மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சட்ட அமைப்பைச் சீர்குலைக்கும் புதிய குற்றவியல் சட்டங்கள் - பத்திரிகையாளர் சந்திப்பில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கண்டனம்

அரசியல்

புதிய கிரிமினல் சட்டங்கள்
சேயன் இப்ராகிம், September 16-30, 2023


புதிய கிரிமினல் சட்டங்கள்

கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் இறுதி நாளன்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது நடைமுறையில் இருந்து வரும் இந்திய கிரிமினல் சட்டங்களில் சில திருத்தங்களைக் கொண்டு வரும் மூன்று மசோதாக்களைத் தாக்கல் செய்தார். இந்த மசோதாக்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படாமலேயே நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. இந்த நிலைக்குழுவின் தலைவராக பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ்லால் என்பவர் இருக்கிறார். நிலைக்குழுவின் ஆய்வு முடிந்து அதன் அறிக்கை வந்தபின்னர் இம்மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வைக்கப்பட்டு நிறைவேற்றப்படலாம்.

தற்போது நமது நாட்டில் நடைமுறையிலுள்ள கிரிமினல் சட்டங்கள் ஆங்கிலேய ஆட்சியின் போது தொகுக்கப்பட்டவையாகும். இந்தியாவுக்குக் கல்விக் கொள்கையை வகுத்துத் தந்த லார்டு மெக்காலேதான் கிரிமினல் சட்டங்களையும் வகுத்துத் தந்தார்.

இந்திய விடுதலைக்குப் பின் பல்வேறு காலகட்டங்களில் இந்தச் சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. ஆள் தூக்கிச் சட்டங்களான மிசா, பொடா ஆகியனவும் சில காலங்களில் நடைமுறையில் இருந்தன. பெரும்பாலும் எதிர்க் கட்சிக்காரர்களை ஒடுக்க இந்தச் சட்டங்கள் ஒன்றிய அரசால் பயன்படுத்தப்பட்டன.

இந்தச் சட்டங்களுக்கு இணையானதுதான் தற்போது நடைமுறையிலிருக்கும் (Unlawful Activities Prevention Act (UAPA) எனப்படும் சட்டமாகும். இந்தச் சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் அவ்வளவு இலகுவாக பிணையில் வெளிவர முடியாது. குற்றச்சாட்டுகளுக்கான அடிப்படை ஆதாரங்கள் இல்லை என்று நீதிபதி திருப்தியடைந்தால் மட்டுமே பிணை வழங்க முடியும். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்கள் பெரும்பாலும் முஸ்லிம்களே.

இந்தச் சூழ்நிலையில் தான் தற்போது ஒன்றிய அரசு மூன்று திருத்த மசோதாக்களைக் கொண்டு வந்துள்ளது. கிரிமினல் சட்டப் பிரிவுகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஆங்கிலப் பெயர்களுக்குப் பதிலாக சமஸ்கிருத சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. Indian Penal Code எனும் இந்தியத் தண்டனைச் சட்டம் பாரதிய நியாய சன்ஹிதா என்றும், Criminal Procedure Code எனப்படும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பாரதிய நாகரிக் சுரஷா சன்ஹிதா என்றும், Indian Evidence Act எனப்படும் இந்திய சாட்சியச் சட்டம் பாரதிய சாஷியா விதேயக் எனவும் மாற்றப்பட்டுள்ளன.

ஏற்கனவே நீதிமன்றங்களிலும், காவல்துறையிலும் நன்கு பரிச்சயமான இந்தச் சட்டப் பிரிவுகளின் பெயர்களை மாற்ற வேண்டிய தேவை என்ன? ஒருவேளை சமஸ்கிருத மொழியைப் பரப்பும் நோக்கமாக இருக்குமோ? செல்கின்ற இடங்களிலெல்லாம் தமிழ் மொழியின் பெருமையை, சிறப்புகளை உரக்க முழங்குகின்ற பிரதமர் நரேந்திர மோடி இந்தச் சட்டப் பிரிவுகளுக்குத் தமிழ் மொழியில் பெயர் வைக்கலாமே என்றும் கேட்கத் தோன்றுகிறது.

தேசத் துரோகச் சட்டம்

தேசத் துரோகம் என்ற சொற்றொடர் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக ‘இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து விளைவித்தல்’ என்ற சொற்றொடர் கொண்டு வரப்பட்டுள்ளன. அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிப் போராடுதல் மிகப் பெரிய குற்றமாகக் கருதப்பட்டு அதற்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும். பெருமழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கிலிருந்து பாதுகாத்துக் கொள்ள நீர் நிலைகளில் சில உடைப்புகளை ஏற்படுத்தினால் அதுவும் தீவிரவாதச் செயலாகவே கருதப்படும்.

ஒருமைப்பாட்டுக்கு எதிராகப் பேசினால் ஏழாண்டு சிறைத் தண்டனை, சாதி மத வெறுப்பைத் தூண்டுவோர், பேசுவோர், எழுதுவோருக்குக் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் தண்டனையும், அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் தண்டனையும் வழங்கப்படும். மேல்முறையீட்டின் பேரில் மரண
தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் ஆயுள் தண்டனை பெற்றவர் (அதாவது மரண தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனை பெற்றவர்) விடுதலை செய்யப்பட மாட்டார். அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிப் போராடுபவர்களுக்கு உதவி செல்கிறவர்கள் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெறுவார்கள்.

குற்றம் சாட்டப்பட்டவர்களை எந்த வன்முறையைப் பயன்படுத்தியும் கைது செய்யலாம். மோதல் கொலைகள் (என்கவுண்டர்கள்) நிறுவனமயமாக்கப்படுகின்றன. குற்றவாளிகளை கைவிலங்கிட்டு அழைத்துச் செல்லலாம். தகுந்த முகாந்திரங்கள் இல்லாமல் ஒருவரைச் சிறையில் அடைக்கும் காலம் 60 நாள்களிலிருந்து 90 நாள்களாக உயர்த்தப் படுகிறது.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பிலிருக்கும் பாஜக அரசின் செயல்பாடுகளைப் பார்க்கின்ற போது இந்தச் சட்டங்கள் அனைத்தும் எதிர்க்கட்சித் தலைவர்களையும், முஸ்லிம்களையும் பழிவாங்க மட்டுமே பயன்படுத்தப்படும் என்பது உறுதி. இந்துத்துவத் தலைவர்களின் வெறுப்புப் பேச்சுகளுக்குச் செயல்பாடுகளுக்கு எதிராக இந்தச் சட்டங்கள் பாயாது. இந்து முஸ்லிம் மோதல்கள் ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிராகவே இந்தச் சட்டங்கள் பாயும். அவர்களின் வீடுகள், வணிக நிறுவனங்கள் புல்டோசர்களைக் கொண்டு இடிக்கப்படும். UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்படுவார்கள்.

குடியுரிமைச் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட ஜாமிஆ மில்லியா இஸ்லாமியா மாணவர் உமர் காலித் கடந்த மூன்று ஆண்டுகளாகச் சிறையில் இருக்கிறார். உ.பி மாநிலத்தில் தலித் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தில், செய்தி சேகரிக்கச் சென்ற கேரள ஊடகவியலாளர் சித்தீக் காப்பான் இரண்டு ஆண்டுகளாகச் சிறையில் இருந்து அண்மையில்தான் பிணையில் வெளிவந்துள்ளார். ஊடகவியலாளர் ஜூபைர் அடிக்கடி கைது செய்யப்படுகிறார். நீதிமன்றத் தலையீட்டால் விடுவிக்கப்படுகிறார்.

அண்மையில் உ.பி மாநிலத்திலுள்ள ஒரு கிராமத்தில் செயல்பட்டு வந்த அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் வீட்டுப் பாடம் செய்யாத ஒரு முஸ்லிம் மாணவனை வகுப்பிலுள்ள சக மாணவர்களைக் கொண்டு கன்னத்தில் அடிக்கச் செய்த சம்பவம் நாடெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவத்தையும், அது சம்பந்தமான வீடியோக்களையும் வெளியிட்ட ஊடகவியலாளர் ஜூபைர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அடித்து நொறுக்கப்பட்ட அந்த முஸ்லிம் சிறுவனின் படத்தை வெளியிட்டது தான் குற்றமாம். பாஜக அரசின் நீதி பரிபாலனம் இப்படித்தான் இருக்கிறது. எந்த மாற்றங்கள் வந்தாலும் அப்படித்தான் இருக்கும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகளுக்கு 7, 10, 20 ஆண்டுகள் என குற்றங்களின் தன்மைக்கு ஏற்ப தண்டனை வழங்கப்படும். 12 வயதிற்குட்பட்ட சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்தால் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அதிகபட்சமாக மரண தண்டனையும் வழங்கப்படும்.

இந்தச் சட்ட மசோதா கேட்க நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் மல்யுத்த சம்மேளனத் தலைவர் மீதான பாலியல் குற்றச் சாட்டுகளை ஒன்றிய அரசு கண்டுகொள்ளவே இல்லையே! மல்யுத்த வீராங்கனைகள் மாதக் கணக்கில் போராடிப் பார்த்தார்கள். ஒன்றும் நடக்கவில்லை. மல்யுத்த சம்மேளனத் தலைவர் பாஜகவைச் சார்ந்தவர் என்பதால் அவர் மீது பாலியல் வன்கொடுமைச் சட்டம் பாயவில்லை. இந்துத்துவவாதிகளுக்கு இனியும் விதிவிலக்குகள் கிடைக்கலாம்.

லவ் ஜிஹாத்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த மசோதாவில் உண்மையான அடையாளத்தை மறைத்து பாலியல் உறவில் ஈடுபட்டால் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் உத்தரகாண்டில் ஹரித்துவாரைச் சேர்ந்த மேனகா என்ற பெண்ணை ராகுல் என்பவர் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் திருமணத்திற்குப் பிறகே அவரது உண்மையான பெயர் நிசார் அஹமது என்பது மேனகாவுக்குத் தெரிய வருகிறது. இது தொடர்பாக ஹரித்துவார் காவல் நிலையத்தில் மேனகா அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுபோன்று அடையாளத்தை மறைத்துத் திருமணம் செய்து கொண்டால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுமாம். ஏனெனில் இந்தக் குற்றம் லவ் ஜிஹாதின் கீழ் வருகிறதாம்.

லவ் ஜிஹாத் என்ற இல்லாத ஒன்றை இருப்பதாகப் பரப்புரை செய்வது இந்துத்துவவாதிகளின் வாடிக்கையாக இருக்கிறது. ஒரு முஸ்லிம் ஆண், ஓர் இந்துப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டால் அது லவ் ஜிஹாத். ஆனால் ஓர் இந்து ஆண், ஒரு முஸ்லிம் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டால் அது லவ் ஜிஹாத் இல்லை. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், ஒரு முஸ்லிம் ஆண் ஓர் இந்துப் பெண்ணை காதலித்துத் திருமணம் செய்ய முடியாது. செய்தால் அவர்கள் மீது
சட்டம் பாயும். பாஜக தலைவர்களான முக்தார் அப்பாஸ் நக்வி, ஷா நவாஸ் ஹுஸைன் ஆகியோர் இந்துப் பெண்களையே திருமணம் செய்துள்ளனர். பாஜக தலைவர் சுப்பிரமணிய சாமியின் மகள் சுகாசினி ஹைதர் என்ற முஸ்லிமைத் திருமணம் செய்துள்ளார்.

பல பாஜக தலைவர்களின் வீட்டுப் பெண்கள் முஸ்லிம்களைத் திருமணம் செய்துள்ளனர். இன்றைக்கு மதம் மறுப்புத் திருமணங்கள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. முஸ்லிம் ஆண்கள் இந்துப் பெண்களைத் திருமணம் செய்து கொள்வதைவிடவும், இந்து ஆண்கள் முஸ்லிம் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும் சம்பவங்கள் அண்மைக் காலத்தில் அதிகரித்துள்ளன.

இதனையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் லவ் ஜிஹாத் என்று பிதற்றுவதும், அதனைத் தடுக்க சட்டம் கொண்டு வருவதும் நகைப்புக்கு இடமளிக்கின்றது.

புதிய மசோதாக்களின்படி, கிரிமினல் சட்டப் பிரிவுகளின் பெயர்கள் வாயால் உச்சரிக்க முடியாத அளவிற்கு சமஸ்கிருத மொழியில் கூறப்பட்டிருக்கிறதே தவிர, விசேஷமாக ஒன்றுமில்லை. சில சட்டப் பிரிவுகளைத் தனக்கு வேண்டாதவர்களுக்கு எதிராக பாஜக அரசு பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது. நாடாளுமன்ற நிலைக்குழு இந்தப் புதிய மசோதாக்களுக்குப் பச்சைக் கொடியே காட்டும். நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மையையும் மேலவையில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவும் இருப்பதால் இந்தப் புதிய மசோதாக்கள் நிறைவேறவே வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்