மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • தொடர் சரிவில் அதானி குழும பங்குகள்
  • அதானி போர்ட், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன், கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ், அதானி வில்மர் நிறுவன பங்குகளின் விலை கடும் சரிவு!
  • அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து அதானி குழும பங்குகள் விலை சரிவைச் சந்தித்துள்ளன.

முழுமை இஸ்லாம்அரசியல்

கண்காணிப்பின் கீழ் சிறுபான்மையினர் பள்ளிகள்
சதாத் ஹுஸைன், , 16-31 ஜனவரி 2023


கல்வி பெறும் உரிமை சில கருத்து மாறுபாட்டுச் சர்ச்சை காரணங்களால் பரபரப்பான செய்தியாகியுள்ளது. பாஜக தலைவர்களால் கடந்த இரு மாதங்களில் இந்த விஷயம் குறித்து இரண்டு தனித்தனி பொதுநல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒன்று, உத்தரப் பிரதேச பாஜக சிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்த ஜாவேத் மாலிக் என்பவராலும், மற்றொன்று வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய்(ஜந்தர் மந்தர் முழக்க சர்ச்சையால் பிரபலமானவர்) என்பவராலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இருவரும் நேயமற்ற ஒரே வாதத்தையே முன்வைக்கின்றனர்.

"கல்வி பெறும் உரிமைச் சட்டம்(RTE) 2009இல் சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள விதிவிலக்குகள், சமத்துவத்துக்கான அடிப்படை உரிமையை சிறுபான்மையின சிறுவர்களிடம் இருந்து பறிக்கின்றன. இது NCPCR தனது 2021ஆம் ஆண்டின் அறிக்கையில் முன்வைத்துள்ள விஷயங்களைப் போலவே உள்ளது. "அரசியல் சட்டப்பகுதி 15(5)இன் கீழ் வழங்கப்பட்டுள்ள விதிவிலக்குகளின் விளைவை சிறுபான்மைச் சமூகங்களின் கல்வி குறித்த இந்திய அரசியல் சட்டப் பிரிவு 21அ பகுதியோடு தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும்' என்றே அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.'

மேலும் அஸ்வினி உபாத்யாயின் மனுவானது, நாடு முழுவதும் ஒற்றைப் பாடத்திட்டத்தை அதாவது சிறுபான்மையினர் கல்வித்திட்டம் மீறிக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகின்ற ஒன்றைக் கொண்டு வரவேண்டும் என்று வாதிடுகிறது. ஜாவேத் மாலிக்கின் மனுவும் குறிப்பிடப்படும் உரிமைப் பறிப்பு என்பது அரசியல் சட்டப்பகுதி 21அ, அரசியல் சட்டப்பகுதி 14 ஆகியவற்றின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டதாக உள்ளது என்று வாதிடுகிறது.

அரசியல் சட்டத்தில் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள கல்விக்கான அடிப்படை உரிமையை சிறுபான்மையினர் பள்ளிகள் மாணவர்களிடம் இருந்து நேர்மையற்ற முறையில் பறிக்கின்றனவா? இந்த அறிக்கையையும் தங்கள் சொந்த நிறுவனங்களை நடத்துவதற்கான சிறுபான்மையினர் உரிமைகள் குறித்து நீண்ட காலமாக நடைபெற்று வரும் விவாதங்களையும் நாம் ஆழமாகப் பரிசீலிக்க வேண்டும்.

அறிமுகம்

சிறுவர் உரிமைப் பாதுகாப்புக்கான தேசிய ஆணையத்தின் அறிக்கை(NCPCR Report) மார்ச் 2021இல் வெளியிடப்பட்டது. அதில் வரையறுக்கப்பட்டிருந்த அதன் நோக்கங்கள் என்னவென்றால், "சிறுபான்மையினர் அல்லது சிறுபான்மையினர் அல்லாதவர் என்பதைப் பொருட்படுத்தாத வகையில் சிறுபான்மையினர் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்கள் அனைவருக்கும் ஏற்ப சிறுபான்மை நிறுவனங்கள் நோக்கங்களைக் கடைப்பிடிக்கின்றனவா என்பதை உத்தரவாதப்படுத்துவதற்கு அரசியல் சட்டப்பகுதி 15(5)இன் கீழ் சிறுபான்மை நிறுவனங்களைக் காக்க வேண்டும். இதன் மூலம் சிறுபான்மை சமூகங்களின் சிறுவர்களுக்கு பலனளிப்பது என்ற உண்மையான நோக்கம் சோதிக்கப்பட வேண்டும்.'

RTE சட்டம் 2009இல் பிரிவு 12(1)(ஞி) மூலம் பயன்பெறும் கல்வி நிறுவனங்கள் பொதுவாக அரசியல் சட்டப்பகுதி 15, 15(5) ஆகியவற்றை மீறுகின்றன என்ற உரிமை கோரல் குறைபாடுடையது.

ஏனெனில் RTE சட்டம் 2009இல் 12(1)(ஞி) என்ற பிரிவே இந்திய அரசியல் சட்டப்பகுதி 15(5)இல் சொல்லப்பட்டுள்ள குறிப்பான சமூகப் பிரிவினரை தெளிவாக விலக்கி வைத்து இடஒதுக்கீடு கருத்தியலை நீர்த்துப் போகச் செய்கிறது. அரசியல் சட்ட ரீதியாக, "குடிமக்களில் சமூக, கல்வியில் பின்தங்கிய பிரிவினரை அல்லது பட்டியலின வகுப்புகள், பட்டியலின பழங்குடியினர்களுக்காக' என்று அடையாளப்படுத்தப்பட்ட பிரிவினரை "பலவீனமான பிரிவு அல்லது அண்டைப் பகுதியில் இருக்கும் வசதியற்ற குழுவைச் சேர்ந்த சிறுவர்கள்' என்று மாற்றி இடஒதுக்கீடு கருத்தியலையே RTE சட்டம் 2009 நீர்த்துப் போகச் செய்யவில்லையா?

RTE சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள சமூகக் குழுக்களில் எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி ஆகியவர்களும் உள்ளடங்கியிருப்பதாக ஒருவர் நம்பினாலும்கூட எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி மக்கள் தொகை மொத்த மக்கள் தொகையில் 50%க்கு மேல் இருக்கும் உண்மையை அறிந்திருந்த போதும் அவ்வளவு பெரிய மக்கள் தொகைக்கு 25% மட்டுமே ஒதுக்கீடு செய்வது நியாயமானதாகுமா?

குறிவைக்கப்பட்டதன் நீண்ட வரலாறு

சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு "நவீன கல்வி' இல்லாதிருப்பது அல்லது மறுக்கப்பட்டிருப்பது பற்றிய கவலை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. மதரஸாக்கள் (பயங்கரவாதம், பின் தங்கிய நிலை, பழமைவாதம், மனப்பாடக் கல்வி முறை ஆகியவற்றின் மையங்களாகத் தவறாகச் சித்திரிக்கப்படுகின்றன) மீது குறிப்பான கவனம் செலுத்துவதோடு இது கை கோர்த்துக் கொள்கிறது. அண்மைக்காலமாக கிறித்துவப் பள்ளிகள் (கான்வென்ட் பள்ளிகள் அவற்றின் உயர்ந்த ஆங்கில மொழிக் கல்விக்காக அனைத்து சமூகங்களாலும் விரும்பப்படுகிற, மதிக்கப்படுகிறவையாக இருந்தபோதும், அவை மதமாற்ற மையங்கள் என்று சித்திரிக்கப்படுகின்றன) மீதும் கவனம் குவிக்கப்படுகிறது.

சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு அரசியல் சட்டப் பகுதி 15இன் கீழ் சொல்லப்பட்டவைகள் மீறப்பட்டுள்ளதாக அறிக்கை வாதிடுகிறது. முஸ்லிம் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள், மதரஸாக்கள் மீது அறிக்கை கவனத்தைக் குவித்திருப்பதால் அந்தச் சமூகத்தின் தற்போதைய கல்விச் சூழலை ஒருவர் காணும்போது கேள்வி மிகவும் பொருத்தமுடையதாகிறது. முஸ்லிம் சமூகத்தில்தான் "பள்ளிக்குச் செல்லாத' சிறுவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாக அறிக்கையே குறிப்பிடுகிறது. ஆனால் இதற்கெல்லாம் யார் காரணம் என்பதை அறிக்கை சுட்டிக்காட்டுவதில்லை. சிறுபான்மைச் சமூகம் தமது சமூக மேம்பாட்டுக்காக கல்வி நிறுவனங்களை நடத்துவதற்கும், நிர்வகிப்பதற்கும் உரிமை வழங்கப்பட்டிருந்த போதும், எந்தவிதமான சார்போ, சாதகமோ இல்லாமல் அனைவருக்கும் அடிப்படைக் கல்வியை வழங்கும் தனது சட்டப்பூர்வ, அரசியல் சாசனப் பொறுப்பை அரசு தட்டிக் கழித்துக் கொள்ளலாம் என்று அர்த்தமல்ல.

புள்ளி விவரங்களில் கவனமின்மை

அறிக்கை புள்ளிவிவரங்களில் கவனமின்மை போன்ற பிற பெரும் குறைபாடுகளைக் கொண்டுள்ளது. விதிவிலக்காக "வழிகாட்டுதல்கள் இல்லாததால் சிறுபான்மையினர் பள்ளிகள் மாணவர் சேர்க்கை, ஆசிரியர் தேர்வு, பாடத்திட்டச் செயலாக்கம், போதனை முறைமை போன்றவற்றில் தங்கள் சொந்த விதிகளை வகுத்துக்கொண்டு தன்னிச்சையாகச் செயல்பட்டன' என்று அறிக்கை குறிப்பிடுகிறது. முறைப் படியான உரிமைப் பறிப்பு இருக்கிறது என்ற உரிமைக் கோரலை நிரூபிப்பதற்கு விரிவான ஆய்வு ஏதும் நடத்தப்பட்டிருக்கிறதா? மேலும் முஸ்லிம் சமூகத்தில்தான் பள்ளிக்குச் செல்லாத சிறுவர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள் என்று அறிக்கை சரியாகக் குறிப்பிடுமானால், தனியார் பள்ளிகளில் வசதியற்ற சிறுவர்களுக்கான இடஒதுக்கீட்டில் 25% இடஒதுக்கீடு தவிர பிற சட்டக்கூறுகள் பற்றி வரும்போது RTE சட்டம் எந்த அளவிற்குச் செயல்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை விசாரித்தறிய வேண்டிய தேவை ஏற்படுகிறது.

புதிய அறிக்கையில் பழமைச் சிந்தனைகள்

மற்ற மதங்களின் கல்வி நிறுவனங்களைப் பற்றி போதிய அளவுக்குக் கவனம் செலுத்தாமல் மதரஸா முறை மீதே அதிகக் கவனக் குவிப்புக் கொண்டிருப்பதை அறிக்கை வெளிப்படுத்துகிறது. சில ஃபத்வாக்களின் ஸ்கிரீன்ஷாட்கள் அறிக்கையின் 80ஆம் பக்கத்தில் காணப்படுகின்றன. கவனக்குவிப்பை இது மேலும் வெளிப்படுத்துகிறது. கல்வியைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் மத்தியில் ஃபத்வாக்கள் வகிக்கும் பங்கு என்ன? கல்வி முறைகளைத் தேர்வு செய்வதில் அறிஞர்கள் அதிகம் தாக்கம் செலுத்துகிறார்கள் என்பதை நிரூபிப்பதற்கு ஆய்வுகள் ஏதுமில்லை.

அவர்கள் சட்டக் கருத்துகளை மட்டுமே வழங்குகிறார்கள் (அவை கட்டுப்படுத்தாதவை). மதரஸாக்களைப் பற்றிய விவரச் சேகரிப்புக்கு நாடெங்கும் பயணம் மேற்கொள்ளாமல் அறிக்கை ஆலோசனைப் பட்டறைகளை நடத்தும் எளிய வழியைப் பின்பற்றியிருக்கிறது. இந்தப் பட்டறைகளில் பங்கேற்றவர்கள் பிரதிநிதித்துவ மாதிரியைக்கூட பூர்த்தி செய்யாதவர்கள். மற்ற 21 மாநிலங்களிலும் 6 யூனியன் பிரதேசங்களிலும் மதரஸா கல்விக்குப் பொறுப்பு ஏற்கக்கூடியவர்களைக்கூட கண்டுகொள்ளாமல் அறிக்கை எப்படி பொதுக்கருத்தை எட்டமுடியும்?

முடிவுரை

NCPCR அறிக்கை "பள்ளிக்குச் செல்லாதவர்கள்' என்பதற்கும் மதரஸாக்களுக்குச் செல்லும் சிறுவர்கள் என்பதற்கும் இணைப்பை ஏற்படுத்திக் கொள்கிறது. பல சிறுவர்கள் மதரஸாக்கள், பள்ளிகள் ஆகிய இரண்டிற்கும் செல்கிறார்கள் என்ற உண்மையைப் புறக்கணிக்கிறது; சில பள்ளிகளில் ஹிஜாப்பை கடைப்பிடிப்பது அல்லது பாலினப் பிரிப்பு செயற்படுத்தப்படுதல் பற்றிய நோக்கங்களில் தெளிவில்லாமல் அவற்றைச் சுட்டிக் காட்டுகிறது. இவையெல்லாம் ஆரோக்கியத்திற்கோ அல்லது பொதுநல நெறிகளுக்கோ பாதிப்பு ஏற்படுத்துகிறதா என்பதையும் அறிக்கை இறுதியாக நிரூபிக்கவுமில்லை; சிறுபான்மையினர் பள்ளிகள் உண்மையிலேயே போதுமான அளவுக்குச் சிறுபான்மை மாணவர்களுக்குக் கற்பிப்பதில்லை என்று அது வாதிடுகிறது.

இத்தகைய அறிக்கைகள் அண்மைக்கால வழக்குகள் போன்றவற்றுக்கு எரிகிற நெருப்பில் மேலும் எண்ணெயை ஊற்றுவதைப்போல் அமைந்திருக்கின்றன. முஸ்லிம் மாணவர்கள் பல்வேறு சவால்களைச் சந்தித்து வரும் இச்சூழலில் இத்தகைய அறிக்கைகளும் செயல்களும் சிறுபான்மையினர் பள்ளிகளின் இயக்கத்திற்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இதற்கு கர்நாடகாவிலுள்ள உடுப்பியில் முஸ்லிம் மாணவிகளுக்கு ஹிஜாப் கடைப்பிடிக்கும் உரிமை மறுக்கப்பட்டதை அல்லது பல கிறித்துவப் பள்ளிகள் மதமாற்ற மையங்களாகச் செயல்படுகின்றன என்ற பஜ்ரங்தளத்தின் குற்றச்சாட்டையும் அண்மைக்கால உதாரணங்களாகப் பார்க்க முடியும்.

தமிழில்: கபிலன் சபாபதி

நன்றி: The Companion


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்