அண்மையில் நயன்தாரா நடிப்பில் வெளியான அன்ன பூரணி திரைப்படம் நெட்ஃபிலிக்ஸ் (Netflix) ஓடிடி தளத்திலிருந்து நீக்கப்பட்டது. சங்பரிவார்கள் தாம் நினைத்ததைச் சாதித்திருக்கிறார்கள். இதுவொரு தவறான முன்னுதாரணத்தைக் காட்டியிருக்கிறது. இதைவிடக் கொடுமை படத்தின் கதாநாயகி வருத்தம் தெரிவித்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று தலைப்பிட்டு அறிக்கை வெளியிட்டிருப்பதுதான்.
இந்தச் சர்ச்சையைத் தொடர்ந்து, தாங்கள் விரும்பாத திரைப்படம், புத்தகம் அல்லது ஒரு சாதாரண சமூக ஊடகப் பதிவு என எதுவாக இருந்தாலும் ஒழித்துவிடலாம் என்ற தைரியமும், மிதப்பும் ஃபாசிஸவாதிகளிடம் ஏற்பட்டிருப்பதைக் காண முடிகிறது.
திரைப்படத்தின் கதை என்ன? ஏன் வகுப்புவாதிகள் அதை எதிர்க்கிறார்கள்? மோசமான படங்களுக்கே எந்தத் தடையும் இல்லாதபோது ஏன் இந்தப் படத்துக்குத் தடை என்பதை நாம் அறிய வேண்டியுள்ளது.
கடந்த டிசம்பர் 1 அன்று நடிகை நயன்தாராவின் 75ஆவது படமாக அன்னபூரணி வெளியானது. திரையரங்கில் வெளியான இந்தப் படம் சுமார் ஒரு மாதம் கழித்து டிசம்பர் 29 நெட்ஃபிலிக்ஸில் வெளியிடப்பட்டது. அதனையடுத்து அதற்கு எதிராக சமூக ஊடகத்தில் கடும் எதிர்ப்புக் கிளப்பியது.
ஜனவரி 8ஆம் தேதி ‘ஹிந்து ஐடி செல்’ எனும் அமைப்பை உருவாக்கிய பாஜக உறுப்பினர் ரமேஷ் சோலங்கி என்பவர் மும்பை காவல்துறையில் இந்தப் படத்துக்கு எதிராக FIR பதிவு செய்தார். இந்தப் பின்னணியில்தான் படம் ஓடிடி தளத்திலிருந்து நீக்கப்பட்டது.
படத்தின் கதை
கதாநாயகி அன்னபூரணி சிறு வயதிலிருந்தே பெரிய சமையல் கலைஞராக (CHEF) வேண்டும் என்ற ஆசை, இலட்சியம் கொண்டவர். சாப்பிடும் உணவின் ருசியை அதிகமாக உணரும் திறன் அவருக்கு இருக்கும். எந்த உணவைக் கொடுத்தாலும் கண்களைக் கட்டிக்கொண்டே அதனை என்னவென்று சொல்லும் சாமர்த்தியம் கொண்டவர்.
நாயகியின் தந்தை ஸ்ரீரங்கம் கோவிலில் பிரசாதம் தயாரிப்பவர். அதனால் அவர் அசைவத்தை வெறுக்கும் பிராமணராக இருக்கிறார். தன் மகள் Chefஆவதற்கு மாமிசத்தைத் தொட வேண்டியிருக்கும் என்பதால் அதைக் கடுமையாக எதிர்க்கிறார்.
கதாநாயகி படித்து முடித்து வேறு வேலைக்குச் சென்றாலும் அதில் அவருக்குத் திருப்தி கிடைக்கவில்லை. Chefஆக வேண்டும் என்ற ஆவல் குறையவில்லை. அதுவும் அவர் தன் முன்மாதிரியாக நினைக்கும் Chef ஆனந்த் சுந்தர்ராஜனைப் போல் ஆக நினைக்கிறார். அதனால் வீட்டில் MBA படிப்பதாகக் கூறிவிட்டு ஹோட்டல் மேனேஜ் மண்ட் படிப்பில் சேர்கிறார்.
ஒருகட்டத்தில் இது கதாநாயகியின் தந்தைக்குத் தெரிய வந்தவுடன் அவர் அன்னபூரணிக்குத் திருமணம் செய்து வைக்க முயல்கிறார். ஆனால் தன் பாட்டி, தாயின் உதவியுடன் வீட்டிலிருந்து வெளியேறி சென்னை போய்விடுகிறார் அன்னபூரணி.
அங்கே ஒருவழியாக தன் முன்மாதிரியாகக் கருதும் Chef ஆனந்த் சுந்தர்ராஜன் இருக்கும் உணவகத்திலேயே வேலைக்குச் சேர்ந்துவிடுகிறார். அதற்குப் பிறகு அவருக்கு என்ன மாதிரியான தடைகளெல்லாம் வருகின்றன. அவற்றை எப்படி முறியடிக்கிறார், இந்தியாவிலேயே பெரிய Chefஆக வேண்டும் என்ற அவரது கனவு நினைவானதா? இல்லையா? என்பவையே படத்தின் மொத்தக் கதை.
கதை முழுக்க கதாநாயகிக்குப் பக்கபலமாக, ஆதரவாக இருக்கும் முக்கியக் கதாபாத்திரம்தான் ஃபர்ஹான் (ஜெய்). அதுதான் பாஜகவினருக்குக் கடும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கின்றது. பொதுவாக ஹிந்து கதாநாயகன் முஸ்லிம் கதாநாயகியை வைத்து ஏகப்பட்ட திரைப்படங்கள் வந்துள்ளன. பாம்பே, ஹே ராம் உள்ளிட்ட பலவற்றை உதாரணமாகக் கூறலாம். இதனை அப்படியே தலைகீழாக முஸ்லிம் கதாநாயகன் இந்து கதாநாயகி என வைத்து திரைப்படங்கள் வந்துள்ளனவா என்பது கேள்விக்குறியே.
அன்னபூரணி படத்தைத் தடை செய்யும் அளவிற்குக்கோ, ஓடிடி தளத்திலிருந்து நீக்கும் அளவிற்கோ அதில் எந்தப் பிரச்னையும் இல்லை.
ஒரு மோசமான, தீய அரசியல் செயல் திட்டத்துடன், வெறுப்புப் பரப்புரைக்காகவே எடுக்கப்பட்ட காஷ்மீர் ஃபைல்ஸ், கேரளா ஸ்டோரி போன்ற விஷமத்தைக் கக்குகிற படங்கள் எளிமையாக வெளிவர முடிகிற போது, தீய நோக்கங்கள் ஏதுமில்லாத அன்னபூரணி போன்ற சாதாரண படங்கள் வெளிவர முடியவில்லை என்பது, எந்த அளவுக்கு நம்முடைய நாட்டுச் சூழல் வகுப்புவாத மயமாகி இருக்கின்றது என்பதை வெளிக்காட்டுகிறது.
ஃபாசிஸ்டுகள் படத்தை எதிர்ப்பதற்குச் சொல்லும் காரணங்கள்
முதல் விஷயம் கதாநாயகியின் நண்பர் ஃபர்ஹான், வால்மீகி ராமாயணத்தில் இராமர் மாமிசம் சாப்பிட்டதாகக் குறிப்பிடுவார்.அப்போது, அதைச் சாப்பிடுவதோ, சாப்பிடாமல் இருப்பதோ உங்களுடைய விருப்பம்; ஆனால் அதைச் சமைப்பது எந்தத் தப்பும் இல்லை என்று சொல்வார்.
இராமர் மாமிசம் உண்டதாகச் சொல்லுவதைப் பிராமணர்களே மறுக்க முடியாது. புலால் உண்பதை அவர்கள் எதிர்க்கத் தொடங்கியதே ஒருவகையான அரசியல் தான்.
அன்னபூரணி படத்தில் ஃபாசிஸ்டுகள் எதிர்க்கும் இன்னொரு காட்சி, தனது மகள் ஃபர்ஹானை காதலிப்பதாகப் பூரணியின் அப்பா சந்தேகப்படுவார். ‘எனக்கு மாப்ள பார்த்தா பர்ஹானை மாதிரிதான் கேட்பேன்; ஆனா பர்ஹான் தான் வேணுமான்னு கேட்டா எனக்குத் தெரியாது’ என ஒரு வசனம் வரும்.
தனக்குச் சின்ன வயதிலிருந்து ஆதரவாக இருக்கும் பர்ஹான் கதாபாத்திரத்தை அவர் அப்படிச் சொல்லுவார். படம் லவ் ஜிஹாதை ஆதரிப்பதாக வகுப்புவாதிகள் கதற இதுதான் காரணம்.
படத்தைப் பொறுத்தவரையில் காதலுக்கு முக்கியத்துவம் கிடையாது. தன் இலட்சியத்தை நோக்கி கதாநாயகி அன்னபூரணி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிப் போவதைத்தான் படத்தில் காட்டுவார்கள். கதாநாயகிக்கும் தனது இலக்கைத் தவிர எதுவும் கவனத்திலே இருக்காது.
இறுதிக் காட்சியில் பிரியாணி சமைக்கும் சூழல் வரும்போது, பர்ஹானின் அம்மாவைப் போல் தொழுது விட்டு கதாநாயகி சமைப்பார். அந்தக் குறிப்பிட்ட காட்சியில் கூட அவர் ‘பிரியாணிக்கு ஏது சார் ஜாதி மதமெல்லாம். பிரியாணி ‘Biriyani is an emtin’ என்று சொல்வார். படத்தின் இந்தப் பகுதியையும் இவர்கள் பிரச்னையாக்கி உள்ளார்கள்.
அன்னபூரணி படத்திற்கு எதிராகப் புகார் பதிவு செய்த ரமேஷ் சோலங்கி இதற்கு முன்னாலும் கூட இப்படியான சில சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கின்றார். சமூக ஊடகத்தில் பதிவிடுபவர்களின் மேல், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தின் மீதும் புகார் தெரிவித்து பிறருக்குத் தொல்லை கொடுப்பதை பிழைப்பாகவே வைத்திருக்கிறார் போலும் இந்த இடத்தில் நமக்குச் சில கேள்விகள் வரக்கூடும். ஒரு தமிழ்ப்படத்தை இப்படி வகுப்புவாதிகளால் காலி செய்ய முடிகிறது என்றால் அது சொல்லும் செய்திதான் என்ன? மிகப் பிரபலமான நடிகை நயன்தாரா போன்றவருக்கே இந்நிலை என்றால் வகுப்புவாதம், ஃபாசிஸம், வைதீக நடைமுறைகள் பற்றி எல்லாம் இந்தியாவில் இனி பேச முடியுமா என்கிற ஐயத்தை ஏற்படுத்துகிறது.
இந்தச் சூழலிலும் தமிழ் நாட்டின் திரைப் பிரபலங்கள் மூச்சே விடாமல் இருக்கின்றனர். இயக்குநர் வெற்றிமாறன் மட்டும் எதிர்க்குரல் எழுப்பினார். ஒரு பத்திரிகையாளர் X தளத்தில் முன்னணி நடிகர்களின் கள்ள மௌனத்தை அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
ரஜினிகாந்த் தன் அடுத்த படமான லால் சலாமில் கூட முஸ்லிம் கதாபாத்திரத்தில் நடிப்பதாகச் சொல்கிறார்கள். அவர் அமைதியாக இருக்கிறார். தன்னை நாத்திகர், பகுத்தறிவுவாதி, அறிவுஜீவி, கம்யூனிஸ்ட் என்றெல்லாம் சொல்லிக் கொள்ளும் கமல்ஹாசனும் குரல் கொடுக்காமல் இருக்கிறார். அரசியலுக்கு வர ஆர்வத்தை வெளிப்படுத்தும் விஜயும் அமைதியாக இருக்கிறார். உதயநிதியும் கூட அமைதியாகத் தான் இருக்கின்றார்.
இது குறித்து யாராவது வாய் திறக்கிறார்களா என்று பார்ப்போம். இப்படி எளிமையாக சங்பரிவார்கள் தாம் நினைப்பதையெல்லாம் செய்ய அனுமதிப்பது யாருக்கும் நல்லதில்லை.