மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • தொடர் சரிவில் அதானி குழும பங்குகள்
  • அதானி போர்ட், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன், கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ், அதானி வில்மர் நிறுவன பங்குகளின் விலை கடும் சரிவு!
  • அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து அதானி குழும பங்குகள் விலை சரிவைச் சந்தித்துள்ளன.

முழுமை இஸ்லாம்

ஷைத்தானின் முதல் சூழ்ச்சி!
அஷ்ஷெய்க் ஏ.சிஅகார் முஹம்மது, , 16-31 ஜனவரி 2023


பெரும்பாலானவர்களைப் பீடிக்கின்ற ஓர் ஆன்மிக நோய் இருக்கின்றது. அதுதான் உலக வாழ்வு பற்றிய அதீத எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் ஆகும். இது "தூலுல் அமல்' என்று அழைக்கப்படுகின்றது. இந்தக் குணம் ஆபத்தானது; நமது ஆன்மிக வாழ்வைக் கெடுக்கக்கூடியது.

தனக்குக் கிட்டிய எதிர்காலத்தில் மரணம் சம்பவிக்காது; தான் நீண்ட ஆயுளைப் பெற்று வாழ்வேன் என்று நம்பி மரணத்தை மறந்து, மறுமையை மறந்து இம்மை வாழ்வில் தீவிர ஈடுபாடு கொள்வதே "தூலுல் அமல்' எனப்படுகின்றது. இந்த மனநிலை ஒருவரது ஆன்மிக வாழ்க்கையைப் பல வகையிலும் பாதிக்கும். பலருக்கு வயது ஏற, ஏற நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற வேட்கையும், பல உலக ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துக் கொண்டே செல்லும். அவர்கள் மரணத்தை வெறுப்பார்கள்; மறுமையை மறப்பார்கள்.

இது குறித்து நபி(ஸல்) அவர்கள் கூறிய ஓர் அற்புதமான நபிமொழி இருக்கின்றது. "ஒரு முதியவரின் உள்ளம் இரண்டு விஷயங்களில் தொடர்ந்து இளமையாகவே இருக்கும். அவையாவன: உலக ஆசையும், வாழ்க்கை பற்றிய அதீத எதிர்பார்ப்புமாகும்'.

பெரும்பாலான இளைஞர்கள் பொடுபோக்காக வாழ்வதற்கு இந்த "தூலுல் அமல்' எனும் நீண்ட ஆயுள் பற்றிய அதீத நம்பிக்கையே காரணமாகும். தாம் இளைமைப் பருவத்தில் இருக்கின்றோம்; ஆரோக்கியமாகவும் இருக்கின்றோம். இதனால் நமக்கு அவசரமாக மரணம் சம்பவிக்க வாய்ப்பில்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள். இது ஷைத்தான் விரிக்கின்ற மிகப் பெரிய சூழ்ச்சி வலையாகும்.

ஆதம்(அலை) அவர்களை வழிகெடுக்க ஷைத்தான் கையாண்ட முதல் சூழ்ச்சி இதுதான். அல்லாஹ் தடை செய்த மரத்தின் கனியைச் சாப்பிட்டால் சாகாவரம் பெறலாம்; நிலையாக வாழலாம் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு ஊட்டினான் ஷைத்தான்.

"தூலுல் அமல்' என்ற நோயினால் பாதிக்கப்பட்டவர் நல்அமல்களில் ஆர்வம் கொண்டவராக இருக்கப்போவதில்லை; நற்காரியங்கள் செய்வதைத் தள்ளிப்போடுபவராகவே இருப்பார்; அல்லாஹ்வுக்கு மாறு செய்வார்; பாவம் செய்வார்; பாவமன்னிப்புக் கேட்பதைத் தள்ளிப்போடுவார்; பிறரின் உரிமைகளை நிறைவேற்றுவதிலும் வழங்குவதிலும் அசிரத்தைக் காட்டுவார்; அசமந்தமாக நடப்பார். சுருக்மாகச் சொல்வதாக இருந்தால் அல்லாஹ்வுக்குரிய கடமைகளை நிறைவேற்றுவதிலும் சரி அவனின்  அடியார்களுக்குரிய கடமைகளை நிறைவேற்றுவதிலும் சரி பொடுபோக்காக இருப்பார்.

ஓர் உண்மை இறைவிசுவாசி "கிஸருல் அமல்' எனும் உலக வாழ்வில் தனது ஆயுள் தொடர்பில் குறைந்த  குறுகிய, அளவோடுகூடிய எதிர்பார்ப்பு கொண்டவராகவே இருப்பார்; எந்த நிலையிலும் மரணம் வரும் என்ற நம்பிக்கையோடு மறுமை நோக்கிய தனது பயணத்திற்குத் தயாரானவராக இருப்பார்; மிக வேகமாகக் கரைந்து கொண்டிருக்கும் கையிலுள்ள, எஞ்சிய ஆயுளை நற்கருமங்கள் செய்வதில் உச்ச நிலையில் பயன்படுத்துவதில் முனைப்புக் காட்டுவார்.

உலக வாழ்வு பற்றிய அதீத எதிர்பார்ப்பின் ஆபத்துகள் பற்றி நமது ஆரம்ப கால அறிஞர்கள் நிறையவே பேசி இருக்கின்றார்கள். புழைல் இப்னு இயாழ்(ரஹ்) சொல்கிறார்கள்: "தூலுல் அமல் ஒரு கேடாகும்; கிஸருல் அமல் ஓர் அருளாகும்.' 

"மாலையானால் காலைப் பொழுதை எதிர்பார்க்காதே! காலையானால் மாலை வேளையை எதிர்பார்க்காதே! நோய் வருவதற்கு முன்னர் உடல் ஆரோக்கியத்தையும் மரணம் வருமுன்னர் வாழ்வையும் பயன்படுத்திக் கொள்' என்று சொன்னார்கள் இப்னு உமர்(ரலி).

"தூலுல் அமல்' என்ற ஆபத்திலிருந்து விடுபட என்ன வழி?

மரணத்தை அதிகம் நினைவுகூரல் வேண்டும். உலக ஆசாபாசங்களையெல்லாம் அறுக்கக்கூடிய மரணத்தை அதிகம் நினைவுகூருங்கள்' என்பது நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டல். அவ்வப்போது மண்ணறைகளைத் தரிசிப்பதும் உலக வாழ்வு பற்றிய அதீத நம்பிக்கையைக் குறைத்துக்கொள்ள துணைபுரியும். "அடக்கத்தலங்களைத் தரிசியுங்கள்; அது மறுமையை உங்களுக்கு நினைவூட்டும்' என்பது நபி வாக்கு.

உலக மாயையிலிருந்து விடுபட உறுதிபூண வேண்டும்; நற்காரியங்களைத் தள்ளிப் போடுவது எவ்வளவு ஆபத்தானது என்பதை உணரவேண்டும்; மேலும் நமது ஆயுள் எவ்வளவு வேகமாகக் கழிந்து கொண்டிருக்கின்றது; நாள்கள் எப்படி விரைவாக ஓடிக்கொண்டிருக்கின்றன என்பதை அவ்வப்போது நினைத்துப் பார்க்க வேண்டும்.

இவையெல்லாம் தூலுல் அமலுடைய ஆபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள உதவும். "தூலுல் அமல்' கூடாது என்கின்றபோது உலக வாழ்க்கையைத் துறக்க வேண்டும் என்பது பொருளல்ல; மரணத்தை, மறுமையை மறக்குமளவுக்கு உலக வாழ்வில் தீவிர ஈடுபாடு கொள்ளலாகாது என்பதே இங்கு வலியுறுத்தப்படுகின்றது.

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்