மெய் நீதிமன்றம், விசாரணைக் கூண்டில் முகலாய மன்னர் பாபர் நிற்கிறார். மெய் நீதிபதியாக இருந்து விசாரணை நடத்துகிறது. பாபர் பதில் அளிக்கிறார்.
‘தங்கள் பெயர்..?’
‘ஜலாலுதீன் முஹம்மது பாபர்’
‘தங்களது பரம்பரை பற்றிக் கூறுவீர்களா..?’
‘தாய்வழி செங்கிஸ்கானையும் தந்தை வழி
தைமூரையும் சேர்ந்தவன் நான்’
‘எதற்காக இந்தியா மீது படையெடுத்தீர்..?’
‘எனக்கு இந்தியா மீது படை எடுத்து வரும் எண்ணமே இல்லை. என்னை இங்குள்ள பல பிரபுக்கள் தான் அழைத்தனர். அதில் பல இந்து மன்னர்களும் அடங்குவர். இப்ராஹிம் லோடி என்ற முஸ்லிம் மன்னரின் ஆட்சியை அகற்றவே இந்து மன்னர்களால் அழைக்கப்பட்டேன்.’
‘முகலாய அரசை ஏன் நிறுவினீர்?’
‘நாடு பிடிக்கும் கொள்கை என்பது அந்தக் காலகட்டத்தில் அனைத்து மன்னர்களும் பின்பற்றிய ஒன்று. அதைத்தான் நானும் செய்தேன்.’
‘நீங்கள் அந்நியர் என்று சித்திரிக்கப்படுகிறீரே..?’
‘உங்களுடைய அகன்ற பாரதம் என்ற பார்வையில் பாருங்கள் நானும் இந்தியனாகவே தெரிவேன்.’
‘சரி விஷயத்துக்கு வருவோமா..! எதற்காகக் கோயிலை இடித்து மஸ்ஜித் கட்டப்பட்டது?’
‘நீதித்துறை தான் ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கை. எனவே தான் நான் இங்கு நின்று பதில் அளிக்கிறேன். என் வாதத்தைக் கேளுங்கள் முடிவில் தீர்ப்பு அளியுங்கள். 1526 பானிபட் போருக்குப் பிறகு நான் மேலும் சில போர்களினால் ஓர் அரசை நிறுவினேன். எனது காலத்தில் கட்டிட வளர்ச்சி கூட பெரிதாக இல்லை. எனது படை வீரர்கள், மக்களுக்காக இறைவனை வழிபட மஸ்ஜித் கட்டப்பட்டது. இப்போது இடிக்கப்பட்ட மஸ்ஜித் 1528 29 காலகட்டத்தில் என் தளபதி மீர்பாகி என்பவரால் கட்டப்பட்டது. என்னைப் பற்றி விவரங்கள், நான் இந்தியாவில் பார்த்தது எனப் பல தரப்பட்டவற்றைச் சுயசரிதையாக எழுதியுள்ளேன். அதன் பெயர் பாபர் நாமா. அதை நான் எவ்வித விருப்பு வெறுப்பு இன்றி அப்படியே எழுதியுள்ளேன். அது இப்போது தமிழில் கூட கிடைக்கிறது. வாய்ப்புக் கிடைத்தால் படியுங்கள்.’
‘நாங்கள் ஏன் படிக்க வேண்டும்..?’
‘ஒருவேளை கோயிலை இடித்துக் கட்டப்பட்டிருந்தால் அது பெரிய நிகழ்வு அல்லவா? அது அந்தப் புத்தகத்தில் இடம் பெற்று இருக்குமே. முதலில் கோயில் ஒன்று அங்கு இருந்தால் தானே அதை இடிப்பதற்கு’.
‘ஒருவேளை நீங்கள் எழுதாமல் விட்டிருந்தால்?’
‘நல்ல கேள்வி..! சரி நீங்கள் தலையில் தூக்கி வைத்துக் கொள்கிறவரும் இஸ்லாமிய மார்க்க விஷயத்தில் மோதல் போக்கைக் கடைப்பிடித்தவருமான அக்பரின் வரலாற்றைக் கூறும் அயனி அக்பரியில் கூட எந்தக் குறிப்பும் இல்லையே? சரி அதை விடுங்கள். இராமாயணத்தை ஹிந்தியில் எழுதிய துளசி தாசர் தெரியுமா? அவர் எனது ஆட்சிக் காலத்தில் அயோத்தியில் வாழ்ந்தவர். அவர் இராமர் மீது எல்லையற்ற அன்பு கொண்டவர். அவர் ஏன் அதனைப் பதிவு செய்யவில்லை? ஒரு வேளை நான் கோயிலை இடித்து இருந்தால் ‘கோயில் இடிப்புப் படலம்’ என்றே அதை எழுதி இருப்பாரே’.
‘வேறு ஏதாவது கூற விரும்புகிறீர்களா?’
‘ஆம்..! எனது ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த சீக்கிய மத குருவான குருநானக் என்னைக் கடுமையாக விமர்சிப்பவராக இருந்தார். ஆனால் அவர் கூட எந்த ஓர் இடத்திலும் கோயிலை இடித்துத் தான் மஸ்ஜித் கட்டப்பட்டது என்று குறிப்பிடவே இல்லை. மேலும் எனது மகனான ஹுமாயூனுக்கு எழுதிய உயிலில் பிற மக்களின் வணக்கத்தலங்களை ஒரு போதும் இடித்து விடாதே என எழுதி உள்ளேன். அந்த உயில் இன்றும் டெல்லி அருங்காட்சியகத்தில் உள்ளது’.
‘வேறு ஏதாவது ஆதாரம் உள்ளதா?’
‘நிறைய ஆதாரங்கள் உள்ளது. இந்துவாகப் பிறந்த கபீர்தாசர் ஒரு முஸ்லிமால் வளர்க்கப்பட்டார். சிறந்த இராம பக்தராக இருந்தார். அவரும் கோயில் இடிக்கப்பட்டதாக எந்தப் பதிவும் செய்யவில்லை. வரலாற்றை ஊன்றிக் கவனித்தால் ஜைன மதத்தைச் சேர்ந்த நான்கு தீர்த்தங்கரர்கள் இங்கு பிறந்துள்ளதை அறிய முடியும். கௌதம புத்தர் அயோத்தியில் 16 ஆண்டுகள் தங்கி இருந்துள்ளார். பாகியான், யுவான் சுவாங் போன்ற வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புகளில் கூட இது இல்லை.’
‘பாபர் அவர்களே! நீங்கள் தரும் ஆதாரங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியவை தான் ஆனால்..?’
‘பொறுங்கள்.. இன்னும் ஒன்றையும் சொல்லி முடித்து விடுகிறேன். பாபர் மஸ்ஜிதை இடித்த பிறகு அங்கிருந்த கோயில் எந்த வகைக் கோயில் என்பதை அறிவதற்காகச் செய்யப்பட்ட அகழாய்வில் அங்கு கோயில் இருந்தது நிரூபிக்கப்படவில்லை’.
மேலும் என பாபர் ஏதோ சொல்ல முயல..
மெய் நீதிபதி தன் தீர்ப்பை வாசிக்கத் தொடங்கியது.
‘பாபர் மஸ்ஜித் இடிப்பு தற்செயல் நிகழ்வல்ல என்பது இதன் மூலம் தெரிகிறது. மஸ்ஜித் இடிப்பைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில் இந்தியா முழுவதும் குஜராத்தில் 246, மத்தியப் பிரதேசத்தில் 120,
மகாராஷ்டிராவில் 259, அசாமில் 100, மேற்கு வங்கத்தில் 32, உத்திரப் பிரதேசத்தில் 201, ராஜஸ்தானில் 48, பீகாரில் 24, கேரளாவில் 12, ஆந்திராவில் 12, தமிழ்நாட்டில் 2 பேரும் உயிரிழந்திருக்கின்றார்கள். குற்றம் பாபர் பெயரில் நடந்தாலும் குற்றம்தான். இராமர்
பெயரால் நடந்தாலும் குற்றம் தான்..!’
தொடர்ந்து ‘ஒன்றே ஒன்றை மட்டும் கூறிக் கொள்ள விரும்புகிறேன். உங்களை யார் மூளைச்சலவை செய்கிறார்களோ அவர்களை அடையாளம் கண்டு விலகிவிடுங்கள்..! அரசாக இருந்தால் தூக்கி எறியுங்கள்..!’
நடந்தவற்றுக்காக எங்களை மன்னியுங்கள் பாபரே..!