மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

விண்வெளி ஆய்வு - ஒரு விரிவான பார்வை
கப்ளிசேட், September 16-30, 2023


விண்வெளி ஆய்வு - ஒரு விரிவான பார்வை

சந்திரயான்-3 விண்கலத்தின் வெற்றியால் இந்திய நாடே மகிழ்ச்சியில் மூழ்கி இருக்கிறது. நிலவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவிற்கு அடுத்து கால்பதிக்கும் நாடு இந்தியா என்ற பெருமையும், கடினமான பள்ளங்களையும், எரிமலைகளையும் உள்ளடக்கிய நிலவின் தென்பகுதியில் கால்பதித்த முதல்நாடு இந்தியா என்பதும் பெருமைக்குரிய செய்தி. அதனைச் சாதித்த சந்திரயான்-3 விண்கலத்தின் ஒருபகுதியான ரோவரின் பின்பக்கச் சக்கரங்களில் அசோகச் சக்கரச் சின்னம், இஸ்ரோவின் லோகோ பொறிக்கப்பட்டுள்ளது. நிலவில் ரோவர் ஊர்ந்து செல்லும் பகுதிகளில் அதன் அச்சுப்பதியும். நிலவில் காற்று இல்லாததால் அதன் தடம் அழியாமல் காலம் கடந்தும் இந்தியாவின் பெருமையை உலகத்திற்கு அறிவித்துக் கொண்டே இருக்கும்.

சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றியைச் சாத்தியமாக்கிய அத்தனை விஞ்ஞானிகளையும், ஒற்றை வார்த்தையால் பாராட்டி விடமுடியாது. இந்தத் திட்டத்தின் ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு நிலையிலும் பல விஞ்ஞானிகளின் உழைப்பு இருக்கிறது. இதற்கு முன்னால் தோல்வியைத் தழுவிய சந்திரயான்-1, சந்திரயான்-2 ஆகியவற்றின் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து தவறுகளைச் சரிசெய்து, தொழில்நுட்பங்களை மேம்படுத்தி இறுதியில் அதன் பயணத்தைத் தொடக்கி வைத்து, நிலவில் இறங்குகிற நாள்வரை ஒவ்வொரு நொடியிலும், அதன் இயக்கங்களைத் தீர்மானித்து, வழிநடத்தி இறுதியில் நிலவிறங்கும் போதும் நிலவிறங்கத் தீர்மானிக்கப்பட்ட இடம் சரியில்லை என்று அது தனது செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) மூலம் உணர்ந்து சிறிது பக்கவாட்டில் நகர்ந்து பாதுகாப்பாக நிலவில் இறங்கியதாக வரும் செய்திகள் வியப்பூட்டுகிறது.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகேயுள்ள குன்னமலை, சித்தம்பூண்டி பகுதிகளின் மண் நிலவிலுள்ள அனார்த்தசைட் மண் போல இருப்பதாகக் கருதப்பட்டு, சந்திரயான்-2 திட்டத்திற்கே இந்த மண் 50 டன்கள் பெங்களூரிலுள்ள இஸ்ரோ தலைமையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், சந்திரயான்-3 திட்டத்தில் இந்த மண்ணில் ரோவர் வாகனத்தின் ஓடுதிறன் சோதனை ஓட்டம் நடத்தி பரிசோதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சந்திராயன்-3 விண்கலத்தின் இன்ஜின் சேம்பரில் பொருத்துவதற்காக ICSS 1218-321 என்ற குளிரூட்டப்பட்ட ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தகடு, சேலம் இரும்பாலையில் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சேலம் இரும்பாலை சந்திரயான் திட்டங்களுக்காகத் தொடர்ந்து மூன்று முறை தனது பங்களிப்பை வழங்கியுள்ளது. திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் தமிழராக இருப்பது தமிழ்நாட்டிற்குக் கூடுதல் சிறப்பாகும்.

41 நாள் பயணமாகச் சென்று இறுதியில் மூன்று பாகங்களாக எட்டு நிலைகளில் சந்திரயான்-3 விண்கலம் நிலவில் திட்டமிட்டபடி வெற்றிகரமாக இறங்கியது. முதல் பாகம் ப்ரொப்பல்ஷன் மாடுல் அது எல்.எம்.பி 3 ராக்கெட்டிலிருந்து பிரிந்து நிலவை நோக்கிப் பயணித்தது. நிலவிலிருந்து 100 கி.மீ உயரம் வரை பயணித்தது.

இரண்டாவதாக ப்ரொப்பல்ஷன் மாடுலிலிருந்து லேண்டர் பிரிந்து நிலவில் இறங்கியது. பின் லேண்டரிலிருந்து ரோவர் வாகனம் வெளியே வந்து தனது ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும். அதில் பொருத்தப்பட்டுள்ள ஆய்வுக் கருவிகளும், காமிராக்களும் தங்களது பணிகளைத் தொடங்கும். லேணடர் கலன் இறங்கிய இடத்திலிருந்தும் ரோவர் வாகனம் நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்றும் ஆய்வுகள் நடத்தும். லேண்டரிலுள்ள நாசாவின் LRA எனும் கருவி, லேசர் கற்றைகளைப் பயன்படுத்தி நிலவிற்கும் பூமிக்குமான தூரத்தைத் துல்லியமாகக் கணிக்கும்.

14 நாள்கள் மட்டுமே செயல்படும் லேண்டரும், ரோவரும் தங்களது ஆய்வுகளைப் பூர்த்தி செய்யும். நிலவில் 14 நாள்கள் வெயிலாகவும், 14 நாள்கள் இருளாகவும் இருக்கும் என்பதால், வெயில் காலம் இருக்கும் போது சூரிய ஒளியைப் பயன்படுத்தி லேண்டரும், ரோவரும் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மொத்தச் செலவு 615 கோடி எனக் கூறப்படுகிறது. மற்ற நாடுகள் அனுப்பிய விண்கலங்கள் ஆயிரம் கோடியைத் தாண்டியதால் இதன் தொழில் நுட்பம் சிறந்ததாகக் கருதப்பட்டு எதிர்காலங்களில் நிலவு மிஷனுக்கு இந்தியா முன்னணியில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நிலவின் தென் துருவத்தில் தண்ணீர் படிமங்கள் உள்ளதாக நாசா வெளியிட்ட தகவலால், நிலவின் தென்துருவத்தில் இறங்கி ஆராய்வது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

விண்வெளி ஆராய்ச்சி ஏற்படுத்தும் பயன்கள் என்ன? விண்வெளி ஆராய்ச்சி எப்போது தொடங்கப்பட்டது? அதில் இந்தியா இதுவரை சாதித்தது என்ன? இஸ்ரோ என்ற அமைப்பின் செயல்பாடுகள் என்ன? ராக்கெட் என்றால் என்ன? விண்கலம் என்றால் என்ன? என்பன போன்ற கேள்விகளுக்கான தேடல் இன்று அவசியமாகிறது.

சமூக ஊடகங்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியும், பொறுப்பற்ற செய்திகளும் பல சாதனைகளை கேள்விக்குள்ளாக்குகின்றன. உணவு, உடை, இருப்பிடம் போன்ற வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள மக்களுக்கு இதனால் என்ன பயன்? இதில் செலவழிக்கும் பணத்தை ஏழைகளின் வறுமையை தீர்க்கப் பயன்படுத்தலாமே? என்பன போன்ற புரிதலற்ற, வீம்புகளை உள்ளடக்கிய ஏராளமான கேள்விகளை ஒரு கூட்டம் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

இதன் வரலாற்றையும் இதுபோன்ற திட்டங்களினால் கிடைக்கும் பயன்களையும் புரிந்து கொண்டு மக்களிடம் எடுத்துக் கூறி அவர்களுக்கும் புரிதலை ஏற்படுத்துவதே இதுபோன்ற திட்டங்களின் விஞ்ஞானிகளுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய கைமாறுகளும் பாராட்டுகளும் ஆகும். இன்றைய விண்வெளிப் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் உள்ளது. விண்வெளித்துறையில் இந்தியாவின் வெற்றி, இஸ்ரோவின் தொழில் நுட்பங்கள் உலக நாடுகளை ஈர்த்து இன்றைய விண்வெளி வியாபாரத்தில் இந்தியா மிகப்பெரிய உயரத்தை எட்டி இருக்கிறது. விண்வெளி ஆய்வு என்பது மனித குலத்திற்கு மிகப்பெரிய நன்மைகளைச் செய்திருக்கிறது. இன்றைக்கு உலகமே ஒற்றை விரலின் நுனியில் என்று பெருமைபடக்கூற, விண்வெளியினால் வசப்பட்ட தொழில்நுட்பங்களே காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இன்றைய இணையவெளி தொழில்நுட்பங்கள், அலைப்பேசிகள், வானிலை சார்ந்த முன்னறிவிப்புகள், வான்வெளியில் இருந்து வரும் கதிர்வீச்சு, அதன் நன்மைகள், தீமைகள், விவசாயம், நீர்வளம், நகர்ப்புறத் திட்டமிடல், கிராமப்புற மேம்பாடு, கனிமவள ஆய்வு, சுற்றுச்சூழல், வனவியல், கடல்வளங்கள், பேரிடர் மேலாண்மை போன்ற திட்டங்களுக்கு தரவுகளையும், நேரடிப் பங்களிப்புகளையும், செயற்கை கோள்கள் வழங்கி வருகின்றன. ஒவ்வொரு செயற்கைகோளும் ஒருசில குறிப்பிட்ட நோக்கங்களை முன்நிறுத்தி ஏவப்படுகிறது.

விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்திய தேசிய குழு(INCOSPAR) 1962ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேருவால் அணுசக்தித் துறையின்கீழ்(DAE) நிறுவப்பட்டது. புகழ்பெற்ற விஞ்ஞானி விக்ரம் சாராபாய் விண்வெளித் துறையின் அவசியங்களைப் புரிந்து கொண்டு அதன் வளர்ச்சிக்காகப் பாடுபட்டார். 1969ஆம்ஆண்டு INCORPAS இஸ்ரோ ISRO என்று ஆனது. 1972-ஆம் ஆண்டு இந்திய விண்வெளித் துறை உருவாக்கப்பட்டது. இஸ்ரோ அதன் ஒருபகுதியாக மாறி இன்றுவரை அப்படியே தொடர்கிறது. இஸ்ரோவின் சந்தைப்படுத்தும் பிரிவாக ஆண்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (ARS) செயல்படுகிறது. இது இஸ்ரோவின் விண்வெளித் தயாரிப்புகள், தொழில்நுட்ப ஆலோசனை சேவைகள் இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்களை விளம்பரப்படுத்தவும் பயன்பட்டது.

இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை விக்ரம் சாராபாய் தலைமையில் 1960ஆம் ஆண்டுகளில் இந்திய விண்வெளி ஆராய்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டன. அதன் பிரிவுகளாக திரவ உந்து அமைப்பு (LPSC) திருவனந்தபுரம், சதீஸ்தவான் விண்வெளிமையம் SDSC-SHAR ஸ்ரீஹரிகோட்டா, விண்வெளி பயன்பாட்டு மையம்(SAC) அகமதாபாத், நேஷனல் ரிமோட் சென்சார் சென்டர்(NRSC) ஹைதராபாத் ஆகியவை அமைக்கப்பட்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி முடுக்கி விடப்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் சவுண்டிங் ராக்கெட் ரோகிணி 75 ((RH75) 1967-ஆம் ஆண்டு திருவனந்தபுரம் அருகே உள்ள தும்பலிலிருந்து ஏவப்பட்டது.

இது வானிலை வளிமண்டல ஆய்வுகளுக்காக ஏவப்பட்டது. இதன் எடை வெறும் 32 கிலோ மட்டுமே. 1975 ஆம் ஆண்டு இஸ்ரோ ஆர்யபட்டா என்ற தனது முதல் செயற்கோளை உருவாக்கி அதனை சோவியத் ரஷ்யாவில் இருந்து விண்ணில் செலுத்தியது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட் SLV3 ஆகும். இது 1980ஆம் ஆண்டு ரோகிணி செயற்கைக்கோளை வானில் செலுத்தப் பயன்பட்டது. இஸ்ரோ தனது முதல் INSAT வகை செயற்கைகோளை 1982ஆம் ஆண்டு ஏவியது. இது INSAT-1A என்று பெயரிடப்பட்டது. ஆனால் இது சுற்றுப்பாதையில் தோல்வி அடைந்தது.

இதனை இன்னும் கொஞ்சம் மேம்படுத்தி 1983ஆம் ஆண்டு INSAT-1B ஏவப்பட்டது. INSAT அமைப்பு, ஆசிய பசிபிக் பகுதிகளில் செயற்கைக் கோள்கள் தொலை தொடர்பு, தொலைக்காட்சி ஒளிபரப்பு, செயற்கைக் கோள், செய்தி சேகரிப்பு, வானிலை முன்னறிவிப்பு, சமூகச் செயல்பாடுகள், பேரிடர் மேலாண்மை, தேடுதல், மீட்பு நடவடிக்கை ஆகிய சேவைகளை வழங்கும் மிகப்பெரிய அமைப்புகளில் ஒன்றாகும்.

1988ஆம் ஆண்டு இஸ்ரோ IRS என்ற ரிமோட் சென்சிங் செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. பின்னர் PSLV போலார்சாட்டிலைட் லாஞ்சிங் வெஹிகிள், GSLV என்னும் ஜியோசின்க்ரோனஸ் சாட்டிலைட் லாஞ்ச் வெஹிகிள் GSLV MARK-lll அல்லது LVM போன்ற மூன்று வகையான ராக்கெட்டுகளை இஸ்ரோ உருவாக்கியது.

2008ஆம் ஆண்டு இஸ்ரோ சந்திரயான்-1ஐ விண்ணில் செலுத்தியது. 2014ஆம் ஆண்டு மங்கள்யானையும் ஏவியது. இதன் மூலம் இந்தியா தனது முதல் முயற்சியில் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் செயற்கைக்கோளை செலுத்துவதில் வெற்றி பெற்ற முதல் நாடு, முதல் விண்வெளி ஆசிய நிறுவனம் என்ற பெயர் இஸ்ரோவிற்குக் கிடைத்தது. INS-1C, ஆர்யபட்டா, ஆப்பிள், Rohini technology payload,YOUTHSAT போன்ற பல சிறிய வகை செயற்கைக் கோள்களை சோதனை நோக்கங்களுக்காக இஸ்ரோ ஏவி உள்ளது.

2016ஆம் ஆண்டு ஆகஸ்டில், இஸ்ரோ Scramjet (Supersonic combustion Ramjet) இன்ஜின் சோதனை நடத்தியது. இது ஹைட்ரஜனை எரிபொருளாகவும், வளிமண்டலக்காற்றிலிருந்து ஆக்ஸிஜனை ஆக்ஸிஜனேற்றமாகவும் பயன்படுத்துகிறது. 2017ஆம் ஆண்டில் இஸ்ரோ ஒரே ராக்கெட்டில் 104 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைத்தது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி மீண்டும் பாதுகாப்பாக அழைத்து வரும் திட்டம் ககன்யான் என்று அழைக்கப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம், இந்தியாவில் குறைந்த விலையில் விண்வெளி சேவைகளை வழங்குவது இலட்சியமாகும். IRS-1A என்ற ரிமோட் சென்சிங் செயற்கைகோள் தொடங்கி, பல தொலை உணர் செயற்கைக்கோள்களை இஸ்ரோ ஏவி உள்ளது.

இஸ்ரோ இந்திய விமானநிலைய ஆணையத்துடன் இணைந்து சிவில் விமானத் தேவைகளைப் பூர்த்தி செய்ய GPS Aided Geo Augmented Navigation அமைப்பை நிறுவியது. இதுபோல இஸ்ரோ பிராந்திய செயற்கைக்கோள் வழி செலுத்துதல் அமைப்பை நிறுவியது. கல்வி நிறுவனங்கள் சிறு செயற்கைக்கோள்களைத் தயாரிக்க ஆர்வம் காட்டி, கலாம் சாட்-V2, சத்திய பாமாசட், ஸ்வயம், ஜுக்னு போன்றவைகளைத் தயாரித்து இஸ்ரோவின் ராக்கெட்கள் மூலமாக விண்வெளியில் ஏவப்பட்டன.

இஸ்ரோவின் திட்டங்களும், பணிகளும் மிகவும் விரிவானது. விண்வெளிக்கான அணுகலை வழங்குவதற்கான ஏவுகணை வாகனங்களின் வடிவமைப்பு, தொலை தொடர்பு, தொலைக் காட்சி ஒலிபரப்பு தொடங்கி இந்திய ரிமோட் சென்சிங் சாட்டிலைட் திட்டம், சமூகப் பயன்பாடுகளுக்கான கண்காணிப்பு என ஏராளமான திட்டங்களோடு இஸ்ரோ செயல்படுகிறது. இதன் மூலம் இஸ்ரோவிற்கு ஏராளமான வருமானங்களும், வெளிநாடுகளின் செயற்கை கோள்களை ஏவுவதன் மூலம் ஏராளமான அன்னிய செலாவணியும் கிடைக்கிறது. இஸ்ரோ நிறுவனத்தையும், அதன் விஞ்ஞானிகளையும் மனம் நிறைந்த வாழ்த்துகளோடு பாராட்டுவோம்..!


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்