இலக்கியம் ஒரு சமுதாயத்தின் வாழ்வில் மிக முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. தமிழின் சிறப்பிற்கு அதன் தொன்மை மட்டும் காரணம் அல்ல; அதன் இலக்கியச் செறிவு, ஆழமான புத்தகங்கள் இருப்பதுதான் தமிழுக்கு இத்தகைய சிறப்பு. உலகின் எந்தப் புரட்சியை உற்று நோக்கினாலும் அதன் பின் ஓர் அறிஞருடைய எழுத்துகள் இருக்கும்.
எந்தச் சமுதாயத்தில் இலக்கியவாதிகள் கொண்டாடப்படுகிறார்களோ அது உணர்வுள்ள, விழிப்புள்ள சமுதாயமாக இருக்கும். உதாரணத்திற்கு நம் பக்கத்து மாநிலமான கேரளாவையே எடுத்துக் கொள்ளலாம்! அன்றைய அரபுகளிடம் பல மூடநம்பிக்கைகள் இருந்த போதிலும் அவர்கள் இலக்கியத்திற்கு மிக முக்கியத்துவம் வழங்குபவர்களாக இருந்தனர். அவர்களின் எந்த நிகழ்ச்சியும் கவிதைகள் இன்றி நிறைவடையாது. எனவே இஸ்லாம் அங்கு திருக்குர்ஆனை கவிதை நயத்துடன் இறக்கியது. அதனைப் பார்த்து அவர்கள் திகைத்துப் போனார்கள். ஆகவே இலக்கியத்தின் வாயிலாக இஸ்லாம் வளர்ந்தது என்பதை நம்மால் பார்க்க முடிகிறது.
சமய நல்லிணக்கம்
உலகம் முழுவதிலும் நல்லிணக்கம் பாதிக்கப்படுவதற்கான முக்கியக் காரணம் ஒரு சமூகம், மதத்தைப் பற்றிய தவறான பொய்யான புரிதல் தான். அதனை நாம் அகற்றி விட்டாலே நல்லிணக்கத்திற்கான பெரும் பணியைச் செய்ததற்குச் சமம். ஆனால் எங்கே பார்த்தாலும் பொய்யான பரப்புரைகள்; அன்பைக் கொல்வதற்கு வெறுப்பு வணிகர்கள் பயன்படுத்தும் ஒரே ஆயுதம் பொய் தான்; அவர்கள் வெறுப்பையும் விஷத்தையும் பகைமையையும் உருவாக்கையில் உண்மையைப் பேச வேண்டியவர்கள் மௌனமாக இருக்கிறார்கள்.
அதற்காகத்தான் நாம் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மானுட வசந்தம் நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு பல சகோதர சமய மக்களும் தங்களது கண்ணோட்டம் முழுமையாக மாறிவிட்டது என்று கூறியது கண்கூடு. ஆகவே இந்தப் பணியை அனைத்து முஸ்லிம்களும் அமைப்புகளும் மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் இருக்கின்றன. அனைத்து பள்ளிவாசல்களிலும் ஆண்டிற்கு ஒரு முறை சுற்றியிருக்கும் சகோதர சமூக மக்களை அழைத்து விருந்தளித்து பெருநாள் சந்திப்பு நிகழ்வு ஒன்றை நடத்தினால் இதுபோன்ற துவேஷங்களை என்றோ துடைத்து எறிந்திருக்கலாம். ஆனால் முஸ்லிம்கள் இதில் அதிகக் கவனம் செலுத்துவதில்லை என்பதே வருத்தத்திற்குரிய விஷயம்.
அமெரிக்காவில் செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு அங்குள்ள முஸ்லிம்கள் எல்லா பள்ளிவாசல்களிலும் அனைத்து சமூக மக்களையும் அழைத்து ஓபன் ஹவுஸ் விவாதங்களை நடத்தினார்கள். பள்ளிவாசலுக்குள் என்ன நடக்கின்றது என்பதனை அனைவரையும் பார்க்க வைத்தார்கள். அது மட்டுமில்லாமல் அவர்களே கிறித்தவ தேவாலயங்களுக்கும் சென்று அங்கேயும் இஸ்லாத்தை எடுத்துரைத்தார்கள். அது அங்கிருந்த பதற்றத்தைத் தணித்தது. இது போன்ற முயற்சிகள் நம் மக்கள் மத்தியில் குறைவாக இருப்பதாகவே நான் கருதுகின்றேன். இதை அதிகம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
சமூக சேவை
சமூக சேவையிலும் முஸ்லிம்கள் அனைவருமே அதிகக் கவனம் செலுத்த வேண்டும். சிறந்த சமூக சேவகர்களுக்குப் பரிசுகளை அளிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அனைவரும் அந்தப் பணியில் ஈடுபட வேண்டும். மற்ற முஸ்லிம்களையும் அதற்குத் தூண்ட வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் சமூக சேவையிலே மிக பின் தங்கியுள்ளனர். முஸ்லிம்கள் ஒன்றும் கஞ்சர்கள் அல்ல; அவர்கள் தாராளமாக வழங்கக் கூடியவர்கள்; உலக அளவில் அதிக தர்மம் செய்யக்கூடியவர்கள் முஸ்லிம்களாகத் தான் இருக்கிறார்கள்.
இவை அனைத்தும் முறைப்படுத்தப்பட வேண்டும். அவர்கள் சில்லறை தர்மங்களாகக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். நோட்டுப் புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பது, பேரிடர் காலத்தில் நலப்பணிகள் செய்வது, சிறிய அளவில் ஏழைகளுக்கு உணவளிப்பது போன்ற சிறு சிறு உதவிகளோடு முடங்கிவிடுகின்றனர். ஆதரவற்ற பெண்களுக்கான இல்லங்கள், மருத்துவமனைகள் போன்றவை ஏற்படுத்தப்பட வேண்டும். முஸ்லிம்களில் எவ்வளவு செல்வந்தர்கள் இருக்கிறோம்.
ஆனால் நம்மால் அனைவருக்கும் உதவும் மருத்துவமனைகளை உருவாக்க முடியாதா என்ன? நான் ஒரு மருத்துவர் என்கிற அடிப்படையில் சொல்கிறேன். இங்கு அனைத்துமே வணிகமயமாக்கப்பட்டு விட்டது. இன்று கார்ப்பரேட் தனது மருத்துவமனையின் மருத்துவர்களுக்கு ஒரு மாதத்திற்கு இத்தனை அறுவை சிகிச்சைகள், இத்தனை சோதனைகள், ஸ்கேன்களைச் செய்ய வேண்டும் என இலக்குகளை நிர்ணயிக்கின்றது.
இப்படிப்பட்ட நிலையில் ஒரு நல்ல மருத்துவமனையை உருவாக்க வேண்டியது நம் அனைவர் மீதும் கடமையாகிறது. இதைக் குறித்து நம் செல்வந்தர்கள் சிந்திக்க வேண்டும். நாம் சேர்த்திருக்கின்ற செல்வங்களை நம்மாலும் அனுபவிக்க முடியாது. எடுத்துச் செல்லவும் முடியாது. எல்லா பணக்காரர்களுக்கும் நான் சொல்கின்ற செய்தி ‘பெறுவதில் அல்ல மகிழ்ச்சி; கொடுப்பதில் தான் மகிழ்ச்சி’. ஆனால் அவர்கள் இந்த உண்மையைத் தங்களது இறுதிக் காலத்தில் தான் உணர்ந்து கொள்கிறார்கள். ஆகவே நாம் கொடுப்பதிலேயே இன்பம் காண்கின்ற சமுதாயமாக மாற வேண்டும்.
இஸ்லாம் மனிதனின் கடமைகளாக இரண்டைச் சொல்கின்றது. இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமை; மனிதர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை. இதனடிப்படையில் முஸ்லிம் சமூகம் முதல் கடமையில் மிக உறுதியாகவும் இரண்டாம் பகுதியில் பலவீனமாகவும் இருக்கிறது என்பது மறுக்கவியலாதது. இறைவனிடம் நமக்கான கூலியைப் பெறுவதற்கு இபாதத் மட்டுமே போதும் எனக் கருதிக் கொண்டிருக்கிறோம். மனித சமூகத்திற்குச் சேவை செய்வதன் மூலம் அதனை விட மிகப்பெரும் கூலியைப் பெறுவதற்கான வாய்ப்பு நமக்கு உள்ளது என்பதனைப் புரிந்து கொண்டு அதிலே நாம் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.
எழுத்தாக்கம்: சே. ஹபிபுர் ரஹ்மான்