மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • அன்பிற்குரிய சமரசத்தின் டிஜிட்டல் வாசகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு:
  • இதுநாள் வரைக்கும் சமரசத்தின் இணையத்தில் முற்றிலும் இலவசமாக நீங்கள் வாசித்து வந்தீர்கள். ஆனால் வருகின்ற ஏப்ரல் மாதத்திலிருந்து டிஜிட்டல் வாசிப்பிற்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய சமரசம் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. விவரங்கள் விரைவாய் அறிவிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்.
  • ஆகவே, இன்றுபோல் என்றும் ஒத்துழைப்பு வழங்க அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

முழுமை இஸ்லாம்

ரமளான் நமக்குப் பயனளிக்கட்டும்!
அஷ்ஷெய்க் ஏ.சி.அகார் முஹம்மது, , 16-31 மார்ச் 2023


 

ரமளான் என்பது மறுமை வியாபாரிகளின் பருவ காலம் (Season). பருவ காலத்தில் உலக வியாபாரிகள் எப்படி மும்முரமாக, முழு மூச்சாக வியாபாரத்தில் ஈடுபடுவார்கள் என்பதை நாம் நன்கு அறிவோம். அதே போன்றுதான் முஃமின்கள் ரமளானில் மறுமை வியாபாரத்தில் முனைப்புடன் ஈடுபட வேண்டும்.

ரமளானுக்குத் தயாராகும் வகையில் அவசர அவசரமாக மனிதர்களுடனான உறவுகளைச் சீர்செய்து கொள்ள வேண்டும். எவருடனும் பகைமை இருக்கும் நிலையில், சண்டை சச்சரவுகள் நிலவும் நிலையில், முரண்பாடுகளும் மோதல்களும் காணப்படும் நிலையில் ரமளானை நாம் சந்திக்கலாகாது. வெறுப்பு, கோபம், அதிருப்தி, பகைமை, பொறாமை, தப்பெண்ணம் முதலான அசுத்தங்களைக் களைந்து சுத்தமான உள்ளத்தோடு ரமளானைச் சந்திக்க வகைசெய்வோம்.

வெறும் வாயும் வயிறும் நோன்பு நோற்கும் ரமளானாக மட்டுமன்றி நாவு, கண்கள், காதுகள் உட்பட எல்லா உறுப்புகளும் நோன்பு நோற்கின்ற ரமளானாக இந்த ரமளான் அமைய வேண்டும் என்பதை உத்தரவாதப்படுத்துவோம். இந்த வகையில் பொய், புறம் பேசுவதில்லை; கோள் சொல்லுவதில்லை; தர்க்க, குதர்க்கங்களில் ஈடுபடுவதில்லை; சண்டை, சச்சரவுகளில் ஈடுபடுவதில்லை; யாருடைய உள்ளத்தையும் நோவினைப் படுத்துவதில்லை; புண்படுத்துவதில்லை; வீண் பேச்சுகள் பேசுவதில்லை; வீணாண காரியங்களில் பங்கேற்பதில்லை; அரட்டை அடிப்பதில்லை; வீணாக இரவில் விழித்திருப்பதில்லை; பகலில் அதிகம் தூங்குவதில்லை; மொத்தத்தில் நோன்பின் பயனைக் கெடுக்கும் எந்தவொரு செயலிலும் ஈடுபடுவதில்லை என்று உறுதி பூணுவோம்.

குறிப்பாக ரமளான் படைப்புகளுடனான உறவைக் குறைத்து படைப்பாளனுடனான உறவைக் கூட்டிக்கொள்ள வேண்டிய ஒரு காலம் என்ற வகையில் தொலைக்காட்சி, வானொலி, தொலைப்பேசி, சமூக வலைதளங்கள் முதலானவற்றுடனான தொடர்பை அறுத்துக் கொள்வோம்; குறைந்தபட்சம் குறைத்துக் கொள்வோம். தவிர்க்க முடியாத நிலையில் அத்தியாவசியத் தேவைகளுக்காகவும், ஆன்மிகத் தேவைகளுக்காகவும் மாத்திரம் மிகக் கவனமாக இவற்றைப் பயன்படுத்துவோம்.

மேலும் நல்லோர் வழிநின்ற நமது முன்னோர்கள் ரமளான் வந்து விட்டால் தமது முழு கவனத்தையும் திருக்குர்ஆனில் குவிப்பார்கள்.

இமாம்களான ஸுஹ்ரி, ஸுப்யானுஸ் ஸவ்ரி(ரஹ்) போன்ற ஹதீஸ்துறை அறிஞர்கள் ரமளான் வந்து விட்டால் அவர்களது ஹதீஸ் வகுப்புகளை இடைநிறுத்தி விட்டு முழுமையாக குர்ஆனின் பக்கம் திரும்பி விடுவார்கள். நாமும் இந்த ரமளானில் திருக்குர்ஆன் திலாவத்தை நமது முதல் தர அமலாக அமைத்துக் கொள்வோம். பலமுறை திருக்குர்ஆனை ஓதிமுடிக்க முயற்சி செய்வோம். குறைந்தபட்சம் ஒவ்வொரு நாளும் ஓரிரு ஜுஸ்ஊக்களையாவது (பாகம்) ஓதுவோம். ஒவ்வொரு நாளும் அதன் சில வசனங்களையாவது கற்க முயல்வோம்.

திருக்குர்ஆனை திருத்தமாக ஓதக் கற்றுக்கொள்ள ரமளான் காலம் மிகவும் பொருத்தமானது. அவ்வாறே திருக்குர்ஆனின் சில அத்தியாயங்களையாவது இந்த ரமளானில் மனனமிட உறுதிகொள்வோம்.

’யார் ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகின்றாரோ, அவர் முன்செய்த பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும்' என்ற நபிமொழியை மனதிற்கொண்டு, ஐங்காலத் தொழுகைகளை ஜமாஅத்தோடு(கூட்டாகத்) தொழுவதோடு, முன் பின் ஸுன்னத்தான தொழுகைகளையும் நிறைவேற்றுவோம். ழுஹா, தராவீஹ், கியாமுல் லைல், வித்ர் முதலான தொழுகைகளையும் தவறாது தொழுது வருவோம்.

அவ்வாறே காலை, மாலை திக்ருகளை ஓதுவதோடு துஆ, தவ்பா, இஸ்திஃபார் முதலானவற்றில் அதிகம் ஈடுபடுவோம். நபி(ஸல்) அவர்கள் ரமளானில் வேகமாக வீசும் காற்றை விட அதிகமாக அள்ளி, அள்ளிக் கொடுப்பார்கள்; தர்மம் செய்வார்கள். எனவே நாமும் ஜகாத், ஸதகா, ஹதிய்யா என்று எல்லா வழிகளிலும் வகைகளிலும் தர்மம் செய்வோம்; உற்றார் உறவினர்கள், அண்டை அயலவர்கள், ஏழை எளியவர்கள் என எல்லோருக்கும் உதவுவோம். ஸதகா செய்யாத நிலையில் இந்த ரமளானில் ஒருநாள்கூட கழியாமல் இருக்கட்டும்.

எதிர்வரும் ரமளானை வினைத்திறனும் விளைத்திறனும் கொண்ட, எல்லா வகையிலும் பயன்மிக்க ரமளானாக அமைத்துக் கொள்ள நமது தினசரி செயற்பாடுகளுக்கான ஒரு கால அட்டவணையை(Time Table) தயார் செய்து கொள்வோம்.

ரமளான் தஸ்கியத்துன் நஃப்ஸ் எனும் உளத்தூய்மையை இலக்காகக் கொண்ட மாதம். ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்தி, போஷித்து வளர்க்கும் மாதம். ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி மேம்படுத்த நான்கு வழிகள் உண்டு; அந்த நான்கையும் நிறைவாகக் கடைப்பிடிக்கும் வாய்ப்பை ரமளான் நமக்குத் தருகிறது. அவற்றில் முதலாவது பசித்திருத்தல். ரமளானில் பகல்பொழுது முழுவதும் பசித்திருக்கின்றோம். உணவுக் கட்டுப்பாடு உடல், உள ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது என எற்றுக்கொள்ளாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

குறிப்பாக ஆன்மாவின் மேம்பாட்டிற்கும் உணவுக் கட்டுப்பாட்டுக்கும் இடையிலே நெருங்கிய தொடர்பு இருக்கிறது. உண்மையான இறையடியார்கள் பசியில்லாமல் சாப்பிடுவதில்லை. சாப்பிடும்போதும் வயிறு நிறையச் சாப்பிடுவதில்லை. ’உண்ணுங்கள் பருகுங்கள் விரயம் செய்யாதீர்கள்' என்பது அல்லாஹ்வின் கட்டளை. இங்கு விரயம் செய்வதென்பது மிதமிஞ்சி, வயிறு புடைக்க உணவு உட்கொள்வதையும் குறிக்கும்.

ஒருவர் தனது முதுகெலும்பை நிமிர்த்தி நிற்கும் அளவிற்கான உணவை உட்கொள்வதே போதுமானதாகும். அவர் சாப்பிடுவதாக இருந்தால் ஒரு பகுதியை உணவிற்கும், மற்றொரு பகுதியை தண்ணீருக்கும், எஞ்சிய மூன்றாவது பகுதியை மூச்சுக்கும் விட்டுவிடட்டும் என்பது நபியவர்களின் வழிகாட்டல்.

உணவுக் கட்டுப்பாட்டைப் பேணாமல் வயிறு நிறையச் சாப்பிடுகின்ற காரணத்தால் ஆன்மாவிற்கு ஏற்படும் ஆபத்துகளை நமது ஆரம்பகால இமாம்கள் அற்புதமாக விளக்கியிருக்கிறார்கள். மிதமிஞ்சிய உணவு வணக்க வழிபாடுகளில் காணப்படும் ருசியைக் கெடுத்துவிடும். அறிவுத் தேடலை பாதிக்கும். உள்ளத்திலே இரக்கக் குணத்தைப் போக்கிவிடும். வணக்க வழிபாடுகளைச் சுமையாக மாற்றிவிடும். ஆசாபாசங்களைத் தீவிரமடையச் செய்யும் என்று எச்சரித்துள்ளார்கள் அபூ சுலைமான் அத்தாரானி(ரஹ்).

இமாம் ஷாஃபிஈ(ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள்: ’நான் பதினாறு ஆண்டுகளாக வயிறு நிறையச் சாப்பிட்டதே இல்லை'. ஏனெனில் வயிறு நிறையச் சாப்பிடுகின்ற காரணத்தால் உடல் ஒரு சுமையாக மாறுகின்றது. உள்ளம் மென்மையை இழந்து வன்மை அடைகின்றது. புத்திகெட்டுப் போகின்றது. தூக்கம் மிகைக்கின்றது. வாயைக் கட்டுப்படுத்தி உணவைக் குறைத்துக் கொள்பவர்கள் அடையும் நன்மைகள் பல. ஒருவர் அதிகம் உணவு உட்கொள்வதைத் தவிர்த்தால் உள்ளம் தெளிவடையும்; விழிப்புடன் இருக்கும்; மேன்மை அடையும்; கர்வம் குறையும்; பாவங்களில் மோகம் இல்லாமல் போகும்; உள்ளத்தின் ஆசாபாசங்களை அடக்கி ஆளும் வல்லமை உண்டாகும்; தூக்கம் குறையும்; சுறுசுறுப்பு உண்டாகும்; வணக்க வழிபாடுகளில் ஆர்வம் மிகைக்கும்.

எனவே ஏக காலத்தில் உடல் ஆரோக்கியத்திற்கும் ஆன்மாவின் மேம்பாட்டிற்கும் பெருந்துணையாக அமைகின்ற உணவுக் கட்டுப்பாட்டைப் பேணுவதற்கும், அதற்கான பயிற்சியைப் பெற்றுக்கொள்வதற்குமான அற்புதமான வாய்ப்பை ரமளான் நமக்குத் தருகிறது. இஃப்தார், ஸஹர் நேரங்களில் மிதமிஞ்சி வயிறு புடைக்கச் சாப்பிடுகின்ற போது, பகல் வேளையில் பசித்திருந்து பெற்ற நன்மைகளையும் பலன்களையும் இழந்து விடுகிறோம் என்பதனை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.

நோன்பு நோற்பதால் உலகியல் சார்ந்து பல நன்மைகள் கிடைப்பது உண்மையாக இருந்தாலும், நாம் நோன்பு நோற்பது இறைவனின் கட்டளையை நிறைவேற்ற வேண்டும்; அதன் மூலம் இறைவனின் திருப்தியைப் பெறவேண்டும் என்பதுவே முதன்மையான இலக்கு. இந்த ரமளான் நாம் அர்த்தமுள்ள வகையில் பசித்திருந்து, ஆரோக்கியம் பேணிய ரமளானாக அமையட்டும். இந்தப் பயிற்சி ரமளானுக்குப் பிறகும் நமக்குப் பயனளிக்கட்டும்.

மிக முக்கியமாக ரமளானை அடைந்தும் அதில் பாவமன்னிப்பைப் பெறத் தவறிய துர்பாக்கியவான்களாக நானோ நீங்களோ ஆகிவிடக் கூடாது.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்