கேரளத்தைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞர்கள் டாக்டர். அப்துஸ் ஸலாம் வாணியம்பலம், ஷேக் முஹம்மது காரக்குன்னு ஆகியோரின் கட்டுரைகளும், மொழிபெயர்ப்பாளர் கே.எஸ். அப்துல் ரஹ்மான் அவர்களின் கேள்விபதில் பாணியிலான விளக்கங்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
இக்கட்டுரைகள் முறையே 2003, 2009 ஆகிய காலகட்டங்களில் அதாவது, ஃபாசிஸம் ஆட்சிக் கட்டிலில் அமர்வதற்கு முன்பு எழுதப்பட்டது. டாக்டர் அப்துஸ் ஸலாம் அவர்களின் கட்டுரைத் தொகுப்பு நான்கு துணைத் தலைப்புகளை உள்ளடக்கியுள்ளது.
1. துன்புறுத்தல், தற்காப்பு, எதிர்தாக்குதல்
இத்தலைப்பின் கீழ் குர்ஆன், இறைத்தூதரின் வாழ்க்கை வரலாறு(சீறா) ஒளியில் இஸ்லாமிய அழைப்பின் தொடக்கக் காலகட்டத்தில் அவ்வழைப்பை ஏற்ற முஸ்லிம்களுக்கு நேர்ந்த கொடுமைகளைக் காட்சிப்படுத்தியதுடன் அதற்கு திருக்குர்ஆன் வழங்கிய வழிகாட்டல்களையும் விளக்குகிறது.
2. தஃவாவா? தற்காப்பா?
பன்மைச் சமூகத்தில் முஸ்லிம்கள் முற்படுத்த வேண்டியது என்ன என்பதற்கான பதிலை இந்தத் தலைப்பு அலசுகிறது. மேலும் சிறுபான்மை முஸ்லிம்கள் அழைப்புப் பணியை முன்னெடுப்பது கட்டாயம் என வலியுறுத்துகிறது.
3. தற்காப்பு இயக்கங்கள் ஒரு சமகாலப் பார்வை
இத்தலைப்பில் முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் உருவாகிய "ஆயுதம் தாங்கிய' குழுக்களின் ஆரம்பகாலச் செயல்பாட்டையும் பின் அவற்றில் ஏற்பட்ட மாற்றங்களையும் கவனப்படுத்துகிறது. இந்த உதாரணங்கள் "ஆயுதச் செயல்பாடு' தேவையில்லை என்பதை நிறுவுகிறது.
4. இந்தியச் சூழலும் தற்காப்பும்
இந்தியாவில் வாழும் பெரும்பான்மையான மக்கள் நடுநிலையாளர்கள். அவர்களுக்கு அழைப்பை எடுத்துரைக்க வேண்டியதே முக்கியமான பணி என்பதை இத்தலைப்பின் கீழ் விரிவாக அலசுகிறது. முஸ்லிம்களுக்காகக் குரல் கொடுக்கக்கூடிய மக்கள் இங்கு உள்ளனர். சிலரது வன்முறையிலான தற்காப்பு முயற்சிகள் அவர்களையும் நம்மைவிட்டு திருப்பிவிடக்கூடிய வாய்ப்புள்ளது எனும் வாதத்தை முன்வைக்கிறது.
இந்தியச் சூழலை முன்வைத்து டாக்டர் யூசுஃப் அல் கர்ளாவி, பைசல் மௌலவி ஆகியோரிடம் பெறப்பட்ட ஃபத்வாவும் இடம்பெற்றுள்ளது. மற்ற இரண்டு கட்டுரைகளும் இஸ்லாமியப் பேரியக்கமான ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் வழிமுறைகளின் நியாயப்பாட்டை விளக்கும் வகையில் அமைந்துள்ளது.
அறிஞர் ஷேக் முஹம்மது காரக்குன்னு, "தற்காப்பிற்கான வன்முறை வழிமுறைகள் எவ்வாறு இந்தியச் சூழலில் இஸ்லாமிய அழைப்பிற்கு மட்டுமல்லாமல், அது மீண்டும் முஸ்லிம் உம்மத்திற்கே பாதகமாக அமையும்' என கவனப்படுத்துகிறார். "அதே வேளையில் தற்காப்பின் முக்கியத்துவத்தையும் அதற்காக மன வலிமையையும் உடல் வலிமையையும் முஸ்லிம் ஆண், பெண் என அனைவரும் பெறுவதையும் தெளிவுபடுத்துகிறார்.
மொழிபெயர்ப்பாளர் கே.எஸ். அப்துல் ரஹ்மான் வாதமும் பிரதிவாதமும் என்ற தலைப்பில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் நிலைப்பாடு, ஆயுதப் போராட்டத்தின் பின்விளைவுகளைக் கேள்விபதில் வடிவில் விளக்குகிறார்.
ஒட்டுமொத்தமாக இப்புத்தகம் ஆயுதப் போராட்டம் தீர்வல்ல எனும் கருப்பொருளைச் சுற்றியே வருகிறது. சமூகப் பாதுகாப்பு எனும் தலைப்பை நிறைவு செய்யும் வகையில் அதற்கு மாற்றாக "என்ன செய்யலாம்?' என்பதையும் விளக்கியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.