அது ரமளான் மாதத்தின் முதல் நாள். தராவீஹ் தொழுதுவிட்டு அறைக்குத் திரும்பிய நான் அறையில் தனியாக அமர்ந்து குர்ஆன் ஓதிக் கொண்டிருந்தேன். அதன் இனிமையில் திளைத்துக் கொண்டிருந்தேன்.
திடீரென்று சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்த எனக்கு சுவர் குலுங்குவதைப் போன்று தோன்றியது. நேராக அமர்ந்துகொண்டு குர்ஆன் ஓதுவதைத் தொடர்ந்தேன். இப்போது சுவர் நடுங்குவதாக உணர்ந்தேன். நான் திரும்பிப் பார்த்தேன். சுவர் என்னோடு பேசத் தொடங்கிவிட்டது.
சுவர் : எத்தனை எத்தனை இரவுகளாக நான் இதற்காகக் காத்திருந்தேன். என்னோடு தனிமையில் இருக்கின்ற இந்தத் தருணங்களுக்காக, மனம் இலயித்து குர்ஆன் ஓதுகின்ற இந்தச் சந்தர்ப்பங்களுக்காக எத்தனை எத்தனை நாள்களாக எதிர்பார்த்திருந்தேன்.
என் மீது சாய்ந்தவாறு குர்ஆன் விரிவுரை ஏடுகளைப் புரட்டிப் புரட்டிப் பார்த்து குறிப்பு எடுப்பாயே! அந்த பகற்பொழுதுகள் எங்கே போயின? நண்பர்களோடு குர்ஆன் வசனங்கள் தருகின்ற செய்திகள் குறித்து விவாதிப்பாயே அந்த அமர்வுகள் எங்கே காணாமல் போயின? ஏன் இந்த இடைவெளி? எதனால் இந்த முடக்கம்? என்னதான் காரணம்?
நான் : ஆமாம். ரொம்ப நீண்ட இடைவெளி விழுந்து விட்டது. என்னுடைய அலட்சியம்தான் காரணம்.
சுவர் : என்ன உமக்குத் தெரியவில்லையா? இந்தப் பூமியில் இருக்கின்ற உயிரற்ற பொருள்கள் அனைத்தும் உன்னுடைய விவகாரங்கள் குறித்து சாட்சி சொல்லும். அல்லாஹ் அறிவிக்கின்றான்: `மேலும் பூமி தன்னுள்ளிருக்கும் சுமைகள் அனைத்தையும் வெளிக்கொணர்ந்து விடும்போது, மேலும், `அதற்கு என்ன நேர்ந்துவிட்டது?' என்று மனிதன் கேட்கும்போது அந்நாளில் அது தன் மீது நடந்துவிட்ட நிகழ்ச்சிகளை எடுத்துரைக்கும்.' (திருக்குர்ஆன் 99:24)
இதனால்தான் சொல்கின்றேன். எனக்கு அருகில் அமர்ந்து குர்ஆன் ஓது! நல்லறங்கள் செய்! நஃபில் தொழுகைகளை நிறைவேற்று! மறுமைநாளில் நான் உமக்குச் சாதகமாக இவற்றையெல்லாம் எடுத்துரைப்பேன்.
நான் : முந்தைய காலத்தைச் சேர்ந்தவர்கள் இப்படித் தனிமையில் அமர்ந்தார்களா, என்ன? நான் மட்டும் ஏன் தனிமையில் அமர வேண்டும்?
சுவர் : என்ன அப்படிச் சொல்லிவிட்டாய்? நம்முடைய அன்பு நபிகளாரும் வஹீ அருளப்படுவதற்கு முன்பு ஹிரா குகைக்குச் சென்று தனிமையில் இருந்து வந்தார்கள். மேலும் நபிகளார்(ஸல்) தம்முடைய நபித்துவக் காலம் முழுவதும் இரவுகளில் தனிமையில்தான் வழிபாடு செய்து வந்தார்கள். மேலும் ரமளானின் கடைசிப் பத்துகளில் இஃதிகாஃப் இருந்து வந்தார்கள். இவையெல்லாமே அல்லாஹ்வுடன் தனிமையில் இருக்கின்ற அறங்கள்தாம்.
நான் : தனிமையில் அமர்ந்து இறைநினைவில் ஈடுபடுவதன் நன்மைகள்தாம் என்ன?
சுவர் : ஷஹீத் சையத் குதுப் அவர்களின் வார்த்தைகளில் சொல்கின்றேன், கேள்: `உங்களுடைய அன்றாட வாழ்வின் நிறத்தை, சுவையை, பாணியை மாற்றிவிட விருப்பமா? அவற்றின் திசையைத் திருத்தி விட நாட்டமா? உங்களுடைய ஆன்மா மீது உங்களின் கவனத்தைத் திருப்புங்கள். அதற்கு நாள்தோறும் சற்று நேரம் தனிமையைத் தந்தாக வேண்டும். அவசியம் தந்தாக வேண்டும்.
அதற்காக உலகக் கவலைகளிலிருந்தெல்லாம் உங்களை நீங்களே துண்டித்துக்கொண்டு அன்றாட வாழ்வின் ஆரவாரங்களிலிருந்தும் மக்களைப் பற்றிய சிந்தனைகளிலிருந்தும் விடுவித்துக் கொண்டு உங்களுக்கென சில நிமிடங்களை உருவி எடுத்துக் கொள்ளுங்கள்.
ஏனெனில் இந்தப் பரந்து விரிந்த பேரண்டத்தையும் அதில் நிறைந்திருக்கின்ற உயிர்த்துடிப்புள்ள உண்மைகளையும் குறித்து ஆராய்ந்து பார்ப்பதற்காகவும், அவற்றோடு இசைவானதாய் தம்முடைய இருப்பை ஆக்கிக் கொள்வதற்கும் சிறிது நேரத்தை ஒதுக்குவது அவசியமாகும். அதன் பிறகு ஆன்மிக உணர்வும் இருப்பும் மகத்தானதாய் ஆகிவிடும்.
நான் : சத்திய அழைப்பாளர் தனிமையில் அல்லாஹ்வை நினைத்தும், துதித்தும் நேரத்தைச் செலவிடுகின்றபோது அவருடைய செயல்திறனும் வலிமையும் அசாதாரணமான அளவில் வளர்ந்துவிடும் என்றுதானே நீ சொல்ல வருகின்றாய்?
சுவர் : ஆமாம். நான் அதனைத்தான் சொன்னேன். ஏனெனில் தனிமையில் இறைவனை நினைவுகூர்பவனுக்கு அல்லாஹ்வின் பேரொளி கிடைக்கின்றது. அதன் பிறகு அவன் அடுத்த நாள் காலையிலேயே புத்தம் புது தெம்புடனும் தெளிவுடனும் புத்துணர்வுடனும் செயற்களத்தில் இறங்கிவிடுகின்றான்.
நான் : தனிமையில் இறைவனை நினைவுகூர்வதை இரவில்தான் செய்ய வேண்டுமா, என்ன?
சுவர் : இரவுப் பொழுதுகள்தாம் சிறப்பானவை. அதற்கடுத்து ஃபஜருக்குப் பிறகு இஸ்ராக் தொழுகை வரையிலான நேரங்களிலும் இறைவனை நினைவுகூரலாம்.
நான் : இரவுப் பொழுதுகளுக்கு மட்டும் ஏன் அந்தச் சிறப்பு?
சுவர் : ஏனெனில் இரவுப் பொழுதுகள் தாம் ஆரவாரம் இல்லாதவையாய், இதமானவையாய், நிம்மதியானவையாய் இருக்கின்றன. திரும்பும் திசை எங்கும் மௌனம்தான் குடி கொண்டிருக்கும். இப்படிப்பட்ட இனிமையான, இதமான, மௌனமான சூழலில் தொழுகின்ற போதும் வழிபடுகின்ற போதும் அது மனத்துக்கும் ஆன்மாவுக்கும் குளிர்ச்சியைத் தரும். அலாதியான சுகத்தைக் கொடுக்கும். வழிபாட்டின் சுவையைக் கூட்டும்.
அறிஞர் பஷ்ர் அல்ஹானி கூறுகின்றார்: `ஓர் இறைநம்பிக்கையாளனுக்குப் போரில் கைப்பற்றப்படுகின்ற பொருள்களுக்கு இணையான கருவூலம் என்ன தெரியுமா? அவனுடைய வழிபாடுகள் குறித்து மக்களுக்குத் தெரியாமல் போவதும், அவன் எங்கே வழிபடுகின்றான் என்கிற விவரமும் மக்களுக்குக் கிடைக்காமல் போவதும்தாம்'.
யஅலி பின் உமைய்யா(ரலி) என்று ஒரு நபித்தோழர் இருந்தார். அவர் பள்ளிவாசலில் ஒரு மணி நேரம் இஃதிகாஃப் இருப்பதாக நிய்யத் வைத்துக் கொண்டு தனிமையில் செலவிடுவதை வழக்கமாகவே கொண்டிருந்தார்.
இமாம் அஹ்மத் பின் ஹம்பல்(ரஹ்) அவர்கள் தனிமையில் இறைவனை நினைவுகூர்வதையும் வழிபடுவதையும் மிகக் கடுமையான முறையில் பேணி வந்தார் என்று அவருடைய மகனார் அப்துல்லாஹ் சாட்சியம் அளிக்கின்றார்.
இதுதான் நம்முடைய முன்னோர்களின் முன்மாதிரியான நடத்தை. நீயும் அவர்களின் காலடிச் சுவடுகளில் நடக்கக் கற்றுக்கொள். அந்தக் காலடிச் சுவடுகள் உன்னை வெற்றியின் பக்கம்தான் இட்டுச் செல்லும்.
நான் : இந்த வழிபாட்டினால் இத்துணை நன்மைகள் இருக்கின்றனவெனில் இதற்குப் பின்னால் இத்துணை நுட்பங்கள் உள்ளன எனில் மனிதர்களில் சிலர் இதற்காக நேரத்தை ஒதுக்குவதில்லையே, ஏன்?
சுவர் : ஆன்மிக மருத்துவர்களில் மகத்தானவராக பேர் பெற்ற இமாம் கஸ்ஸாலி(ரஹ்) அவர்கள் மனிதர்களிடம் நன்மைகள் அதிகமாக இல்லாமல் போவதுதான் இதற்குக் காரணம் என்று அறிவித்திருக்கின்றார்கள். தம்முடைய `இஹ்யா உலூமுத்தீன்' என்கிற நூலில் அவர் குறிப்பிடுகின்றார்: `மனிதனுக்கு தன் சுயம் மீதே வெறுப்பும் பீதியும் ஏற்பட்டு விடுகின்றன. ஏனெனில் அவருடைய சுயம் உயர்ந்த நடத்தையைக் கொண்டதாக இருப்பதில்லை. இத்தகைய நிலையில் இவர்கள் மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கத் தொடங்கி விடுகின்றார்கள். மக்கள் நிறைந்த கூட்டத்திலும் கும்பலிலும் இவர்கள் தங்களின் இந்த வெறுப்பையும் பீதியையும் மறைத்துக் கொள்கின்றார்கள்.'
அதாவது அவர்கள் தனிமையில் இருக்கின்றபோது தம்மைத்தாமே, தம்முடைய வண்டவாளங்களைப் பார்க்க வேண்டிய கட்டாயம் உருவாகிவிடும். இதன் காரணமாக இவர்கள் தனிமையை விட்டு வெருண்டோடுகின்றார்கள்.
நான் : நீ சொல்வது சரிதான். சரி, தனிமையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்தும் இரண்டு வரி சொல்லேன்.
சுவர் : அல்லாஹ்வுடன் நீ தனித்திருக்கின்றபோது உன்னுடைய உளத்தூய்மையை வளர்த்துக் கொள்வதற்காகவும் உன்னை நீயே மேம்படுத்திக் கொள்வதற்காகவும் ஏராளமானவற்றைச் செய்யலாம். அல்லாமா இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்களின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில்: `தனிமையில் கழிப்பதற்காகவென்றே அன்றாடம் ஒரு குறிப்பிட்ட நேரம் அடியான் வசம் இருந்தாக வேண்டும். பிரார்த்தனை, இறைஞ்சுதல், முறையீடு, இறைநினைவு, தொழுகை, சுய மதிப்பீடு, மனஇச்சையை மதிப்பிடுதல், இதயத்தைச் சீர்திருத்துதல் என இது போன்ற ஏராளமான அறங்களைத் தனிமையில் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். உண்மையில் சொல்லப்போனால் இந்த அறங்களைச் செய்வதற்கு தனிமை மிகவும் அவசியம். இந்தத் தனிமை அவருக்கு அவருடைய வீட்டில் கிடைத்தாலும் சரி, வேறு எந்தவொரு இடத்தில் கிடைத்தாலும் சரி'.
நான் : எல்லாச் சுவர்களும் உன்னைப் போன்று பேசத் தொடங்கிவிட்டால், நல்ல நல்ல கருத்துகளை எனக்குச் சொல்லத் தொடங்கிவிட்டால் எத்துணை நன்றாக இருக்கும்!
சுவர் : இன்னோர் முக்கியமான, பயனுள்ள, சிறப்பான செய்தி இருக்கின்றது.
நான் : அதென்ன? சீக்கிரம் சொல்லேன்.
சுவர் : உடலுக்கு சோதனைகள் நடப்பதைப் போன்றே இதயத்துக்கும் சோதனைகள் நடக்கின்றன. நோய்கள், துன்பங்கள், வலிகள் போன்றவற்றைக் கொண்டு உடல் சோதிக்கப்படுகின்றது. குழப்பங்களைக் கொண்டு இதயம் சோதிக்கப்படுகின்றது. அல்லாஹ் கூறுகின்றான்: `உண்மையில் அத்தகையவர்களின் உள்ளங்களை இறையச்சத்திற்காக அல்லாஹ் பரிசோதித்துத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்.' (திருக்குர்ஆன் 49:3)
எனவே உன்னுடைய இதயத்தோடும் மனத்தோடும் அறிவார்ந்த முறையில் நடந்துகொள். நல்ல முறையில் தனிமையைச் செலவிடுகின்ற நற்பேற்றை அல்லாஹ் உனக்கு அருள்வானாக. ஆமீன்.