மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

டாக்டர் K.V.S. ஹபீப் முஹம்மத், தக்கலை பஷீருக்கு சீதக்காதி அறக்கட்டளையின் ஷெய்கு சதக்கத்துல்லாஹ் அப்பா விருது
ஹபிபுர் ரஹ்மான், September 16-30, 2023


சீதக்காதி அறக்கட்டளையின் இஸ்லாமிய ஆய்வு பண்பாட்டு நிலையம் சார்பில் ஷெய்கு சதக்கத்துல்லா அப்பா நினைவு சமய நல்லிணக்க விருது, தமிழ் இலக்கிய விருது வழங்கும் விழா கடந்த 26 ஆகஸ்ட் 2023 அன்று சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ் பேரவை டி.என். ராஜரத்தினம் கலையரங்கத்தில் நடந்தது.

இந்நிகழ்வை முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும் இஸ்லாமிய ஆய்வுப் பண்பாட்டு நிலையத்தின் தலைவருமான நீதியரசர் ஜி.எம்.அக்பர் அலீ தலைமை ஏற்று நடத்தினார். மூத்த ஊடகவியலாளர் திரு.வீரபாண்டியன், நடிகர் ராஜேஷ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். வக்ஃப் வாரியத்தின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.அப்துல் ரஹ்மான் விருது வழங்கிச் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் எம்.அப்துல் ரஹ்மான் பேசுகையில், ‘அருள்மறை குர்ஆன் முஸ்லிம்களை அவர்களின் பெயர்களை வைத்து அடையாளப்படுத்தவில்லை; இறைவனின் பக்கம் அழைப்பு விடுத்து, நல்லொழுக்கத்தோடு வாழ்ந்து, அதன் அடிப்படையிலேயே அவர்களுடைய நடவடிக்கைகளை அமைத்து, மற்றவர்களுக்கு அழகிய முன்மாதிரியாக வாழ்ந்து, மானுட சமூகத்திற்குப் பயனளிப்பவர்களே உண்மையான முஸ்லிமாக இருக்க முடியும் எனத் திருக்குர்ஆன் சொல்லிக் காட்டுகிறது.

மதம், ஜாதி, சமயம், இனம், மொழி, நாடு, மாநிலம் என்று எந்தப் பேதமையும் பார்க்காமல் மனிதனை மனிதனாகப் பார்த்து அவர்களுக்கு உதவி செய்து நற்செயல்கள் செய்து வாழ்கிற வாழ்வியல் தான் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய வாழ்வியல் முறையாக இருக்க முடியும்.’ என மானுடப் பணிகளின் சிறப்பையும் அதனைப் பாராட்டி விருது வழங்கும் சீதக்காதி அறக்கட்டளை நிறுவனத்திற்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மருத்துவரும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மானுட வசந்தம் நிகழ்ச்சியின் வழியாக சகோதர சமுதாய மக்களிடையே இஸ்லாம் குறித்த புரிதலை ஏற்படுத்தி வருபவருமான டாக்டர் கே.வி.எஸ் ஹபீப் முஹம்மது அவர்களுக்கு சமய நல்லிணக்கத்திற்கான விருதும், எழுத்தாளர் தக்கலை பஷீர் அவர்களுக்கு தமிழ் இலக்கிய விருதும் வழங்கப்பட்டது.

சீதக்காதி அறக்கட்டளையின் ஷெய்கு சதக்கத்துல்லாஹ் அப்பா நினைவு விருது 40 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதினை பல்வேறு சமூக சேவகர்களும் இலக்கியப் பெருந்தகைகளும் பெற்றுள்ளனர். 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்