மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சட்ட அமைப்பைச் சீர்குலைக்கும் புதிய குற்றவியல் சட்டங்கள் - பத்திரிகையாளர் சந்திப்பில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கண்டனம்

அரசியல்

பலதாரமணமும் முஸ்லிம்களும் ஃபாசிஸ்டுகளின் பொய் முகம் உடைகிறது
Dr.K.V.S.ஹபீப் முஹம்மத், September 1 - 15, 2023


பலதாரமணமும் முஸ்லிம்களும் ஃபாசிஸ்டுகளின் பொய் முகம் உடைகிறது

பொய்யை திருப்பித் திருப்பிச் சொன்னால் உண்மையாகிவிடும் என்று சொன்னான் ஹிட்லரின் அமைச்சர் கோயபல்ஸ். ஹிட்லரை உச்சியில் வைத்துக் கொண்டாடும் ஃபாசிஸ்டுகளும் இந்தியாவில் பொய்யை திருப்பித் திருப்பிச் சொல்லி மக்களிடையே வெறுப்பை உண்டாக்கி வருகிறார்கள். பொய் நீண்ட நாளைக்கு நிலைக்க முடியாது அல்லவா? அவர்கள் சொல்லிய பல பொய்கள் ஏற்கனவே உடைந்து விட்டன.

பலதாரமணம் முஸ்லிம்களிடம் அதிகமா?

இப்போது உடைந்துள்ள புதிய பொய்: 'பலதாரமணம் முஸ்லிம்களிடையே அதிகம்' . ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் ஐஐபிஎஸ் - இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பாப்புலேஷன் சயின்ஸ் என்ற அமைப்பு சில புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்தப் புள்ளி விவரங்கள் நமது நாட்டில் உள்ள நேஷனல் ஃபேமிலி ஹெல்த் சர்வே திரட்டிய தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டன. 

ஐஐபிஎஸ் சார்பில் 2019 - 2021 ஆண்டுகளுக்கு இடையில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளின் படி பலதாரத் திருமணங்கள் செய்த கிறித்தவர்கள் 2.1 விழுக்காட்டுடன் முதலிடத்தில் உள்ளனர். இரண்டாம் நிலையில் முஸ்லிம்கள் 1.9 விழுக்காடு பலதார திருமணங்கள் புரிந்துள்ளனர். இந்துக்கள் 1.3 விழுக்காட்டுடன் மூன்றாவது இடம் பெற்றுள்ளனர். எனினும், முஸ்லிம்கள், இந்துக்களின் இடையிலான பலதாரத் திருமணங்களின் விழுக்காட்டு வித்தியாசம் வெறும் 0.6 மட்டுமே.

சீக்கியர்களில் மிகக் குறைவாக 0.5 விழுக்காடு பலதாரத் திருமணங்கள் நடைபெற்றுள்ளன. இந்த விழுக்காடானது புத்த மதத்தினரில் 1.3%. பெயர் குறிப்பிடாத இதர சமூகத்தினரில் 2.5% எனவும் உள்ளன. எனினும், இந்த எண்ணிக்கை கடந்த 2006 முதல் 2021 வரையில் படிப்படியாகக் குறைந்து வருகின்றன. ஆனால், பஞ்சாப், சண்டிகர், டெல்லி, ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மேகாலயா, திரிபுரா, மகாராஷ்டிரா, புதுச்சேரியில் பலதாரமணம் குறையவில்லை.

ஐஐபிஎஸ் ஆய்வுகளின்படி, பலதாரத் திருமணங்கள் வட கிழக்கு, தென் மாநிலங்கள், சிக்கிமிலும் அதிகமாக உள்ளன. தென் மாநிலங்களில் அதிகமாக தெலுங்கானாவில் 2.9%, கர்நாடகா, புதுச்சேரியில் தலா 2.4%, தமிழ்நாட்டில் 2 விழுக்காடாக உள்ளன. அவர்களில் பெரும்பாலும் இந்துக்களே என்று கூறப்பட்டுள்ளது.

கிறித்தவர்கள் பெரும்பாலும் பழங்குடியினத்தவர்களாக இருப்பதால் அங்கு பலதாரமணம் அதிகம் உள்ளது. சட்டப்படி அனுமதி இருந்தும் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மாநிலங்களிலும் பலதாரத் திருமணம் குறைவாக உள்ளது. உதாரணமாக, 100 விழுக்காடு முஸ்லிம்கள் வாழும் லட்சத் தீவுகளில் 0.5%, காஷ்மீரில் 0.4 விழுக்காடு பலதாரத் திருமணங்கள் நடைபெற்றுள்ளன என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இந்து தமிழ் நாளிதழில்(10.7.23) வந்த இந்தச் செய்திகளுக்கு அப்பால் மேலும் சில செய்திகளும் நமக்குக் கிட்டுகின்றன. நான்கு மாநிலங்களில் முஸ்லிம்களை விட இந்துக்களே அதிக பலதாரமணம் புரிகின்றனர். தெலுங்கானா-இந்துக்கள் 3%, முஸ்லிம்கள்2.1% சத்தீஸ்கர் - இந்துக்கள் 2%, முஸ்லிம்கள் 1.6%. தமிழ்நாடு - இந்துக்கள் 2%, முஸ்லிம்கள் 1.7%. ஆந்திரா - இந்துக்கள் 1.9% முஸ்லிம்கள் 1.8% - (NFHS-5) எல்லாச் சமூகங்களிலும் பலதாரமணம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. வருமானம் உயர் உயர் பலதாரமணமும் குறைகிறது என்று இந்த அறிக்கை கூறுகிறது. இதுவரை முஸ்லிம்கள் மட்டுமே பலதாரமணம் புரிவதாக பொய்யாக பரப்புரை செய்யப்பட்டது. இப்போது உண்மை வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

இங்கே நாம் இன்னொரு தகவலையும் தர வேண்டி உள்ளது. 1961 வரை மக்கள் தொகைக் கணிப்பில் மதம், சமூகம் ஆகிய வற்றின் அடிப்படையில் பலதாரமணம் புரிபவர்களின் எண்ணிக்கை சேகரிக்கப்பட்டு வந்தது. பின்னர் அது நிறுத்தப்பட்டது. இறுதி யாக எடுக்கப்பட்ட 1961 மக்கள் தொகை கணிப்பில் கூறப்பட்டுள்ள தகவல்கள்: இந்துக்கள் 5.7%, முஸ்லிம்கள் 4.1%, ஜெயின் சமூகம் 8-9%.

இனியாவது ஃபாசிஸ்டுகள் இந்தப் பொய்ப் பரப்புரையை நிறுத்துவார்களா?

நீண்ட நாள்களாக ஃபாசிஸ்டுகள் முஸ்லிம்களுக்கு இந்தியாவில் அதிக சலுகைகள் வழங்கப்பட்டு அவர்கள் தாஜா செய்யப்படுகிறார்கள் என்கிற குற்றச் சாட்டை வைத்து வந்தனர். ஆனால் அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி சச்சார் கமிட்டி அறிக்கை இந்தப் பொய்க்கு முற்றுப் புள்ளி வைத்தது. கல்வி, வேலைவாய்ப்பு, நில உடமை, அரசு கடன் கிடைத்தல் ஆகிய அனைத்து விஷயங்களிலும் முஸ்லிம்கள் தலித்களைவிடக் கீழானநிலையில் இருப்பதாக அந்த அறிக்கை கூறியது. இந்த அறிக்கைக்குப் பின் ஃபாசிஸ்டுகள் முஸ்லிம்களுக்குச் சலுகைகள் வழங்கப்படுகின்றன என்ற பரப்புரையைக் கொஞ்சம் அடக்கி வாசிக்க ஆரம்பித்தனர் .

பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்து, பொய்யிலே புரண்டு மக்களிடையே பொய்யை நா கூசாமல் பரப்பி வெறுப்பை வளர்க்கின்றனர் ஃபாசிஸ்டுகள். ஆனால் இந்தப் பொய்களை யாரும் கண்டு கொள்ளாத காரணத்தினால் சமூகத்தில் இந்தப் பொய்கள் நிலைத்து விட்டன. இந்தப் பொய்களைப் பற்றிப் பேசினால் எங்கே முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசுகிறோம் என்ற பழி வந்து விடுமோ என்று அஞ்சி பல அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் மௌனம் காத்தன. அதன் விளைவு வெறுப்பு பரப்பப்பட்டு இன்று ஃபாசிஸ்டுகள் ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள். மதச்சார்பற்றவர்கள் ஆட்சியை இழந்து நிற்கிறார்கள். இனியாவது இவர்கள் உண்மையை உரத்துப் பேசுவார்களா?

பலதாரமணம் மக்கள் தொகையை அதிகரிக்குமா?

முஸ்லிம்கள் நான்கு பெண்களை மணப்பதால் அதிகக் குழந்தைகளைப் பெறுகின்றனர். இதனால் முஸ்லிம்களின் மக்கள் தொகை அதிகமாகின்றது. பிற சமூகத்தினரோ ஒரு பெண்ணை மட்டுமே மணப்பதால் குறைந்த எண்ணிக்கையில் குழந்தைகளைப் பெறுகின்றனர் என்று ஃபாசிஸ்டுகள் வாதிடுகிறார்கள்.

2002 குஜராத் சட்டமன்றத் தேர்தலின் போது நரேந்திர மோடி இந்தப் பரப்புரை உத்தியைப் பயன்படுத்தினார். 'இந்துக்களாகிய நாம் இருவர், நமக்கு இருவர், முஸ்லிம்களைப் பற்றிச் சொல்லுகிறபோது 'நாம் ஐவர், நமக்கு 25 பேர்' என்றார். அதாவது முஸ்லிம்கள் நான்கு மனைவிகளை மணந்து 25 குழந்தைகளைப் பெறுவதாகவும், பிற சமூகத்தினர் ஒரு மனைவியை மணந்து இரண்டு குழந்தைகளைப் பெறுவதாகவும் பரப்புரை செய்தார்.

பொது சிவில் சட்டம் வேண்டும் என்று வாதிடுபவர்களும் தமக்கு ஆதரவாக முஸ்லிம்களின் பலதாரமணத்தையே சுட்டிக் காட்டுகின்றனர். முஸ்லிம்களுக்கு என்று தனியாகச் சட்டம் இருப்பதால் தானே அவர்கள் பலதாரமணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். அதன் காரணமாகவே அதிகக் குழந்தைகளைப் பெறுகிறார்கள். எனவே பொது சிவில் சட்டத்தை இயற்றி பலதாரமணத்தை ஒழித்து, முஸ்லிம்களின் எண்ணிக்கை பெருகுவதைக் குறைத்து விடலாம் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

1. ஒரு சமூகத்தின் மக்கள்தொகை அந்தச் சமூகத்தில் வாழும் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அமையும் (Fertile women population). 2011 ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணிப்பில் ஆண் பெண் விகிதாச்சாரம் எல்லா சமூகங்களிலும் ஒரே மாதிரியாகவே உள்ளது. ஆயிரம் ஆண்களுக்கு 943 பெண்கள் இருப்பதாகத் தேசிய சராசரி சொல்லுகிறது. முஸ்லிம் சமுதாயத்தில் பெண்கள் எண்ணிக்கை சற்று அதிகம். கருக்கொலை, சிசுக்கொலை போன்ற முறைகளை முஸ்லிம்கள் பின்பற்றாததனால் முஸ்லிம்களிடையே பெண்கள் எண்ணிக்கை சற்று அதிகமாகக் காணப்படுகிறது.

எனவே ஒரு ஆணுக்கு ஒரு பெண் என்ற நிலை தான் முஸ்லிம்களிடையேயும் உள்ளது. முஸ்லிம்கள் அனைவரும் நான்கு பெண் களை மணமுடிக்க விரும்பினால் ஆண் பெண் விகிதாச்சாரம் 1:4 என்று இருக்க வேண்டும். இரண்டு பெண்களை மணம் முடிப்பதாக இருந்தாலும் ஆண் பெண் விகிதாச்சாரம் 1:2 என்று இருக்க வேண்டும். ஆனால் உண்மை நிலை அப்படி இல்லை. எனவே முஸ்லிம்கள் விரும்பினாலும் இரண்டு பெண்களை எல்லா முஸ்லிம்களும் மணமுடிக்க முடியாது.

இந்நிலையில் நான்கு பெண்களை மணமுடிக்கிறார்கள் என்பது பொய்யின் உச்சக்கட்டமாகும். ஃபாசிஸ்டுகள் பொய் சொல்லத் தயங்கவே மாட்டார்கள். எனவே ஒரு முஸ்லிம் ஆண் இரண்டு பெண்களை மணக்க விரும்பினாலும் மணக்க முடியாது. அதற்கு ஏற்ப பெண்கள் எண்ணிக்கை இல்லை.

ஒருவேளை வெளி நாட்டிலிருந்து பெண்களை இறக்குமதி செய்தால் இது சாத்தியமாகும். அப்படி என்றால் கோடிக் கணக்கான பெண்களை இறக்குமதி செய்யும் நிலை ஏற்படும். அதற்கு நமது நாட்டு சட்டம் அனுமதி தராது. முஸ்லிம் ஆண்களின் எண்ணிக்கை 10 கோடி என்றால், அவர்கள் இரண்டு பெண்களை மணப்பதாக இருந்தால் 10 கோடிப் பெண்களை இறக்குமதி செய்ய வேண்டும் அல்லவா? எனவே எல்லா முஸ்லிம்களும் இரண்டு பெண்களை மணப்பதற்கு வாய்ப்பு இல்லை.

2. இப்போது ஒரு வாதத்திற்காக முஸ்லிம்கள் நான்கு பெண்களை மணப்ப தாக வைத்துக் கொள்வோம். அப்போதும் முஸ்லிம் மக்கள்தொகை அதிகரிக்க வாய்ப்பு இல்லை. நான்கு பெண்களைத் தனித்தனி யாக நான்கு ஆடவர்கள் மணந்தால் அதிகக் குழந்தைகள் பிறக்குமா? நான்கு பெண்களை ஒரே ஆண் மணம் புரிந்தால் அதிகக் குழந்தைகள் பிறக்குமா?

நான்கு பெண்களையும் ஒரே ஆண் மணந்தால் அந்த நான்கு பெண்களுக்கும் பிறந்த குழந்தைகளை ஒரு கணவனே பராமரிக்க வேண்டும். எனவே குறைந்த எண்ணிக்கையிலேயே குழந்தைகளை அவன் பெற்றுக் கொள்வான். மாறாக நான்கு பெண்களையும் நான்கு ஆடவர்கள் தனித் தனியாக மணந்தால் அவர்கள் அதிகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வார்கள். எனவே ஒரு ஆண் நான்கு பெண்களை மணமுடித்தால் குழந்தை பிறக்கும் விகிதம் குறையுமே தவிர கூடாது. 

3. இங்கு பரப்புரை செய்யப்படுவதைப் போல் முஸ்லிம்கள் மத்தியில் பலதாரமணம் அதிக அளவில் இல்லை என்பதை முன்னரே

பார்த்தோம். பலதாரமணம் முஸ்லிம்களுக்கு மத்தியில் 1.9 விழுக்காடாக உள்ளது. இதுவே இந்துக்கள் மத்தியில் 1.6 விழுக்காடாக உள்ளது. எனவே இருவருக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் 0.6 விழுக்காடே! எனவே முஸ்லிம்கள் அதிக அளவில் பலதாரமணம் செய்கிறார்கள் என்பதும் ஒரு பொய்யே!

எனவே பலதாரமணத்தை அனுமதித்தால் மக்கள் தொகை பெருகும் என்பது ஜமுக் காளத்தில் வடிகட்டிய பொய்யாகும். பொய்யை உரத்துச் செல்வதாலும், உண்மை சொல்லப்படாத காரணத்தினாலும் பொய் வெற்றி பெறுகிறது. உண்மை உறங்குகிறது. 'பொய்யுடைய ஒருவன் சொல்வன்மையினால் மெய் போலும்மே! மெய்போலும்மே! மெய்யுடை ஒருவன் சொல மாட்டாமையால் பொய்போலும்மே! பொய்போலும்மே!' வெற்றி வேற்கை. 

https://www.facebook.com/drkvshabeeb


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்