இந்நூற்றாண்டின் மிகச் சிறந்த இஸ்லாமியப் பேரறிஞர்களில் ஒருவரான ஷெய்க் டாக்டர் யூசுஃப் அல்கர்ளாவி எழுதிய மிக முக்கியமான நூல்களில் ஒன்றுதான் ’கைஃப நதஆமலு மஅல் குர்ஆனில் அளீம்' எனும் அரபி நூல். இந்த நூலைப் பன்னூலாசிரியர் மௌலவி நூஹ் மஹ்ழரி சிறப்பான முறையில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அல்குர்ஆனை அணுகும் முறை எனும் தலைப்பில் இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT) வெளியிட்டுள்ளது.
உலக மக்கள் அனைவருக்கும் ஒரு நல்லுரையாக ஏக இறைவனால் இறுதித் தூதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்களுக்கு இறுதி வேதமாக அனுப்பப்பட்ட உன்னதமான நூல் திருக்குர்ஆன். 14 நூற்றாண்டுகளுக்கும் மேலாக எந்த மாறுதலுக்கும் உட்படாமல் இன்று வரையிலும், இன்னும் இந்த யுக முடிவு வரையிலும் மக்கள் அனைவருக்கும் திருக்குர்ஆன் தெளிவான வாழ்க்கை வழிகாட்டி நூலாகத் திகழ்ந்துகொண்டிக்கும் என்பதில் எள்முனையளவும் ஐயமில்லை.
இறைவனின் இறுதி வேதமாகிய திருக்குர்ஆனை எப்படி அணுக வேண்டும், ஓத வேண்டும், புரிந்துகொள்ள வேண்டும், அதன்படி ஒழுக வேண்டும் என்பதற்கான ஓர் அழகிய வழிகாட்டி நூல்தான் இந்த நன்னூல்.
1. அல்குர்ஆனின் தனிப்பெரும் சிறப்புகளும் இலக்குகளும்
2. மனப்பாடம், ஓதுதல், செவியுறுதல் ஆகியவை மூலம் குர்ஆனை அணுகும் முறை
3. புரிதல், விளக்கவுரை ஆகியவை மூலம் குர்ஆனை அணுகும் முறை
4. பின்பற்றுதல், செயல்படுத்துதல், தீர்ப்பளித்தல், அழைத்தல் ஆகியவை மூலம் குர்ஆனை அணுகும் முறை எனும் நான்கு முக்கிய பாகங்களை இந்த நூல் உள்ளடக்கியுள்ளது.
அல்குர்ஆன் ஓர் இறைவேதம் என்பதில் தொடங்கி அது தொகுக்கப்பட்ட வரலாறு, முழுமையான வழிகாட்டும் வேதம், குர்ஆன் உறுதிப்படுத்தும் மனித உரிமைகள், மனித கண்ணியம், குடும்ப உருவாக்கம், பெண்களுக்கான நீதி, மக்களுக்குச் சான்று வழங்கும் சமூகத்தைக் கட்டமைத்தல், முஸ்லிம் சமூகத்தின் அடிப்படைக் குணங்கள், சகோதரத்துவம், உலக அமைதி, சகோதர சமயத்தவர்களுடன் சகிப்புத்தன்மை போன்ற பல்வேறு அம்சங்களைக் குர்ஆனுடைய ஒளியில் தெள்ளிய நீரோடைபோல விளக்குகிறார் நூலாசிரியர்.
குர்ஆனின் இலக்குகளாக மானுட வர்க்கத்தின் நன்மைக்கும் உயர்வுக்கும் அவசியமான பின்வரும் ஏழு அம்சங்களை முன்வைக்கிறார் நூலாசிரியர்.
1. இறைநம்பிக்கை, தூதுத்துவம், மறுமை ஆகிய அடிப்படை நம்பிக்கைகள் குறித்த சரியான பார்வையை முன்வைத்தல்
2. மனித மகத்துவம், மனித உரிமைகளை குறிப்பாக பலவீனமானவர்களுடைய உரிமைகளை உறுதி செய்தல்
3. அல்லாஹ்வை அழகிய முறையில் வணங்குதல், அவனையே அஞ்சுதல் போன்றவற்றுக்குச் சன்மார்க்க வழிகாட்டுதல்
4. உளத்தூய்மையின் பால் மனிதனை அழைத்தல்
5. நன்மை நிறைந்த குடும்ப உருவாக்கம், பெண்களுக்கான நீதியைப் பெற்றுத் தருதல்
6. மக்களுக்குச் சான்று வழங்குபவர்களாக வாழும் சமூகத்தைக் கட்டமைத்தல்
7. பரஸ்பரம் ஒத்துழைப்பு நல்கும் உன்னத மனித உலகின் பால் அழைத்தல்.
மக்களுக்குச் சான்று வழங்கும் சமூகத்தைக் கட்டமைத்தல் எனும் தலைப்பின் கீழ் இவ்வாறு எழுதுகிறார்: ’இஸ்லாத்தின் கட்டளைகளுக்கு ஏற்ப அதன் கொள்கை, வழிமுறைகளின் அடித்தளத்தில் தனித்துவமிக்க ஒரு சமூகத்தைக் கட்டி எழுப்புவதே குர்ஆனுடைய மற்றுமொரு முக்கிய இலக்கு. வளரும் தலைமுறை இஸ்லாம் காட்டும் வழிமுறைகளினூடாக வார்த்தெடுக்கப்பட வேண்டும்; அவர்கள் இஸ்லாத்தின் செய்தியை உலகெங்கும் சுமந்து செல்ல வேண்டும்; அந்தச் செய்தியுடன் கருணை, நன்மை ஆகியவற்றையும் மனித குலத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பது குர்ஆனுடைய இலக்காகும்'.
குர்ஆனைப் பின்பற்றுதல் என்ற தலைப்பின் கீழ், ’பல இலட்சம் மக்கள் குர்ஆனை மனப்பாடம் செய்துள்ளனர். மில்லியன் கணக்கில் மக்கள் நாள்தோறும் குர்ஆனை ஓதுகின்றனர்; செவியேற்கின்றனர். கோடிக்கணக்கான மக்கள் வீட்டுச் சுவர்களைக் குர்ஆன் வசனங்களால் அலங்கரிக்கின்றனர். இவையனைத்தும் இருந்தும்கூட முஸ்லிம்களுடைய அறிவின் வழிகாட்டியாகவோ, முஸ்லிம்களின் இதயங்களில் ஆட்சி செலுத்தக்கூடியதாகவோ, முஸ்லிம்களுடைய நடவடிக்கைகளில் ஆதிக்கம் செலுத்தக்கூடியதாகவோ, முஸ்லிம்களுடைய வாழ்வை மாற்றக்கூடியதாகவோ குர்ஆன் மாறவில்லை என்பதே கசப்பான உண்மை' என்று தனது கவலையை வெளிப்படுத்துகிறார்.
இவ்வாறு நூல் முழுவதும் வாசிப்பவரின் உள்ளத்தைத் தட்டியெழுப்பி, எழுச்சியூட்டும் பல்வேறு அம்சங்களை எடுத்தியம்புகிறார். திருக்குர்ஆன் எனும் கடலில் மூழ்கி முத்தெடுக்க விரும்பும் ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டிய பொக்கிஷம் இது. ஒவ்வொரு இல்லத்திலும், உள்ளத்திலும் இருக்க வேண்டிய நன்னூல் இது!