மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • அன்பிற்குரிய சமரசத்தின் டிஜிட்டல் வாசகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு:
  • இதுநாள் வரைக்கும் சமரசத்தின் இணையத்தில் முற்றிலும் இலவசமாக நீங்கள் வாசித்து வந்தீர்கள். ஆனால் வருகின்ற ஏப்ரல் மாதத்திலிருந்து டிஜிட்டல் வாசிப்பிற்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய சமரசம் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. விவரங்கள் விரைவாய் அறிவிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்.
  • ஆகவே, இன்றுபோல் என்றும் ஒத்துழைப்பு வழங்க அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

முழுமை

தீவிரவாதம் குறித்த ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் நிலைப்பாடு
, 1-15 மார்ச் 2023


குண்டுவெடிப்புகள், உயிரிழப்புகள் ஐயமின்றி நம் நாட்டின் பெரும் பிரச்னைகளில் ஒன்றாகும். இந்தச் சோதனை நிகழ்வுகளின் சங்கிலித் தொடர் நீண்ட காலமாகத் தொடர்கின்றது. பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலி கொண்டுள்ளது. இதன் விளைவாக பெருநகரங்களில் அச்சமும் பீதியும் நிலவுகின்றது. கோழைத்தனமான இந்த தீவிரவாத, பயங்கரவாதச் சம்பவங்கள் கண்டனத்திற்குரியவையே. இதில் ஈடுபடும் தனிநபர்களாகட்டும் குழுக்கள் ஆகட்டும் அனைவரும் மனிதகுல விரோதிகள். கடும் தண்டனைக்குரியவர்கள்.

பயங்கரவாதச் சம்பவங்கள் நடந்தவுடன் ஒரு தனித்துவம் மிக்க சூழல் பரவி விடுகின்றது. இத்தகைய கொடும் தாக்குதல் அரங்கேறிய சிலமணி நேரங்களில் காவல்துறையும் உளவுத்துறையும் அரபி, உருது, பாரசீகப் பெயர்களைக் கொண்ட ஏதேனும் ஓர் அமைப்பினர் பெயரைக் குற்றவாளிகளாக அறிவிப்பார்கள். பிறகு அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்படுவார்கள். இந்த அப்பாவி இளைஞர்களும் அவர்களின் பெற்றோரும், குடும்பத்தினரும் சொல்லொண்ணாத் துயரங்களுக்கும் கொடுமைகளுக்கும் உள்ளாவார்கள்.

ஊடகங்கள் ஒட்டுமொத்த குற்றச்சாட்டையும் முழு முஸ்லிம் சமுதாயத்தின் மீது சுமத்திவிடும். பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் நீண்ட விவாதங்கள், வாக்குமூலங்கள், கடிதங்கள், கருத்தியல் கட்டுரைகள், பாதுகாப்பு நிபுணர்களின் கருத்துரைகள் போன்றவை மூலம் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் குற்றவாளிகளாகச் சித்திரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

இதில் கொடுமையிலும் கொடுமை ’இஸ்லாமியத் தீவிரவாதம்' என்னும் சொல்லாடல்தான். தீவிரவாதத்திற்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமே இல்லை என்ற சரியான புரிதலும் தெளிவும் இல்லாமல் பத்திரிகைகள், தொலைக்காட்சி சேனல்கள், ரேடியோ சேனல்கள், அரசியல்வாதிகள்கூட இஸ்லாமிய பயங்கரவாதம் என்னும் கட்டமைக்கப்பட்ட சொல்லைப் பயன்படுத்துகின்றனர். அது போலவே ஜிஹாத் என்னும் புனிதமான இஸ்லாமிய வழிபாட்டைக் கருத்துச் சிதைவு செய்து ஜிஹாத் என்னும் வார்த்தையை விரும்பத்தகாதது போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி விட்டார்கள்.

ஜிஹாத் என்னும் வார்த்தையைக் களங்கப்படுத்தி இஸ்லாத்திற்கு ஒவ்வாத இஸ்லாமிய பயங்கரவாதம் என்னும் சொல்லாடலை உருவாக்கியும், முஸ்லிம் அல்லாதவர்களைப் பயமுறுத்தி மேற்கொள்ளப்படும் முயற்சி என்று சித்திரிப்பதும் ஏற்றுகொள்ளத்தக்கதல்ல.

தொடர் பயங்கரவாதத் தாக்குதல்கள் அனைத்தும் இஸ்லாமிய பயங்கரவாதத்தின் விளைவாக இருந்தால் மக்கள் எவ்வாறு இலக்காக முடியும்? பயங்கரவாதிகளின் யுக்தி, மனோநிலை ஆகியவற்றை வரலாற்றின் மூலம் நாம் அறிவது என்னவென்றால் அவர்களின் பிரதான இலக்கு அவர்களின் வழியில் குறுக்கிடும் தலைவர்கள்தான். காந்திஜியின் கொள்கைகள் மீது வெறுப்பு கொண்டவர்கள் அவரைப் படுகொலை செய்தார்கள். மறைந்த இந்திரா காந்தி காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கத்தினரால் கொலை செய்யப்பட்டார். ராஜீவ் காந்தி தனி ஈழம் அமைப்பதற்குத் தடையாக இருந்தவர்களின் ஆதரவாளராக அவரது எதிரிகளுக்குத் தெரிந்தார். அதனால் கொல்லப்பட்டார். அமெரிக்காவின் தெற்கு மாகாணங்களில் செயல்பட்ட பிரிவினைவாத இயக்கத்தினரைக் கட்டுப்படுத்தியதால் ஆபிரகாம் லிங்கன் கொலை செய்யப்பட்டார்.

அமெரிக்கா மாஃபியா கும்பலின் விருப்பங்களுக்கு எதிராக ஜான் எப் கென்னடியின் கொள்கைகள் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டார். இந்த அடிப்படையில் ATS தலைவர் ஹேமந்த் கர்கரேதான் அனைத்து குண்டு வெடிப்புகளிலும் முக்கிய இலக்காக இருந்தார். நாண்டெட் முதல் மாலேகான் வரை நாட்டில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் அவர் தனது விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து விட்டார். தற்பொழுது எல்லா வழக்குகளில் இருந்தும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் முஸ்லிம் இளைஞர்கள் குற்றம் அற்றவர்கள் என்று விடுவிக்கப்படுகிறார்கள்.

ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அரசு தமது தவறை ஏற்றுக்கொண்டு இழப்பீட்டுத் தொகையும் வழங்கியது. இஸ்ரத் ஜஹான் என்கவுண்டர் போலியானது என்பதை நீதிமன்றம் நிரூபித்துவிட்டது. மறுபுறம் வலதுசாரி இந்துத்துவ பயங்கரவாதிகளுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இப்பொழுதாவது ஊடகமும், உளவுத்துறையினரும் உண்மைக் குற்றவாளிகளை உலகறியச் செய்ய வேண்டும்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் குண்டு வெடிப்புச் சம்பவங்களைக் கண்டிப்பதோடு மீண்டும் மீண்டும் விசாரணை இன்றி ஏதோ ஓர் அமைப்பின் பெயரைக் குறிப்பிடுவது அநீதமான, பாரபட்சமான, பொறுப்பற்ற செயல் என்று அரசிடம் வலியுறுத்துகின்றது. ஆதாரம் இல்லாமல் ஒரு மனிதரைச் சுட்டிக்காட்டுவது ஒரு வகையில் குற்றம் சாட்டப்பட்டவர் அவரது குடும்பம், மத நம்பிக்கை போன்றவற்றிற்கு எதிரான பயங்கரவாதம் ஆகும்.

அனைத்து பயங்கரவாத வழக்குகளையும் விசாரிக்க உயர்மட்டக் குழு அமைத்து நிரபராதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று இந்திய அரசை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் வலியுறுத்துகின்றது. சிறைவாசம் அனுபவித்து தவறான குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை செய்யப்பட்ட நிரபராதிகளுக்கு இழப்பீட்டுத் தொகையையும் வேலைவாய்ப்பையும் இந்திய அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றது.

வேண்டுமென்றே அப்பாவி மக்களை வழக்குகளில் சிக்க வைத்து அவர்களின் வாழ்வை நாசமாக்கி ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிரான வெறுப்புச் சூழலை உருவாக்கி நாட்டின் பாதுகாப்பிற்கும் அமைதிக்கும் குந்தகம் விளைவித்த காவல்துறை அதிகாரிகள் மீதும்  சொராபுதீன், இஸ்ரத் ஜஹான் வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் விசாரிக்கப்படுவதுபோல் நீதிமன்ற நடவடிக்கையின் மூலம் விசாரிக்கப்பட வேண்டும். 

காவல்துறையும் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும். வகுப்புவாத, பிரிவினைவாத சிந்தனை கொண்ட காவல்துறை அதிகாரிகளைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும். தேசிய போலீஸ் கமிஷனின் பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். முஸ்லிம்கள் இத்தகைய சூழலில் பொறுமையை இழந்து விடக்கூடாது என்று ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் வேண்டுகோள் விடுக்கின்றது.

முஸ்லிம் இளைஞர்கள் நம்பிக்கை இழக்காமல், தூண்டுதலுக்கு இரையாகாமல் இருக்க வேண்டும். எக்காலத்திற்கும் ஏற்ற இஸ்லாமிய வழிகாட்டுதல்களை நாட்டு மக்களிடம் முன்வைத்து சொல்லாலும் செயலாலும் இஸ்லாத்தின் அடிப்படை அமைதியும், மனிதகுலக் கருணையும்தான் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். கொள்கையின் அடிப்படையில் இஸ்லாம் இரண்டு விதமானது அல்ல. ஒரே ஓர் இஸ்லாம் மட்டுமே  அது உலக அமைதி, நீதி, நல்லிணக்கம், சமத்துவத்தின் காவலாளியாக உள்ளது. அன்பையும் கருணையையும் சகோதரத்துவத்தையும் போதிக்கின்றது. இஸ்லாத்தைப் பொறுத்த அளவில் மனித வாழ்வு மதிப்பு வாய்ந்ததும் புனிதமானதும் ஆகும்.

’எவனொருவன் ஒரு மனிதனைக் கொலை செய்கின்றானோ அவன் மனிதர்கள் எல்லோரையும் கொலை செய்தவன் போல் ஆவான்.' (திருக்குர்ஆன் 5:32)

’மேலும், இறைவன் தடுத்துள்ள எந்த ஓர் உயிரையும் கொலை செய்யாதீர்கள்.' (திருக்குர்ஆன் 17:33)

’அல்லாஹ் கண்ணியம் அளித்த எந்த ஆன்மாவையும் கொலை செய்யாதீர்' (திருக்குர்ஆன் 6:151)

’அக்கிரமக்காரர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை' (திருக்குர்ஆன் 5:51)

’ஓர் இறைநம்பிக்கையாளரை ஒருவன் வேண்டுமென்றே கொலை செய்து விட்டால் அவனுக்கு உரிய கூலி நரகம் ஆகும். அதில் அவன் நிலையாக வீழ்ந்துகிடப்பான். மேலும் அவன் மீது அல்லாஹ்வின் கோபமும் அவனுடைய சாபமும் திணிக்கப்பட்டிருக்கின்றது. மேலும் மிகப் பெரிய வேதனையும் அவனுக்காகத் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது' (திருக்குர்ஆன் 4:93)

மனிதன் பலவந்தமாக எந்தக் கொள்கையையோ மதங்களையோ ஏற்பதில்லை. அதனால்தான் திருக்குர்ஆன் ’மார்க்கத்தில் எவ்வித கட்டாயமும் இல்லை' (திருக்குர்ஆன் 2:256) என்கின்றது. மேலும் முஸ்லிம்கள் நீதியை நிலைநாட்டப் பாடுபட வேண்டும், நீதிக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என்கிறது.

’இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் நீதியைக் கடைப்பிடிப்பவராகவும் அல்லாஹ்வுக்காகச் சான்று வழங்குபவராகவும் திகழுங்கள்! (நீங்கள் செலுத்தும் நீதியும், வழங்கும் சாட்சியும்) உங்களுக்கோ உங்கள் பெற்றோருக்கோ நெருங்கிய உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் சரியே! (நீங்கள் யாருக்காக சாட்சி சொல்கின்றீர்களோ) அவர் செல்வந்தராகவோ ஏழையாகவோ இருந்தாலும் சரியே! அல்லாஹ் அவர்களின் நலனில் உங்களைவிட அதிக அக்கறை உள்ளவனாக இருக்கின்றான். எனவே, மனஇச்சையைப் பின்பற்றி நீதி தவறிவிடாதீர்கள். நீங்கள் உண்மைக்குப் புறம்பாக சாட்சி சொன்னாலோ, சாட்சியளிக்காமல் விலகிச் சென்றாலோ திண்ணமாக அல்லாஹ் நீங்கள் செய்கின்றவற்றையெல்லாம் நன்கு அறிபவனாக இருக்கின்றான்'. (திருக்குர்ஆன் 4:135)

’இறைநம்பிக்கை  கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்விற்காக வாய்மையில் நிலைத்திருப்பவராகவும் நீதிக்குச் சான்று வழங்குபவராகவும் திகழுங்கள்! எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள பகைமை உங்களை நீதியிலிருந்து பிறழச் செய்துவிடக்கூடாது. நீங்கள் நீதி செலுத்துங்கள். இதுவே இறையச்சத்திற்கு மிகப் பொருத்தமானது. அல்லாஹ்வுக்கு அஞ்சிச் செயலாற்றுங்கள். நீங்கள் செய்யும் அனைத்தையும் முழுமையாக அல்லாஹ் அறிந்தவனாக இருக்கின்றான்'. (திருக்குர்ஆன் 5:8)


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

சமரசம் இதழ் எப்போதுமே தனது ஆராய்ச்சிப் பூர்வமான செய்திகளையும் உண்மைகளையும் தயக்கமின்றி ஆணித்தரமாக துணிந்து சொல்லும். மக்களிடையே அமைதியையும் சமூக நீதியையும் பரப்புவதிலும் இணக்கத்தை ஏற்ப்படுத்துவதிலும் தன்நிகரற்று சத்தியத்திற்கு சான்றாக திகழ்கிறது...

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்