அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் 11.7.22 அன்று நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது. இது எடப்பாடி பழனிச்சாமியின் கைகளை வலுப்படுத்தியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்தத் தீர்ப்பு எதிர்பார்த்ததுதான். பொதுக்குழு உறுப்பினர்களில் 90 விழுக்காடு உறுப்பினர்களின் ஆதரவையும், 66 சட்டமன்ற உறுப்பினர்களில் 62 பேரின் ஆதரவையும், 75 மாவட்டச் செயலாளர்களில் 70 பேரின் ஆதரவைப் பெற்றிருக்கும் அவருக்கு எதிராகத் தீர்ப்பு வருவதற்கு வாய்ப்பில்லை.
ஜெயலலிதா சிறைக்குச் சென்றபோது முதல்வராகப் பொறுப்பு வகித்த ஓ.பன்னீர் செல்வத்தின் கை வீழ்ந்துள்ளது. சசிகலா சிறைக்குப் போனபோது, முதல்வர் பொறுப்புக்கு வந்த எடப்பாடியின் கை ஓங்கியுள்ளது.
எடப்பாடியின் எழுச்சி, பன்னீர் செல்வத்தின் வீழ்ச்சி
ஜெயலலிதா மரணமடைந்தவுடன் இரவோடு இரவாக முதல்வராகப் பொறுப்பேற்ற ஓ.பன்னீர் செல்வம், சசிகலாவின் நம்பிக்கையை இழந்த காரணத்தால் பதவி விலக வேண்டியதாயிற்று. அப்போது கூவத்தூரில் முகாமிட்டிருந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி சசிகலாவை சட்டமன்ற கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர் (அதாவது முதல்வராக).
ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கின் மீதான தீர்ப்பின் தேதியை அப்போது உச்சநீதிமன்றம் அறிவித்ததால் சசிகலாவுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் காலதாமதம் செய்தார். உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்தது. சசிகலா நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். எனவே அவரது முதல்வர் கனவு கானல் நீராகிப் போனது. அடுத்து யார் முதல்வராக வருவார் என்ற கேள்வி எழுந்தபோது, செங்கோட்டையன்தான் அனைவரின் நினைவிற்கும் வந்தார்.
ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக சசிகலா, எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை முன்மொழிய அவர் அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சசிகலா சிறைக்குச் சென்றார். எடப்பாடி முதல்வராகக் கோட்டைக்குச் சென்றார். அப்போது அவருக்கு டி.டி.வி.தினகரன் ஆதரவும் இருந்தது.
சசிகலாவால் பழிவாங்கப்பட்ட பன்னீர்செல்வம் ஜெயலலிதா சமாதியில் சில மணி நேரம் தியானம் செய்த பிறகு தான் தர்ம யுத்தம் தொடங்கப் போவதாக அறிவித்தார். அவருக்கு கே.பி.முனுசாமி, பாண்டியராஜன் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டமன்றத்தில் எடப்பாடி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியபோது பன்னீர் செல்வம் அணியைச் சார்ந்த 11 சட்டமன்ற உறுப்பினர்களும் அதற்கு எதிராக வாக்களித்தனர். எனினும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி வெற்றி பெற்றார்.
சில நாள்களிலேயே ஜெயலலிதா மரணம் காரணமாக ஏற்பட்ட காலியிடத்திற்கு சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக டி.டி.வி.தினகரன் நிறுத்தப்பட்டார். அவரது வெற்றிக்கு எடப்பாடி கடும் பரப்புரை மேற்கொண்டார். எனினும் தொகுதியில் அதிக அளவில் பணப் பட்டுவாடா நடைபெற்றதாகக் கூறி தேர்தல் ஆணையம் தேர்தலை இரத்துச் செய்தது.
இதற்குப் பின், விறுவிறுப்பான மாற்றங்கள் ஏற்பட்டன. பாஜக தலைவர்களின் கட்டப் பஞ்சாயத்தை ஏற்றுக்கொண்ட பன்னீர் செல்வம், ஜெயலலிதாவின் இறப்பிலுள்ள மர்மத்தைக் கண்டறிய ஒரு விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க, அதனை எடப்பாடி ஏற்றுக்கொள்ள, அமைச்சரவையில் சேர்ந்தார். அவருக்குத் துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பன்னீர் செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடியும் நியமிக்கப்பட்டனர். பாஜக தலைவர்கள் குறிப்பாக மோடியின் ஆலோசனையின்படியே தான் எடப்பாடியுடன் சமரசம் செய்து கொண்டதாக பன்னீர் செல்வம் வெளிப்படையாகவே அறிவித்தார். எனினும் அன்றிலிருந்து பன்னீர் செல்வம் இரண்டாவது நெடுஞ்செழியனாகிவிட்டார். அவரது வீழ்ச்சியின் முதல் படி இதுவே.
தனது நிலை சற்று வலுப்பட்டதை அறிந்துகொண்ட எடப்பாடி, தந்திரமாகக் காய்களை நகர்த்தத் தொடங்கினார். டி.டி.வி கட்சியில் நீடித்தால் அவர் தனது முதல்வர் பதவிக்கு போட்டியாளராக உருவாகிவிடுவார் என நினைத்து, பன்னீர் செல்வம் துணையுடன் அவரைக் கட்சியிலிருந்து நீக்கினார். இரத்துச் செய்யப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதிக்கு மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது டி.டி.வி மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அவைத் தலைவர் மதுசூதனனை அதிமுக நிறுத்தியது.
இந்தத் தேர்தலில் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது. எனினும் இடைத் தேர்தலில் டி.டி.வி பெரும் வெற்றி பெற்றார். அதிமுக தோல்வியுற்றது. (இந்தத் தேர்தலில் திமுக வைப்புத் தொகையை இழந்தது). எனினும் எடப்பாடி அசரவில்லை. அடுத்த காயை நகர்த்தினார். சிறையிலிருந்த சசிகலாவை அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கினார். அதிமுகவின் சட்டமன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றோமே என்பதைப் பற்றியெல்லாம் எடப்பாடி எண்ணிப் பார்க்கவில்லை. சசிகலாவின் காலில் விழுந்த அவர், அவரது காலை வாரி விடவும் தயங்கவில்லை. சிறையிலிருந்து வெளிவந்த பிறகு சசிகலா கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றி விடுவார் என எடப்பாடி அஞ்சியதே அதற்குக் காரணம்.
இந்நிலையில் டி.டி.வி தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 28 பேரை அழைத்துக் கொண்டு ஆளுநரைச் சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இல்லை என்று மனுக் கொடுத்தார். உடனே செயலில் இறங்கினார் எடப்பாடி. கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அந்த சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியைப் பறிக்க சபாநாயகரிடம் மனு அளித்தார். அந்த உறுப்பினர்களின் பதவி பறிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து டி.டி.வி நடத்திய சட்டப் போராட்டங்கள் வெற்றியடையவில்லை. ஆனால் அதே நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எதிர்த்து வாக்களித்த பன்னீர் செல்வம் ஆதரவு 11 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்களது பதவியைப் பறிக்க வேண்டுமென்று நீதிமன்றம் சென்றது திமுக. ஆனால் நீதிபதியோ, இந்த விஷயத்தில் சபாநாயகர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அறிவுறுத்தியதோடு விஷயத்தை முடித்துக் கொண்டார். இதன்மூலம், சட்டமன்றத்தில் அதிமுகவின் பெரும்பான்மையை எடப்பாடி தக்க வைத்துக் கொண்டார்.
எடப்பாடி மற்றும் பன்னீர் செல்வம் இரட்டைத் தலைமைக்கு அவ்வப்போது சிறு சிறு பிரச்னை ஏற்பட்டுக் கொண்டுதானிருந்தன. சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. பன்னீர் செல்வம் தன்னையே முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டுமென விரும்பினார். ஆனால் எடப்பாடியே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பன்னீர் செல்வமும் அதனை ஏற்றுக்கொண்டார். சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் ஆட்சிப் பொறுப்பை இழந்த அதிமுக எதிர்வரிசையில் அமர்ந்தது. அப்போதும் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது. பெரும்பான்மையான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்ததால் அவரே எதிர்க்கட்சித் தலைவரானார். பன்னீர் செல்வம் எதிர்க்கட்சித் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்படியாகத் தொடர்ந்து பன்னீருக்குப் பின்னடைவு ஏற்பட்டுக் கொண்டே இருந்தது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக இரண்டு உறுப்பினர்களைத் தெரிவு செய்ய வாய்ப்பிருந்தது. இந்த இருவரில் ஒருவர் தனது ஆதரவாளராக இருக்க வேண்டும் என வலியுறுத்திய பன்னீர் அதில் வெற்றியும் பெற்றார். அவரது ஆதரவாளரான இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த தர்மர் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த நிகழ்வுக்குப் பிறகுதான் எடப்பாடி அடுத்த காயை நகர்த்தினார். அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என தனது ஆதரவாளர்களை வைத்துப் பேசச் சொன்னார். இரு தரப்புக்கும் வாதப் பிரதிவாதங்கள் நிகழ்ந்தன.
23.6.22 அன்று நடைபெற்ற பொதுக்குழுவில் பன்னீர் செல்வம் தாக்கப்பட்டார். அந்தப் பொதுக்குழு ஒத்தி வைக்கப்பட்டு 11.7.22 அன்று அடுத்த பொதுக்குழு கூடும் என அறிவிக்கப்பட்டது. அந்தப் பொதுக்குழுவில்தான் பன்னீர் செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார். எடப்பாடி தற்காலிகப் பொதுச் செயலாளர் ஆனார். அதற்குப் பின்னர், தொடர்ந்து சட்டப் போராட்டங்கள் நடைபெற்றன. உச்சநீதிமன்றம் 11.7.22 அன்று நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்துள்ளது.
இனியும், சட்டப் போராட்டங்கள் நடக்கலாம். எனினும் கட்சியில் எடப்பாடி பழனிச்சாமியின் கை ஓங்கி விட்டதாகவே தெரிகின்றது. அவரது பின்னால் அதிமுக தொண்டர்கள் அணிவகுத்து நிற்கின்றனர் என்பதே உண்மை.
பன்னீர் செல்வம் கட்சியினரை நம்பாமல் நீதிமன்றங்களையே நாடுகின்றார். இது எந்த வகையிலும் அவருக்கு உதவப் போவதில்லை. பாஜகவின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்ததால் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டதாக அவரது ஆதரவாளர்களே கூறுகின்றனர். அதிமுக ஒற்றைத் தலைமையை நோக்கி விரைவாக நகர்கிறது. இன்னும் சில நாள்களில் எடப்பாடி கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படலாம்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்தவுடன் சில கட்சித் தலைவர்கள் எடப்பாடிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள தொல்.திருமாவளவன், பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேற வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.
எடப்பாடி பதவிக்கு வந்ததிலிருந்தே பாஜகவின் ஊதுகுழலாகவே மாறிவிட்டார். நாடாளுமன்றத்திலும் மாநிலங்களவையிலும் பாஜக கொண்டு வந்த அனைத்து மக்கள் விரோத மசோதாக்களுக்கும் அதிமுக உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதிக்கின்ற முத்தலாக் தடை மசோதாவுக்கும் காஷ்மீர் மாநிலத்திற்கு 370ஆவது பிரிவின் கீழ் இந்திய அரசியல் சட்டம் வழங்கியிருந்த சில விசேஷ உரிமைகளை இரத்துச் செய்கின்ற சட்ட மசோதாவுக்கும் அதிமுக ஆதரவு அளித்தது. அதிலும் முஸ்லிம்கள் அதிர்ச்சியுறும் வண்ணம் குடியுரிமைச் சட்ட திருத்த மசோதா 2019க்கு அதிமுக அளித்த ஆதரவின் காரணமாகவே அச்சட்டம் மாநிலங்களவையில் நிறைவேறியது.
குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நாடெங்கிலும் முஸ்லிம்கள் தன்னெழுச்சியான மாபெரும் போராட்டங்களை நடத்தினர். தமிழ்நாட்டிலும் போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டம் உச்சகட்டத்தில் இருந்தபோது சட்டமன்றத்தில் இது சம்பந்தமாக நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் எடப்பாடி தனது குரலை மிகப் பெரிதாக உயர்த்தி ’குடியுரிமைச் சட்டம் வந்த பிறகு எந்த ஒரு முஸ்லிமாவாது தமிழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளாரா? பின் ஏன் போராட்டம்?' என்று குறிப்பிட்டார். இந்த முக்கியப் பிரச்னை குறித்து அவர் எந்தவிதமான புரிதலுமின்றிப் பேசினார். மக்கள் தொகை குறித்த புள்ளி விவரப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள புதிய கேள்விகளைக்கூட நீக்க அவர் உத்தரவாதம் தரவில்லை.
எடப்பாடி பழனிச்சாமி மட்டுமல்ல, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரும் மென்மையான இந்துத்துவப் போக்கைக் கொண்டிருந்ததை இப்போது சுட்டிக் காட்டாமல் இருக்க முடியாது. 1981ஆம் ஆண்டு நெல்லை மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம் என்ற கிராமத்திலிருந்து 180 தலித் மக்கள் இஸ்லாத்தை ஏற்றபோது இந்துத்துவா அமைப்புகள் அதற்கு எதிராகப் பெரும் போராட்டங்களை நடத்தின. பிரியாணி கொடுத்தும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆசை காட்டியும் தலித்களை முஸ்லிம்கள் மதம் மாற்றியதாகப் பொய்ப் பரப்புரை செய்தன. அப்போது தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் இந்துத்துவ அமைப்புகளின் நிலைப்பாட்டையே ஆதரித்தார். அந்த ஆண்டு பாளையங்கோட்டையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டில் பேசிய அவர் ’மதம் மாறிய தலித்கள் குர்ஆனைப் படித்துத் தெளிந்த பிறகுதான் இஸ்லாத்தில் இணைந்தார்களா' என்று கேள்வி எழுப்பினார். மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டு வரப் போவதாக அறிவித்தார். ஆனால் அவர் கொண்டு வரவில்லை. அவரது வாரிசான ஜெயலலிதா 2001ஆம் ஆண்டு பதவிக்கு வந்தபோது 31.10.2022 அன்று சட்டமன்றத்தில் மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினார்.
2004ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி ஏற்பட்ட பிறகு அந்தச் சட்டத்தை இரத்துச் செய்தார். அயோத்தியில் கரசேவையை ஜெயலலிதா ஆதரித்தார். கரசேவைக்கு தனது கட்சிக்காரர்களை அனுப்பி வைத்தார். இதிலிருந்து, பாஜகவுடன் கூட்டணி இருந்தாலும், இல்லாவிட்டாலும் அதிமுக ஒரு மென்மையான இந்துத்துவப் போக்கையே கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
இப்போது அதிமுகவில் எடப்பாடி தனது நிலையை வலுப்படுத்தியுள்ளதால் அவர் பாஜக கூட்டணியிலிருந்து விலக வாய்ப்புகள் இருப்பதாக சில அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். திமுக கூட்டணியில் இடங்கள் கிடைக்காத சில முஸ்லிம் அமைப்புகளும் அப்படி ஒரு நிலையை விரும்புவதுபோல் தெரிகிறது.
எனினும், எடப்பாடியின் அதிமுக, பாஜகவை உதறித் தள்ளுமா? தள்ள வேண்டுமென சமயச் சார்பற்ற மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதிமுக பலவீனமடைவது பாஜகவின் வளர்ச்சியில் போய் முடியும் என அவர்கள் அஞ்சுகின்றனர். அவர்களது அச்சம் நியாய மானதே. எடப்பாடி என்ன செய்வார்? பொறுத்திருந்து பார்ப்போம்.