மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சட்ட அமைப்பைச் சீர்குலைக்கும் புதிய குற்றவியல் சட்டங்கள் - பத்திரிகையாளர் சந்திப்பில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கண்டனம்

அரசியல்

ஆசிரியர்கள் சந்திக்கும் பிரச்னைகளும் சவால்களும்
மு.ஃபெரோஸ்கான், September 1 - 15, 2023


ஆசிரியர்கள் சந்திக்கும் பிரச்னைகளும் சவால்களும்

ஒரு சமூகத்தின் முதுகெலும்பே ஆசிரியர்கள் தான். நமது சமூகத்தை அறிவு சார்ந்த சமூகமாக மாற்றுவதில் அவர்களின் பணி அளப்பரியது. மாணவர்களின் தனிப்பட்ட, சமூகம் சார்ந்த முன்னேற்றத்தில் ஆசிரியர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவின் அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு முக்கியப் பங்காற்றும் ஆசிரியர்கள், மாணவர்களின் ஆராய்ச்சி சார்ந்த சிந்தனை களை உற்சாகம், ஊக்கப்படுத்துவதில் முனைப்புடன் இருக்கின்றனர்.

பாடத்திட்டங்களை வடிவமைத்தல், கல்வியியல் அணுகுமுறையை மேம்படுத்துதல், கல்விக் கொள்கைகளில் முக்கியத்துவம் செலுத்துதல் ஆகியவற்றில் ஆசிரியர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. பெரும்பாலான ஆசிரியர்கள் வகுப்பறையில் மட்டுமல்லாது பொது வாழ்க்கைக்குமான வழிகாட்டிகளாகவும் முன்மாதிரிகளாகவும் திகழ்கின்றனர். பாடப்புத்தகத்திற்கு அப்பாற்பட்டும் மாணவர்களின் சிந்தனைகளையும் திறமைகளையும் வெளிக்கொணர்வதில் ஆர்வம் செலுத்தும் ஆசிரியர்களின் பங்கு பாராட்டிற்குரியதே!

தற்போது ஆசிரியர்கள் சந்திக்கும் பிரச்னைகளையும் சவால்களையும் அடையாளப்படுத்தி அதற்கான நிரந்தரத் தீர்வைக் கண்டறிவதே இந்த ஆசிரியர் தினத்தின் உண்மையான கொண்டாட்டமாக அமைய முடியும்.

போதிய உட்கட்டமைப்பு இல்லாமை

இந்தியாவில் கணிசமான பள்ளிகளில் சரியான வகுப்பறைகள், மின்சாரம், சுகாதார வசதிகள், சுத்தமான குடிநீர் போன்ற அடிப்படைக் கட்டமைப்புகளே இல்லை. கல்வி உரிமைச் சட்டப்படி, ஒவ்வொரு பள்ளிக் கட்டிடத்திலும், ஒவ்வொரு ஆசிரியருக்கும் குறைந்தபட்சம் ஒரு வகுப் பறை இருக்க வேண்டும். அதேபோல் மாணவ மாணவிகளுக்குத் தனித்தனி கழி வறைகள் இருக்க வேண்டும். ASER அறிக் கையின் படி, 82 விழுக்காடு கிராமப்புற பள்ளிகளின் உட்கட்டமைப்பு மோசமான நிலையில் உள்ளது. 2022ஆம் ஆண்டு மட்டும் இந்தியா முழுவதும், 900க்கும் அதிக மான மாணவர்கள் சுகாதாரமற்ற உணவை உட்கொண்டதால் உடல் நலம் பாதிக்கப் பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் கற்றலில் மாணவர்களின் ஈடுபாடு, ஆசிரியர்களின் மன உறுதி, கற்கும் சூழல் முழுமை யாகப் பாதிக்கப்படுகிறது.

மாணவர் ஆசிரியர் விகிதம்

ஒரு ஆராய்ச்சி முடிவின்படி, இந்தியாவின் ஆரம்பக் கல்வியில் சராசரி மாணவ ஆசிரியர் விகிதம் மிகவும் அதிகமாக உள்ளது. அதிகமான மாணவர்களைக் கையாளுவதன் மூலம் ஒவ்வொரு மாணவரின் மீதும் தனிப் பட்ட கவனம், வழிகாட்டுதலை வழங்க ஆசிரியர்கள் போராடுகிறார்கள். இந்தியா வில் அதிகபட்சமாக 1.2 இலட்சம் பள்ளிக் கூடங்கள், ஒரே ஒரு ஆசிரியரைக் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது என்பது கடும் வேதனையளிக்கும் விஷயம்.

தொழில் சார்ந்த நிபுணத்துவ மேம்பாடு, பயிற்சி

குறைந்த அளவிலான ஆசிரியர்களுக்கு மட்டுமே தங்கள் கற்பித்தல் திறன்களை மேம்படுத்தத் தொடர் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இத்தகைய பயிற்சிக்கான வாய்ப்பினைப் பெறாத பெரும்பாலான ஆசிரியர்கள், பழைய கற்பித்தல் முறையையே பின்பற்றும் நிலை உள்ளது. இதுவரை 50 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தங்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி போதுமானதாக இல்லை எனக் கூறியுள்ளனர்.

தரமற்ற கல்வி இங்கு தரமான கல்வி அனைவருக்கும் கிடைப்பதில்லை. குறிப்பாகக் கிராமப்புற, பின்தங்கிய மக்கள் உள்ள பகுதிகளில் தரமான கல்வி கிடைப்பது அரிதினும் அரிதே. அங்கு பணிபுரியச் செல்லும் ஆசிரியர்கள், அம்மாணவர்களுக்குச் சரியான கல்விச் சூழலை ஏற்படுத்தக் கடுமையான போராட்டத்தைச் சந்திக்க நிர்ப்பந்திக்கப் படுகின்றனர். குறிப்பாக எட்டாம் வகுப்புப் படிக்கும் மாணவர்களில் 27% பேருக்கு இரண்டாம் வகுப்புப் பாடப் புத்தகத்தையே படிக்கத் தெரிவதில்லை என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

நிர்வாகச் சுமை

கற்பித்தல் அல்லாத பல பணிகளில் ஆசிரியர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். தேர்தல், மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட பல பணிகளில் ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதுபோன்ற நிர்வாக பணிச்சுமை ஆசிரியர்களின் கவனத் தைக் கற்பித்தலிலிருந்து திசை திருப்பி அவர்களின் செயல்திறனை முற்றாகக் குறைந்து விடுகிறது. மேலும் இவற்றால் ஆசிரியர்கள் மாணவர்களின் திறன்களை ஆராய்ந்து அதற்கேற்ப கற்பிப்பதற்கான நேரம் முற்றாகக் குறைந்து விடுகிறது.

குறைவான சம்பளம்

பெரும்பாலான ஆசிரியர்கள் மிகக் குறைவான மாத வருமானம் பெறக்கூடியவர்களே! தான் கற்ற கல்விக்கும் செய்யும் வேலைக்கும் உரிய வருமானம் அவர்களுக்கு கிடைப்பதில்லை. பெரும்பாலான முன்னேறிய நாடுகளில் ஆசிரியர் பணி அதிக வருமானம் ஈட்டும் பணிகளில் முதல் பத்து இடங்களுக்குள் உள்ளது. குறைவான சம்பளம் ஆசிரியர்களின் ஈடுபாட்டைக் குறைத்து, அவர்களைக் கூடுதல் வேலைக்கோ அல்லது ஆசிரியர் பணியை முழுவதுமாக விட்டு விடுவதற்கோ வழி வகுக்கிறது.

ஆசிரியர்களுக்கு என நிர்ணயிக்கப்பட்ட வருமான வரைமுறை ஏதும் இல்லாத காரணத்தால், குறிப்பாகத் தனியார் பள்ளிகளில் மிகக் குறைந்த வருமானத்திற்கு ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். கொரோனா கால கட்டத்தில் தனியார் பள்ளிக்கூட ஆசிரியர்கள் ஆசிரியப் பணியை விட்டு விட்டு, பகுதி நேர வேலை, தங்கள் தகுதிக்குக் குறைவான வேலைகளுக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது.

போதிய அங்கீகாரம் இல்லாமை

சமூக முன்னேற்றத்தில் பெரும்பங்கு ஆசிரியர்களுடையது என்றாலும் அவர்கள் தாம் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதாகவே கருதுகிறார்கள். ஒரு ஆய்வின் படி, 67% ஆசிரியர்கள் சரியான வேலை ஒப்பந்தம் இல்லாமல் தற்காலிகமாகவே பணிபுரிகிறார்கள். இத்தகைய தற்காலிக வேலை அவர்களின் திறனை மேம்படுத்துவதில்லை. இந்நிலை கற்பித்தல் மீதான அவர்களின் நாட் டத்தை நாளுக்கு நாள் தேய்ந்து கடனுக்காகவே அவர்களை அப்பணியில் நீடிக்கச் செய்கிறது.

தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வு

தொழில்நுட்பம் கற்றல், கற்பித்தலில் மாபெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் கிராமப்புற மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் இணைய வசதி கூட இருப்பதில்லை. இந்தியாவில் 24.2% பள்ளிகளில் மட்டுமே இணைய வசதி அளிக்கப் பட்டுள்ளது. கொரோனா கால கட்டத்தில் தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வால் பெரும் பாலான மாணவர்களுக்குச் சரியான கல்வி அளிக்க முடியாமல் ஆசிரியர்கள் போராடியதை இந்நாடு கண்கூடாகக் கண்டது.

இதுபோல் பல சவால்கள் இருந்தாலும், ஆசிரியர்களின் தியாக உணர்வும், இப்பணி மீதான அன்புமே அவர்களைத் தொடர்ந்து செயல்பட வைக்கின்றது. மேற்சொன்ன பிரச் னைகளைக் குறித்து அரசும், பள்ளிகளை நடத்தும் தனியார் நிறுவனங்களும் கருத்தில் கொண்டு அவற்றை உடனடியாகச் சரி செய்ய வேண்டும். ஏனென்றால் இது ஆசிரியர்களின் பிரச்னை மட்டுமல்ல. இது நம் கல்வித் திட்டத் தின் மீதான பிரச்னை. இதைச் சரி செய்வதன் மூலமே தரமான கல்வியை நம்மால் உறுதி செய்ய முடியும். அதன் மூலமே திறமையான மாணாக்கரையும் எதிர்காலத்தையும் நம்மால் உருவாக்க முடியும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்