மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • அன்பிற்குரிய சமரசத்தின் டிஜிட்டல் வாசகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு:
  • இதுநாள் வரைக்கும் சமரசத்தின் இணையத்தில் முற்றிலும் இலவசமாக நீங்கள் வாசித்து வந்தீர்கள். ஆனால் வருகின்ற ஏப்ரல் மாதத்திலிருந்து டிஜிட்டல் வாசிப்பிற்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய சமரசம் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. விவரங்கள் விரைவாய் அறிவிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்.
  • ஆகவே, இன்றுபோல் என்றும் ஒத்துழைப்பு வழங்க அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

முழுமை இஸ்லாம்

அரபுலகின் பெண் ஆளுமைகள்
குளச்சல் ஆசிம், , 1-15 மார்ச் 2023


கடந்த நூற்றாண்டின் இறுதி வரை அரபுலகம் குறித்து மேலை நாடுகளும், மேற்கத்திய ஊடகங்களும் தொடர்ந்து முன் வைத்த குற்றச்சாட்டுகளில் ஒன்று பெண்களுக்கு அரபு நாடுகளில் சுதந்திரம் மறுக்கப்படுகிறது என்பது.

கலை, நாகரிகம், பாலின சமத்துவம் எனும் பெயரில் மேற்குலகில் சகல விதமான சீரழிவுகளும் அரங்கேறி வரும் நிலையில் அரபுலகம் தங்கள் நாட்டு பெண்களுக்குச் சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது என்பது மட்டுமே உண்மை. ஆனாலும் அரபுலகின் பெண்கள் அறிவுத்தளத்தில் ஏனைய நாடுகளுடன் போட்டி போடும் அளவுக்கு மிகச் சிறந்த சாதனையாளர்களாகவும் வலம் வந்தனர்.

அரபுலகம் குறித்து வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு அங்கே மன்னர்கள் ஆட்சி நடைபெறுகிறது என்பது மட்டுமே தெரியும். கடந்த காலங்களில் எல்லாவிதமான முடிவுகளும் மன்னர்கள் மட்டுமே நடைமுறைப்படுத்தி வந்தனர் எனும் நிலைமாறி, தற்போது அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக அடுத்த தலைமுறையின் வளமான எதிர்காலத்துக்குப் பயன்படும் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு சார்ந்த துறைகளில் பெண்களை அமைச்சர்களாக நியமித்ததன் மூலம் மேற்குலகின் பொய்ப் பரப்புரைகளுக்கும் முடிவு காணப்பட்டுள்ளது.

அறிவியல், தொழில்நுட்ப உதவியில் உலகம் மிக வேகமாக மாறுதல்களைச் சந்தித்து வரும் நிலையில் அரபுலகமும் அந்த வேகத்துக்கு ஈடுகொடுக்கவும், கால மாறுதல்களை எதிர்கொள்ளும் வகையிலும் தங்கள் நாடுகளிலும் புதிய யுக்திகளைக் கையாள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு வருகின்றனர்.

புதிதாக நியமிக்கப்பட்ட பெண் அமைச்சர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி பயின்றவர்கள் என்பதால் அவர்களின் தொலைநோக்குப் பார்வையுடன்கூடிய சிந்தனைகள், புதிய திட்டங்கள் வடிவமைப்பு, செயல்படுத்தல் என்று மிக வேகமான வளர்ச்சியை நோக்கி தங்கள் நாடுகளை அழைத்துச் செல்கின்றனர்.

அரபுலகின் முதன்மையான நாடுகளாகத் திகழும் சவூதி அரேபியாவும், ஐக்கிய அரபு அமீரகமும் தொலைநோக்குத் திட்டங்களை வகுத்து மிக வேகமான வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகின்றனர்.

தங்கள் நாட்டின் குடிமக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்குவதுடன் அதற்குரிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

குறிப்பாக பெண் கல்வியை ஊக்குவிக்க தங்கள் நாடுகளின் கல்வித்துறை அமைச்சர்களாகக் கற்றறிந்த பெண்களை நியமித்து அரபு நாடுகள் மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக உலகம் முழுவதும் அதிகாரம் மிக்க பல்வேறு துறைகளில் அரபுப் பெண்கள் உயர் பதவிகளில் சிறப்புடன் பங்களிப்பு செய்து வருகின்றனர்.

அரபுலகின் அடுத்த தலைமுறை படித்த தலைமுறையாக மாறிவரும் சூழலில் எதிர்காலத்தில் சொந்த நாட்டின் குடிமக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதை உறுதி செய்ய தவிர்க்க முடியாத கடினமான சில நடவடிக்கைகளையும் அண்மைக் காலங்களில் அரபு ஆட்சியாளர்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

உள்நாட்டு வேலை வாய்ப்புகள் குறிப்பிட்ட விழுக்காடு ’சுதேசிமயம்' ஆகி வருவதால் இந்தியர்கள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பல இலட்சம் பேர் பணியிழந்து நாடு திரும்பும் சூழல் உருவாகலாம் என்றுகூட எதிர்பார்க்கப்படுகிறது.

வேலை வாய்ப்புகளை முன்னிறுத்தி Sauditation, Emiratitation, Kuwaititation என்று ஒவ்வொரு நாடுகளும் படிப்படியாக ஒவ்வொரு துறையிலும் சுதேசி குடிமக்களுக்கு வேலைவாய்ப்பைக் கட்டாயமாக்கி வரும் நிலையில் அங்குள்ள ஆண்களை விட பெண்களே சகல துறைகளிலும் முக்கிய பணிகளில் ஈடுபடும் நிலை உருவாகியுள்ளது.

பெண் கல்வியின் முக்கியத்துவம் உணர்ந்த அரபு நாடுகள் அதற்கான கட்டமைப்புகளை உருவாக்கி, அவர்களின் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பும் வழங்கி வருகின்றன. ஜி.சி.சி நாடுகள் எனப்படும் ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட ஆறு நாடுகளின் அரபு கூட்டமைப்பு பெண்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு இணைந்து செயல்பட்டு வருகின்றன.

  

கடந்த ஆண்டு சவூதி அரேபியாவில் வைத்து அரபு பெண்களின் எதிர்கால நலன் குறித்து விவாதிக்க அரபு கூட்டமைப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

'Gulf Women Leadership For A Sustainable Tomorrow' எனும் மையப்பொருளில் நடந்த கருத்தரங்கில் பல்வேறு முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக Gulf Women And Economic Empowerment, The Role Of Gulf Women In Security Co operation தலைப்புகளில் குழு விவாதங்கள் நடைபெற்று கல்வி, வேலைவாய்ப்பு, மனித வளம், அறிவியல் தொழில்நுட்பம், வணிகம் சார்ந்த துறைகளில் ஜிசிசி நாடுகளுக்குள் பரஸ்பரம் முன்னுரிமை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

இதன் மூலம் அரபு கூட்டமைப்பு நாடுகளின் பெண் ஆளுமைகள் தங்கள் நாடுகளின் எல்லைகள் கடந்தும் திறமையால் சாதித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கள் நாட்டில் வசிக்கும் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதை உறுதி செய்ய தனியாக ஒரு துறையை உருவாக்கி அதற்கென ஓர் அமைச்சரையும் நியமித்து கண்காணிக்கும் நாடு எனும் பெருமை உலகிலேயே ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மட்டுமே உண்டு.

ஹூத் பின்த் கலீபா அல் ரூமி அமீரகத்தின் Minister For Happiness துறை அமைச்சராகப் பணியாற்றி வருகிறார். இவர் உட்பட அமீரக அமைச்சரவையில் ஒன்பது பெண்கள் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அமீரக ஆட்சியாளர்கள் மகளிர் நலனில் காட்டும் அக்கறை பாராட்டுக்குரியது.

மர்யம் பின்த் முஹம்மது ஸைத், நூறா அல் காஃபே, ஹஸ்ஸா பின்த் ஈஸா, றீம் பின்த் இப்ராஹீம் அல் ஹாசிம், ஷமா பின்த் சுஹைல், ஸாரா பின்த் யூசுஃப் அல் அமீரி, மாஜிதா பின்த் சலீம், ஸாரா பின்த் முஸல்லம் ஆகிய பெண்கள் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், சர்வதேச விவகாரங்கள், இளைஞர் நலன், விளையாட்டு, தகவல் தொழில்நுட்பம், சமூக மேம்பாடு, குடும்ப நலன், உயர் கல்வித்துறை அமைச்சர்களாக திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

உலகின் வளர்ந்த நாடுகள், வல்லரசு நாடுகளுக்கு இணையாக அமீரகத்தை அறிவியல், தகவல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுற்றுலா மேம்பாடு, மாற்று எரிசக்தி உட்பட அனைத்து கட்டமைப்புகளிலும் முன்னோடி தேசமாக மாற்ற ’விஷன் 2050' எனும் தொலைநோக்குத் திட்டங்களை வகுத்துச் செயல்படும் அமீரக ஆட்சியாளர்களுக்கு இவர்களின் சிந்தனை பெருமளவில் உதவி வருகிறது. 

இந்தப் பெண் அமைச்சர்கள் முன் வைக்கும் திட்டங்களின் சாதக பாதகங்களை ஆராய்ந்து அமீரக ஆட்சியாளர்கள் உடனடியாக ஒப்புதல் வழங்குவதால் பெண் அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்த விஷயங்களில் வெற்றி பெற முடிகிறது.

கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பல இலட்சக்கணக்கானவர்கள் வந்து பார்வையிட்டு வியந்த ’துபாய் எக்ஸ்போ 2020' இன் திட்டமிடல், வடிவமைப்பு, கட்டுமானம் உட்பட அனைத்துக்கும் மூளையாகச் செயல்பட்டவர் ரீம் பின்த் இப்ராஹீம் அல் ஹாசிம் என்ற இளம் பெண் அமைச்சர் என்பதும் அவரின் ஆளுமையும் ஒருங்கிணைப்பும் அந்தக் கண்காட்சியின் வெற்றிக்குக் காரணமாகவும் அமைந்தது.

குடும்ப நலன், சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருக்கும் ஹஸ்ஸா பின்த் ஈஸாவின் சிந்தனையில் உருவான ஒரு திட்டம் பல்லாயிரம் அரபு இளைஞர்களின் மணவாழ்க்கையை மகிழ்ச்சியாக்கியுள்ளது.

திருமண வயதைக் கடந்தும் வறுமை, திருமணச் செலவுகளுக்கு போதிய பொருளாதாரம் இன்றி காணப்பட்ட அமீரக இளைஞர்களுக்குத் திருமண உதவித்தொகை வழங்கிட இவர் தயாரித்த முன்னோடி திட்டத்தை யுஏஇ ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொண்டு ஆண்டுக்கு 70000 திர்ஹம் நிதி ஒதுக்கீடு செய்தனர்.

இதன் மூலம் 2021ஆம் ஆண்டில் 2727 பேரும், 2022ஆம் ஆண்டில் 2844 பேரும் இந்த நிதியுதவியுடன் மணவாழ்வு கண்டனர்.

அறிவியல் தொழில்நுட்பத்தில் அரபுலகில் யுஏஇ அபார வளர்ச்சியைக் கண்டுள்ளதற்கும், விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பிய முதலாவது அரபு நாடு எனும் தகுதியைப் பெறுவதற்கும் மூளையாகச் செயல்பட்டவர் ஸாரா அல் அமீரி எனும் இளம் பெண் அமைச்சர்தான்.

ஐக்கிய அரபு அமீரகம் வளர்ச்சிப் பாதையில் முன்னேற்றம் காண அறிவும் ஆற்றலும் நிறைந்த பெண் ஆளுமைகளின் பங்களிப்பு பாராட்டுக்குரியது.

உலக முஸ்லிம்களின் இரு பெரும் புனித நகரங்களைக் கொண்டுள்ள சவூதி அரேபியாவில் பெண்களுக்கான கட்டுப்பாடு கடந்த நூற்றாண்டின் இறுதி வரை இருந்தது. உயர்கல்வி கற்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு தவிர்க்க இயலாததாகியது.

அரபு கூட்டமைப்பு நாடுகளுக்குத் தலைமை வகிக்கும் சவூதி அரேபியா, ’விஷன் 2050' எனும் தொலைநோக்குத் திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் பயணம் சார்ந்து வந்து செல்லும் 20 இலட்சத்துக்கும் அதிகமானோரும், ஆண்டு முழுவதும் வந்து செல்லும் உம்ரா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கவனத்தில் கொண்டும் பல்வேறு வகையான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மக்கா, மதீனா நகரங்களின் பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளிட்ட முக்கியமான பணிகளில் பெண்களை ஈடுபடுத்தி அவர்களின் திறமையைப் பயன்படுத்தி வருகின்றனர்.

உலகின் அனைத்து நாடுகளோடும் தூதரக தொடர்புடைய சவூதி அரேபியா நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த வெளியுறவுத் துறை அமைச்சராக ஸாரா பின்த் அப்துல் ரஹ்மான் அஸ்ஸயீத் எனும் பெண்மணி அண்மையில் நியமிக்கப்பட்டார்.

ஏமன் நாட்டின் வலதுசாரிகளின் தாக்குதலால் அடிக்கடி பாதிக்கப்படும் பதட்டம் நிறைந்த வடக்கு மாகாண எல்லைப் பாதுகாப்பு பிரிவின் இயக்குநராக அல் ஹனூப் பின்த் மர்சூக் எனும் பெண் அதிகாரியை நியமனம் செய்தது சவூதி மன்னரின் துணிச்சலான நடவடிக்கை என்றும் கூறப்பட்டது.

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் துணை இயக்குநராக பதவியேற்ற மிஷல் அல் ஷமீமாரி முதல் அரபுப் பெண்மணி என்ற பெருமைக்குரியவராவார். சவூதி அரேபியா அரசின் நிரந்தர பிரதிநிதியாக ஐ.நாவில் ஹைஃபா பின்த் அப்துல் அஜீஸ் அல் முஹி எனும் பெண்மணி சிறப்பாகப் பங்களித்து வருகிறார்.

  

பெண்கள் வாகனங்கள் ஓட்டுவதற்கு உலகிலேயே அனுமதி மறுக்கப்பட்ட ஒரே நாடு என்ற குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து 2018 ஜுன் மாதம் பெண்களுக்கு வாகன ஓட்டுநர் உரிமம் வழங்க சவூதி அரசாங்கம் அனுமதி வழங்கியது.

அண்மையில் ரயில் ஓட்டுநர் பணியில் 25 பெண்களை நியமனம் செய்ய விண்ணப்பிக்க அழைப்பு விடுத்தபோது 28000 பெண்கள் அந்தப் பதவிக்கு விண்ணப்பித்ததைக் கண்டு ஆட்சியாளர்களே வியப்படைந்தனர்.

அரபுலகில் தனிநபர் விளையாட்டு, குழு விளையாட்டு என்று அனைத்து வகையான மகளிர் விளையாட்டு வீராங்கனைகளைக் கொண்டுள்ள நாடாகவும் சவூதி அரேபியா விளங்குகிறது.

அண்மையில் நடந்து முடிந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை கத்தார் நாடு நடத்திய விதம் உலகம் முழுவதும் பேசுபொருளானது. போட்டிகளின் தொடக்க விழா நிகழ்விலிருந்து இறுதிப் போட்டிகள் வரை எந்தவித சலசலப்பும் இல்லாமல் கத்தார் அரசின் ஏற்பாடுகளைப் பார்த்து மேற்குலக ஊடகங்கள்கூட வியந்து பாராட்டினர்.

கத்தார் அரசு உலகக் கோப்பை போட்டியை ஏற்று நடத்த முடிவெடுத்த நாளிலிருந்து திட்டமிடல், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல், உலகத்தரம் வாய்ந்த தங்குமிட வசதிகள் ஏற்படுத்துதல், உலக நாடுகளோடு தொடர்பு கொள்ளுதல் என்று அனைத்தையும் திட்டமிட்டு இயக்கியது ஃபாத்திமா அல் நுஐமி என்ற பெண்மணியின் சிந்தனையும் கடின உழைப்பும்தான். இவரது தலைமையில் செயல்பட்ட 15 பெண்கள் அடங்கிய குழுவினரின் அயராத உழைப்பு கத்தார் நாடு உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்கக் காரணமாக அமைந்தது. இவரது தைரியத்தைப் பாராட்டி ஐ.நா. 2022ஆம் ஆண்டுக்கான Women Hero Of The Year விருது வழங்கிக் கௌரவித்தது.

கத்தார் விளையாட்டுத் துறை மட்டுமல்லாமல் கல்வி, சுகாதாரம், குடும்ப நலன் போன்ற முக்கியமான துறைகளில் பெண்களை அமைச்சர்களாக நியமித்துள்ளது.

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் படித்த முதுநிலை பட்டதாரிகளான புதைனா அல் நுஐமி கல்வித்துறை அமைச்சராகவும், ஹனான் அல் குவாரி சுகாதாரத் துறை அமைச்சராகவும், மர்யம் பின்த் அலீ நாசர் குடும்ப நலத்துறை அமைச்சராகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.

அரபு பிராந்தியத்தில் வித்தியாசமான அணுகுமுறை கொண்ட நாடு எனும் சிறப்பு ஓமனுக்கு உண்டு. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு அனைத்துத் துறைகளிலும் உரிய உரிமைகள் வழங்க சட்டபூர்வமாக வழிவகை செய்தவர் மறைந்த சுல்தான் காபூஸ் அவர்கள்.

சமூக, பொருளாதார, அரசியல் அதிகாரத்தில் பெண்களுக்கான உரிமைகளை வழங்கிய சுல்தான் காபூஸ் 1994இல் ஓட்டுரிமையும் வழங்கினார். 1996இல் சட்டபூர்வமாக அனுமதி வழங்கி பெண்கள் சொந்தமாக தொழில் செய்ய லைசென்ஸ் வழங்கியவர் எனும் பெருமையும் சுல்தான் காபூஸுக்கு உண்டு.

`விஷன் 2040' எனும் திட்டத்தை வடிவமைத்து வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் ஓமன் நாட்டில் ஐம்பது விழுக்காட்டினருக்கும் அதிகமான பெண்கள் உயர்கல்வி படித்தவர்களாகவே உள்ளனர்.

மருத்துவம், பொறியியல், கணினி சார்ந்த தொழில்நுட்ப படிப்புகளில் தங்கள் திறமையை வெளிப்படுத்தி உலகின் பல்வேறு நாடுகளில் பணியாற்றி வருகின்றனர்.

ரூஃஆ இஸ்ஸு அல் ஸத்ஜலி என்பவர் அண்மையில் பெல்ஜியம் நாட்டின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளதன் மூலம் அரபுலகிலிருந்து அயல்நாட்டுத் தூதராக பெண்களுக்குப் பொறுப்பு வழங்கிய இரண்டாவது நாடு எனும் தகுதியையும் பெறுகிறது.

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்