மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • அன்பிற்குரிய சமரசத்தின் டிஜிட்டல் வாசகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு:
  • இதுநாள் வரைக்கும் சமரசத்தின் இணையத்தில் முற்றிலும் இலவசமாக நீங்கள் வாசித்து வந்தீர்கள். ஆனால் வருகின்ற ஏப்ரல் மாதத்திலிருந்து டிஜிட்டல் வாசிப்பிற்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய சமரசம் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. விவரங்கள் விரைவாய் அறிவிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்.
  • ஆகவே, இன்றுபோல் என்றும் ஒத்துழைப்பு வழங்க அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

முழுமை இஸ்லாம்அரசியல்

விவாதப் பொருளாகும் நீதிபதி நியமனங்கள்
சேயன் இப்ராகிம், , 1-15 மார்ச் 2023


அண்மையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள விக்டோரியா கௌரியின் நியமனம் பெரும் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த விக்டோரியா கௌரி, சட்டப்படிப்பு படித்து முடித்த பின்னர் தனது தந்தையார் பணியாற்றி வந்த கரூரில் 1996ஆம் ஆண்டு முதல் வழக்கறிஞராகப் பணியாற்றி விட்டு பின்னர் கன்னியாகுமரி மாவட்டத்தில் தனது பணியினைத் தொடர்ந்தார்.

அதன் பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கறிஞர் பணியினைத் தொடர்ந்தார். வழக்கறிஞராகப் பணிபுரியும் போதே, கன்னியாகுமரி மாவட்ட பாஜகவின் துணைத் தலைவராக 2004ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையும், பாஜகவின் பெண்கள் அணியின் பொதுச் செயலாளராக 2012ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையும் பொறுப்பு வகித்தார்.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒன்றிய அரசின் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். பின்னர் உதவி சொலிசிட்டர் ஜெனரலாகவும் பொறுப்பு வகித்தார். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இவர் 14 ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார். பத்து ஆண்டுகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாகப் பணியாற்றியவர்களை, உயர்நீதிமன்ற நீதிபதியாக நேரடியாக நியமனம் செய்ய சட்டத்தில் இடமுண்டு. அந்த வகையில் அவர் நீதிபதியாக நியமனம் பெற்றுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தால் நீதிபதி நியமனத்திற்குப் பரிந்துரைக்கப்பட்ட இவரை, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியமும் பரிந்துரைத்து, அதற்கு ஒன்றிய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்து 7.2.23 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். கொலிஜியம் பரிந்துரைத்த சிலரின் பெயர்களைக் கடந்த ஓர் ஆண்டிற்கும் மேலாக நிலுவையில் வைத்துள்ள ஒன்றிய சட்ட அமைச்சகம், விக்டோரியா கௌரியின் நியமனத்திற்கு உடனே ஒப்புதல் வழங்கியுள்ளது.

இவரது நியமனம் குறித்த செய்திகள் வெளியான உடனேயே, சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞர்களான வைகை, என்ஜிஆர். பிரசாத், வி.சுரேஷ் ஆகியோர் ’விக்டோரியா கௌரி பாஜகவின் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர். வலைதளங்களிலும், விவாத நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு, சிறுபான்மை மக்களுக்கு எதிராக வெறுப்புப் பரப்புரை மேற்கொண்டவர். எனவே இவரது நியமனத்தை இரத்து செய்ய வேண்டும்' என ஜனாதிபதிக்கு விண்ணப்பம் அனுப்பினர்.

இது சம்பந்தமாக உச்சநீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்து, அதனை அவசரமாக விசாரிக்க வேண்டுமென தலைமை நீதிபதி ஜெ.சந்திர சூட் அவர்களிடம் வேண்டுகோள் வைத்தனர். இதனை விசாரித்த தலைமை நீதிபதி ’கொலிஜியம் இவரை நியமனம் செய்த பிறகு, சில புதிய விஷயங்கள் எங்களது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. எனவே இது குறித்து விசாரிக்கப்படும்' என்று தெரிவித்து விட்டு, நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர். கவாய் ஆகியோரைக் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் என அறிவித்தார்.

வழக்கு 7.2.23 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் அதே நாள் காலை 10:30 மணிக்கு விக்டோரியா கௌரி உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாகப் பொறுப்பேற்றார்கள் என்ற அறிவிப்பும் வெளியானது. ஆனால் வழக்கு விசாரணையின் முடிவை எதிர்பார்க்காமலேயே, ஐந்து நீதிபதிகளில் முதலாவதாக (அல்லது அவசர அவசரமாக) விக்டோரியா கௌரிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.

அவர் நீதிபதியாகி விட்டார். அதற்கு அடுத்த அரை மணி நேரத்தில் வெளியான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் விக்டோரியா கௌரியின் நியமனத்திற்குத் தடை விதிக்க முடியாது என்று கூறப்பட்டது. இரண்டு நாள்களுக்குப் பிறகு உச்சநீதிமன்ற நீதிபதிகளின் விரிவான தீர்ப்பு வெளியிடப்பட்டது. அதில் கீழ்க்கண்ட அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

1. கொலிஜியம் பரிந்துரை செய்து, சட்ட அமைச்சகமும் ஒப்புதல் அளித்து, ஜனாதிபதி ஆணை பிறப்பித்த பின்னர், அதனை மாற்ற முடியாது.

2. விக்டோரியா கௌரி மீது மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் குறித்து (அதாவது அவரது பாஜக தொடர்பு சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சு) உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் கட்டாயம் பரிசீலனை செய்திருக்கும். உளவு அமைப்புகளின் தகவல்கள் சேகரிக்கப்பட்ட பின்னரே, அவரது நியமனத்திற்கு கொலிஜியமும், ஒன்றிய சட்ட அமைச்சகமும் பரிந்துரை செய்திருக்கும்.

3. அரசியல் தொடர்பு அல்லது பின்னணி ஒரு வழக்கறிஞரின் நீதிபதி நியமனத்திற்குத் தடையாக இருக்க முடியாது.

4. இவர் கூடுதல் நீதிபதியாகத்தான் நியமிக்கப்பட்டுள்ளார். நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்படும்போது, இவரது செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு உரிய முடிவு எடுக்கப்படும்.

5. ஒரு நீதிபதியின் செயல்பாட்டை மனுதாரர்கள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் தினந்தோறும் கண்காணிக்கிறார்கள்.

இந்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பு உச்சநீதிமன்ற நீதிபதியின் கருத்துகளுக்கு முரணாக அமைந்துள்ளது. விக்டோரியா கௌரியின் அரசியல் தொடர்புகள், வெறுப்புப் பரப்புரை ஆகியன குறித்து அவரது நியமனத்தைப் பரிசீலனை செய்து பரிந்துரைக்கும்போது தங்களது கவனத்திற்கு வரவில்லை என கொலிஜியத்தின் தலைவரான உச்சநீதிமன்ற நீதிபதி கூறுகிறார். ஆனால் இந்த விஷயங்களையெல்லாம் பரிசீலனை செய்யாமல் கொலிஜியம் அவரைப் பரிந்துரைக்க வாய்ப்பில்லை என்கின்றனர் வழக்கை விசாரித்த நீதிபதிகள். இந்த முரண்பாட்டை ஆங்கில இந்து நாளிதழ் சுட்டிக் காட்டியுள்ளது.

விக்டோரியா கௌரியின் நியமனம் குறித்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு பல விவாதங்களைக் கிளப்பியுள்ளது. அது குறித்து இனி பார்ப்போம்.

1. விக்டோரியா கௌரியை சென்னை உயர்நீதிமன்றம்தான் பரிந்துரை செய்துள்ளது. அவரது அரசியல் தொடர்புகள், வெறுப்புப் பேச்சு ஆகியன தெரிந்த பின்னரும் அவரைப் பரிந்துரை செய்தார்களா?

2. பத்தாண்டுகளுக்கு மேல் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர்களை, அந்த நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்க முடியுமென்றால், அங்கு பணியாற்றும் நூற்றுக்கணக்கான தகுதிபெற்ற வழக்கறிஞர்களில் விக்டோரியா கௌரியைத் தவிர, பரிந்துரைக்கப்படுவதற்கு வேறு யாருமே இல்லையா? எந்தத் தகுதியின் அடிப்படையில் அவரது பெயரை சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்தது?

3. தகுதியின் அடிப்படையில் இல்லாது வேண்டியவர்களைப் பொறுக்கி எடுக்கின்ற (Pick And Choose) வழிமுறைகளைச் சென்னை உயர்நீதிமன்றம் கடைப்பிடித்துள்ளதா?

4. சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்புப் பரப்புரையில் ஈடுபட்ட ஒருவர், எப்படி நீதிபதியாக அமர்ந்து பாரபட்சமற்ற முறையில் தீர்ப்பு வழங்குவார்? இந்த அம்சத்தை சென்னை உயர்நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லையா?

5. விக்டோரியா கௌரி நீதிபதியாக நியமிக்கப்படுவதற்குத் தகுதியுடையவராக இருக்கலாம். ஆனால் பொருத்தமானவர்தானா? (She May Be Eligible But Not Suitable)

6. ஒன்றிய அரசு, மாநில அரசுப் பணி நியமனம் பெற வேண்டுமானால், பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் கட்டாயம் நடத்தைச் சான்றிதழ் (Conduct Certificate) சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் அரசிடமிருந்து ஊதியம் பெறுகின்ற மிகப் பொறுப்பு வாய்ந்த நீதிபதியின் நடத்தை அல்லது பின்னணி ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டாமா?

இதற்கு முன்பு அரசியல் தொடர்பு, பின்னணி கொண்டவர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்படவில்லையா? கேரளாவில் நம்பூதிரிபாட் தலைமையிலான கம்யூனிஸ்ட் அமைச்சரவையில் சட்ட அமைச்சராகப் பணியாற்றிய கிருஷ்ண ஐயர் நீதிபதியாக நியமிக்கப்பட்டதையும், திமுகவைச் சார்ந்த இரத்தின வேல் பாண்டியன் திமுக ஆட்சியின்போது அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு பின்னர் நீதிபதியானதையும், தொடக்க காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியில் அங்கம் வகித்த சந்துரு பின்னர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதையும் சில வலதுசாரி அறிவு ஜீவிகள்(!) சுட்டிக் காட்டுகின்றனர்.

ஆனால் இவர்களில் யாரும், எந்த ஒரு சமூகத்திற்கு எதிராகவும், குறிப்பாக சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பரப்புரையில் ஈடுபடவில்லை என்பதை அவர்கள் வசதியாக மறந்து விடுகின்றனர். அல்லது மறைத்து விடுகின்றனர். மேலும் நீதிபதிகள் கிருஷ்ண ஐயர், இரத்தினவேல் பாண்டியன், சந்துரு ஆகியோர் தங்களது வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்புகளால் மக்களின் மனதில் இடம்பிடித்தவர்கள்.

விக்டோரியா கௌரி செய்த வெறுப்புப் பரப்புரை காரணமாகவே அவரது நியமனத்தை நீதிபதியின் பால் நம்பிக்கை கொண்டவர்கள் எதிர்க்கிறார்கள். வேறு காரணங்கள் எதுவுமில்லை.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்து முக்கிய நியமனங்களும் விவாதத்திற்குள்ளாகி வருகின்றன. மாநில ஆளுநர்கள், தேர்தல் ஆணைய உறுப்பினர்கள், உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் என அனைத்து நியமனங்களும் கேள்விக்குள்ளாகி வருகின்றன. அதிலும் நீதிபதிகள் நியமனம் விவாதப் பொருளாக மாறி வருவது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் இறையாண்மைக்கும் நல்லதல்ல என்பது நாட்டுப் பற்றாளர்களின் கவலையாக இருக்கிறது. 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்