மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சட்ட அமைப்பைச் சீர்குலைக்கும் புதிய குற்றவியல் சட்டங்கள் - பத்திரிகையாளர் சந்திப்பில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கண்டனம்

பொருளாதாரம்

பாஜக அரசின் பகாசூர ஊழல்கள்
சாவித்திரி கண்ணன், September 16-30, 2023


பாஜக அரசின் பகாசூர ஊழல்கள்

‘அனைத்துக் கட்சிகளும் ஊழல் கட்சிகள்! நாங்களே உத்தமர்கள்’ என மார்தட்டி, எதிர்க் கட்சிகளைச் சார்ந்தவர்களின் மீது சிபிஐ ரெய்டுகள், விசாரணைகளை ஏவும் பாஜக எத்தகைய படுகேவலமான ஊழல்களைச் செய்துள்ளது என இந்திய கணக்குத் தணிக்கை ஆணையம்(CAG) அம்பலப்படுத்தி உள்ளது. இந்திய வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு பாஜக ஆட்சியின் ஊழல் பட்டியலைப் பாரீர்!

ஒன்றல்ல, இரண்டல்ல ஒவ்வொரு துறையிலும் ஊழல், முறைகேடுகள் நடந்திருப்பது இஅஎ ஆய்வில் வெளிப்பட்டுள்ளது. வாய்ப்புக்கேடாக இந்தியாவின் முக்கிய ஊடகங்கள் திடீரென்று ஊமைகளாக மாறிவிட்டன. CAG - இந்திய கட்டுப்பாட்டுக் கணக்குத் தணிக்கை ஆணையம், இந்திய நீதித் துறையைப் போல ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பாகும். இதன் தலைவர் உச்ச நீதிமன்ற நீதிபதிக்குரிய அந்தஸ்து உள்ளவராவார்.

தற்போது இதன் தலைவராக கிரிஷ் சந்திர முர்மு உள்ளார். இந்த அமைப்பு எல்லா ஆட்சிக் காலங்களிலும் பாரபட்சமில்லாமல் ஒவ்வொரு துறையின் ஆடிட் அறிக்கைகளையும் அலசி ஆராய்ந்து உண்மைகளைத் தெரிவிக்கும். இது இந்திய ஜனநாயகத்தின் ஆகச் சிறந்த சிறப்பம்சமாகும்.

பாரத்மாலாவில் 6,90,790 கோடிகள் ஏப்பம்

பாஜக அரசின் பாரத்மாலா திட்ட ஏலம் விடுதலில் ஏடாகூடமாக முறைகேடுகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒரு கிலோ மீட்டர் சாலை அமைக்க நடைமுறையில் உள்ள அதிகபட்ச மதிப்பீடே 15.37 கோடி ரூபாய்தான். ஆனால் இந்தத் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, செலவை 32.17 கோடியாக அதிகரித்துக் காட்டியுள்ளனர். அதாவது இவர்கள் கொள்ளையடிக்கவே இத்திட்டத்தின் நிதி இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த வகையில் இந்தியா முழுமையும் உள்ள நெடுஞ்சாலைகள், சாலைகளை விரைவுச் சாலைகளாக இணைக்கும் பாரத் மாலா திட்டத்தின் முதல் கட்டத்தில் 34,800 கிலோ மீட்டர் சாலை அமைக்க, ஒன்றிய அமைச்சரவை 5,35,000 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. இரண்டாம் கட்டத்தில் 26,316 கிலோ மீட்டர் சாலை அமைக்க 8,46,588 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம் 13 இலட்சத்து 81 ஆயிரத்து 588 கோடி பணம் ஒதுக்கப்பட்டதில், 6 இலட்சத்து 90 ஆயிரத்து 790 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

எவரும் செய்யத் துணியாத மோசடி

துவாரகா விரைவுப் பாதை கட்டுமானத்தில், ஒப்பந்ததாரர் தேர்வு தொடங்கி இறுதி வரை ஊழலோ ஊழல்! சாலை போடுவதற்கான நிலத்தைக் கையகப்படுத்தாமலே ஒப்பந்தங்களை வழங்கிய ஒரே ஆட்சி இதுவாகத்தான் இருக்கும். ஒரு கி.மீ திட்டச் செலவு 18 கோடி ரூபாய் தான்; ஆனால் 250 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டது ஏன்? எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

நாட்டின் முதல் எட்டு வழி விரைவு சாலையான துவாரகா பாதை சுமார் 9,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்ட திட்டமிடப்பட்டது.

ஹரியானாவில் 18.9 கி.மீ தூரத்திற்கும் தில்லியில் 10.1 கி.மீ தூரத்துக்குமான இத்திட்டத்தில் ஒரு கி.மீ சாலையை அமைக்கத் தாராள மதிப்பீடாக 18 கோடி ஆகும் என்று முடிவு செய்திருந்த சூழலில் அதிரடியாக அது ஒரு கி.மீக்கு 250 கோடியாக அதிகரித்து கணக்குக் காட்டப்பட்டுள்ளது. அதாவது, திட்ட மதிப்பீட்டை விடவும் பல மடங்கு உயர்த்திக் காட்டப்பட்டுள்ளது. 10 விழுக்காடு, 20 விழுக்காடல்ல, 1,400 விழுக்காடு! இது நினைத்துப் பார்க்கவே முடியாத, யாரும் செய்யக் கூசும் ஊழலாகும். இந்திய நெடுஞ்சாலைத் துறையின் திட்ட மதிப்பை விடவும் 14 மடங்கு உயர்த்தி கணக்கு எழுதி, பணத்தை அள்ளும் களவாணித்தனத்தை இதுவரை எவரும் செய்யத் துணிந்ததில்லை.

வாகன ஓட்டிகளைச் சூறையாடும் சுங்கச் சாவடிகள்

இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்கச்சாவடிகள் என்ற பெயரில் வாகன ஓட்டிகளிடம் பகிரங்கமான பகல்கொள்ளை நடத்தி வருவதையும் மத்திய கணக்கு ஆணையம் அம்பலப்படுத்தி உள்ளது. குறிப்பிட்ட ஐந்து சுங்கச்சாவடிகளின் கணக்குகளை ஆய்வு செய்ததிலேயே வாகன ஓட்டிகளிடம் இருந்து நிர்ணயிக்கப்பட்ட தொகையைவிட ரூ.154 கோடி அளவிற்கு அதிகத் தொகையை வசூல் செய்திருப்பது உறுதியாகியுள்ளது. இப்படி இந்தியா முழுமையும் உள்ளவற்றைக் கணக்கில் கொண்டால் இதில் பல இலட்சம் கோடிகளில் ஊழல் கரைபுரண்டோடுவதை அறியலாம்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் அகோர ஊழல்

தேர்தலைக் கருத்தில் கொண்டு 2018ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஆயுஷ்மான் பாரத் என்ற மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அறிவித்து, அதனால் வெற்றியும் பெற்றார். ஆனால் அந்தத் திட்டத்தில் மக்களின் பெயரால் மருத்துவ நிறுவனங்களும், மந்திரிகளும்தான் பலன் அடைந்துள்ளனர் என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

பிரதான் மந்திரி ஆயுஷ்மான் பாரத் ஜன் ஆரோக்யா யோஜனாவின் தரவுத் தளத்தில் இல்லாத விலாசங்கள், போலிப் பெயர்கள், சம்பந்தமில்லாத பிறந்த தேதிகள், இஷ்டத்திற்கு எழுதப்பட்ட சுகாதாரக் கணக்குகள், குடும்ப உறுப்பினர் எண்ணிக்கையில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் போன்ற பல முரண்பாடுகள் CAG அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செயல்பாட்டில் இல்லாத, எந்த வசதியுமற்ற மருத்துவமனைகளின் பேரில் கணக்கு எழுதி பணத்தைக் களவாடியுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி 24.3 கோடி ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டதாகக் கணக்கில் உள்ளது. இதில் 7 இலட்சத்து 49 ஆயிரத்து 820 காப்பீடு அட்டைகளுக்கு ஒரே அலைப்பேசி எண்ணே (9999999999) உபயோகிக்கப்பட்டுள்ளது எனில், எவ்வளவு தெனாவெட்டாக ஊழல் செய்துள்ளார்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது. மருத்துவக் காப்பீட்டு திட்டச் சிகிச்சையில் 88,670 பேர் இறந்துள்ளனர். இப்படி சிகிச்சையின் போது இறந்த 3,346 நபர்களுக்குச் சிகிச்சை பார்த்ததாகச் சொல்லியும் மோசடி செய்து காப்பீடு பெறப்பட்டிருப்பது தான் கொடுமை! இதில் பல்லாயிரம் கோடிகளில் படுபயங்கர முறைகேடுகள் நடந்திருப்பதை CAG அறிக்கை தோலுரித்துள்ளது.

அயோத்தி ராமர் கோவிலின் அயோக்கியத்தனங்கள்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக மிகக் குறைந்த விலையில் நிலங்களைவாங்கிக் குவித்து, அதை அயோத்தி ராமர் அறக்கட்டளைக்குப் பல மடங்கு அதிகமாக விற்று பக்தியின் பெயரால் மோசடி அரங்கேறியுள்ளது. கோவில், நகர மேம்பாட்டுக் கட்டுமானங்களில் ஆதாயங்களுக்கு மேல் ஆதாயம் அடைந்துள்ளனர். அயோத்தியா மேம்பாடு திட்டத்தில் ஒப்பந்தப் பணி கொடுப்பதில் கையூட்டு, உத்தரவாதப் பணத்தில் சலுகைகள் என அனைத்-திலும் ஊழல்களே! இதன்படி பார்த் தால், ஒப்பந்ததாரர்கள் கோடிக்கணக்கில் ஓகோவென்று லாபம் அடைந்திருப்பதும், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியதால் சுமார் ரூ.8.22 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதும் அம்பலமாகியுள்ளது.

கிராமப்புற மேம்பாட்டுத் திட்டக் கிராதக ஊழல்

செயல்பாடுகளை விட விளம்பரங்களையே அதிகம் நம்பும் அரசாக பாஜக அரசு உள்ளது என்பது இந்த ஊழலில் உறுதியாகியுள்ளது. கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் ஓய்வூதியத் திட்டத்துக்கான நிதி, வெறும் விளம்பரத்திற்காகவே அள்ளி இறைக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு இத்திட்டத்தை 19 மாநிலங்களில் விளம்பரப்படுத்த விளம்பரப் பலகைகள் வைக்க மட்டுமே, 2 கோடியே 444 இலட்சம் ரூபாய் ஓய்வூதியத் திட்ட நிதியில் இருந்து முறைகேடாக எடுத்துச் செலவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் திட்டச் செயல்பாட்டை ஆராய்ந்தால் என்னென்ன ஊழல்கள் தெரிய வருமோ?

ஹெச்.ஏ.எல்லில் ஏப்பம் விட்ட 160 கோடி

ஹெச்.ஏ.எல் என அழைக்கப்படும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் பொதுத்துறை நிறு-வனத்-தில் கடந்த ஆட்சிக் காலத்திலேயே சட்ட விரோதமாக ஒப்பந்தாரார்களுக்குப் பணம் தந்த வகையில் 13.28 கோடி ஊழல் நடந்துள்ளதாக CAG அளித்த அறிக்கையால் 2019ஆம் ஆண்டே மோடி அரசு அவமானப்பட்டது. ஹெச்.ஏ.எல் விமான எஞ்சின் வடிவமைப்பில் கோளாறு செய்த வகையில் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தவறான திட்ட வடிவமைப்புக் கோளாறுகள், உற்பத்தியில் தாமதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சுமார் ரூ.159.23 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக CAG அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

CAG தரும் ஆய்வு அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் வைத்தாக வேண்டும் என்பது தொன்றுதொட்ட மரபாக உள்ளது. அந்த வகையில் அண்மையில் நடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் இறுதி நாளில் ‘காக் ரிப்போர்ட்’ சபையில் இது மின்னல் வேகத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, விவாதங்களின்றி கடந்தது. இது குறித்து பெரும்பாலான இந்திய ஊடகங்கள் மௌனம் சாதிப்பது கண்கூடு. எனினும், ஒரு சில ஊடகங்கள் இதை வெளிக்கொண்டு வந்துள்ளன. இதைத் தடுப்பதற்காகத்தான் குற்றவியல் சட்டங்களில் திருத்தம் செய்து மசோதாவை நிறைவேற்றியுள்ளது பாஜக அரசு. அடுத்த முறை பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்திய கணக்குத் தணிக்கை ஆணையத்தின் தலைவரைக் கூட கட்டுப் படுத்தும் அல்லது கைது செய்யும் அதிகாரம் கொண்டிருக்கும் வகையில் மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது.

நன்றி: அறம் இணைய இதழ்


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்