மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • அன்பிற்குரிய சமரசத்தின் டிஜிட்டல் வாசகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு:
  • இதுநாள் வரைக்கும் சமரசத்தின் இணையத்தில் முற்றிலும் இலவசமாக நீங்கள் வாசித்து வந்தீர்கள். ஆனால் வருகின்ற ஏப்ரல் மாதத்திலிருந்து டிஜிட்டல் வாசிப்பிற்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய சமரசம் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. விவரங்கள் விரைவாய் அறிவிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்.
  • ஆகவே, இன்றுபோல் என்றும் ஒத்துழைப்பு வழங்க அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

முழுமை இஸ்லாம்

பிபிசி ஆவணப்படம்: ஒரு விமர்சனப் பார்வை
நாகூர் ரிஸ்வான், , 16-31 மார்ச் 2023


அண்மையில் குஜராத் இனப்படுகொலை தொடர்பாக பிபிசி வெளியிட்ட 'India: The Modi Question' ஆவணப்படம் மிகப் பெரும் விவாதப் பொருளானதையும், அதற்கு இந்திய அரசு தடை விதித்ததையும் நாம் அறிவோம். ஒரு பக்கம் அதை நரேந்திர மோடி ஆதரவு வட்டாரங்கள் கடுமையாக எதிர்த்தன. மறுபக்கம் இந்துத்துவ எதிர்ப்பாளர்களாக அறியப்படும் பல தரப்பினர் அதைப் பெரிதும் வரவேற்றனர். அந்தப் படம் அதற்குரிய வகையில் விமர்சனப் பூர்வமாக அணுகப்பட்டதா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கும்.

குஜராத் இனப்படுகொலை உலகெங்கும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியதும், சில முக்கிய விவரங்களைப் பதிவு செய்ததும் பிபிசி ஆவணப்படத்திலுள்ள நேர்மறையான அம்சங்கள் என்பதில் ஐயமில்லை. இந்தக் கட்டுரை அந்தப் படத்தை மற்றொரு கோணத்தில் அணுகுகிறது. அதிலுள்ள சிக்கல்களைச் சற்று கூராய்வு செய்கிறது. மானுடவியல் பேராசிரியர் இர்ஃபான் அஹ்மது மக்தூப் மீடியா இணையதளத்துக்கு எழுதிய கட்டுரையைத் தழுவி எழுதப்பட்ட கட்டுரை இது.

காலனியத்தின் நீட்சி!

பிபிசி ஆவணப்படம் குறித்து புகார் தெரிவித்த இந்திய அரசு, அதை `காலனிய மனநிலையின் தொடர்ச்சி' என்று குற்றம்சாட்டியது. வேடிக்கை என்னவென்றால், அதைத் தடை செய்ய அரசு பிரயோகித்த சட்டமே ஒருவிதத்தில் காலனியத்தின் நீட்சிதான். `இந்திய இறையாண்மை, ஒருமைப்பாட்டின் நலன்களுக்கு', `அரசின் பாதுகாப்புக்கு' எதிரானதாகக் கொள்ளப்பட்டு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் மூலம் அந்தப் படத்துக்குத் தடை விதிக்கப்பட்டது.

பிரிட்டிஷார் காலத்தில் இந்தியப் பாதுகாப்புச் சட்டம்(1915) கொண்டுவரப்பட்டது. இதன் நீட்சியாக அமைந்ததுதான் ரவ்லட் சட்டம்(1919). இவ்விரு சட்டங்களும் `அரசின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்' தரும் செயல்பாடுகளைக் குற்றமாக்கின. இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய அம்சம் என்னவெனில், மோகன்தாஸ் காந்தியும், இந்தியாவின் முதல் பிரதமருமான ஜவஹர்லால் நேருவும் மேற்கு வங்க பாதுகாப்புச் சட்டம்(1948) போன்ற காலனியச் சட்டங்களை விமர்சனமின்றி அங்கீகரித்தனர். சொல்லப்போனால் பிரிட்டிஷாரையே ஒருபடி விஞ்சும் அளவுக்கு நேரு போனார்.

மேற்கூறியது போல், `அரசின் பாதுகாப்புக்கு' எதிரான நடவடிக்கைகள் குற்றப்படுத்தப்பட்டு வந்த நிலையில், அதன் எல்லையை இன்னும் விரிவாக்கி `அரசினுடைய பாதுகாப்பின் நலன்களுக்கு' எதிரான நடவடிக்கைகள் குற்றமாக்கப்பட்டன. அரசமைப்பில் இப்படியான திருத்தத்தை நேரு கொண்டு வந்ததன் விளைவு எந்தச் செயலையும் சட்ட விரோதமாக அறிவிக்கலாம் எனும் படுமோசமான நிலையை ஏற்படுத்தியது.

பாதிக்கப்பட்டோர் மீதே பழிசுமத்துதல்

பாஜகவின் கண்ணோட்டத்துக்கும், பிபிசி ஆவணப்படத்துக்கும் மத்தியில் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. படத்தின் முதல் பாகத் தொடக்கத்தில் வரும் குரல், `ஒரு முஸ்லிம் குழுவால் இந்துச் செயற்பாட்டாளர்கள் பயணித்த இரயில் கொளுத்தப்பட்டதில் 57 பேர் இறந்தனர்' என்று குறிப்பிடுகிறது. கோத்ராவில் எரிக்கப்பட்ட இரயிலுக்கு அருகில் நின்று ஜில் மெக்கிவிரிங் கூறுகிறார்: `சில பகுதிகளில் (இந்துக்களிடையே) நிலவும் துயரமும் கோபமும் (முஸ்லிம்களுக்கு எதிரான) வன்முறையைக் கிளர்ந்தெழச் செய்திருக்கிறது'.

இதைக் காண்போர் பிபிசியின் நிலைப்பாட்டில் வெளிப்படும் சார்புநிலையை மிகத் தெளிவாக உணர முடியும். படத்தில் ஒலிக்கும் குரல் 57 பேர் உயிரிழந்ததற்கு முஸ்லிம்களைப் பழிசுமத்துகிறது. எந்த ஆதாரமும் இல்லாமல் இப்படி முன்வைப்பதன் மூலம் முஸ்லிம்கள் பாதிப்பை ஏற்படுத்தியோராகவும், இந்துக்கள் பாதிக்கப்பட்டோராகவும் அடையாளப்படுத்தப்படுகின்றனர். இந்தக் கண்ணோட்டத்தை படத்தின் அடுத்தடுத்த பகுதிகளும் உறுதி செய்கின்றன. குஜராத்தில் மூன்று நாள்கள் நீடித்த முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் சுமார் 2000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். அந்தக் குரூரச் சம்பவத்தைதான் `துயரத்தாலும் கோபத்தாலும் வெடித்த' ஒன்று என்கிறது பிபிசி.

இரயிலில் பயணித்தவர்களின் இறப்பு ஒரு முஸ்லிம் குழுவால் நேர்ந்ததாகக் குறிப்பிடுவதன் மூலம் அது திட்டமிட்ட, ஒருங்கிணைந்த முயற்சி என நிறுவும் ஆவணப்படம், முஸ்லிம்கள் மீதான வன்முறை வெறியாட்டம் எதிர்பாரா விதமாகவும் திட்டமிடப்படாமலும் மேலெழுந்ததாகத் தெரிவிக்கிறது. அந்த இடத்தில் பிபிசி 'Erupt ' எனும் சொல்லைக் கையாண்டுள்ளது. ஈருகள் வழியாகப் பற்கள் முளைப்பதுபோல தன்னியல்பாகவும் திட்டமிடப்படாமலும் நடைபெறும் செயல்முறையை இந்தச் சொல் குறிப்பதாய் ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி கூறுகிறது. உண்மையில், குஜராத் படுகொலைகள் தன்னியல்பாகவோ திட்டமிடப்படாமலோ நடைபெறவில்லை என்பது வெள்ளிடைமலை.

இந்த ஆவணப்படம் கோத்ராவில் 57 பேர் இறந்ததற்கு முஸ்லிம்களைக் காரணமாக்குவதும், அந்த நிகழ்வின் விளைவாகவே குஜராத் படுகொலைகள் நிகழ்ந்ததாகக் குறிப்பிடுவதும் தவறானது மட்டுமல்ல, மிகுந்த பக்கச்சார்பானது. இன்னும் சொல்லப்போனால், பாஜக அல்லது இந்து தேசியவாதிகளின் மொழியை ஒத்தது. முன்பொரு சந்தர்ப்பத்தில் குஜராத் சம்பவத்தை நியாயப்படுத்திப் பேசிய நரேந்திர மோடியின் வார்த்தைகள் நினைவுக்குரியவை: `முன்னதாக, (கோத்ராவில்) இந்த ஆட்கள் (முஸ்லிம்கள்) பெண் ஆசிரியைகளைக் கொன்றார்கள். அவர்கள் இந்தக் கொடூரக் குற்றத்தைச் செய்ததற்கான எதிர்வினைதான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது'.

பொதுவாகவே `கோத்ராவுக்குப் பிந்தைய கலவரங்கள்' எனும் பதப்பிரயோகம் மிகப் பரவலாகக் கையாளப்பட்டது. பாஜக மட்டுமின்றி, பெரும்பாலான ஊடகங்கள் இதே கதையாடலைத்தான் வலுவாகக் கட்டமைத்தன. இதன் மூலம், முஸ்லிம்கள் தங்களுக்கு எதிரான வன்முறைக்குத் தாங்களே காரணமாகவும் தொடக்கமாகவும் அமைந்தார்கள் எனும் சித்திரம் ஏற்படுத்தப்பட்டது. 

பிபிசி ஆவணப்படத்தின் இரண்டாவது பகுதி, முஸ்லிம்களை காட்டுமிராண்டித்தனமாய் அடித்துக் கொன்ற இந்துக்களைக் கொலையாளிகள் என்றோ குற்றவாளிகள் என்றோ குறிப்பிடவில்லை. மாறாக, `பசுக் காவலர்கள்' என்கிறது. அவர்களைக் கண்ணியப்படுத்தும் விதமாகவே இந்தச் சொற்பிரயோகத்தை சங்பரிவார சக்திகள் பரவலாக்கின. வரலாற்று ரீதியில் பார்த்தால், இந்தச் சொல் காலனிய இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான `பசுப் பாதுகாப்பு' இயக்கத்தால் பயன்படுத்தப்பட்டது.

இந்தியாவில் நடைபெறும் கும்பல் படுகொலைகள் போன்றவற்றுக்குப் பின்னால் அரசியல்வாதிகளின் ஆதரவு இருப்பதை சரியாகப் பதிவு செய்யும் பிபிசி, அந்த விவகாரத்தை `இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான பகைமை' என்று வர்ணிப்பது தவறானது, தன்முரண்பாடானது.

வன்முறை குறித்த காலனியக் கண்ணோட்டமும் இஸ்லாமிய வெறுப்பும்

இஹ்சான் ஜாஃப்ரி உள்ளிட்ட 69 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட கோர நிகழ்வான குல்பர்க் சொசைட்டி படுகொலை தொடர்பாக மோடியிடம் தனியார் தொலைக்காட்சி கேள்வி எழுப்பியபோது, வினைக்கு எதிர்வினையாக அது அமைந்ததாக அவர் சொன்னார். கொடுமை என்னவென்றால் அதை உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்புப் புலனாய்வுக் குழு(எஸ்ஐடி) அங்கீகரித்தது.

இந்த வினை எதிர்வினை வாதத்துக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரமும் கிடைத்தது. கோத்ரா இரயில் நிலையத்தில் தாக்குதல் நடத்தியதாகக் கூறி பலரை தீவிரவாதத் தடுப்புச் சட்டத்திலும், முஸ்லிம்கள் மீது படுகொலைகளை நிகழ்த்திய குற்றவாளிகள் இந்திய தண்டனைச் சட்டத்தின் அடிப்படையிலும் கையாளப்பட்டனர். இப்படி பாரபட்சம் காட்டுவது, ஒரு சாராரை ஒரு விதமான சட்டங்களைக் கொண்டும், மற்றொரு சாராரை வேறு விதமாகவும் அணுகுவது காலனிய மனஅமைப்பின் வெளிப்பாடே அன்றி வேறில்லை.

சிப்பாய்ப் புரட்சி என்று அழைக்கப்படும் பிரிட்டிஷாருக்கு எதிராக 1857ஆம் ஆண்டு நடைபெற்ற காலனிய எதிர்ப்புப் போர் தோல்வியடைந்த சமயத்தில், கீழைத்தேயவியலாளர் W.W.ஹண்டர் முஸ்லிம்களை `மதவெறியர்கள்' என்று சித்திரித்தார். அவரைப் பொறுத்தவரை, முஸ்லிம்களின் எதிர்ப்புக்குக் காரணம் அவர்களின் மதவெறிதான். காலனியத்துக்குப் பிந்தைய இந்திய அதிகார வர்க்கத்தினர் கீழைத்தேய அறிவை விரும்பியதுடன், அதை அப்படியே உள்வாங்கிக் கொண்டனர். இந்தப் பின்னணியில், `அமைதியான' இந்துக்களால் வன்முறை முன்னெடுக்கப்படுவதற்கு `தற்காப்பு' காரணமே எப்போதும் இருக்கும் என்று அவர்கள் கருதினார்கள்.

9/11க்குப் பிந்தைய சட்ட அரசியலை ஆராயும் மானுடவியலாளர் ஜூலியா எக்கர்ட் கூறுகிறார்: `இந்தியச் சட்டத்தில் இரட்டை நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து அல்லது இருவேறு சட்டங்களைக் கொண்டு முஸ்லிம்களின் போராட்டத்தையும் வன்முறையையும் தீவிரவாதம் என்பதாகவும், இந்துக்களின் வன்முறை `இயல்பான எதிர்வினை' அல்லது எதேச்சையாக வெடித்த ஒன்று என்பதாகவும் தீர்மானிக்கப்படும் சூழல் வளர்ந்து வருவதைக் காண முடிகிறது'.


இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம், இஸ்லாமோஃபோபியா அதிகரித்த பின்னணியில் உருவான தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து பிபிசி ஆவணப்படம் மௌனம் காக்கிறது. 9/11க்குப் பிந்தைய இந்திய, சர்வதேச அரசியல் மாற்றங்களை நாம் அறிவோம். தீவிரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போர் என்று அறிவிக்கப்பட்டதன் பின்னணியில் மோடியின் அரசியல் வளர்ச்சி வேகமெடுத்தது. அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்டபோது, அவர் பாஜக பொதுச் செயலாளராக இருந்தார். அப்போது ஒரு தொலைக்காட்சியில் அவர் இஸ்லாத்தையும் தீவிரவாதத்தையும் தொடர்புபடுத்திப் பேசினார். அவரைப் பொறுத்தவரை, தீவிரவாதம் இஸ்லாத்தில் உள்ளார்ந்து இருப்பதோடு, முழு உலகமும் தீவிரவாதத்தை 1400 ஆண்டுகளாக (நபிகள் நாயகம் காலத்திலிருந்து) பார்த்து வருகிறது என்பது.

பொதுவாக 9/11க்குப் பிறகான அரசியல் இஸ்லாமோஃபோபியாவையும் தீவிரவாதத்தையுமே மையம் கொண்டிருந்தது. மோடியின் அரசியலும் அப்படித்தான். அதை இந்த ஆவணப்படம் பொருட்படுத்தாமல் தவிர்த்திருப்பதற்கு எந்த நியாயமும் இருக்க முடியாது. சொல்லப்போனால், பிபிசியே பெரிய அளவிலும் இஸ்லாமோஃபோபியாவுக்குப் பங்களித்திருக்கிறது என்பது தனிக்கதை. இஸ்லாமிய நம்பிக்கையின் ஒரு பகுதியாக மோசடி இருக்கிறது என்று விஷம் கக்கிய மெலனி பிலிப்ஸ் போன்ற பல இஸ்லாம்  வெறுப்புத் தொழிலாளர்களுக்கு பிபிசி மேடை அமைத்துக் கொடுத்திருக்கிறது.

மோடி பிரதமராவதற்கு முன்பு, சரியாக 2014 ஏப்ரலில், பிபிசி ரேடியோ 4 தொகுப்பாளர் ரிதுலா ஷா மோடியை `கவர்ந்திழுப்பவர்' என்று வர்ணித்தார். 2014 தேர்தல் பேரணி குறித்து அவர் பேசுகையில், `நரேந்திர மோடி வசீகரமான பேச்சாளர். அண்மையில் டெல்லியில் அவர் கலந்துகொண்ட பேரணியில் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருந்ததோடு, அகண்ட மார்பைக் கொண்ட அந்த மனிதரால் அவர்கள் கிட்டத்தட்ட மெய்மறந்து போயினர்' என்று குறிப்பிட்டார்.

ரிதுலா ஷா நேயர்களிடம் சொல்லாமல் தவிர்த்த செய்தி என்னவென்றால், மோடியின் பேச்சில் முழுக்க முழுக்க இஸ்லாமிய வெறுப்பு தோய்ந்திருந்தது என்பதையும், அந்தப் பேச்சைக் கேட்டு பார்வையாளர்களிடையே அமர்ந்திருந்த இளம்பெண் முஸ்லிம்களைக் கெட்ட வார்த்தையில் திட்டி, அவர்களைக் கொல்லுங்கள் என்று  கொக்கரித்ததையும்தான்.

பிபிசியின் ஆவணப்படத்தில் சில முக்கியமான விஷயங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்பதை நாம் மறுப்பதற்கில்லை. குஜராத் படுகொலைகள் குறித்த பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அறிக்கையைச் சுட்டிக்காட்டி பிரிட்டனின் முன்னாள் வெளியுறவுத்துறைச் செயலர் ஜாக் ஸ்ட்ரா: `காவல்துறையைப் பின்னுக்கு இழுப்பதிலும், இந்துத் தீவிரவாதிகளை மறைமுகமாக ஊக்குவிப்பதிலும் முதல்வர் மோடி மிகவும் தீவிரமாகப் பங்காற்றியுள்ளார் என்பது அவர் மீதான கடும் குற்றச்சாட்டுகளாகும்'. இப்படிச் சொல்லும் அவர், `நாங்கள் இந்தியா உடனான அரசாங்க உறவை முறிக்கப்போவதில்லை' என்றும் கூறுகிறார். ஜாக் ஸ்ட்ராவின் முந்தைய கருத்தை பிந்தையது அர்த்தமற்றதாய் ஆக்கிவிடுகிறது. ஆக, ஆவணப்படம் எதிர்காலம் குறித்தும் நமக்கு எந்த நம்பிக்கையையும் தரவில்லை.

படத்தின் இறுதிப் பகுதியில் இரு கல்வியாளர்கள் நேர்காணல் செய்யப்பட்டுள்ளார்கள். சீனாவை எதிர்ப்பதற்கு இந்தியாவுடனான உறவு மேற்குலகுக்குத் தேவை என்பதால், இந்தியாவில் அரங்கேறி வரும் முஸ்லிம்களுக்கு எதிரான செயல்பாடுகள் பற்றி மேற்குலகம் காத்திரமாகக் குரலெழுப்புவது சாத்தியமற்ற ஒன்று என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள். மேற்குலகின் இந்தச் சார்பு நிலை சற்றும் வியப்புக்குரியதன்று.

பிபிசி வெளியிட்ட இந்த ஆவணப்படத்தை இன்னும் விமர்சனபூர்வமாக அணுகுவதுடன், குஜராத் படுகொலையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் நிலையிலிருந்து அதைத் தொடர்ச்சியாகவும், அழுத்தமாகவும் பதிவு செய்துகொண்டே இருப்பது நீதியின் மீதும், அறத்தின் மீதும் பற்று கொண்ட அனைவரின் கடமையாகும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்