மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • அன்பிற்குரிய சமரசத்தின் டிஜிட்டல் வாசகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு:
  • இதுநாள் வரைக்கும் சமரசத்தின் இணையத்தில் முற்றிலும் இலவசமாக நீங்கள் வாசித்து வந்தீர்கள். ஆனால் வருகின்ற ஏப்ரல் மாதத்திலிருந்து டிஜிட்டல் வாசிப்பிற்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய சமரசம் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. விவரங்கள் விரைவாய் அறிவிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்.
  • ஆகவே, இன்றுபோல் என்றும் ஒத்துழைப்பு வழங்க அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

முழுமை இஸ்லாம்

தொடர்பு எல்லைக்கு உள்ளே வாருங்கள்!
மௌலவி வி.எஸ்.முஹம்மது முஸம்மில் அல்புகாரி, , 1-15 மார்ச் 2023


நாம் நாளொன்றுக்கு எவ்வளவு மணி நேரத்தை அலைப்பேசியில் செலவிடுகிறோம்? எத்தனை முறைதான் அலைப்பேசியைப் பார்க்கிறோம் தெரியுமா? ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர் சராசரியாக தனது போனை ஒரு நாளைக்கு 77 முறை திறந்து பார்க்கின்றார் என்பது ஆய்வின் தகவல். சிலர் 100 முறையும் எடுத்துப் பார்க்கின்றனராம். ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர் அதில் மூழ்கி விடுவதாகவும், சராசரியாக 3 மணி நேரம் 18 நிமிடங்கள் ஸ்மார்ட் போனில் செலவிடுவதாகவும் அலைப்பேசி உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான எரிக்சன் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

நம் அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்டது அலைப்பேசி. நெருங்கியவர்களுடன் வாட்ஸ்அப் உரையாடல் தொடங்கி, முகநூல் தொடர்புகள், செய்திகளை நொடிக்கு நொடி வழங்குவது, வங்கியில் பணப் பரிவர்த்தனை, அலுவலக வேலை என அனைத்துக்கும் ஆதாரமாகிவிட்டது இந்தக் கையடக்கக் கருவி. அலைப்பேசியைப் பயன்படுத்தாதவர்கள் மிக மிகக் குறைவு. ஆனால், அது தரும் ஆபத்தும் அளவில்லாதது.

செல்லுலார் டெலிகம்யூனிகேஷன்ஸ் அண்ட் இன்டர்நெட் அசோசியேஷன் (Cellular Telecommunications And Internet Association) கணக்குப்படி, ஸ்மார்ட் போன் உபயோகப்படுத்துவோரின் எண்ணிக்கையும், அழைப்புகளின்போது பேசும் கால அளவும் பன்மடங்காக அதிகரித்துள்ளது. சராசரியாக ஒருவர் ஒரு நாளைக்கு கணிசமான நேரத்தை அலைப்பேசியோடு செலவு செய்கிறார். சில நபர்கள் ஒரு நாளின் பாதி நேரத்தை அலைப்பேசியிலேயே செலவு செய்பவர்களும் இருக்கிறார்கள்.

இதனால் ஏற்படும் அபாயங்கள், ஆபத்துகள் ஒருபுறம் இருந்தாலும் அலைப்பேசியினால் மனிதன் இழப்பது விலைமதிப்பற்ற ஆரோக்கியமும், நேரமும்தான். மனிதத் தொடர்பை வலுப்படுத்த உருவாக்கப்பட்ட இச்சாதனங்கள், மனித உறவைச் சீர்குலைத்து விடுகின்றன. மனித உறவை மட்டுமல்ல இறைத்தொடர்பையும்தான்.

வருகிறது ரமளான்

ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கும் மனிதனுக்குக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள சிறிது ஓய்வு தேவைப்படுகிறது. எந்நேரமும் வேலை, பணம், அலுவல்கள் என ஓடிக்கொண்டிருக்கும் மனிதனுக்கு இறைத்தொடர்புதான் மனதைச் சாந்தப்படுத்துகிறது. இஸ்லாம் ஐவேளைத் தொழுகை மூலம் மனிதனை இறைவனோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வழிவகுக்கிறது. ரமளான் மாதத்தில் முப்பது நாள்கள் நோன்பிருப்பதன் மூலம் இறைத்தொடர்பை வலுப்படுத்தி ஒருவர் சுய கட்டுப்பாட்டை அடைந்து கொள்ள முடியும்.

ரமளான் படைத்த இறைவனுக்காகப் பசித்திருத்தல், விழித்திருத்தல், தனித்திருத்தல் என மூன்று அம்சங்களின் மூலம் மனித உணர்வுகளைப் பண்படுத்திக் கட்டுப்படுத்துகின்றது. அவசர உலகின் அன்றாடத் தேவைகளை  நிறைவேற்றிக்கொள்ள அலைப்பேசியுடன் மனிதன் பிணைந்து வாழப் பழகிவிட்டான். தேவைகளுக்குப் பயன்படுத்துவதில் தவறில்லைதான். அதுவே அன்றாடப் பழக்கமாகி விடுவதில்தான் பிரச்னையே ஆரம்பமாகிறது.

இந்தப் பாழாய்ப்போன ஃபேஸ்புக்கிலே பாதிநாள் கழிந்து விடுகிறது என அங்கலாய்ப்பவர்களைப் பார்க்கிறோம். நிம்மதியின்மைக்கும், எல்லாப் பிரச்னைகளுக்கும் இந்த உள்ளங்கையளவு உபகரணமே மூல காரணம் எனும் முடிவுக்குக்கூட சிலர் வந்து விடுகின்றனர். இனிமேல் நான் அலைப்பேசியை அதிக நேரம் உபயோகிப்பதில்லை எனச் சபதமிடுவோர், சிறிது காலத்திலே ’சபதத்தை' மீறி விடுகின்றனர். சுய கட்டுப்பாடும், திட்டமிடப்பட்ட நேர மேலாண்மையும் இன்றி அலைப்பேசி மோகத்திலிருந்து விடுபட வாய்ப்பில்லை.

கட்டுக்கோப்பான வாழ்வுக்கும், திட்டமிடுதலுக்கும் வழி வேண்டுமா? இறைமார்க்கம் சுய கட்டுப்பாட்டுக்கென்று வழி சொல்கிறது. மனிதன் வாழும் எல்லாக் காலத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்றவாறு இறைமார்க்கம் இஸ்லாம் தீர்வு கூறுகிறது. அலைமோதும் மனதை ஒழுங்குபடுத்தி, சீர்படுத்த வல்லோன் வகுத்த வழிதான் நோன்பு. பெருமானார்(ஸல்) அவர்கள் நோன்பை கேடயம் என்றார்கள்.

ரமளான் மனக்கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பதற்கு உதவுகிறது. ஓரிரு வாரங்களில் நம்மை அடையவிருக்கும் ரமளான் மாதம் அதீத அலைப்பேசி பயன்பாட்டிலிருந்து நாம் விடுபட மிகச் சிறந்த வாய்ப்பாகும். இறைத்தொடர்பு மேலோங்கும்போது மனிதகுலத்திற்கு ஒவ்வாத ஏனைய குணங்கள், பழக்கவழக்கங்கள் அறுபட்டுப் போய் விடுகின்றன.

வரும் ரமளானில் நாம் அலைப்பேசி மோகத்திலிருந்து கொஞ்சம், கொஞ்சமாகவாவது விடுபட எளிதில் பழக்கப்படுத்திக் கொள்ளலாம். ரமளான் நெருங்கும்போது சிலர் ’ரமளான் மாதம் முழுவதும் நான் முகநூல் உபயோகிப்பதில்லை' என இறைவழிபாடுகளுக்கு இடையூறு ஏற்படலாம் என்ற அச்சத்தில் சமூக வலைதளங்களில் பதிவிடுவதைக் காணலாம். சமூக வலைதளங்களினால் ஏற்படும் சமூகத் தீமைகளுக்கும், தனிமனித உறவு சீர்குலைவிற்கும் தீர்வாக ரமளானில் கடைப்பிடிக்க இயலும் இறைவழிபாடுகளை நாம் ரமளானுக்கு முன்னரே திட்டமிடலாம்.

திருமறைத் தொடர்பு

திருமறை இறக்கியருளப்பட்ட மாதமான ரமளானில் இறைமறையோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். திருமறையைப் பொருளுணர்ந்து படித்து படிப்பினை பெற முயலவேண்டும். நோன்பிருக்கும் பகல் வேளைகளில் வீண் பேச்சுகளிலிருந்தும், அரட்டைகளிலிருந்தும் தவிர்ந்திருக்க முயற்சிக்க வேண்டும். குறிப்பாக சமூக வலைதளங்களில் ஈடுபடும் தேவையற்ற சாட்டிங் அரட்டைகளில் இருந்து நாம் விடுபடவேண்டும். அதற்கு மாற்றாக நல்ல விஷயங்களைக் கேட்டல், படித்தல், ஆலோசித்தல் போன்ற நன்மையான காரியங்களில் ஈடுபட வேண்டும். இறைவனை அதிகமதிகம் நினைவுகூர வேண்டும்.

ரமளானின் இரவுகளில் தொழப்படும் இரவுத்தொழுகையில் அருள்மறை வேதத்தை பொருளறிந்து ஓதக் கேட்டலும் இறையருளைப் பெற்றுத் தரும் நல்லறமே.! இறைவன் கூறுகின்றான்: ’குர்ஆன் (உங்கள் முன்) ஓதப்படும்போது அதனைக் கவனமாய்க் கேளுங்கள்; மௌனமாகவும் இருங்கள்! உங்கள் மீதும் அருள் பொழியப்படலாம்.' (திருக்குர்ஆன் 7:204)

இஃதிகாஃப்

ரமளானில் நாம் கடைப்பிடிக்க இயலும் சிறந்த செயல் ’இஃதிகாஃப்' எனும் இறையில்லத்தில் தங்கி உலக இன்பங்களில் இருந்து விலகி இறையச்சத்தோடு, இறைநினைவில் வழிபடும் மிகச் சிறந்த வழிபாடாகும்.

ஓர் இறையடியான் தன் உலக வாழ்வின் தொடர்புகள் அத்தனையும் துறந்து, தனிமையை நாடி, இறை இல்லத்தில் தங்கி இருந்து இறைவனோடு நேரடித் தொடர்பில் ஈடுபடுவதே இவ்வழிபாட்டின் சிறப்பம்சமாகும். இது பரவலாக ரமளான் மாதத்தின் இறுதிப் பத்து இரவுகளில் கடைப்பிடிக்கப்பட்டு வருவதை உலகெங்கும் நாம் கண்டு வருகிறோம்.

அல்லாஹ்விற்காக மட்டுமே அவனை மட்டுமே சார்ந்திருந்து, யாரும் அறியாத தனிமையில் வணக்க வழிபாடுகளில் திளைத்து, அல்லாஹ்விடம் தனிமையில் பாவங்களை நினைத்து வருந்தி, இரு கைகளேந்தி இறைஞ்சி இவ்வுலக, மறுமைக்காக தன் தேவைகளைப் பெற்றுக்கொள்வதே ’இஃதிகாஃப்' இருப்பதன் முக்கிய நோக்கம் ஆகும். இஃதிகாஃப் இருப்பவர்களால் ’லைலத்துல் கத்ர்' என்ற ஆயிரம் இரவுகளை விட மிகச் சிறந்த இரவைப் பெற்றுக்கொள்ள முடியும்.

’நபி(ஸல்) அவர்கள் ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்'. (நூல் : புகாரி)

இஃதிகாஃப் இருக்கும்போது, இறையில்லத்தில் தங்குவதால் இறைநேசம் உள்ளத்தில் உதிக்கிறது. இறையில்லத்தில் தங்குவதால் தொழுகையை எதிர்பார்த்து இருக்கும் வாய்ப்பும் கிடைக்கிறது.

இஃதிகாஃப் இருப்பதினால் உலகப் பற்று குறைந்து, இறைப்பற்று அதிகமாகிவிடுகிறது. இஃதிகாஃப் இருப்பதினால் தூங்குவதுகூட இறைவணக்கமாக எழுதப்படுகிறது.

இஃதிகாஃப் பொறுமையைக் கற்றுத் தருகிறது. அது மன அமைதியைக் கொடுக்கிறது. திருக்குர்ஆனை ஓதுவதற்கும், அதன் தொடர்பில் நிலைத்திருப்பதற்கும் அது வழி ஏற்படுத்திக் கொடுக்கிறது.

இஃதிகாஃப், பாவமீட்சி பெற பக்குவப்படுத்துகிறது. இரவு வணக்கம் புரிய வைக்கிறது. உள்ளத்தைத் தூய்மைப்படுத்துகிறது. உள்ளத்தைச் சீர்படுத்துகிறது. இறைவன் தன் அடியார்களை நோக்கி தன் பக்கம் அழைக்கின்றான்: ’(எனது அடியார்களே.!) ஓடி வாருங்கள், அல்லாஹ்வின் பக்கம்!' (திருக்குர்ஆன் 51:50)

ரமளான் மாதத்தில் திருமறையோடு தொடர்பு கொண்டிருத்தல், நன்மை தரும் நல்ல விஷயங்களுக்காக நேரத்தை ஒதுக்குதல், குறிப்பாக தீமை தரும் மனித உறவுகளைச் சீரழிக்கும் காரியங்களில் இருந்து தவிர்ந்திருத்தல், அலைப்பேசி பயன்பாட்டைக் குறைக்க முயற்சி செய்தல், ரமளானின் இறுதிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருத்தல் போன்ற நல்லறங்களில் ஈடுபடுவதன் மூலமாக, வரும் ரமளானில் இறைத்தொடர்பை வலுப்படுத்திக் கொள்ளத் திட்டமிடுவோம்.

அவசர வாழ்வின் அசுர ஓட்டத்திலிருந்து கொஞ்சம் மன அமைதி பெறுவோம். அலைப்பேசி மோகத்திலிருந்து விடுபட்டு இறைவனோடு தொடர்பிலிருப்போம்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்