மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • தொடர் சரிவில் அதானி குழும பங்குகள்
  • அதானி போர்ட், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன், கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ், அதானி வில்மர் நிறுவன பங்குகளின் விலை கடும் சரிவு!
  • அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து அதானி குழும பங்குகள் விலை சரிவைச் சந்தித்துள்ளன.

முழுமை இஸ்லாம்அரசியல்

நீதித்துறையுடன் மோதும் ஒன்றிய அரசு
சேயன் இப்ராகிம், , 16-31 ஜனவரி 2023


அண்மைக் காலமாக நீதிபதிகளின் நியமனம், மாறுதல் விஷயங்களில் உச்சநீதிமன்றத்திற்கும் அரசிற்குமிடையே மோதல் அதிகரித்து வருகிறது. ஆனால் இந்த மோதலைத் தொடங்கியிருப்பது ஒன்றிய அரசே!

தற்போது உச்சநீதிமன்றத்திலும் மாநில உயர்நீதிமன்றங்களிலும் நீதிபதிகளை நியமிக்கின்ற பணியினை உச்சநீதிமன்றமே செய்து வருகிறது. இதற்கென உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றங்களிலும் கொலிஜியம் (Collegium ) என்ற அமைப்பு உள்ளது. உச்சநீதிமன்ற கொலிஜியத்தில் தலைமை நீதிபதி தலைமையின் கீழ் நான்கு மூத்த நீதிபதிகள் இருக்கின்றனர். உயர்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியும் மற்றொரு மூத்த நீதிபதியும் உள்ளனர். தற்போது உச்சநீதிமன்ற கொலிஜியத்தில் கீழ்க்கண்ட நீதிபதிகள் உள்ளனர்.

1. ஜெ.சந்திரசூட் தலைமை நீதிபதி

2. சஞ்சய் கிஷான் கௌல் மூத்த நீதிபதி

3. அப்துல் நஸீர் மூத்த நீதிபதி

4. கே.எம். ஜோசப் மூத்த நீதிபதி

5. முகேஷ் ஷா மூத்த நீதிபதி

மாநில உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்க, அங்கு செயல்பட்டு வரும் கொலிஜியம், தகுதியுடைய வழக்கறிஞர்களை காலியிடங்களுக்கு ஏற்பப் பரிந்துரை செய்யும். இந்தப் பரிந்துரையைப் பரிசீலினை செய்து, சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களின் பின்னணியை ஆராய்ந்து தகுதியுடையவர்களின் பட்டியலை உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒன்றிய சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கும். இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள வழக்கறிஞர்களில் சிலர் தகுதியற்றவர்கள் என ஒன்றிய சட்ட அமைச்சகம் கருதினால் அவர்களுக்குப் பதிலாக வேறு வழக்கறிஞர்களை பரிந்துரை செய்யும்படி உச்சநீதிமன்றத்தைக் கோரலாம்.

ஆனால் உச்சநீதிமன்ற கொலிஜியம் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டவர்களையே மீண்டும் பரிசீலிக்கும்படி ஒன்றிய சட்ட அமைச்சகத்திற்குத் திருப்பி அனுப்பினால், ஒன்றிய சட்ட அமைச்சகத்துக்கு வேறு வழியில்லை. உச்சநீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்டவர்களையே நீதிபதிகளாக நியமித்து ஆணையிட வேண்டும். நீதிபதிகளை ஒரு நீதிமன்றத்திலிருந்து இன்னொரு நீதிமன்றத்திற்கு (அதாவது வேறு மாநில நீதிமன்றங்களுக்கு அல்லது உச்சநீதிமன்றத்திற்கு) மாறுதல் செய்வதற்கும் இதே நடைமுறையே பின்பற்றப்பட்டு வருகிறது. சுருங்கக் கூறின் நீதிபதிகளே நீதிபதிகளை நியமனம் செய்கின்றனர்.

இந்த கொலிஜியத்தின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்களை ஏற்றுக்கொள்ளவோ அல்லது நிராகரிக்கவோ அந்த அமைப்பு முடிவெடுக்கும்போது அதற்குரிய காரணங்களைத் தெரிவிப்பது இல்லையென்றும், ஏற்கனவே பணியாற்றுகின்ற நீதிபதிகளின் மகன்கள் மகள்கள் அல்லது உறவினர்கள் அதிக அளவில் நியமனம் பெறுகிறார்கள் என்றும் குற்றம் சாட்டப்பட்டு வந்தது. எனினும் இந்த கொலிஜியம் முறையே பல ஆண்டுகளாக நீடித்து வந்தது. அதனை மாற்ற எந்த அரசும் முன்வரவில்லை.

2014ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, இந்த கொலிஜியம் முறையை மாற்றி விட்டு அதற்குப் பதிலாக National Judicial Appointment Commission - NJAC என்ற குழுவை நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் கொண்டு வந்து நிறைவேற்றியது. காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகளும் இந்த மசோதாவை ஆதரித்தன. கொலிஜியத்திற்குப் பதிலாக இருக்கும் இந்தக் குழுவில் கீழ்க்கண்டோர் உறுப்பினர்களாக இருப்பர்.

1. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

2. உச்சநீதிமன்றத்தின் இரு மூத்த நீதிபதிகள்

3. ஒன்றிய சட்ட அமைச்சர்

4. குடிமைச் சமூகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் இருவர்.

இவர்களில் ஒருவர் பெண்ணாகவும், இன்னொருவர் குஇ / குகூ / Oஆஇ சமூகத்தைச் சார்ந்தவராகவும் இருக்க வேண்டும். இந்த இருவரையும் பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவரும் இணைந்து தேர்வு செய்வார்கள். இந்தக் குழுவே (NJAC) உயர்நீதிமன்ற நீதிபதிகளையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளையும் நியமனம் செய்யும். நீதிபதிகளின் மாறுதல் விஷயங்களையும் இந்தக் குழுவே பரிசீலனை செய்து முடிவெடுக்கும். இந்தப் புதிய முறையின் மூலம், நீதிபதிகள் நியமனத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் மேலாண்மை முடிவுக்கு வந்துவிடும். ஆனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்ற இந்தச் சட்டத்தை எதிர்த்து ஒரு பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்தப் புதிய சட்டம் செல்லாது என்றும், ஏற்கனவே நடைமுறையிலிருக்கும் கொலிஜியம் முறையே தொடரும் என்றும் தீர்ப்பளித்தது. இதன் மூலம், நீதிபதிகள் நியமனத்தில் ஒன்றிய அரசு நினைத்தபடி நீதிபதிகளின் மேலாண்மையை ஒழிக்க இயலவில்லை.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு ஒன்றிய அரசிற்கு உவப்பாக இல்லை. அப்போதைய சட்ட அமைச்சர் அருண் ஜெட்லி உச்சநீதிமன்றம் லட்சுமண ரேகையைத் தாண்டிவிட்டதாகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் விருப்பத்திற்கு மாறாக இந்தத் தீர்ப்பு இருப்பதாகவும் விமர்சித்தார். ஆனால் இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு எதனையும் தாக்கல் செய்யவில்லை அல்லது வேறு ஒரு புதிய சட்டத்தையும் கொண்டு வரவில்லை. எனவே தற்போது கொலிஜியம் முறையே தொடர்கிறது.

எனினும் ஒன்றிய சட்ட அமைச்சகம், உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் பரிந்துரைக்கின்ற நீதிபதிகளை அப்படியே ஏற்றுக் கொள்வதில்லை. உதாரணத்திற்கு உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் 25 வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்கப் பரிந்துரை செய்தால், அதில் 20 வழக்கறிஞர்களை மட்டுமே தெரிவு செய்து விட்டு மற்ற ஐந்து வழக்கறிஞர்களை நிறுத்தி வைத்துக் கொள்ளும். அவர்களுக்குப் பதிலாக வேறு வழக்கறிஞர்களைப் பரிந்துரைக்கும்படியும் உச்சநீதிமன்றத்தின் கொலிஜியத்தைக் கேட்டுக் கொள்ளாது. இதனால் நீதிமன்றங்களில் ஏற்படுகின்ற காலியிடங்களை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.

நீதிபதிகளின் மாறுதல் விஷயத்திலும் ஒன்றிய சட்ட அமைச்சகம் இவ்வாறே நடந்து கொள்கிறது. தற்போது தமிழக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி காலியாக இருக்கிறது. இந்த இடத்திற்கு ஒரிசா மாநில தலைமை நீதிபதியாகப் பொறுப்பு வகிக்கும் நீதியரசர் முரளீதர் பெயரை உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்திருக்கிறது. ஆனால் இந்த மாறுதல் குறித்து இதுவரை ஒன்றிய சட்ட அமைச்சகம் எந்த முடிவையும் எடுக்கவில்லை.

நீதியரசர் முரளீதர் நேர்மையானவர். 2020ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக அவர் பணியாற்றும்போது, கிழக்கு டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தைத் (குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்திய முஸ்லிம்கள் மீது இந்துத்துவ அமைப்புகள் தாக்குதல்கள் நடத்தி பல முஸ்லிம்களைக் கொன்று குவித்தனர். உடமைகளுக்குச் சேதம் விளைவித்தனர்) தூண்டியதாக அன்றைய ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும்படி உத்தரவிட்டவர். ஆனால் மறுநாளே அவர் அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு சண்டிகர் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். மேலும் சில முஸ்லிம் நீதிபதிகள் விஷயத்திலும் ஒன்றிய சட்ட அமைச்சகம், உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் பரிந்துரைத்தவர்களில் ஒரு முஸ்லிம் வழக்கறிஞரின் பெயரும் இருந்தது. ஆனால் ஒன்றிய சட்ட அமைச்சகம் இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை.

ஒன்றிய சட்ட அமைச்சகத்தின் இந்தப் போக்கு நீதித்துறையை மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது. உயர்நீதிமன்றங்களிலும் உச்சநீதிமன்றத்திலும் பல நீதிபதி பதவிகள் காலியாக உள்ளன. தற்போது உச்சநீதிமன்றத்தில் 34 நீதிபதிகளுக்குப் பதிலாக 28 நீதிபதிகளே உள்ளனர். மாநில உயர் நீதிமன்றங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நீதிபதி பதவிகள் காலியாக இருக்கின்றன. நாங்கள் நிறைவேற்றிய Nஒஅஇ சட்ட மசோதாவை நீங்கள் செல்லாது என்று தீர்ப்பு அளித்தீர்கள் அல்லவா! அதற்கு நாங்கள் தரும் பதில் இதுதான் என்று ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தை செயலற்றதாக்குகின்றது. கொலிஜியம் முறையே நீதிபதிகளின் பணி நியமனத்தில் ஏற்படும் தாமதத்திற்குக் காரணம் என ஒன்றிய சட்ட அமைச்சர் கிரேன் ரிஜ்ஜு வெளிப்படையாகவே பேசுகிறார். உச்சநீதிமன்றம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும் என ஏகடியம் பேசுகிறார். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வழக்குகள் தேங்கிக் கிடப்பதற்குக் கொலிஜியம் முறைதான் காரணம் என்கிறார்.

இது ஒரு புறமிருக்க, மாநிலங்களவையின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தங்கர், பதவியேற்ற பின் உரையாற்றியபோது மக்கள் பிரதிநிதிகளில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட NJAC சட்டத்தைச் செல்லாது என்று அறிவித்ததன் மூலம் உச்சநீதிமன்றம் மக்களின் தீர்ப்பை மதிக்க வில்லையென்றும் இதனைக் கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்றம் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். ஏற்கனவே மேற்கு வங்காளத்தில் ஆளுநராக இருந்தபோது அங்குள்ள மாநில அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைப்பிடித்து வந்த இந்த ஜெகதீப் தங்கர்தான் மாநிலங்களவைத் தலைவராகப் பொறுப்பேற்றவுடன் பிரச்னையைக் கிளப்புகிறார்.

கடந்த ஏழு ஆண்டுகளாக NJACக்கு மாற்றாக ஒரு புதிய சட்ட மசோதா எதையும் ஒன்றிய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் கொண்டுவரவில்லை. இது சம்பந்தமாக எந்த ஒரு மாற்றுத் திட்டம் பற்றியும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடமோ அல்லது சட்ட வல்லுநர்களுடனோ ஒன்றிய அரசு ஆலோசனை நடத்தவில்லை. இந்நிலையில் ஜெகதீப் தங்கர் யாரைக் குறை கூறுகிறார் என்று தெரியவில்லை. அவரது இந்தக் கருத்துகள் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விமர்சனம் செய்தபோது, அதனையும் மாநிலங்களவையில் குறை கூறிப் பேச ஜெகதீப் தங்கர் தயங்கவில்லை.

சுருங்கக் கூறின், ஒன்று தெளிவாகத் தெரிகிறது. இது போன்ற விமர்சனங்களை முன்வைப்பதன் மூலம் ஒன்றிய பாஜக அரசு, உச்சநீதிமன்றத்திற்கு நெருக்கடி கொடுக்க முயற்சிக்கிறது. ஏற்கனவே தேர்தல் ஆணையம், தகவல் ஆணையம், தணிக்கைக் குழு ஆகிய சட்டப்பூர்வ நிறுவனங்களைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ள ஒன்றிய அரசு, உச்சநீதிமன்றத்தையும் தனது கட்டுக்குள் வைத்திருக்க விரும்புகிறது.

நீதிபதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான கொலிஜியம் முறையில் குறைபாடுகள் உள்ளதென்றால், அதற்கு மாற்றமாக அதைவிடவும் சிறப்பான ஓர் அமைப்பைக் கொண்டு வருவதற்கு ஒன்றிய அரசு சட்ட வல்லுநர்கள், கட்சித் தலைவர்கள் ஆகியோருடன் கலந்து ஆலோசனை செய்ய வேண்டும். புதிய சட்ட மசோதாவைத் தாக்கல் செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு, நீதித்துறையை மிரட்டுவது தவறான போக்காகும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்