மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை இஸ்லாம்

முரண்பட்ட வாழ்வு!
மௌலவி முஹம்மது அலீ ஸலாமி, 1-15 மே 2023


மனித வாழ்வு இரத்தம், சதை என உடல்கூறுகளால் மட்டுமே அமைந்தது கிடையாது. அதனையும் தாண்டி அன்பு, கோபம், வீரம், நம்பிக்கை என உணர்வுகளாலும் கட்டமைக்கப்பட்டுள்ளது. டிரீம்ஸ் எனும் ஹாலிவுட் படம் ஒன்றில் `மனிதர்கள் தாங்களும் இயற்கையின் ஒரு பகுதி என்பதை மறந்துவிட்டனர்' என்று ஒரு வசனம் வரும். உண்மையில் நிறைவான அர்த்தம் பொதிந்த வசனம் இது.

சமகால உலகத்தின் செயற்கைத்தனமான சூழல் மனிதனை தன்னுள் உள்ளடங்கியிருக்கும் இயல்பான செயற்பாடுகளில் இருந்து விலக்கி வைத்துள்ளது. அன்பு, நேசம், நம்பிக்கை போன்ற மனிதம் தொடர்பான விஷயங்களெல்லாம் கேள்விக்குறியானதன் பின்புலத்தில் இருப்பது இத்தகைய கண்ணோட் டம்தான்.

இஸ்லாம் எங்கும் எதிலும் செயற்கைத்தனமான வழிகாட்டல்களை வழங்கவில்லை. மனிதனின் இயல்பு அறிந்து, நடைமுறைக்கு உகந்த வழிகாட்டல்களை மட்டுமே வழங்குகின்ற காரணத்தால்தான் இஸ்லாம் ஒரு வாழ்வியல் எனும் தத்துவ நிலையினை அடைகிறது. இது ஓர் அடிப்படையான புரிதல்.

இன்றைக்கு மனிதன் தனது அடிப்படை குணங்களிலிருந்து விலகிச் செல்கின்றான். இது போன்று வாழ்க்கையின் சுகங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்போது ஒழுக்கங்கள் காணாமல் போகும் என்பது இயல்பே.

சமூகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்றங்களுக்கும் தவறுகளுக்கும் சமூக, அரசியல் மட்டங்களில் அங்கீகாரங்கள் கிடைத்து வருவது இளையோர் மட்டுமின்றி பெரியவர்களிடத்திலும்கூட குழப்பங்களைத் தோற்றுவிக்கிறது.

நல்லொழுக்கங்களுக்கு எல்லாம் பலத்த அடி கிடைத்துள்ளது. ஆண், பெண் உறவுகளுக்கு மத்தியில் வரம்புகள் இல்லாமல் போய்விட்டது. பாலியல் வன்முறைகள், அத்துமீறல்கள் அதிகரித்துவிட்டன. முறையற்ற வாழ்வு முறை சமகாலத்தவர்களின் வாழ்வு நிலையை நெருக்கடியான நிலையிலே தள்ளிவிட்டன. மதம், வேத நூல்கள் எல்லாம் அடிப்படைவாதம் என ஓரங்கட்டப்படுகிறது. மொத்தத்தில் உலக அளவில் வாழும் மனிதர்கள் பிரச்னைகளுக்கும் குழப்பங்களுக்கும் நடுவில்தான் வாழ்ந்து வருகின்றனர்.

சமகால உலகின் பிரச்னை என்பது வன்முறை என்பதையும் தாண்டி பண்பாடு, நாகரிகம் தொடர்பானதும்கூட. திட்டமிடலின் அடிப்படையிலேயே இந்த நாகரிக மாற்றத்திற்கான முயற்சிகள் நடக்கின்றன. அம்முயற்சிகளுக்கு இன்றைய ஊடகங்களே பெரும் பலமாக அமைந்துள்ளன.

வாழ்க்கையின் எந்தத் துறையிலும் விழுமங்களுக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது. வாழ்க்கை என்றால் அனுபவிக்க வேண்டும் என்பது மட்டுமே உலகளவில் பேசப்படுகிறது. இதன் காரணமாக விழுமங்களும் கட்டுப்பாடுகளும் காணப்படாத விஷயங்கள் பொதுவான ஆதரவை விரைவில் பெற்று விடுகின்றன. கட்டுப்பாடுகளும் விழுமங்களும் தொலைந்துபோன இத்தகைய அடிப்படையற்ற வாழ்க்கை முறை மனிதனை இறைவனிடமிருந்து வெகுதூரத்திற்கு விலக்கி நிறுத்துகிறது.

பேராசிரியர் ஸயீத் சொல்வதுபோல மனிதனின் ஒழுக்கத்தில் இரண்டு காரணிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. 1. ஒழுக்க சூழல்(Moral Situation) 2. ஒழுக்க முகவர்கள்(Moral Agents

இஸ்லாம் கட்டுக்கோப்பான வாழ்க்கைக்கு வழங்கும் அடிப்படையான வழிகாட்டல்களும் இவையே.

வீடுகளிலும் சமூகத்திலும் நிலவும் பொதுவான வாழ்க்கை முறையே ஒழுக்கச் சூழல் ஆகும். நமது நாட்டின் ஒழுக்கச் சூழல் மிகவும் சேதமடைந்துள்ளது. சுதந்திரமான ஆண், பெண் தொடர்புகள் கலை, இலக்கியத் தளங்களிலும் ஊடகங்களிலும் மிகைப்படுத்தி ஊக்கமளிக்கப்படுகின்றன. தலை முறையினரிடையே மிகப் பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. உபதேசம் அளிக்கக்கூட முடியாத அளவிற்கு இடைவெளி அதிகரித்துள்ளது.

ஒழுக்கச் சூழலும் பலவீனமடைந்துள்ளது. ஒழுக்க முகவர்களாகத் திகழும் ஆன்மிகத் தலைவர்கள், பெரியவர்கள் மத்தியிலும்கூட ஒருவித தாழ்வு மனப்பான்மை உண்டாகியிருக்கிறது.

தற்காலிக சுகம் அனுபவித்தல், அழகு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் போக்கு அதிகரித்துள்ளது. முன் சொன்னதுபோல ஊடகங்கள் இவ்விவகாரத்தில் முக்கிய பங்காற்றுகின்றன. மொத்தத்தில் மனஇச்சை, சுகபோகம் ஆகிய பண்புகள் இறைவனிடமிருந்து மனிதனைத் திசை திருப்பி விடுகின்றன. `தனது மனஇச்சையைத் தன் கடவுளாக்கிக் கொண்டவனின் நிலை குறித்து என்றேனும் நீர் சிந்தித்ததுண்டா?' (திருக்குர்ஆன் 25:43)

இத்தகைய வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்குப் பெற்றோர், குடும்பத்தினர், நண்பர்கள், ஆசிரியர்கள், சமூகத் தலைவர்கள், நூல்கள், ஊடகம் அனைத்தும் ஒழுக்க முகவர்களாக மாறவேண்டும். ஆன்மிகப் பயிற்றுவிப்புக்கான ஒழுக்கப் போதனை வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். இன்று பல இடங்களில் குடும்பங்களுக்கான ஃபிக்ஹ், சமூக ஊடகங்களுக்கான ஃபிக்ஹ் போன்ற வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அது போன்ற ஃபிக்ஹ் வகுப்புகள் நடத்தலாம். ஏனென்றால் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தன்னுடைய வருகையின் நோக்கத்தைக் குறித்து கூறும்போது `நற்செயல்களை முழுமையாக்குவதற்காகவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்' என்றார்கள்.

இன்றைய ஒழுக்கரீதியான பிரச்னைகளுக்கு இடையில் ஒழுக்கச் சூழலையும், ஒழுக்க முகவர்களையும் இனங்கண்டு கொடுக்கவேண்டும். இதுதான் இஸ்லாமிய இயக்கத்திற்குக் கட்டியம் கூறும். அதுமட்டுமின்றி இளம் ஆளுமைகளை இனங்கண்டு கொள்வதற்கும், நாளைய தலைவர்களை உருவாக்குவதற்கும் இது ஒன்றே வழி!

எல்லாவற்றிற்கும் மேலாக இஸ்லாம் முழுமையான வாழ்க்கை நெறி என்பதை வளரும் தலைமுறையினருக்கு உணர்வார்ந்த ரீதியில் மட்டுமின்றி அறிவுப்பூர்வமாகத் தெளிவுபட எடுத்துரைக்க வேண்டும். இறைவனுக்கு முழுமையான முறையில் அடிபணியும் பண்பை வளர்த்துக் கொள்வது இன்றைய காலச் சூழலுக்கு ஆன்மிகத் தடுப்பரணாய் அமையும்.

ஷஹீத் சையத் குதுப்(ரஹ்) சொல்வதுபோல `உள்ளத்தில் ஒரு பகுதி அல்லாஹ்விற்கானது. மற்றவை உலக விஷயங்களுக்கானது என என்னால் வாழமுடியாது' எனும் உணர்வே இன்றையச் சூழலில் இறைநம்பிக்கையாளருக்கு மிகவும் அவசியமானவையாய்த் திகழ்கிறது.

இந்த வழிமுறையை மேற்கொள்ளும்போது இரண்டு பயன்கள் கிடைக்கும். முதலாவதாக, உங்களின் தார்மிக வலிமை பற்றிய மதிப்பச்சம் மக்கள் மத்தியில் ஆழமாகப் பதிந்துவிடும். இரண்டாவதாக, இனிவரும் காலங்களில் தீர்க்கமான முறையில் நமது அழைப்பைச் சமர்ப்பிப்பதற்கான சாதகமான மனநிலையும் தீரமும் உண்டாகிவிடும்.

பாவிகள், அக்கிரமக்காரர்கள், இறைவனுக்கு எதிராகக் கலகம் புரிபவர்கள் ஆட்சிக் கட்டிலில் துணிவோடு அமர்ந்து அடக்குமுறையை மேற்கொண்டிருக்கும்போது இறைநம்பிக்கையாளர்கள் சத்தியத்தை மேலோங்கச் செய்ய ஆயத்தமாகவில்லையாயின் அது சத்தியத்திற்குச் செய்யும் மாபெரும் அநீதி! உலகாயதத்தால் இயல்பிலிருந்து முரண்பட்ட வாழ்வை சத்தியத்தின் ஒளியில் நின்று இறைவணக்கமாய் மாற்றிட உறுதி ஏற்போம். 

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்