மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • தொடர் சரிவில் அதானி குழும பங்குகள்
  • அதானி போர்ட், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன், கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ், அதானி வில்மர் நிறுவன பங்குகளின் விலை கடும் சரிவு!
  • அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து அதானி குழும பங்குகள் விலை சரிவைச் சந்தித்துள்ளன.

முழுமை இஸ்லாம்

கல்வி குறித்த ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் நிலைப்பாடு
, 16-31 ஜனவரி 2023


ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தைப் பொறுத்தவரை நாட்டில் நிலவும் சமூக, ஒழுக்க வீழ்ச்சி, பொறுப்பற்ற தன்மை, ஒழுங்கீனம், ஊழல் போன்ற பிரச்னைகளுக்கு முக்கியக் காரணமாக இருப்பது நம் நாட்டின் குறிக்கோளற்ற கல்வி முறையாகும். நமது கல்வி முறையில் பொருள்முதல்வாத சிந்தனையே முதன்மையாக உள்ளது. ஒழுக்க ஆன்மிக விழுமங்கள் அதில் இல்லை. மாணவர்களைப் பொருளாதார நடவடிக்கைகளுக்கு உகந்தவர்களாக மாற்றுவதே நமது கல்விமுறையின் நோக்கமாகிவிட்டது. கொள்கையளவில் சொல்லிக் கொண்டாலும் மாணவர்களின் ஆளுமை வளர்ச்சியில் மேம்பாடு காண்பதில் நமது கல்விமுறை தோற்றுவிட்டது.

இதன் விளைவாக அதிக செல்வங்களை ஈட்டி பணக்காரர்களாக ஆவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட கல்விமான்கள் தோன்றிவிட்டனர். படித்தவர்கள் மத்தியில் மனிதநேயம், உண்மை, நேர்மை, தியாகம் போன்ற மாண்புகள் அரிதாகிவிட்டன. கல்வி வணிகமாகிவிட்டதால் ஏழை, பணக்காரன் இடைவெளி கல்விமுறையிலும் உருவாகிவிட்டது. இதன் விளைவாக ஏழை மாணவர்கள் உயர்தரக் கல்வி பெற முடியாமல் பின்தங்கிவிடும் சூழ்நிலை உருவாகிறது. வசதி படைத்த மாணவர்கள் தொடக்க நிலையிலேயே தங்கள் வசதியான சூழலினால் முன்னேறும் துடிப்புடன் வளர்கிறார்கள். ஏழைகளின் மீது அக்கறையின்மை, சொகுசு விரும்பியாக இருத்தல், வர்க்கப் பேதத்தையும் சுரண்டலையும் நியாயப்படுத்துதல் போன்ற பண்பு நலன்கள் அவர்களிடம் காணப்படுகின்றன.

கல்வியின் மீதான அரசு தனது பொறுப்புகளைக் குறைப்பது ஜமாஅத்திற்குக் கவலை தரும் செய்தி ஆகும். GDP 6% கல்விக்காக ஒதுக்கீடு செய்யப்படும் என்னும் பழைய வாக்குறுதி நடைமுறைக்கு வரும் சாத்தியமே தென்படவில்லை. உயர்கல்வியில் இருந்து அரசு மிக வேகமாகப் பின்வாங்குகிறது. தொடக்கக் கல்வியிலும் அரசின் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கவில்லை. பிற்படுத்தப்பட்டவர்கள் சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்களின் கல்வி நிலையோ வீழ்ச்சி அடைந்து அதிர்ச்சி அளிக்கும் வித மாக உள்ளது. கல்வி மேம்பாட்டிற்காக அரசால் நியமனம் செய்யப்பட்ட பல்வேறு குழுக்களின் பரிந்துரைகளும் நடைமுறைப் படுத்தப்படாமல் நிலுவையில் உள்ளன.

கல்வியில் ஒழுக்கம், உயரிய நெறிமுறைகளை மேம்படுத்தக் கோரும் அதே தருணத்தில், ஒரு சில குழுக்கள் மதம், பண்பாட்டின் பெயரால் மூடநம்பிக்கைகளையும், அறிவியல் அடிப்படையற்ற நடைமுறைகளை ஆன்மிகத்தின் பெயரால் ஊக்குவிப்பதையும் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கிறது. ஒட்டுமொத்த கல்வி முறையும் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றே ஜமாஅத் கருதுகின்றது. கல்வித் திட்டத்தில் ஒழுக்க போதனைகள் இடம் பெறவேண்டும். மாணவர்கள் உண்மையான கொள்கையுடன்கூடிய, மானுட குலத்தின் சேவகர்களாக மாறுவதற்கான பயிற்சி அளிக்க வேண்டும். உலகளாவிய ஒழுக்கவிதிகளின்படி நன்னெறிக் கல்வி அமைக்கப்பட வேண்டும். அனைத்து மதங்களையும் உள்ளடக்கிய குழுவை ஏற்படுத்தி அக்குழுவின் ஒப்புதலோடு மட்டுமே எந்த ஒரு நன்னெறி பாடத்திட்டமும் செயல்படுத்தப்பட வேண்டும். 8% GDP கல்விக்காகச் செலவழிக்கப்பட வேண்டும். இதன் மூலம் அனைத்து இந்தியர்களும் இலவசமாக தொடக்கக் கல்வியைப் பெறமுடியும்.

கல்வியில் ஏழை, பணக்காரன் பாகுபாடு முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். கல்வி வணிகமயமாவதைத் தடுக்க வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்களை நெறிப்படுத்த சட்டவிதிகளை ஏற்படுத்துவதோடு RTE (RIGHT TO EDUCATION) கல்வி பெறும் உரிமையைத் தீவிரமாகச் செயல்படுத்த வேண்டும். தனியார் கல்விக் கூடங்களில் நான்கில் ஓர் இடம் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.

பல்வேறு பழக்க வழக்கங்கள், பண்பாடுகளைக் கொண்ட இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் சிறுபான்மையினர் தங்களது பண்பாட்டு, மத மாண்புகளின் அடிப்படையில் கல்வி பெற அரசியல் சாசனம் உரிமை அளிக்கின்றது. NDA அரசு காவிமயப்படுத்துதல் மூலம் இந்த உரிமையைத் திருடப் பார்க்கின்றது. UPA அரசு ஒரு சில சட்ட வரையறைகளின் மூலம் இந்த உரிமையைப் பிடுங்க நினைக்கிறது. சிறுபான்மை கல்வி நிலையங்கள் தங்களின் கல்வி பெறும் உரிமையைப் பெறவேண்டும். நன்னெறி, மதக் கல்வியை அனைத்து மதத்தவரும் ஏற்கும் வண்ணம் அமைத்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கல்வி பெறும் உரிமையை அடிப்படை உரிமைகளில் ஒன்றாக மாற்றி சட்டத் திருத்தம் செய்து தகுந்த சட்டம் இயற்றியதை வரவேற்கின்றது. அதே நேரத்தில் சிறுபான்மையினரின் கல்வி உரிமையைப் பாதிக்கும் விதமாக ஒரு சில சட்டத் திருத்தங்களை பின் வாசல் வழியாக இடைச்செருகல் செய்துள்ளதை ஜமாஅத் பெருந் துயரமாகப் பார்க்கின்றது. பல்வேறு வகையில் அரசின் கவனத்தை ஈர்த்தும் வாய்வழி உத்தரவாதம் மட்டுமே வழங்கி வருகின்றது. வேறு திருத்தங்கள் எதையும் செய்யவில்லை.

 

நமது நாட்டுச் சூழலில் நடைமுறைச் சாத்தியமற்ற கடுமையான விதிமுறைகளை இந்தச் சட்டத் திருத்தத்தில் அரசு ஏற்படுத்தியுள்ளது. கல்வி நிலையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இந்தச் சட்டத்தைப் பயனுள்ளதாக்கவும் நடைமுறைச் சாத்தியப்படுத்தவும் சட்டத் திருத்தங்களில் ஒரு சில தளர்வுகள் அவசியம் என்று ஜமாஅத் கருதுகின்றது.

மதரஸாக்கள், பாடசாலைகள் போன்றவற்றை கல்வி நிலையங்களாக அங்கீகரிக்க வேண்டும். இதற்குத் தகுந்த சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். சிறுபான்மையினர், முஸ்லிம்கள் கல்வியில் பின்தங்கியுள்ள நிலையை மேம்படுத்த நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா, நீதிபதி சச்சார் குழுக்களின் பரிந்துரைகளை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்.

அரசின் கவனத்தை ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல் முஸ்லிம்களின் கல்வியில் முழுக் கவனம் செலுத்தி தங்களுக்கான இஸ்லாமிய வழிகாட்டுதலின்படி கல்வி முறையை ஏற்படுத்த வேண்டும் என்றும் ஜமாஅத் கோருகின்றது. ஜமாஅத்தைப் பொறுத்தவரை முஸ்லிம் குழந்தைகள் தங்களது மார்க்க அடிப்படைகள் மீது பற்றுறுதி மிக்கவர்களாகவும், நவீன உலகின் தலைமைத்துவத்திற்குத் தகுதியானவர்களாகவும் தயார்படுத்தும் கல்வி முறையே மிகவும் இன்றி அமையாத தேவையாகும்.

இதற்காக சமகால பள்ளிகள், கல்லூரிகளில் மார்க்க வகுப்புகள், மதரஸா, அரபுக் கல்லூரிகளில் சமகால விழிப்பு உணர்வும் ஏற்படுத்தப்பட வேண்டும். மேலும் தரமான கல்வி நிலையங்களை ஏற்படுத்தி மாணவர்களின் தேவைகள், பாமர முஸ்லிம்களிடம் கல்வி விழிப்பு உணர்வை அதிகப்படுத்தி வளங்களை உருவாக்கவும் முஸ்லிம்கள் மிக கவனத்துடன் பாடுபட வேண்டும்.

முஸ்லிம்களின் கல்வி நிலையங்களில் பணியாற்றும் முஸ்லிம் ஆசிரியர்கள், நிர்வாகிகளுக்குச் சரியான இஸ்லாமிய பயிற்சி அளிப்பது முக்கியமான தேவை ஆகும். அதன் மூலம் அங்கு பயிலும் முஸ்லிம் குழந்தைகளின் கல்வித் தரம் மேம்படுவதோடு சரியான இஸ்லாமிய நெறிமுறைகளையும் கற்க முடியும்.

(மதச்சார்பின்மை, ஜனநாயகம், ஃபாசிஸம் குறித்த ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் நிலைப்பாடு அடுத்த இதழில்)


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்