மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

அரசியல்

நீட் பயிற்சி மையங்களிலிருந்து வரும் அதிர்ச்சித் தகவல்கள்
S.A. இப்ராகிம், September 16-30, 2023


நீட் பயிற்சி மையங்களிலிருந்து வரும் அதிர்ச்சித் தகவல்கள்

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள கோட்டா நகரில் 100க்கும் மேற்பட்ட நீட், JEE பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இந்த மையங்களில் சேர்ந்து மேற்கண்ட தேர்வுகளை எழுத பயிற்சி பெற்று வருகின்றனர். இந்தப் பயிற்சி மையங்களில் சேர்ந்து பயின்று வரும் மாணவர்கள் சுமார் 23 பேர் இந்த ஆண்டில் தற்கொலை செய்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் 6 பேர் தற்கொலை செய்துள்ளனர். 2014ஆம் ஆண்டு முதல் இதுவரை 118 பேர் தற்கொலை செய்துள்ளனர். பெரும்பாலோர் அடிக்கடி நடத்தப்படுகின்ற பயிற்சித் தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால்தான், ராஜஸ்தான் அரசு இரண்டு மாதங்களுக்கு இந்தத் தேர்வுகளை நடத்தத் தடை விதித்துள்ளது.

அதிகரித்து வரும் இந்தத் தற்கொலை நிகழ்வுகள் குறித்து பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர். சிலர் கோட்டா நகருக்கே வந்து தங்களது பிள்ளைகளுடன் தங்கியிருக்கிறார்கள். மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்குவதற்குரிய ஆலோசனைகளைக் கூற பயிற்சி மையங்களில் மனநல மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர பொது மருத்துவர்களும் இருக்கின்றனர்.

மாணவர்கள் படிப்பு, படிப்பு என ஒரு நாளைக்கு 16 முதல் 18 மணி நேரம் வரை செலவிடுகின்றனர். ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதல் நேரம் படிக்கின்றனர். குடும்பங்களில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளுக்குக் கூடச் செல்வதில்லை. நாங்கள் கல்விக் கடன் வாங்கியும், சொத்துகளை விற்றும் உன்னை இங்கு பயிற்சிக்காக அனுப்பியிருக்கிறோம். நீ நன்கு பயின்று வெற்றியாளனாகத்தான் திரும்ப வேண்டும் எனப் பெற்றோர்கள் வலியுறுத்துகின்றனர். மாணவர்களுக்கு அங்கு நண்பர்கள் யாருமில்லை. எல்லோரும் போட்டியாளர்களே!

வேறு துறை சார்ந்த படிப்புகளைப் படிக்க ஆர்வமுள்ள மாணவர்கள் கூட, பெற்றோர்களின் நிர்ப்பந்தம் காரணமாக மருத்துவ நீட் தேர்வுக்கான பயிற்சிக்கு இங்கே வந்திருக்கின்றனர். இங்கு மாணவர்களின் விருப்பம் புறந்தள்ளப்பட்டு பெற்றோர்களின் விருப்பமே முன்னிலை பெறுகிறது.

கோட்டா நகரிலுள்ள பயிற்சி மையங்களுக்கிடையேயும் போட்டி மனப்பான்மை நிலவுகிறது. பயிற்சிபெறும் மாணவர்களிலேயே சற்று திறமையானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த மாணவர்கள் Star Batch என அழைக்கப்படுகின்றனர். ஆனால் சாதாரண மாணவர்களுக்கு (Average Students) போதிய பயிற்சி வழங்கப்படுவதில்லை. இந்தப் பாகுபாடும் மாணவர்கள் மத்தியில் மனஅழுத்தத்தை உருவாக்குகிறது.

மொத்தத்தில் பாடச்சுமை, பெற்றோர்களின் நிர்ப்பந்தம், அதனால் ஏற்படும் மனஅழுத்தம் காரணமாக மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

(02.09.23 ஹிந்து ஆங்கில நாளிதழில் வெளியாகியுள்ள மெஹுல் மல்பானி எழுதியுள்ள Kotas Crash Course என்ற கட்டுரையில் மேற்கண்ட தகவல்கள் காணப்படுகின்றன.)


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்