ஹிஜ்ரி நான்காம் ஆண்டில் ஒரு நிகழ்வு நடந்தது. குவைலிதின் இரு மகன்களாகிய தல்ஹா, ஸலமா ஆகிய இருவரும் தமது குலமாகிய பனு அஸதை நபி(ஸல்) அவர்களுடன் போர் தொடுப்பதற்காக ஒன்று திரட்டினார்கள்.
நபி(ஸல்) அவர்களுக்கு இந்தச் செய்தி எட்டியது. உடனே அபூ ஸலமா பின் அப்துல் அஸது அல் மக்ஸுமி(ரலி) அவர்களின் தலைமையில் ஒரு சிறு படையை அனுப்பினார்கள். அப்போது இவ்வாறு கூறினார்கள். "நீர் புறப்படும்! பனு அஸத் குலம் வாழும் இடத்தை அடைந்தவுடன் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவீராக!'. அவ்வாறே அவர் சிறு படையுடன் அங்கு சென்றார். தாக்குதல் நடத்தினார். அங்கிருந்தவர்கள் எதிர்த்துப் போரிடவில்லை. மாறாக தங்களது வீடுகளை விட்டு விட்டு விரண்டு ஓடிவிட்டனர். அபூ ஸலமா(ரலி) அங்கு இருந்த ஒட்டகங்கள், ஆடுகளைக் கைப்பற்றினார். பத்து நாள்களுக்குப் பின்னர் மதீனா திரும்பினார். இது முஹர்ரம் மாதம் நடந்தது.
படை திரட்டல் முறியடிப்பு
இதே ஆண்டில் இதே மாதத்தில் இன்னொரு நிகழ்வு நடந்தது. அரஃபா சமவெளிக்கு அருகில் உள்ள உரானா எனும் இடத்தில் சுஃப்யான் பின் காலித் அல்குஸலி என்பவர் வசித்து வந்தார். அவர் நபி(ஸல்) அவர்களுடன் போர் தொடுக்க ஒரு படையைத் திரட்டிக் கொண்டிருந்தார். இந்தச் செய்தி நபி(ஸல்) அவர்களுக்குக் கிடைத்தது. உடனே நபியவர்கள் சுஃப்யானிடம் அப்துல்லாஹ் பின் அனீஸ் அல்ஜுஹனி(ரலி) அவர்களை அனுப்பி வைத்தார்கள்.
அவ்வாறே அவர் முஹர்ரம் மாதம் புறப்பட்டார். சுஃப்யானின் வசிப்பிடத்திற்கு வந்தார். அவரிடம் "நீர் நபி(ஸல்) அவர்களுடன் போர் தொடுக்க ஒரு படையை உருவாக்குவதாகக் கேள்விப்பட்டேன். உண்மையா?' என்று வினவினார். அதற்கு அவர் "ஆம்! நான் படையை உருவாக்கும் பணியில்தான் ஈடுபட்டுள்ளேன்' என்றார். உடனே அப்துல்லாஹ்(ரலி) அவரைக் கொன்று சுஃப்யானின் படை திரட்டலை முறியடித்தார்.
தூதுக் குழுவின் துரோகம்
அழல், கார்ராஃ எனும் குலங்களிலிருந்து ஒரு தூதுக்குழு நபி(ஸல்) அவர்களைச் சந்திக்க வந்தபோது "நபியவர்களே! இஸ்லாம் குறித்து எங்களுக்குப் பல செய்திகள் வந்தடைந்துள்ளன. இந்த மார்க்கத்தைக் குறித்து இன்னும் அதிகமாக நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். ஆகவே எங்களுடன் மார்க்கம் அறிந்த சிலரை அனுப்பி வைப்பீர்களாக!' என்று வேண்டினர். அதற்கு நபியவர்கள் சில நபித்தோழர்களை அவர்களுடன் அனுப்பினார்கள். ஆஸிம் பின் ஸாபித் அன்சாரி(ரலி) அவர்களைத் தலைவராக நியமித்தார்கள்.
இவர்கள் அர்ரஜீஃ என்னும் இடத்தை வந்தடைந்தபோது, அந்தத் தூதுக்குழு தம்முடன் நபி(ஸல்) அவர்களால் அனுப்பப்பட்ட நபித்தோழர்களை ஏமாற்றியது. மோசம் செய்து துரோகம் இழைத்தது. அங்கு வாழ்ந்து வந்த ஹுதைல் எனும் பகைமை குலத்திடம் அண்ணலார் அனுப்பிய தோழர்களைக் காட்டிக் கொடுத்தது. இந்தக் குலத்தைச் சேர்ந்தவர்தான் சுஃப்யான் பின் காலித் அல்ஹுதைலி என்பவர்.
சுஃப்யானைக் கொன்றதற்குப் பழிவாங்க வேண்டும் என்பதற்காக இந்தக் குலத்தினர் 200 அம்பு எறியும் வீரர்களை அனுப்பி வைத்தனர். இந்தப் படை நெருங்கி வருவதை அறிந்த நபித்தோழர்கள் மலையில் ஏறிக்கொண்டனர். பகைவர்கள் இவர்களை நோக்கி "நீங்கள் இறங்கி வாருங்கள். உங்களைக் கொல்ல மாட்டோம்' என்று வாக்குறுதி கூறினார்கள்.
நபித்தோழர்கள் அவர்களின் வாக்குறுதியை நம்பவில்லை. அவர்களுடன் போரிட்டனர். இதில் எட்டு நபித்தோழர்கள் கொல்லப்பட்டனர். இரண்டு நபர்களைப் பகைவர்கள் கொல்லவில்லை. அவ்விருவரையும் பகைவர்கள் மக்கா கொண்டு சென்றனர். முஸ்லிம்களைப் பழிவாங்கத் துடித்தவர்களிடம் விற்றனர். அதில் ஒருவர் குபைப் பின் அதி(ரலி). மற்றொருவர் ஸைத் பின் அத்தஸ்னா(ரலி).
சிறந்த கைதி
குபைப்(ரலி) அவர்களை ஹாரிஸ் என்பவரின் பிள்ளைகள் விலைக்கு வாங்கிக் கொண்டனர். ஏனெனில் அவர்களின் தந்தை ஹாரிஸைப் பத்ர் போரில் குபைப்(ரலி) கொன்றார். இப்போது குபைப்(ரலி) கைதியாக அவரின் பிள்ளைகளிடம் இருக்கின்றார். அவரைக் கொல்வதற்காக அவர்கள் முடிவெடுத்தனர். அப்போது அவர் ஒரு சவரக்கத்தி வேண்டும் என்றார்.
ஹாரிஸ் என்பவரின் மகள் அவருக்குக் கத்தியைக் கொடுத்தார். கத்தி அவர் கையில் இருந்தது. இந்த வேளையில் இப்பெண்மணியின் குழந்தை ஒன்று குபைப்(ரலி) அவர்களிடம் ஓடிச் சென்று விடுகிறது. அவர் அக்குழந்தையைத் தன் மடியில் அமர்த்திக் கொள்கிறார். அதைப் பார்த்தவுடன் அவள் செய்வதறியாது திகைத்து நிற்கிறாள். குழந்தை அவர் மடியில்! கத்தியும் அவர் கையில்!
அப்போது அவர் கேட்டார்: "என்ன! நான் இக்குழந்தையைக் கொன்று விடுவேன் என்று அஞ்சி விட்டாயா? ஒருபோதும் அவ்வாறு செய்ய மாட்டேன்.'
அவள் கூறினாள்: "இவரைப் போல் ஒரு சிறந்த கைதியை நான் பார்த்ததில்லை! இப்போதுதான் ஒரு சிறந்த கைதியைப் பார்க்கிறேன்! அவர் கையில் திராட்சைப் பழங்கள் இருந்தன. அதிலிருந்து அதை ஒவ்வொன்றாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
ஆனால் அப்போது மக்காவில் எந்தப் பழமும் விளையாத பருவம். இது நிச்சயமாக அல்லாஹ்விடம் இருந்து மட்டுமே வந்திருக்க வேண்டும்!
அவரைக் கொலை செய்வதற்காக அவர்கள் முனைந்தனர். அவர் உடனே "நான் இரண்டு ரக்அத் தொழ வேண்டும்' என்று கூறினார். அவர்கள் அனுமதித்தனர். இரண்டு ரக்அத்துகள் தொழுதார். பின்னர் தம்மை அவர்களிடம் ஒப்படைத்து விட்டு கூறினார்: "நான் மரணத்திற்குப் பயந்துதான் தொழுகின்றேன் என்று நீங்கள் நினைக்காவிடில் இன்னும் அதிகமாகத் தொழுது இருப்பேன்'.
பின்னர் அவர் பின்வரும் கவிதையைப் பாடினார்: "முஸ்லிமாக இருக்கும் நிலையில் நான் கொல்லப்படுவதை நினைத்து ஒரு போதும் கவலை கொள்ள மாட்டேன்! அல்லாஹ்வுக்காக நான் வீழ்த்தப்படுவதை ஒருபோதும் பொருட்படுத்த மாட்டேன்!'. பின்னர் உக்பா பின் ஹாரிஸ் என்பவர் அவரைக் கொன்று விட்டார். (புகாரி 3045)
முள் குத்துவதைக்கூட..
அந்த இருவரில் மற்றொருவர் ஸைத் (ரலி). அவரை ஸஃப்வான் பின் உமைய்யா விலைக்கு வாங்கிக் கொண்டார். அவரைக் கொல்வதற்குச் சற்று முன், அவரிடம் அபூ சுஃப்யான் கேட்டார்: "ஸைதே! இப்போது நீர் இருக்கும் இடத்தில் முஹம்மது(ஸல்) அவர்கள் இருக்கிறார் என்றும் நீர் உமது வீட்டில் இருக்கிறீர் என்றும் கற்பனை செய்து கொள்! இவ்வாறான ஒரு நிலையை நீர் விரும்புவீரா?'. அப்போது அவர் கூறினார்: "முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு ஒரு சிறிய முள் குத்துவதைக்கூட நான் விரும்ப மாட்டேன்.' அப்போது அபூ சுஃப்யான் கூறினார்: "நபியவர்களின் தோழர்கள் அவரை நேசிப்பதைப் போன்று வேறு யாரும் எவரையும் நேசித்ததை நான் பார்த்ததில்லை'. (சீரத் இப்னு ஹிஷாம் 2/172)
அவர்கள் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டார்கள்
ஹிஜ்ரி நான்காம் ஆண்டு ஸஃபர் மாதத்தில் அபூபர்ரா ஆமிர் பின் மாலிக் என்பவர் ஒரு தூதுக் குழுவிற்குத் தலைமை தாங்கியவராக நபி(ஸல்) அவர்களைச் சந்திக்க வந்தார். அவர் ஆமிர் எனும் குலத்தின் தலைவர்களில் ஒருவர். அவரை நபி(ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் பக்கம் அழைத்தார்கள். அவர் ஏற்கவும் இல்லை; மறுக்கவும் இல்லை.
மாறாக அவர் கூறினார்: "நபியவர்களே..! தாங்கள் முன்வைத்த அழைப்பு மிகவும் அருமை! ஆகவே தங்கள் தோழர்களில் சிலரை என்னுடன் அனுப்பி வையுங்கள். அவர்கள் நஜ்த் வாசிகளிடம் சென்று அழைப்புப் பணி செய்யட்டும். அவர்கள் உமது அழைப்பை ஏற்பார்கள் என்று நம்புகிறேன்'.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நஜ்து மக்கள் எமது தோழர்களுக்கு எங்கே தீங்கு விளைவித்து விடுவார்களோ என நான் அஞ்சுகிறேன்'. அதற்கு அபூபர்ரா ஆமிர் கூறினார்: "நான் அவர்களுக்குப் பாதுகாப்பாக, உறுதுணையாக இருப்பேன்'.
இதை நபி(ஸல்) அவர்கள் நம்பினார்கள். அவருடன் முன்திர் பின் அம்ரு(ரலி) அவர்களின் தலைமையில் எழுபது தோழர்களை அனுப்பினார்கள். இவர்கள் திருமறையை மனனம் செய்த காரிகள் என்று போற்றப்பட்டவர்கள்.
இவர்கள் புறப்பட்டார்கள். பிஃரு மவூனா எனும் இடத்தில் தங்கினார்கள். ஹராம் பின் மல்ஹான்(ரலி) மூலமாக, பனூ ஆமிர் குலத்தின் தலைவர் ஆமிர் பின் அத் துஃபைல் என்பவருக்கு ஒரு கடிதம் அனுப்பி வைத்தனர். அந்தத் தூதர் அக்கோத்திரத் தலைவரைச் சந்தித்துக் கடிதத்தைக் கொடுத்தபோது அதை அவர் ஏறிட்டும் பார்க்காமல் வந்தவர் மீது பாய்ந்து அவரைக் கொலை செய்து விட்டார். அவர் ஈட்டியால் குத்தப்பட்டு முகம் முழுவதும் ரத்தக் கறையாக மாறியபோது, "கஅபாவின் இறைவன் மீது ஆணையாக! நான் வெற்றி பெற்று விட்டேன்' என்று கூறினார். (நூல்: புகாரி)
மற்ற நபித்தோழர்களையும் தாக்க வேண்டும் என்று அவர் தமது குலத்தைத் தூண்டினார். ஆனால் அபூ பர்ரா ஆமிர் அபயம் அளித்த மக்களுடன் போர் தொடுக்க அந்தக் குலம் முன்வரவில்லை. பின்னர் இவர் சுலைம் மக்களை அதாவது ரஃல், தக்குவான், உசையா ஆகிய குலங்களை அழைத்தார். அவர்கள் போர் செய்வதற்குச் சம்மதித்துப் புறப்பட்டார்கள். இவர்கள் இந்த 70 நபித்தோழர்களையும் முற்றுகையிட்டு அவர்களுடன் சண்டையிட்டனர். இந்த நபித்தோழர்களும் பகைவர்களைக் கடுமையாக எதிர்த்துப் போரிட்டனர். ஆனால் பயனில்லை. ஏனெனில் இவர்கள் குறைவான எண்ணிக்கையில் இருந்தனர். எதிரிகள் அதிகம் இருந்தனர். ஆகவே எதிரிகள் இவர்கள் அனைவரையும் கொன்று விட்டனர். அவர்களில் கஃப் பின் ஸைத்(ரலி) அவர்களைத் தவிர வேறு யாரும் தப்பிக்கவில்லை. இவர் போர்க்களத்தில் சடலங்களுடன் படுத்துக் கொண்டார். எதிரிகள் இவர் இறந்து விட்டார் என்று எண்ணி விட்டனர்.
நபி(ஸல்) அவர்களுக்கு இந்தச் செய்தி கிடைத்தது. உடனே நபியவர்கள் கூறினார்கள்: "உங்களின் சகோதரர்கள் பகைவர்களை எதிர்த்துப் போரிடும்போது கொல்லப்பட்டு விட்டனர். மேலும் அவர்கள் இறக்கும்போது இவ்வாறு கூறினார்கள்: "இறைவா! நீ எங்கள் கூட்டத்திற்கு, நாங்கள் எங்கள் இறைவனை சந்தித்து விட்டோம்! நாங்கள் அவனைப் பொருந்திக் கொண்டு விட்டோம்! அவன் எங்களைப் பொருந்திக் கொண்டு விட்டான் என்று சொல்லிவிடுவாயாக!'
நபி(ஸல்) அவர்களிடம் இந்தக் குழுவின் சோகச் செய்தியும் ரஜீஃ எனும் இடத்திற்குச் சென்ற குழுவின் சோகச் செய்தியும் ஒரே நாளில் கிடைத்தது. மிகவும் அதிகமாகக் கவலை அடைந்தார்கள். இவர்களை ஏமாற்றிக் கொன்றவர்களைப் பழிவாங்கும் படி இறைவனிடம் ஒரு மாதம் தொழுகையில் துஆச் செய்தார்கள். (புகாரி 1003)
(தொடரும்)