புது தில்லியிலுள்ள ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தலைமையகத்தில் நடைபெற்ற மாதாந்திர செய்தியாளர் சந்திப்பில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் துணைத் தலைவர் பேராசிரியர் பொறியாளர் சலீம், தேசியச் செயலாளர் மௌலானா ஷஃபி மதனி, தேசிய ஊடகச் செயலாளர் கே.கே.சுஹைல், தேசியச் செயலாளர் ரஹ்மத்துன்னிஸா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இக்கூட்டத்தில் நாட்டின் சில தீவிர பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தொடரும் மணிப்பூர் பிரச்னை, IPC, CrPC, சாட்சியச் சட்டம் (Evidence Act) ஆகிவற்றிற்கு மாற்றான புதிய குற்றவியல் சட்டங்கள், தரவு பாதுகாப்பு மசோதா (Data Protection Bill), இந்திய கல்வி நிறுவனங்களில் வெறுப்புப் பரப்புரை (இஸ்லாமோஃபோபியா), புதுதில்லியில் நடைபெறும் G20 உச்சி மாநாடு, இமாச்சலப் பிரதேச சுற்றுச்சூழல் பேரழிவுகள் போன்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
புதிய குற்றவியல் சட்டங்கள்
இந்தியாவின் குற்றவியல் நீதி அமைப்பை மேம்படுத்தும் நோக்கில் ஒன்றிய அரசு மூன்று புதிய மசோதாக்களை மக்களவையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மசோதாக்கள் IPC, CrPC, சாட்சிய சட்டம் (Evidence Act) ஆகியவற்றிற்கு மாற்றாக இருக்கும். ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் இந்த மசோதாக்களைக் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. குற்றவியல் நீதித்துறையின் உலகளாவிய நடைமுறைக்கு ஒத்துப் போகவில்லை என்று கருதுகிறது. ஒப்பீட்டளவில் குறுகிய காலத்திற்குள் பொதுமக்களின் கருத்தைப் பெறாமல் இதுபோன்ற விரிவான மாற்றங்களை அறிமுகப்படுத்துவது, நமது சட்டகட்டமைப்பைச் சீர்குலைக்க வல்லவை.
இந்தச் சட்ட அமலாக்க முகமைகள், சட்ட வல்லுநர்கள், பொதுமக்களுக்குச் சவால்களை எழுப்பி சட்ட அமைப்பில் சீர்குலைவை ஏற்படுத்தவே வழிவகுக்கும். இந்த மசோதாக்களில் உள்ள ஒரே நேர்மறையான அம்சம், கும்பல் தாக்குதல் குற்றத்திற்காக முதல் முறையாக மரண தண்டனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, அது தவிர 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.
இந்த மசோதாவில் ‘லவ் ஜிஹாத்’ என்ற பிரிவு உள்ளது. இது ‘திருமணத்திற்கு முன் உங்கள் அடையாளத்தை மறைப்பது’ என வரையறுக்கப்பட்டுள்ளது. இது தனிக்குற்றமாக மாற்றப்பட்டு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ‘லவ் ஜிஹாத்’ என்பது தவறானது, முஸ்லிம்களை ஆழமாகப் புண்படுத்துவதாகவும், இஸ்லாத்தின் முக்கியமான கொள்கையை இழிவுபடுத்துவதாகவும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கருதுகிறது. இது சமூக விரோதிகளால் உருவாக்கப்பட்டது. இது நமது சட்டத்தில் ஒரு சட்ட விதியாக இணைக்கப்படக்கூடாது. இந்தப் பிரிவு முஸ்லிம்களை வெகுவாக பாதித்து அவர்களைத் துன்புறுத்தவே பயன் படுத்தப்படும்.
புதிய மசோதா, IPCயின் 124ஏ பிரிவை ரத்து செய்தாலும், வேறு வடிவத்தில் தேசத் துரோகம் எனக்கூறி அப்பாவிகளை தண்டிக்க வழிவகை செய்துள்ளது. இது பழைய சட்டத்தைப் போலவே ஆபத்தானது என்றே ஜமாஅத்தே இஸ்லாமி கருதுகிறது. தனியாக மசோதாக்களை அறிமுகப்படுத்த வேண்டியதான் அவசியம் என்ன? மேற்கூறிய மூன்று மசோதாக்களால் எதிர்பார்க்கப்படும் மாற்றங்களைப் பிரதிபலிக்கும் வகையில் IPC, CrPC, சாட்சியச் சட்டத்தில் திருத்தம் செய்தால் நன்றாக இருந்திருக்கும். குற்றவியல் சட்டங்களை முற்றிலுமாக மாற்ற வேண்டிய அவசியமோ அவசரமோ இல்லை.
இதில் மொழித் திணிப்பின் ஓர் அங்கமும் உள்ளது. முன்மொழியப்பட்ட மூன்று புதிய சட்டங்களின் பெயர்கள் இந்தியிலே உள்ளன. இது 44% மக்களால் மட்டுமே புரிந்து கொள்ளப்படும். ஆனால் நாட்டின் 56% மக்கள் இந்தி பேசாதவர்கள்.
தீர்க்கப்படாத மணிப்பூர் பிரச்னை
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் பிரதிநிதிகள் குழு அண்மையில் மணிப்பூருக்குச் சென்றது. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் அகில இந்தியத் துணைத் தலைவர் பேராசிரியர் பொறியாளர் சலீம், தேசியச் செயலாளர் மௌலானா ஷஃபி மதனி, அப்துல் ஹலீம் ஆகியோர் அதற்குத் தலைமை தாங்கினர்.
மணிப்பூரில் இதுவரை 198 பேர் உயிரிழந்துள்ளனர். 65,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர். 14,000 குழந்தைகள் உட்பட பலர் அகதி முகாம்களில் வாழ்கின்றனர். அங்கு அரசுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை மதிப்பிடுவது கடினம். மணிப்பூர் கிட்டத்தட்ட இன அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. பள்ளத்தாக்குப் பகுதி மக்கள் மலைப்பாங்கான பகுதிகளுக்குச் செல்ல முடியாது. மலைப்பகுதியில் வசிக்கும் மக்கள் பள்ளத்தாக்குப் பகுதிக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது.
கலவரக்காரர்களால் வீடுகள், வணிக நிறுவனங்கள் முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. மணிப்பூர் முதலமைச்சரின் கொள்கைகளும் அறிக்கைகளும் அடையாள அரசியலைக் கடக்க முடியாத அவரது இயலாமையைக் காட்டுவதாகவே ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கருதுகிறது. தொடரும் இனப் பகைமையை முடிவுக்குக் கொண்டு வந்து நிரந்தர அமைதியை ஏற்படுத்த வேண்டும். மாநில அரசின் இயலாமையைக் கருத்தில் கொண்டு, இதில் ஒன்றிய அரசு தலையிட வேண்டும். உண்மையான நல்லிணக்கம், சமாதான முயற்சிகளைத் தொடங்க பல்வேறு இனத்தைச் சேர்ந்த சிவில் சமூகப் பிரதிநிதிகளை ஊக்குவிக்க வேண்டும். இந்திய கல்வி நிறுவனங்களில் இஸ்லாமோஃபோபியா இந்திய கல்வி நிறுவனங்களுக்குள் அதிகரித்து வரும் இஸ்லாமிய வெறுப்புச் சம்பவங்கள் கவலையளிக்கின்றன. அதிகாரத்தின் உயர்மட்டத்தில் உள்ளவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புக் குற்றங்கள், வெறுப்புச் செயல்களுக்கு எதிராகப் பேசாமல் மௌனமாக இருப்பது நமது நாட்டின் சமூகக் கட்டமைப்பிற்குக் கேடு விளைவிக்கும். சகிப்பின்மைக்கும், பிரிவினைக்கும் வழிவகுக்கும் என்று ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கருதுகிறது. பள்ளி, கல்லூரி வளாகங்களில் வேகமாகப் பரவி வரும் இஸ்லாமோஃபோபியாவை தேசத்தின் சமூகக் கேடாக அறிவித்து, அதன் அச்சுறுத்தலை முடிவுக்குக்
கொண்டுவர உரிய சட்டங்களை இயற்றி அதனைத் தடுக்க வேண்டும்.
பெரும்பான்மை சமூகத்தைச் சென்றடைவதற்கும், இஸ்லாம் தொடர்பான தவறான எண்ணங்களை நீக்குவதற்கும் முஸ்லிம்கள் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும். இஸ்லாமிய வெறுப்புக்கு எதிராக பொதுமக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதில் ஊடகங்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும்.
புதுதில்லி ஜி20 உச்சி மாநாடு
2023 செப்டம்பரில் புது தில்லியில் நடைபெறும் ஜி20 இறுதி உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் 43 உறுப்பு நாட்டுத் தலைவர்களையும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் வரவேற்கின்றது. ஜி20 தலைமை ஏற்க இந்தியா அமைத்த ‘வசுதேவ குடும்பம்’, ‘ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்’ எனும் கருப்பொருளை ஜமாஅத் பாராட்டுகிறது.
ஜி20யை இந்தியா நடத்துவது, தேசத்தின் வளர்ந்து வரும் பொருளாதார செல்வாக்கு, பருவநிலை செயல்பாட்டிற்கான வலுவான நடவடிக்கைகள், செயல்திட்டங்களின் முக்கியத்துவம், உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பில் அதன் பங்கு போன்றவை தெற்குலகின் குரலாக இந்தியா ஒலிப்பதை எடுத்துக்காட்டுகிறது.
ஜனநாயகக் குறியீடு, மனித வளர்ச்சிக் குறியீடு, உலகளாவிய பசிக் குறியீடு, உலகளாவிய உணவுப் பாதுகாப்புக் குறியீடு, மனித சுதந்திரக் குறியீடு, எளிதாக வணிகம் செல்வதற்கான குறியீடு, ஊழல் புலனாய்வுக் குறியீடு, உலகப் பத்திரிகை சுதந்திரக் குறியீடு போன்ற பல்வேறு குறியீடுகளில் நமது தரவரிசையை மேம்படுத்துவதில் நாம் தீவிரமாகக் கவனம் செலுத்த வேண்டும். பொருளாதார சமத்துவமின்மையைக் குறைப்பதற்கும், மத சிறுபான்மையினரைப் பாதுகாப்பதற்கும், பொது சுகாதாரம், கல்வியை மேம்படுத்துவதற்கும் அரசு அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். குடிமக்களின் நலனுக்கான முயற்சிகளை இரட்டிப்பாக்க ஜி20-ன் தலைமை அரசை ஊக்குவிக்க வேண்டும்.
புதிய தரவு பாதுகாப்பு (Data Protection Bill) மசோதா குறித்து ஜமாஅத் கவலை தெரிவித்துள்ளது. இது அரசாங்கத்தின் கண்காணிப்பை அதிகரிக்க வழிவகுக்கும். குடிமக்களின் தரவுகளின் தனியுரிமை சமரசம் செய்யப்படும். இமாச்சலப் பிரதேசத்தின் சுற்றுச்சூழல் பேரழிவுகள் குறித்தும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கவலை கொள்கிறது.