மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

விஜயகாந்த் விட்டுச் சென்ற செய்திகள்
வி.எஸ்.முஹம்மத் அமீன், 16 - 31 ஜனவரி 2024


விஜயகாந்த் விட்டுச் சென்ற செய்திகள்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் 2023 டிசம்பர் 28ஆம் நாள் இறைவனிடம் மீண்டார். விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டு டிசம்பர் 29ஆம் நாள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கோயம்பேட்டிலுள்ள தேமுதிக அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவரின் இறுதி நிகழ்வில் இலட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டதுடன் விஜயகாந்த் குறித்த நினைவுகளில் மிக முக்கியமான செய்தியொன்றை எல்லாருமே நினைவு கூர்ந்தார்கள்.

வாரி வழங்கும் உள்ளம் வேண்டும்

நடிகர், கட்சித் தலைவர் என்பதையும் தாண்டி அவர் எல்லாருக்கும் உதவுபவராக இருந்ததையும், எளிய முறையில் நண்பர்களுடன் பழகி உதவி வந்தததையும், அவருடைய அலுவலகத்திலே பசித்தோருக்கான உணவு எப்போதும் கிடைக்கும் என்பதையும் பலரும் பகிர்ந்து கொண்டார்கள். அவரிடம் எதாவது ஒரு வகையில் உதவி பெற்றவர்களின் பெரும் கூட்டமே அவரது இறுதி ஊர்வலத்தை மிகப் பிரமாண்டமாக்கியது.

வாழும் காலத்தில் நான்குபேருக்கு உதவுகின்ற குணம், பசித்தவருக்கு உணவளிக்கும் தன்மையை மக்கள் நன்றியோடு எப்போதும் நினைவு கூர்வார்கள். அந்த மனிதர் எல்லாராலும் கொண்டாடப்படுவார் என்ற செய்தியை விஜயகாந்த் அழுத்தமாக விட்டுச் சென்றுள்ளார். உதவுவதற்கு நடிகராக, கட்சித் தலைவராக இருக்க வேண்டுமென்பதில்லை. நம்மிடம் இருப்பதை நான்குபேருக்கு பகிர்ந்தளிக்கும் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். நாம் இந்த உலகை விட்டுப் பிரிந்து சென்ற பிறகு மக்கள் நமது நற்குணங்களால் நம்மை நினைவு கூர வேண்டும்.

துணிச்சல் மிக்க தலைவர் வேண்டும் மிகப்பெரும் அரசியல் ஆளுமைகளான கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் இருக்கும் காலத்திலேயே அரசியலில் நுழைந்து 27 இடங்களை வென்று எதிர்க்கட்சித் தலைவராக முத்திரை பதித்தவர் விஜயகாந்த். 

விஜயகாந்தின் கொள்கைத் தெளிவு, அரசியல் ஞானம் என்பதற்காக மக்கள் இந்த இடத்தை அவருக்கு வழங்கிடவில்லை. நடிகர் என்ற வெளிச்சம் இருந்தாலும் அது மட்டுமே காரணமும் அல்ல. தமிழ்நாடு ஒரு தலைவனுக்காக ஏங்கிக் கிடந்த சூழலில் அந்த வெற்றிடத்தில் சரியான நேரத்தில் வந்த மர்ந்தவர் விஜயகாந்த்.

எந்த ஒரு விசயத்தையும் ஒளிவற்றுப் பேசிவிடும் விஜயகாந்த் சட்டசபையில் ஜெயலலிதாவை எதிர்த்துப் பேசியதையும் மக்கள் ரசித்தார்கள். தங்களால் தலைவனாக ஏற்றுக் கொள்ளப்படுபவன் நேர்மையாக, அறம் சார்ந்து நிற்கவேண்டும், துணிந்து எதையும் பேச வேண்டும் என்ற விருப்பத்தை விஜயகாந்த் அறிந்தோ அறியாமலோ செய்கின்ற செயல்களின் வாயிலாக மக்கள் கண்டு கொண்டார்கள். ஆனால் அப்படியான தலைவராக இறுதிவரை விஜயகாந்தால் பரிணமிக்க முடியவில்லை.

கொள்கை அரசியலே வெல்லும் விஜயகாந்திற்குக் காலம் மகத்தான வாய்ப்பை வழங்கினாலும் அதற்கான தகுதியை அவர் வளர்த்துக் கொள்ளத் தவறி விட்டார். அரசியலில் கொள்கைத் தெளிவின்மையால் பாஜகவுடன் உறவு பாராட்டினார். சரியான தேர்தல் கூட்டணியை ஏற்படுத்தத் தவறி சறுக்கலான பாதையைத் தேர்ந்தெடுத்தார். கவர்ச்சி அரசியல் ஒளி இழந்துபோகும் என்ற செய்தியையும் விஜயகாந்த் விட்டுச் சென்றுள்ளார்.

கொள்கைத் தெளிவு, இரண்டாம் கட்டத்தலைவர்கள், கட்சி கட்டமைப்பு என்று எதிலும் கவனம் செலுத்தாததினால் அவருடைய கட்சி காலப்போக்கில் காணமல்போகும் வாய்ப்பு உள்ளது. இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களை வைத்து விஜயகாந்த் மனைவி பிரேமலதா கனவு காண்பாரானால் அந்தக் கனவு வெகு சீக்கிரத்தில் விடிவதையும் அவர் காண்பார்.

தீவிரவாதச் சித்திரம்

முஸ்லிம்கள் குறித்த வாழ்வியல் பதிவு நூறாண்டுகாலத் தமிழ்ச் சினிமாவில் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை. பதியப்பட்ட அத்தனை பதிவுகளும் பிழையானவை. முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாக சித்திரித்ததில் விஜயகாந்த் படங்களுக்கும் பெரும்பங்கு உண்டு. அறியாமல் செய்தார், இருப்பதைத் தானே சொன்னார், இயக்கு நரின் கதைக்கு அவர் எப்படிப் பொறுப்பாவார் என்ற நியாயங்களை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. விஜயகாந்த் இந்த விசயத்தில் மாபெரும் பிழையை நிகழ்த்தியிருக்கின்றார். ஆனாலும் அவர் முஸ்லிம்களின் மீதோ, இஸ்லாத்தின் மீதோ பொது வெளிகளில் வெறுப்பை உமிழும் வன்மனம் கொண்டவரல்ல.

இப்ராஹிம் ராவுத்தர், லியாகத் அலீ கான், எம்.ஏ.ஹாஜா போன்றோர் அவரைச் சுற்றியிருக்க அவர்களோ திரைத்துறையில் அவருக்கு நெருக்கமாக இருந்தவர்களோ இந்தப் பிழையை அவரிடம் சுட்டிக் காட்டியதாகத் தெரியவில்லை. எனவே இந்த போலிக்கட்டமைப்பில் எல்லாருக்கும் பங்கிருக்கிறது. விஜயகாந்த் அதற்கு விதிவிலக்கானவரில்லை.

ஊடக வியாபாரம்

அனைத்து தொலைக்காட்சிகளும் இரண்டு நாள்கள் விஜயகாந்த் குறித்த நினைவலைகளையும், அவரது இறுதி நிகழ்வுகளையும் தொடர்ந்து ஒளிபரப்பின. அது விஜயகாந்த் மீதான பேரன்பினால் அல்ல. அது ஒரு வியாபாரத் தந்திரம். அந்த இரு நாள்களில் நாட்டில் நடந்த எத்தனையோ நிகழ்வுகள் பதிவற்றுப்போயின. விஜயகாந்திற்குக் கிடைத்த இந்த ஊடக வெளிச்சம் நேர்மையும், எளிமையும் கொண்டு வெளிச்சத்திற்கு வராதவர்களுக்குக் கிடைக்குமா என்றால் இல்லை. 

இந்திய விடுதலைக்காக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுடன் இணைந்து போராடி தூக்கு மேடையை முத்தமிடத் துணிந்த விடுதலைப் போராட்ட வீரர் அமீர் ஹம்ஸா அண்மையில் மறைந்த போது அவர் குறித்த பெட்டிச் செய்திகூட இல்லை. அரசு மரியாதையும் இல்லை. அவரின் இறுதி நிகழ்வு இராயப்பேட்டை மையவாடியில் சில நூறு நண்பர்களுடன் முடிந்துபோனது.

தமிழ்நாடு அரசியல், கலை வரலாற்றில் அழுத்தமான தடம் பதித்துச் சென்றுள்ளார் விஜயகாந்த். அவரின் குடும்பத்தினருக்கும், தேமுதிகவினருக்கும், அவர் சார்ந்த கலையுலக நண்பர்களுக்கும் நமது இரங்கல்.  


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்