47ஆவது ஆண்டாக சென்னை புத்தகக் காட்சியை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கும் பபாசி (BAPASI) குழுவினருக்கு எனது வாழ்த்துகள். புத்தகக் காட்சியின் வாயிலாக மக்களுக்கு மானுட வசந்தத்தை பபாசி தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஒரு மனிதன் தான் ஒரு வசந்தமாக இருப்பதுடன் மற்றவர்களுக்கும் வசந்தத்தைத் தரக்கூடியவனாகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட வசந்தத்தோடு மனிதர்கள் வாழத் தேவையான பண்புகளை இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.
போதும் என்ற மனம்
எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை. குடும்பத்தினருக்கு மட்டுமின்றி எள்ளு, கொள்ளுப் பேரன்களுக்கு வேண்டிய வரை சம்பாதித்து வைத்துக் கொண்டிருக்கின்றோம். ஒரு கோடி இரண்டு கோடி அல்ல, கணக்கில்லாமல் ஆயிரக்கணக்கில் கோடிகளைச் சம்பாதிக்க ஆசைப்படுகின்றோம். பல கோடிகளை ஊழல் செய்து மாட்டிக்கொண்ட குற்றவாளியிடம் நீதிபதி ‘ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு உணவு வேண்டும், ஒரு மாதத்திற்கு, ஓர் ஆண்டிற்கு எனக் கணக்குப் போட்டுப் பார். சொற்ப அளவில் தேவைப்படும் இந்தப் பணத்திற்காக ஏன் கோடிக்கணக்கில் ஊழல் செய்கிறாய்? 4500 கோடி, 5000 கோடியை உன்னால் சாப்பிட முடியுமா?’ என்று கேட்டார்.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘வயது ஆக ஆக மனிதனுக்கு இரண்டு ஆசைகள் அதிகரிக்கின்றன. ஒன்று இன்னும் சில காலம் வாழ வேண்டும். அடுத்து பணம் அதிகம் வேண்டும்’ என்ற ஆசை. மற்றுமொரு நபிமொழி இவ்வாறு கூறுகிறது: ‘ஆதமுடைய மகனுக்கு இரண்டு ஓடை நிறையத் தங்கம் இருந்தாலும் மூன்றாவது ஓடை நிறையத் தங்கம் வேண்டும் என்று ஆசைப்படுவான்.’
சொல்லுக்கேற்ற செயல்
மனிதர்கள் சொல்வது ஒன்று, செயல்படுவது வேறு. சொன்னபடி நடக்க வேண்டும். செய்பவற்றைச் சொல்ல வேண்டும். அதுதான் நிதர்சனம். எதைச் சொல்கிறோமோ அதைத்தான் செய்ய வேண்டும். மனிதர்கள் அதிகமாகப் பொய் சொல்லக்கூடியவர்களாக இருக்கின்றார்கள். இல்லாத பண்புகளைச் சொல்லிப் புகழக்கூடியவர்களாக இருக்கின்றார்கள். உண்மையைப் பேச வேண்டும். அதற்கென்று ஒரு மொழி இருக்கிறது. அதுவே இயற்கையின் இயல்பு.
வசந்தத்தை விரும்பக் கூடியவன் தன்னை மாற்றி மற்றவர்களையும் மாற்றத் தான் பார்ப்பான். ‘ஒரு தாய் தன் மகனைக் கையை மூடிக் கொண்டு அதில் பேரீச்சம் பழம் இருப்பதாகச் சொல்லி அழைக்கிறார். இதனைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணிடம், ‘பேரீச்சம் பழம் இல்லாமல் வெறும் கையை மூடிக் கொண்டு உன் மகனைக் கூப்பிட்டால் பொய் சொல்வதாக இறைவன் உன் மீது ஒரு பொய்யை எழுதுவான்’ என்றார்கள்.
அதனால் நாம் சொல்லக்கூடிய சொல் உண்மையானதாக இருக்க வேண்டும். உண்மையாகச் செயல்படும் போது தான் ஒரு மனிதன் வசந்தத்தின் வாயிலை அடையக்கூடியவனாகவும் அதனை நுகரக் கூடியவனாகவும் இருப்பான்.
வசந்தங்களைத் தடுக்கும் பொறாமை
என் வீட்டில் அதிகம் வெள்ளம் வந்துவிட்டது. அவன் வீட்டில் மிகக் குறைவாகத் தான் வந்திருக்கிறது. அதாவது எப்போதுமே அடுத்தவனைப் பார்த்து பொறாமைப்படுவது தான் பலரது வழக்கமாக இருக்கிறது. எனக்குக் கிடைக்காதது அவனுக்கும் கிடைக்கக்கூடாது. நமக்குக் கிடைக்காத விஷயம் அடுத்த வீட்டுக்காரனுக்கு எளிதில் கிடைத்துவிட்டதே! என்று பொறாமைப்படுவோர் உண்டு.
‘உனக்கும் கீழே ஆயிரம் கோடி’ எனக் கண்ணதாசன் பாடி இருக்கிறார். அனுதினமும் இறைவனை வணங்கக்கூடிய ஒருவருக்குச் செருப்பு வார் அறுந்து விட்டது. உடனே அவர் ‘இறைவா..! உன்னைத்தானே வணங்குகின்றேன். எனக்கு ஏன் இந்தச் சோதனை’ என்று புலம்புகிறார். வணங்கி விட்டுத் திரும்பும் போது இரண்டு கால்கள் இல்லாத மனிதனைப் பார்த்ததும் இறைவனுக்கு நன்றி சொல்கிறார். இதுவே மானுட வசந்தத்திற்கான முக்கியச் சிந்தனையாகும்.
வசந்தத்தைத் தடுக்கும் ஆணவம், அகந்தை நான் தான் பெரியவன். என் ஸ்டேட்டஸ் என்ன? என்னுடைய மதிப்பு உங்களுக்கு என்ன தெரியும்? உங்களிடம் என்ன இருக்கின்றது? என்பன போன்ற எண்ணங்கள் அழிவுக்கு இட்டுச் செல்லும். ஆணவம் பிடித்தவனுக்குக் கண்டிப்பாகத் தண்டனை வழங்கப்படும் என்பதே இறை நியதி.
நிம்மதியையும் வசதி வாய்ப்பையும் குழப்பிக் கொள்ளக்கூடாது. எல்லாம் இருந்தும் சிலருக்கு நிம்மதி இல்லை. எத்தனை ஆயிரம் இருந்தும் பலருக்கு மன அமைதி இல்லை. இறைவன் தந்த அருட்கொடைகள் பல. அந்த வளங்களை நாமும் கண்டு மற்றவர்களுக்கும் பயன் தரக்கூடியதாக மாற்ற வேண்டும்.
தர்மம் செய்யுங்கள்
‘தர்மம் செய்கின்ற அளவுக்கு என்னிடம் வசதி வாய்ப்பு இல்லை. என்ன செய்வது?’ என நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் கேட்டார். அதற்கு பெருமானார்(ஸல்) ‘உடல் உழைப்பால் உதவி செய்யுங்கள். அதுவும் முடியாது என்றால் மற்றவருக்கு ஆறுதல் சொல்லுங்கள், அதுவும் முடியாது எனில் பேசாமல் மௌனமாக இருங்கள். அதுவே மிகப்பெரிய தர்மம்’ என்று பதிலளித்தார்கள்.
மனிதர்கள் வசந்தத்தின் அடிப்படைகளைப் புரிந்து கொண்டு தாமும் மகிழ்ச்சியாக வாழ்ந்து, பிறரையும் மகிழ்வுடன் வாழ வைக்கக் கூடியவர்களாக இருத்தல்வேண்டும்.
தொகுப்பு: சாந்த் உஸ்மானி