளனர்.

1. தடை செய்யப்பட்ட நூல்கள்

ஒரு சில குறிப்பிட்ட சமூகத்தினரின் உணர்வுகள் புண்படுமென்று பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்ட புத்தகங்களின் பட்டியல் முதல் தகவல். அமெரிக்க இண்டாலஜிஸ்டு வென்டி டோனிகர் தொடங்கி பழம்பெரும் வங்காள நாவலாசிரியர் மகேஷ்வதா தேவியின் புத்தகங்கள் வரை இங்ஙனம் தடை செய்யப்பட்டது.

2. அறிவுசார் கருத்தரங்குகளுக்குத் தடை

மாணவர்களோ ஆசிரியர்களோ இணைந்து நடத்துவதற்கு முன்வந்த 69 கருத்தரங்குகள் தடை செய்யப்பட்டன என்பது பட்டியலிடப்பட்டது. 2014 டிசம்பரில் பூனாவில் நடக்கவிருந்த ஆனந்த் பட்வர்த்தனின் திரையிடலும் 2016 பிப்ரவரி ஜார்க்கண்ட் பல்கலைக்கழகத்தில், காந்தியும் மதநல்லிணக்கமும் என்ற தலைப்பில் நடக்கவிருந்த எம்.என். பாணினியின் உரையும், 2018 ஜனவரியில் தில்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் அபூர்வானந்தனின் கருத்தரங்கமும், அதே பல்கலைக்கழகத்தில் 2021 மார்ச்சில் நடக்க விருந்த மகளிர் தின விழாவும் தடை செய்யப்பட்டவைகள். இதில் இந்த இரண்டு நிகழ்வுகளையும் நடக்க விடாமல் அலங்கோலப்படுத்தியது அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் என்ற இந்துத்துவ மாணவ அமைப்பு. இத்தகைய பல நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்திய பாரம்பரியம் அந்த பாஜக மாணவ அமைப்புக்கு உண்டு.

3. கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கை

இந்த ஆய்வில் பல பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்களும் மாணவர்களும் நடத்திய அறிக்கைகளுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட கிரிமினல் வழக்குகளின் விவரங்களும் தரப்பட்டுள்ளன. தேசத் துரோகச் செயல் என்று குற்றம் சாற்றப்பட்டுள்ளவை அவை. 37 நிகழ்வுகள் இந்தத் தலைப்பில் பட்டியலிடப்பட்டுள்ளன. காஷ்மீர், இந்து கடவுள்களின் படங்கள், குடியுரிமைச் சட்டம் என அரசுக்கு எதிரான மக்கள் உணர்வின் வெளிப்பாடுகளில் கருத்துரைத்ததுதான் பெரும்பாலான குற்றங்கள்.

    

4. தாக்குதல்கள்

ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் எதிராக நடந்த உடல் ரீதியான தாக்குதல்களின் விவரங்கள். வலதுசாரி மாணவர்களின் தாக்குதலில் உயிரிழந்த உஜ்ஜயினியின் ஆசிரியர், 2015இல் தார்வாடில் கொலை செய்யப்பட்ட எம்.எம்.கல்புர்கி, முஸ்லிம் என்ற காரணத்தால் கட்டாய இடமாற்றத்துக்கு இரையான பனாரஸ் இந்து பல்கலைக்கழக ஆசிரியரின் பெயர் வரையிலும் இந்தப் பட்டியலில் உள்ளன.

5. கட்டாய வெளியேற்றம்

அரசியல் அழுத்தம் காரணமாக வேலையில் சேர முடியாமல் போன, ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட பேராசிரியர்களின் பெயர்கள். இதில் பிரபல எழுத்தாளர் ராமச்சந்திர குஹாவும் உள்ளார். அஹமதாபாத் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பதவியை ஏற்றுக் கொள்வதற்கு ABVP ராமச்சந்திர குஹாவுக்கு எதிராகப் போராடியதும் இந்தப் பட்டியலில் உள்ளது.

6. வெளிநாட்டு ஆளுமைகளுக்கு அனுமதி மறுப்பு

இந்தியாவின் அகாதமி கூட்டங்களில், கருத்தரங்குகளில், பயிற்சிப் பட்டறைகளில் பேசுவதற்கும் பங்கேற்பதற்கும் வந்த வெளிநாட்டு ஆளுமைகளுக்கு எதிராக நடந்த காட்டுத்தனமான எதிர்ப்புகளும் ஃபாசிஸ நடவடிக்கைகளின் பட்டியல்தான். பலருக்கும் இங்கே வருவதற்கான நுழைவு அனுமதிகூட மறுக்கப்பட்டது. அனுமதி கிடைத்து வந்த சிலருக்குப் பேசுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. விசா மறுக்கப்பட்ட பல பன்னாட்டு அறிவுஜீவிகள் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அதை வெளிப்படுத்த முன்வரவில்லை.

  

ஆப்பிரிக்க மாணவர்களுக்கு எதிரான இனவெறித் தாக்குதல்கள் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை. இந்தத் தகவல் குறித்து அறிய விரும்புபவர்கள் https://thewire. in/rights/six-tables-that-tell-the-story-ofacademic-unfreedom-in-india எனும் இணைப்பில் தொடர்பு கொள்ளலாம். அத்துடன் அகாதமிக் சுதந்திரத்தின் இன்றைய நிலைமை குறித்து அறிய பேராசிரியர் நந்தினி சுந்தரின் அறிக்கைகளையும் வாசிக்கலாம்.

தில்லியில் கல்வி கற்று கொல்கத்தாவில் முனைவர் பட்ட ஆய்வு செய்து பெங்களூரிலும் பிற இந்தியப் பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றிய ராமச்சந்திர குஹா போன்ற பேரறிஞர்கள் இந்த நடவடிக்கைகளைப் பெரிதும் நடுக்கத்துடன் பார்க்கிறார்கள்.

அரசுக் கட்டுப்பாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் மட்டும் அல்ல, சில தனியார் கல்வி நிறுவனங்களிலும் இத்தகைய அத்துமீறல்களும் கருத்துச் சுதந்திர ஆபத்துகளும் தாக்குதல்களும் ஆசிரியர்களின் அறிவு, சுதந்திரம் பறிக்கப்படுவதாக ராமச்சந்திர குஹா கூறுகிறார். ஒரு தனியார் பல்கலைக்கழகம் தங்களது கல்வி நிறுவனத்தில் பணியாற்றுபவர்களின் ஊடகப் பதிவுகளைக் கண்காணிப்பதாகவும் எச்சரிப்பதாகவும் கூறப்படுகிறது.

மாணவராகவும் ஆசிரியராகவும் ஆய்வாளராகவும் ஐம்பதாண்டுகளாகப் பணியாற்றி வரும் உயர்கல்விப் பேராசிரியர்கள் பலர் இத்தகைய கண்காணிப்பு வளையத்திற்குள் உள்ளனர். அவசர நிலை காலத்துக்குப் பிறகு இத்தகைய அறிவிக்கப்படாத அவசர நிலை அச்சுறுத்தல்கள் வேறு எப்போதும் இருந்ததில்லை.

அறிவுச் சமூகத்தின் பிரதிநிதிகளைக் குண்டர் சங்கங்களை வைத்து மிரட்டவும் அடிபணியவும் வைப்பதற்குப் பல பல்கலைக்கழகங்களில் அத்தகைய அதிகாரிகளும் நுழைந்துள்ளனர். மேலும் வேந்தர்களாக இருக்கிற ஆளுநர்களே எந்தக் கூச்சமுமின்றி பல்கலைக்கழக நியமனங்களிலும் சுதந்திரமான செயல்பாடுகளிலும் அத்துமீறி நுழைந்து இடையூறு செய்வதற்கான செய்திகள் சாதாரணமாகிவிட்ட சூழல், எதிர்காலம் எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு அறிகுறியாக உள்ளது.

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்