மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • தொடர் சரிவில் அதானி குழும பங்குகள்
  • அதானி போர்ட், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன், கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ், அதானி வில்மர் நிறுவன பங்குகளின் விலை கடும் சரிவு!
  • அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து அதானி குழும பங்குகள் விலை சரிவைச் சந்தித்துள்ளன.

முழுமை இஸ்லாம்அரசியல்

அதிரவைக்கும் ஆப்டிடியூட்
வாஜித் ஷா (கல்வியாளர்), , 16-31 ஜனவரி 2023


ஆப்டிடியூட் என்கிற சவால்

ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரி வரை கணிதத்தைத் தொடர்ந்து படிக்கிறோம். கலை, அறிவியல் பட்டம் என்றால் சற்றேறக்குறைய 15 ஆண்டுகளும் பொறியியல் என்றால் 16 ஆண்டுகளும் படிக்கிறோம். பிறகு போட்டித் தேர்வுகளின் பாடத்திட்டத்தையும் கேள்வித் தாளையும் பார்க்கும்போது பல மாணவர்களுக்குப் புதிதாகத் தோன்றும். சிலருக்கு எதுவுமே புரியாது. காரணம் பாடத்திட்டமோ கேள்விகளோ கணிதம் என்பதைவிட ஆப்டிடியூட் என்கிற அடுத்த நிலையில் இருப்பதேயாகும். இன்ஜினியரிங் மாணவர்கள் ஆப்டிடியூட் பாடத்தை கல்லூரி யில் கற்கிறார்கள். பெரும்பாலான கலை, அறிவியல் பட்டதாரிகள் பத்தாம் அல்லது பன்னிரெண்டாம் வகுப்பிற்குப் பிறகு கணிதத்தைப் படித்திருக்க மாட்டார்கள். இவர்களுக்கு ஆப்டிடியூட் கேள்விகள் மிகப் பெரிய சவாலாக அமைகிறது.

ஆப்டிடியூட் க(கொ)டுமையாக இருப்பது ஏன்?

10ஆம் வகுப்புப் பாடத்தில் இடம் பெறும் கணிதத்தின் பாடத் தலைப்புகளைக் கவனியுங்கள்.

1. உறவுகளும் சார்புகளும்

2. எண்களும் தொடர் வரிசைகளும்

3. இயற்கணிதம்(அல்ஜிப்ரா)

4. வடிவியல்

5. ஆயத்தொலை வடிவியல்

6. முக்கோணவியல் அளவியல்

7. புள்ளியியல்

8. நிகழ்தகவு

போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட் டத்தைப் பாருங்கள்

1. பொது மனத்திறன்

2. தர்க்க ரீதியான பகுத்தறிவு

3. அளவுத் திறன்

4. வாய்மொழித் திறன்

5. தரவு விளக்கம்

6. முடிவெடுக்கும் திறன்

சற்றேறக்குறைய பதினாறு ஆண்டுகள் படித்து பட்டதாரி ஆன பிறகும் போட்டித் தேர்விற்காகப் புதிதாகப் படிக்க வேண்டும் அல்லது மேலும் படிக்க வேண்டும் என்கிற நிலை உள்ளது.

தனித்தனியாக தலைப்புகள் அதற்கான வாய்ப்பாடுகளைத் தெரிந்து கொண்டு கணிதப் பாடத்தின் பயிற்சிகளைச் செய்தால் பள்ளி, கல்லூரிகளில் கணிதத்தில் தேர்ச்சி பெற்றுவிட முடியும். ஆனால் ஆப்டிடியூட்டில் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்த பல அடிப்படைகளைத் தெரிந்து கொண்டு தேர்வின் கேள்விகளின் நுட்பங்களைப் புரிந்துகொண்டு சிறப்புப் பயிற்சிகள் செய்வது முக்கியமானது. எடுத்துக்காட்டாக ஒரு வினாவிற்குப் பதில் அளிக்க சராசரி விகிதம், விழுக்காடு என்கிற பல அடிப்படைகள் தெரிந்திருக்க வேண்டும்.

வீட்டில் அல்லது பயிற்சி வகுப்பின்போது நேரக்கட்டுப்பாடு இருக்காது. ஆனால் தேர்வில் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட அளவு கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டிய நெருக்கடி இருக்கும். எனவே வேகமும் முக்கியம் துல்லியமான விடைகளும் முக்கியம். இரண்டையும் செய்வதற்கு பிரத்யேகமான ஆற்றல், பயிற்சி தேவைப்படுகிறது. அதாவது மெரிட் தேவைப்படுகிறது. இவை மட்டுமல்லாமல் தேர்வு நேரத்தில் பல புதுமைகள், அதிர்ச்சிகள் காத்திருக்கும். எனவே தேர்வு எழுதும்போது சவால்களைச் சமாளித்து யோசித்து பதில் அளிக்க வேண்டும். எனவேதான் ஆப்டிடியூட் கடுமையானதாக உள்ளது.

குடிமைப் பணி(சிவில் சர்வீஸ்) தேர்வில் பிரிலிமினரி தேர்வில் சி சாட் பாடத்தில் ஆப்டிடியூட் கேள்விகள் கேட்கப்படுகிறது. இந்தத் தேர்வில் மூன்றில் ஒரு பங்கு குறைந்தபட்ச மதிப்பெண்ணாக நிர்ணயித்திருக்கிறார்கள். அதாவது பிரிலிமினரி வெற்றிக்கு பொதுஅறிவுப் பாடத்தில் அதிகமான மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.

2011ஆம் ஆண்டில் பிரிலிமினரி தேர்வில் மத்திய தேர்வாணையம் அதிரடியான மாற்றத்தை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டு மாணவர்களின் வெற்றி சரிந்ததற்கு இது முக்கிய காரணமாக அமைந்தது. முன்பு விருப்பப் பாடம், பொதுஅறிவுப் பாடம் என இருந்தது. 2:1 என்கிற விகிதத்தில் மதிப்பெண் வழங்கப்பட்டது. விருப்பப் பாடம் என்பது கல்லூரியில் படிக்கும் வரலாறு, சமூகவியல், வணிகவியல், இயற்பியல் போன்றவை ஆகும். தமிழ்நாட்டு மாணவர்களில் பலருக்குச் விருப்பப் பாடம் சாதகமாக இருந்தது. பொதுஅறிவுப் பாடத்தில் குறைவான மதிப்பெண் எடுத்தாலும் தேர்ச்சி பெறும் நிலை இருந்தது.

அதிரடியாக விருப்பப் பாடம் நீக்கப்பட்டது. அது மட்டுமல்ல கடினமான சி சாட் ஆப்டிடியூட் பாடம் பொருந்தாத விகிதத்தில் திணிக்கப்பட்டது.

2011இல் பொதுஅறிவுப் பாடத்திற்கு 200 மதிப்பெண்கள் சி சாட்டிற்கு 200 மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. அப்பொழுதே இதனை எதிர்த்தோம். ஆனால் மெரிட் என்கிற வாதம் முன் வைக்கப்பட்டது. மேலும் அனைவருக்கும் பொதுவானதுதானே என்றும் கூறினார்கள். மாணவர்கள் மாற்றத்திற்குத் தயாராகிவிடுவார்கள் என்றார்கள். ஆனால் சமுதாயத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகள், வாய்ப்புகளின் சமமற்றதன்மை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தோல்வியடைந்தார்கள்.

சி சாட் அறிமுகமான மூன்றாம் ஆண்டில் மாணவர்கள் கடுமையாக எதிர்த்துப் போரடத் தொடங்கினார்கள். பிறகு சி சாட் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் எடுத்தால் போதுமானது என்கிற மாற்றத்தை மத்திய தேர்வாணையம் நடைமுறைப்படுத்தியது. சி சாட் அதாவது ஆப்டிடியூட்டிற்கான முக்கியத்துவத்தைக் குறைத்த போதிலும் சமூக நீதிக்கு எதிராகவே 2011ஆம் ஆண்டிற்குப் பிறகு நடந்த மாற்றங்கள் உள்ளன. விருப்பப் பாடத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும். சி சாட்டை முற்றிலுமாக நீக்கிவிட்டு முன்பிருந்த பொதுஅறிவுப் பாடத்தில் சுமார் 15 விழுக்காடு மதிப்பெண்ணிற்கு ஆப்டிடியூட் கேள்விகள் இடம்பெற்றால் போதுமானது.

தற்போதைய போட்டித் தேர்வுகளில் அதிகமாக அதிர்ச்சியைத் தருவது ஆப்டிடியூட் பாடமாகும். இராமனுஜர் போன்றவர்களுக்குப் பிரத்யேகமாக கணிதத் திறன் இருந்த போதிலும் கல்வி முறைகளால் பாதிக்கப்பட்டார்கள். இன்றளவிலும் மற்ற அனைத்திலும் நல்ல மதிப்பெண்கள் எடுத்து ஆப்டிடியூட்டில் மட்டும் மதிப்பெண்கள் எடுக்காதவர்கள் பலர் இருக்கிறார்கள். கல்வி முறையால் இவர்கள் பாதிப்படையக் கூடாது. எனவே ஆப்டிடியூட் பாடத்தை அறிவாளித்தனத்துடன் தொடர்புபடுத்துவதைத் தவிர்க்க வேண்டும். தேர்வு முறையை மெரிட்டுடன் தொடர்புபடுத்துவதைத் தவிர்த்து சமுகநீதியுடன் தொடர்புபடுத்த வேண்டும். எனினும் ஆப்டிடியூட் தெரியாது என்பதைக் கூறுவதைத் தவிர்த்து சிறப்பாகக் கற்கத் தொடங்குவது மாணவர்களின் தேவையாக உள்ளது. ஆப்டிடியூட்டில் அதிகமான மதிப்பெண்கள் பெறுவது எப்படி என்பதைப் பின்னர் பார்க்கலாம்.

மேலும் தொடர்பிற்கு: 9884227669


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்