மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சட்ட அமைப்பைச் சீர்குலைக்கும் புதிய குற்றவியல் சட்டங்கள் - பத்திரிகையாளர் சந்திப்பில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கண்டனம்

இஸ்லாம்

நபி வாழ்வின் படிப்பினைகள்!
அப்துல் சத்தார், September 16-30, 2023


நபி வாழ்வின் படிப்பினைகள்!

THE 100 என்ற நூலில் உலகில் ஆளுமை செலுத்திய சிறந்த நூறு ஆளுமைகளில் முஹம்மத் நபி(ஸல்) அவர்களுக்கு முதலிடம் கொடுத்த மைக்கேல் H. ஹார்ட் தனது நூலின் தொடக்க உரையில் இப்படிக் கூறுகிறார் ‘சமயம்’ உலகியல் ஆகிய இரு நிலைகளிலும் ஒரு சேர மகத்தான வெற்றி பெற்றவர் முஹம்மத் நபி ஒருவர் தாம்’. பின்னர் முடிவுரையாக, ‘சமயத்துறையிலும் உலகியல் துறையிலும் முஹம்மத் நபி ஒருசேரப் பெற்ற ஈடில்லாத செல்வாக் குதான் மனித வரலாற்றில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தனிமனிதர் என்னும் தகுதிக்கு அவரை உரித்தாக்குகிறது எனக் கருதுகிறேன்’ என முடிக்கிறார்.

அரசியல் மேதைகள், மறுமலர்ச்சியின் தந்தைகள், அரசர்கள், பொருளியல் நிபுணர்கள், சட்ட வல்லுநர்கள், நீதிமான்கள், சமூக சீர்திருத்தவாதிகள் எனப் பலரும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை வாழ்ந்து வரலாற்றில் இடம் பிடித்தாலும் அவர்களின் சேவைக்கு முன்னால் நபிகளாரின் பணிகளை முன்மாதிரியாக வைத்துப் பார்த்தால் என்றும் முதலிடம் நபிகளாருக்குத்தான். ஓரிறைக் கொள்கையின் ஒப்பற்ற போதகராக, சமுதாயத் தீமைகளைச் சீர்திருத்துபவராக, சமத்துவ தத்துவத்தை நிலை நாட்டுபவராக, போர் முனைகள் கண்ட பெரும் தளபதியாகப் பல பரிணாமங்களில் மின்னி ஜொலித்தவர் நபி(ஸல்) அவர்கள் மட்டுமே.

யார் இந்த முஹம்மத் நபி(ஸல்) என்று தேடுபவர்கள் நபிகளாரின் வரலாற்றைப் புரட்டினால் நபிகளாரின் வரலாறு திறந்த புத்தகமாய் கிடைக்கிறது. அதில் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் படிப்பினைகள் தான்.

தரையைத் தொடும் முன் அறிவூட்டும் தந்தையை இழந்த குழந்தை, ஆறு வயது நிரம்புவதற்கு முன் அன்பைப் பொழியும் அன்னையைப் பறிகொடுத்த பாலகர், ஆடு மேய்த்து வாழ்ந்து செவிலித் தாயின் அரவணைப்பில் ஹலீமாவின் மக்களுடன் புல்வெளிகளில் திரிந்த சிறுவர், சிரியா நாடு சென்று சீரிய முறையில் வர்த்தகம் புரிந்த வணிகர், அன்றைய சீர்கெட்ட மக்களின் பாழ்பட்ட வாழ்வைக் கண்டு பதை பதைத்த இளைஞர், இனிய இல்லறம் நடத்திய குடும்பத் தலைவர், நல்லறம் புரிந்த தந்தை, பேரக் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடிய நல்மாந்தராய், மனித வாழ்வில் அனைத்துத் துறைகளிலும் உள்ள பிரச்னைகளுக்குத் தீர்வைத் தந்த மாமனிதராய் வாழ்ந்தவர்கள் தான் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள்.

நபிகள் நாயகத்தின் வரலாற்றைப் படித்த பின் கண்ணீர் வடித்ததாக காந்தியடிகள் தன்னுடைய சுயசரிதையில் குறிப்பிடுகிறார். குறைஷிக் குலத்தில் பிறந்த நபிகளார் மிக எளிமையாகக் காணப்பட்டார்கள். வணிகராக இருந்த போதும், இறைத்தூதராய் உயர்ந்த போதும் எளிமையாகவே இருந்தார்கள். அண்டை அயலாருக்கு உதவுவதிலும் வீட்டு வேலைகளைச் செய்வதிலும் ஆர்வமுடன் செயல்பட்டார்கள். தம் ஆடைகளிலிருந்த கிழிசல்களைத் தாமே தைத்துக் கொண்டார்கள். தனது காலணிகளையும் அவர்களே தைத்துக் கொண்டார்கள்.

ஒட்டகங்களுக்குத் தீனி போடுவது குதிரைகளைப் பராமரிப்பது, கால்நடைகளிலிருந்து பால் கறப்பது எனப் பல வேலைகளையும் நபி(ஸல்) அவர்களே செய்தார்கள். புனிதப் பயணத்தின் போது மக்கா வந்த பயணிகளின் தேவைகளைக் கேட்டு அதனையும் நிறைவு செய்தார்கள். ஏழை எளியவர்களை அதிகம் நேசித்தார்கள். வெறும் தரையில் அமர்ந்தார்கள், ஏழைகளோடு இருந்தார்கள், அடிமைகளோடு உணவு உண்டார்கள், பயணங்களின் போது சமைக்க உதவியாக இருக்க விறகு சேகரித்துக் கொடுத்துள்ளார்கள். உதவி கேட்டவர்களுக்கு இல்லை என்று சொன்னதே இல்லை நபி(ஸல்) அவர்கள். நாளைக்கு வேண்டுமென்று எதையும் தமக்காக எடுத்துக் கொண்டதில்லை.

நபிகளாரின் தனிச்சிறப்பு என்னவெனில் எல்லாச் சீர்திருத்தங்களையும் 0 வீட்டிலிருந்தே தொடங்கினார்கள். முன்னோர்களின் தவறான நம்பிக்கைகளைத் தவிர்க்கும் படியும், ஒரே இறைவனை வணங்கும்படியும், ஏற்றத்தாழ்வுகளை அகற்றும் படியும், தவறான முறையில் சம்பாதிப்பதை விட்டுவிடுவது பற்றியும், மது சூது ஆகியவற்றை ஒழிக்கும்படியும், பெண்களுக்கு உரிமை வழங்குபடியும், மனிதனை மனிதன் அடிமைப்படுத்துவதை நிறுத்தும் படியும், ஏழைகளைச் சுரண்டுவதை விட்டு விடும்படியும், அநாதைகளை நல்ல முறையில் நடத்தும் படியும் போதனை செய்தார்கள்.

தனி மனிதனாகத் தொடங்கிய ஏகத்துவப் பரப்புரையை 23 ஆண்டுகளில் அரேபிய தீபகற்பம் முழுவதும் ஏற்றுக் கொண்டது. அண்ணல் நபிகளார் போதித்த ஆன்மிக, சமூக, பொருளாதாரக் கொள்கைகள் முழுமையாகச் செயல் வடிவம் பெற்றன. 63ஆம் வயதில் நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் போது இஸ்லாமிய மார்க்கம் 10 இலட்சம் சதுர மைல்களுக்குப் பரவி இருந்தது. சுமார் ஐந்து இலட்சம் மக்கள் இஸ்லாத்தில் இணைந்திருந்தனர்.

வாய்மை, நேர்மை, எதிரிகளாலும் குறை காண முடியாத வாழ்க்கை, சொல்லுக்கும் செயலுக்கும் முரண்பாடற்ற நிலை, கனிவு, எளிமை, பணிவு, வீரம், ஈகை, தோழர்களை அரவணைத்துச் சென்ற பாங்கு, அடித்தட்டு மக்களை நேசித்த விதம், எப்போதும் புன்னகை தவழும் முகம், அறிவுக் கூர்மை யாவும் நபி(ஸல்) அவர்களின் அடையாளங்களாகத் திகழ்ந்தன.

ஆட்சித் தலைவராக இருந்தபோதும் இறுதி வரை நபி(ஸல்) அவர்கள் எளிமையாகவே வாழ்ந்தார்கள். மக்கா வெற்றி கிடைத்த பிறகு மக்காவிலிருந்து தமக்குத் தொல்லை கொடுத்த அனைவருக்கும் ‘எவர் மீதும் பழிவாங்கல் இல்லை’ என்று பொதுமன்னிப்பு வழங்கினார்கள். கடனைத் தள்ளுபடி செய்தது, அடிமைகளை விடுவித்தது, அவர்களுக்கு மணமுடித்துக் கொடுப்பது என அனைத்தையும் நபிகளார் தம்மிடமிருந்தே தொடங்கினார்கள்.

ஹஜ்த்துல் விதா என்னும் இறுதிப் பேருரையில், ‘இங்கு வந்தவர்கள் வராதவர்களிடம் இஸ்லாத்தை எடுத்துரையுங்கள்’ என்ற கட்டளை ஊர் விட்டு ஊர்கடந்து, நாடு விட்டு நாடு கடந்து, கண்டம் விட்டு கண்டம் கடந்து, இன்றும் பல கோடி மக்கள் பின்பற்றும் உன்னத மார்க்கமாகத் திகழ்கிறது.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்