மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • அன்பிற்குரிய சமரசத்தின் டிஜிட்டல் வாசகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு:
  • இதுநாள் வரைக்கும் சமரசத்தின் இணையத்தில் முற்றிலும் இலவசமாக நீங்கள் வாசித்து வந்தீர்கள். ஆனால் வருகின்ற ஏப்ரல் மாதத்திலிருந்து டிஜிட்டல் வாசிப்பிற்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய சமரசம் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. விவரங்கள் விரைவாய் அறிவிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்.
  • ஆகவே, இன்றுபோல் என்றும் ஒத்துழைப்பு வழங்க அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

முழுமை இஸ்லாம்

அஸ்ஸாம்: நிரம்பிவழியும் சிறைச்சாலைகள்..!
கப்ளிசேட், , 16-31 மார்ச் 2023


இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் ’குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்' என்ற சட்டத்தின் மூலம் முஸ்லிம்களின் மீதான பழிவாங்கலைத் தொடங்கியிருக்கிறது பா.ஜ.கவின் ஹேமந்த் பிஸ்வா சர்மா அரசு. பெண்ணோ, ஆணோ பருவமடைந்ததும் திருமணம் செய்துகொள்ள அவர்களின் உடல் தயாராகிவிடுவதுபோல மனமும் தயாராகிவிடுகிறது என்பது உடற்கூறியல் ஆய்வாளர்கள் சொல்லும் கருத்தாகும். இதனை கருத்தில் கொண்டே எக்காலத்திற்கும் பொருத்தமான சட்டங்களை வழங்கியுள்ள திருக்குர்ஆன் பருவமடைந்த பெண்ணிற்கோ, ஆணிற்கோ திருமணம் செய்யலாம் என்று உரைக்கிறது.

இந்தியாவில் முஸ்லிம்களுக்குத் தனி சிவில் சட்டம்(Muhammadan Law) திருமணம், விவாகரத்து, வாரிசுகள், சொத்துகள், வக்ஃபுகள் என சிலவற்றை தனிச் சட்டமாக அரசியலமைப்பு அங்கீகரிக்கிறது. இதில் அஸ்ஸாமில் இயற்றப்பட்ட ’குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்' முஸ்லிம்களையும், இன்னும் சில சிறுபான்மையினரையும் கட்டுப்படுத்த முடியாது. ஆகவே இந்தச் சட்டம் மூலம் முஸ்லிம்களைக் கைது செய்வது அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள தனிப்பட்ட உரிமையை மீறுவதும், பறிப்பதும் ஆகும். வரும் தேர்தல்களில் முஸ்லிம்களின் வாக்குவங்கி பா.ஜ.கவின் அதிகாரத்தை அஸ்ஸாமில் காலி செய்துவிடும் என்ற பயத்தில் பா.ஜ.க அரசு இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி இந்த இரண்டு, மூன்று வாரங்களில் ஏறக்குறைய 3000 நபர்களைக் கைது செய்திருக்கிறது. குறிப்பாக இதில் 90% முஸ்லிம்களே பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

குறிப்பாக இளம் பெண்களின் பெற்றோர்கள், திருமணம் செய்துவைத்த குடும்பப் பெரியவர்கள், ஆலிம்கள் ஆகியோரைக் கைது செய்திருக்கிறார்கள். கணவர்களைக் கைது செய்துவிட்டதால் பெண்கள் வருமானமின்றி கைக் குழந்தைகளோடு சாலைகளில் இறங்கிப் போராடும் காட்சிகள் மனதைக் கனக்கச் செய்கிறது. அஸ்ஸாமில் வாழும் முஸ்லிம்கள் இந்த நாடும், சக முஸ்லிம்களும் தங்களைக் கைவிட்டு விட்டதாகவே எண்ணுகின்றனர். அவர்கள் அரசின் அடக்குமுறைக்குப் பயந்து தங்கள் உயிர்களை மாய்த்துக் கொள்ளத் தொடங்கியிருப்பது ஜனநாயகத்தின் மிகப் பெரிய அவமானமாகும். அரசியல் கட்சிகளோ, சமூக அமைப்புகளோ தங்களைக் காக்காதபோது, இந்திய நீதிமன்றங்களாவது தங்களுக்கு நீதி வழங்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது நீதிமன்றங்கள் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

அஸ்ஸாமில் உள்ள சிறைகள் மிகவும் இடவசதி குறைந்தவைகளாகும். ஒரே நேரத்தில் திடீரென செய்யப்படும் கைதுகளால் சிறைகளில் இடமில்லாமல் சிறைத்துறையே குழப்பத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகின்றன. தற்காலிகச் சிறைகளைத் திறக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. அஸ்ஸாம் அரசின் இந்தத் திடீர் கைது நடவடிக்கைகளால் மக்கள் மிகுந்த அச்ச உணர்வுடன் உள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கல்விஅறிவு குறைந்த, வறுமையில் வாடும் எளிய மக்களாய் உள்ளனர்.

கைது செய்யப்பட்ட தங்கள் குடும்பத்தினர்கள் எந்தச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், எப்போது விடுதலை ஆவார்கள் என்பதையறியாமல் அவர்கள் மிகுந்த மனநெருக்கடியில் உள்ளனர். துப்ரி மாவட்டத்திலுள்ள ராம்ராய்க்குடி கிராமத்தைச் சேர்ந்த அய்னாபீவி என்ற பெண் தனது மருமகன்களைக் கைது செய்வதைத் தடுக்க முடியாமல் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். 18 வயதுக்குக் கீழுள்ள பெண்களைத் திருமணம் செய்த ஆண்களைக் கைது செய்ய அவர்கள் வீட்டிற்குச் செல்லும் போலீஸார் பெண்களின் வயது சான்றிதழைக் கேட்கின்றனர்.

வயது சான்றிதழ் இல்லாதவர்களை மிக எளிதாகவும், வயது சான்றிதழ் கொடுப்பவர்களையும் கண்டுகொள்ளாமல் இது சட்டவிரோதத் திருமணம் என்றுகூறி கைது செய்து அழைத்துச் செல்லும்போது கல்வியறிவு இல்லாதவர்களாகவும், வறுமையில் வாடுபவர்களாகவும் உள்ள மக்கள் போலீஸுக்குப் பயந்து உடன் செல்கின்றனர். எதிர்த்து கேள்வி கேட்பவர்களை குடும்பத்தினர் முன்னிலையிலேயே அடித்து, உதைத்து இழுத்துச் செல்லும் அவலங்களும் அரங்கேறி வருகிறது. இந்தச் செய்திகள் பெரும்பாலான ஊடகங்களில் வெளியாகவில்லை. சமூக ஊடகங்கள் மூலமாகவே செய்திகள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள 31 மாவட்டங்களில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பிஸ்வநாத், பார்பேடா, பக்சா, துப்ரி, ஹோஜாய், போங்காய்கான், நாகோன் போன்ற ஏழு மாவட்டங்களில் மட்டும் ’குழந்தைத் திருமணத் தடுப்பு' என்ற பெயரிலான கைதுகள் குறிப்பாக முஸ்லிம்களைக் குறிவைத்தும், அங்கொன்றும், இங்கொன்றுமாக பிற சமூக மக்களின் கைதுகளும் தொடர்கின்றன. அஸ்ஸாமில் வங்காள வம்சாவளியைச் சேர்ந்த மக்கள் பரவலாக வாழ்கின்றனர். அவர்களை ’வந்தேறிகள்' என ஒதுக்கவும், வரும் 2026 சட்டசபைத் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்கு வங்கியைச் சிதைப்பதற்கும் இது போன்ற சட்டங்களைத் திடீரென நடைமுறைப்படுத்தி குறிப்பாக முஸ்லிம்களை அச்சுறுத்துவதாக கல்வியாளர்கள், மூத்த பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து கூறியுள்ளனர்.

திருமணம் செய்துவைத்த பெற்றோர்கள், மௌலவிகள் என இதுவரை 8100 நபர்களின் மீது போலீஸில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 14 வயதிற்குக் கீழுள்ள பெண்களைத் திருமணம் செய்த ஆண்கள் மீது குழந்தைகளை பாலியல் தொந்தரவுகளிலிருந்து பாதுகாக்கும் கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டு, ஜாமீனில் வெளிவரமுடியாத ஏழு ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை தண்டனைகள் விதிக்கும் சட்டப் பிரிவு, போக்ஸோ சட்டப்பிரிவுகளைப் பயன்படுத்துவது எவ்வளவு ஆபத்தான போக்கு என்பதை நாம் அனைவரும் புரிய வேண்டும். அஸ்ஸாம் முதல்வர் ஹேமந் பிஸ்வா சர்மா இந்தக் கைது நடவடிக்கைகளை ’குழந்தைத் திருமணத்திற்கு எதிரான போர்' என்று பிரகடனப்படுத்துகிறார். குறிப்பாக வங்காள முஸ்லிம்களைக் குறிவைத்து கைது செய்வதையும், முஸ்லிம்களுக்கு அரசியல மைப்புச் சட்டம் வழங்கியுள்ள தனிச் சட்ட திருமண உரிமைகள் இருக்கும்போது இந்தச் சட்டம் முரண்படுவதையும் சுட்டிக் காட்டி கல்வியாளர்களும் பத்திரிகையாளர்களும் கேள்வி எழுப்புகின்றனர்.

அஸ்ஸாமில் துப்ரி மாவட்டத்தில் வசிக்கும் கலீதுல் ரஷீத் பேசத் தொடங்கும்போதே உடைந்து போய் அழுதுகொண்டே கூறுகிறார். அவரின் மகள் குல்சூம்கான் கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். பருவமடைந்து 14 வயதில் திருமணம் செய்துகொண்ட அவர் கோவிட் 19இல் அவரது கணவர் இறந்தபோது தனது இரண்டு குழந்தைகளோடு தனது பெற்றோர் வீட்டில் குடியேறினார். இது போன்ற கைது நடவடிக்கைகளையறிந்த அவர் தனது தந்தையிடம் தனது வயது சான்றிதழையும், திருமணச் சான்றிதழையும் கேட்டார். கணவன் இறந்து விட்டதால் அது தேவையில்லை என்று தந்தை கூறியதால் பதற்றமாகவே இருந்த அவர், தனது பெற்றோரை போலீஸார் கைது செய்துவிடுவார்கள் எனப் பயந்து தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.

சமூக ஆர்வலர் கலாம் கூறுகையில் ’முஸ்லிம் சமூகம் மிகவும் பிளவுபட்டுள்ளது. ஆகவே இவர்களை எதிர்த்துக் கேட்க நாதியில்லை' என்று கூறுகிறார். பாதிக்கப்பட்ட எட்டு பெண்களுக்கு ஆதரவாகப் போராடும் வழக்கறிஞர் மசூத் ஜமான் கூறுகையில், கல்வியறிவு இல்லாத வறுமைக் கோட்டில் வாழும் மக்களே அதிகம் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்களின் பிரச்னையை முன்வைத்து சமூகப் பிரச்னைகளை வகுப்புவாத பிரச்னைகளாக மாற்றி முஸ்லிம்களை அச்சப்படுத்தவே பா.ஜ.க இதனை ஆயுதமாகப் பயன்படுத்துவதாகக் குற்றம்சாட்டுகின்றார்.

முக்கியமாக பழங்குடி சமூகங்கள் வசிக்கும் மஜுலியில் ஒரேநாளில் 24 முஸ்லிம் அல்லாத மக்களுக்கு ஜாமீன் கிடைத்தது. ஆனால் அதுபோல குற்றம்சாட்டப்பட்ட முஸ்லிம்களுக்கும் அது போலவே வாதிட்டோம். ஆனால் ஜாமீன் பெற முடியவில்லை என்பதை வேதனையோடு குறிப்பிட்டுள்ளார். மஜுலியில் மாவட்ட நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் உத்தரவுகளின் நகலொன்றை BBC பார்வையிட்டது. அதில் ’தெளிவற்ற, போதிய காரணங்கள் இல்லாமல் கைதுகள் செய்யப்பட்டிருப்பதாக இருப்பது, போலீஸாரின் அராஜக நடவடிக்கைகளை அறியமுடிகிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி அளிப்பதாகக் கூறுவது அரசாங்கத்தின் உணர்ச்சியற்ற, மரத்துப் போன செயல்பாடு என்றும், கணவன் மனைவி பிரிதலை அது எப்படி நியாயப்படுத்தும் என்றும் வழக்கறிஞர் ஜமான் கேள்வி எழுப்புகிறார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதுருதீன் அஜ்மல் கூறும்போது அஸ்ஸாமில் 31 விழுக்காடு பெண்கள் 18 வயதிற்கு முன்பே திருமணம் செய்து இன்று கணவன், குழந்தைகளோடு வாழ்ந்து வருபவர்களாவர். இதில் 90 விழுக்காட்டினர் முஸ்லிம்கள். முதல்வரின் உத்தரவுப்படி, இவர்களைக் கைது செய்து சிறையில் அடைப்பதே அவசரப் பணிபோல கைது செய்யும் காவல்துறை, இவர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைப்பதால் என்ன பலன் என்று கேள்வி எழுப்புகிறார். இதனால் ஏற்படும் சமூகப் பதற்றத்தைச் சுட்டிக் காட்டும் பதுருதீன் அஜ்மல் ’ஆண்களைக் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டு பெண்களையும், குழந்தைகளையும் அநாதைகளாகத் தெருவில் உலவவிடப் போகிறதா இந்த அரசு?' என கேள்வி எழுப்புவதோடு, மனிதநேயமற்ற இந்த நடைமுறைகளை வன்மையாகக் கண்டிக்கிறார். இவற்றையெல்லாம் கண்டுகொள்ளவே அரசாங்கம் தயாரில்லை.

’பருவமடைந்து 14 வயதில் திருமணம் செய்தவர்கள் இன்று 18 வயதைத் தாண்டியவர்களாக வாழும்போது அவர்களின் செயல்களுக்காக முன் தேதியிலிருந்து கைது செய்வது எப்படி நியாயமாகும்?' என்று பொது சமூகத்தினர் ஒட்டுமொத்தமாகக் கேள்வி எழுப்புகின்றனர். ஆனாலும் வழக்கம்போல ஃபாசிஸ ஆட்சியாளர்களின் காதுகளில் விழாமல், அவற்றைக் கண்டுகொள்ளாமல் அவர்கள் தங்களின் செயல்களிலேயே கவனமாக இருப்பது ஜனநாயக விரோதமாகும். இதில் சட்டம் இயற்றுவதற்கு முன்பே திருமணம் செய்தவர்களையும் கைது செய்திருப்பது காழ்ப்பு உணர்வையே காட்டுகிறது. இது போன்ற கைதுகளை தினமும் மகிழ்ச்சியுடன் அரசாங்கம் ஊடகங்களில் பகிர்ந்து வருகிறது. இது போன்ற அச்சுறுத்தல்கள் மக்களை விழிப்படையச் செய்யும் என்று காரணம் கூறுவது மக்களை மனரீதியாக அச்சுறுத்தும் ஃபாசிஸ எதேச்சதிகாரமாகும்.

பருவமடைந்தவுடன் திருமணம் செய்கிற உரிமைகளைப் பெற்று இருந்தாலும், இது போன்ற சிறுவயதுத் திருமணங்கள் நடைபெறுவதற்குப் பல காரணங்களைச் சமூக ஆர்வலர்கள் பதிவு செய்கின்றனர். கல்வியறிவு இல்லாமை, வறுமை, சமூகப் பாதுகாப்பில்லாமை, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்துவைத்து தங்கள் கடமைகளை முடித்துவிடும் மனநிலை என்று பல பொதுக் காரணங்களைப் பரவலாக அறியமுடிகிறது. பிற பிரிவினரை விட அதிகமாக பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்கள், முஸ்லிம்கள் இடையே சிறுவயதுத் திருமணங்கள் அதிகம் நடைபெறுவதற்கு சமூகப் பொருளாதாரம் சார்ந்த பிரச்னைகளே காரணமாக இருக்கிறது. பா.ஜ.க அரசு மதரஸாக்களை மூடவும், புல்டோசர் வைத்து இடிக்கவும் செய்தது. இதனால் ஏழ்மை நிலையிலிருந்த முஸ்லிம் பெண் குழந்தைகள் கல்வி கற்பதும், விழிப்பு உணர்வு பெறுவதும் தடைபட்டதால் பெண் குழந்தைகளின் கல்விச் சூழல் சிதைந்து போனது. பெண் குழந்தைகளின் கல்வி கற்கும் விகிதமும் மிகவும் குறைந்து போனது.

கைது நடவடிக்கைகளை நிறுத்தி விட்டு பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்கள், முஸ்லிம்களின் குறிப்பாக பெண் குழந்தைகளின் கல்வியில் ஆளும் பா.ஜ.க அரசு கவனம் செலுத்த வேண்டும். இந்த எளிய மக்களின் சமூகப் பாதுகாப்பிற்கான திட்டமிடல்களைச் செய்ய வேண்டும். இவர்களின் பொருளாதாரம் மேம்பட தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். தொடர்ந்து விழிப்பு உணர்வு பரப்புரைகளைச் செய்து மக்களின் மனநிலையை அச்சமற்றதாக உருவாக்க வேண்டும்.

தேர்தலுக்கான வியூகமாக முஸ்லிம்களைச் சிதைக்க வேண்டும் என்ற மனநிலையை மாற்றி வளர்ச்சி, சமூகப் பாதுகாப்பு, அனைத்து மத மக்களுக்குமான சமஉரிமை, சமூகநீதி, ஜனநாயகம் போன்ற உயர்ந்த மாண்புகளை ஒன்றிய அரசும், பா.ஜ.க ஆளும் மாநில அரசுகளும் கடைப்பிடித்தால் மக்களைப் பிளவுபடுத்தி அடையும் அரசியல் ஆதாயங்களை விட, மக்களை ஒன்றுபடுத்தி அதிக ஆதாயங்களை அடையலாம் என்பது பொது ஆர்வலர்களின், அறிவுஜீவிகளின், நடுநிலை ஊடகவியலாளர்களின் கருத்தாக இருக்கிறது. இது அஸ்ஸாமிற்கு மட்டுமல்ல முழு இந்தியாவிற்குமான கருத்தாகும். 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்