ஃபலஸ்தீனர்களுக்கும் யூதர்களுக்கும் தற்போது நடந்து வரும் யுத்தம் புதிதல்ல! நீண்ட காலமாக நடக்கும் யுத்தத்தின் தொடர்ச்சிதான். இந்தப் பூமியில் அதிகமாக இரத்தம் சிந்தப்பட்டிருக்கிறது என்றால் ஃபலஸ்தீனில்தான்.
இங்கிலாந்து 1948இல் யூதர்களுக்குத் தன் ஆளுகையில் இருந்த ஃபலஸ்தீனின் ஒரு பகுதியைப் பிரித்துக் கொடுக்க அதைத் தங்கள் நாடாக்கிக் கொண்டனர் யூதர்கள். தங்களுக்கென்று ஒரு நாடுஉருவானவுடன் உலகெங்கிலும் இருந்து அங்கு வந்து சேரலாயினர்.
கொஞ்சம் கொஞ்சமாக ஃபலஸ்தீனர்களை விரட்டி விட்டு அவர்கள் இருந்த இடங்களைக் கைப்பற்றி தங்களின் நிலமாக்கி இஸ்ரேலை விரிவுபடுத்தினர். இதிலிருந்து இருவருக்குமிடையே பகை அதிகரித்ததே ஒழிய அமைதி ஏற்படவில்லை.
இரண்டாம் உலகப் போர் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கும் மேல் நடந்ததென்றாலும் இறந்த சுமார் எட்டு கோடிப் பேரில் இராணுவத்தினரைத் தவிர அப்பாவி மக்கள், குழந்தைகள், பெண்கள் மட்டும் சுமார் ஐந்து கோடி இருப்பார்கள் அந்த மக்கள் உணவு கிடைக்காமல், தங்க இடம் கிடைக்காமல்,
குடிக்கத் தண்ணீர் கிடைக்காமல், தஞ்சம் புகுந்து அகதிகளாக வாழ முடியாமல் மடிந்தனர். போர் நடந்தாலும் அது எவ்வளவு உக்கிரமாக இருந்தாலும் பொதுமக்களுக்கு உணவு, உறைவிடம், மருந்துகள் வழங்காமல் இருப்பது போர்க் குற்றமாகும்.
காஸாவிலிருந்து அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இருபது நிமிடத்தில் ஐயாயிரம் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவி திடீர் தாக்குதல் நடத்தினர்.
உளவு பார்ப்பதில் முதல் இடத்தில் இருக்கும் உளவுப் பிரிவு மொசாத் தான். அதற்குத் தெரியாமல் அல்லது கண்டுபிடிக்க முடியாத வகையில் ஹமாஸ் அமைப்பினர் இத்தனை ஏவுகணைகளை எப்படிக் கொண்டு வந்தார்கள். எப்படி நூற்றுக்கணக்கானவர்கள் இஸ்ரேலுக்குள் ஊடுருவினார்கள் என்பது உலகையே வியப்பில் ஆழ்த்தியது.
காஸாவில் மட்டும் இருபது இலட்சம் மக்கள் இருக்கின்றனர். அங்குள்ள அக்ஸா மஸ்ஜித், மக்காவிலுள்ள கஅபா, மதீனாவிலுள்ள நபவீ பள்ளிக்குப் பிறகு இஸ்லாமியர்களின் மூன்றாவது புனிதத்தலமாக விளங்கி வருகிறது. இத்தனை மக்களும் 41கிலோ மீட்டர் நீளமும் 10 கி.மீ அகலமும் உள்ள சிறிய பகுதியான காஸாவில் தான் உள்ளனர்.
இஸ்ரேல் அங்கிருந்து காஸா மக்களை தெற்குப் பகுதிக்குச் செல்லுமாறும் இல்லையேல் தாங்கள் தொடுக்கப்போகும் தாக்குதலிருந்து தப்பிக்க முடியாது என்றும் எச்சரித்து தரைவழித் தாக்குதலுக்கு தமது இராணுவத்தை எல்லையில் தயார் நிலையில் வைத்தது. ஆனால் இஸ்ரேல் போர் விதிகளுக்கு முரணாக காஸா பகுதியிலுள்ள அப்பாவி பொது மக்களுக்கு, குழந்தைகளுக்கு உணவு, குடிநீர், மின்சாரம், பால், மருந்துப் பொருள்கள் செல்லாமல் தடுத்து விட்டனர். இப்படிச் செய்வது சர்வதேச சட்டப்படி தவறு. மனித நேயத்துடன் அம்மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றிச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரேஸ் கதறியும், கெஞ்சியும் இஸ்ரேல் செய்வது போர்க்குற்றம் என்று கூறியும் இஸ்ரேல் அத்தியாவசியப் பொருள்களைக் காஸாவிற்குள் செல்லவிடாமல் தடுத்து வருகிறது.
ஐநாவும் அதற்குள் உள்ள அமைப்பான மனித உரிமை மீறலைத் தடுக்கும் அமைப்பும், சர்வதேசக் குற்றவாளிகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் இருந்தும் அதனை எந்த நாடும் எப்போதும் மதிப்பதில்லை.
இஸ்ரேலில் செல்வாக்கு இழந்து வந்த பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இதனைத் தன் செல்வாக்கு உயர்த்தப் பயன்படுத்தி வருகிறார். இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்றுள்ள தன் நாட்டு மக்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்காமல் போருக்குத் தயாராகி வரும் நெதன்யாகுவிற்கு எதிராக அந்நாட்டு மக்கள் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் செய்து தமது எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர். ஆனால் பெஞ்சமின் நெதன்யாகு ‘நாம் போரில் இருக்கிறோம். எதிரிகள் இதுவரை கண்டிராத கடும் விலையைக் கொடுப்பார்கள்’ என்று திமிரோடும் உறுதியோடும் அறிவித்துள்ளார்.
ஃபலஸ்தீனர்கள் பல இலட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பள்ளிகளில் தங்கியுள்ளதாக ஐநா கூறுகிறது. போரை நிறுத்த வேண்டும், பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்க, உயிர்வாழ இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா அதிபர் கோரிக்கை விடுத்ததோடு இஸ்ரேலுக்கும் சென்று வந்துள்ளார்.
உண்மையில் இந்தப் போரை நிறுத்த வேண்டுமென்றால் அமெரிக்கா கடுமையாக எச்சரித்தால் இஸ்ரேல் அடங்கிவிடும். மாறாகப் பல விமானங்கள், ஏவுகணைகள் நவீன துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்ட இரண்டு கப்பல்களை இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளது. பிரிட்டன் பிரதமர் சுனக்கும் இஸ்ரேலுக்குச் சென்றதோடு இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படும் என்று கூறியுள்ளார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரோனும் இஸ்ரேலுக்குச் சென்று வந்துள்ளார். ஆனால் போர் நிறுத்தப்பட்டதா என்றால் இல்லை. இவர்களின் பயணம் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றத்தானா?
வல்லாதிக்க நாடுகளான அமெரிக்காவும், பிரிட்டனும் இஸ்ரேலுக்கு ஆயுதம் அனுப்புவது நியாயமா? தர்மமா? இவர்கள் தான் நடுநிலையாளர்களா? தங்கள் ஆயுதங்களை விற்பதற்கு இச்சூழலை பயன்படுத்திக் கொள் வதோடு நடுநிலை நாடுகளாக நடந்து கொள்ளவில்லை. போரை ஊக்குவித்து இஸ்ரேலைத் தூண்டிவிட்டு தாங்கள் எப்போதும் துணை நிற்போம் என்று தெரிவித்துள்ளனர்.
காந்தியடிகளும், நேருவும் ஃபலஸ்தீனர்களின் நாடு ஃபலஸ்தீனருக்குரியது என்று அறிவித்து இஸ்ரேல் உருவாவதை ஆதரிக்கவில்லை. இந்திராகாந்தியும் இஸ்ரேல் தூதரகத்தை இந்தியாவில் திறக்கவும் 1982இல் தான் இந்தியத் தூதரகத்தை இஸ்ரேலில் அமைக்கவும் அனுமதித்தார்.அதே வேளையில் PLO அமைப்பின் தலைவர் யாசர் அரஃபாத்தை வரவேற்றார். PLO அமைப்பையும் அங்கீகரித்தார்.
பாஜக ஆட்சியில் வாஜ்பாய் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த போது இஸ்ரேலுடனான உறவை ஆதரிக்கவில்லை. ஆனால் தற்கால உலக நாடுகளின் நிலையறிந்து இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல் பேரதிர்ச்சி அளிக்கிறது என்று கூறி இஸ்ரேலுக்குப் பிரதமர் நரேந்திர மோடி ஆதரவு தெரிவித்துள்ளார். அதற்குக் காரணம், அந்தமான் சிறையிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி மன்னிக்கும்படி பலமுறை கடிதம் கொடுத்ததோடு பிரிட்டிஷாரிடமிருந்து பென்சன் வாங்கிய பாஜகவினரின் குருநாதர் சாவர்க்கர் ஃபலஸ்தீனையும் கடுமையாக எதிர்த்தவர் ஆவார். அதைத் தான் மோடி தற்போது பின்பற்றுகிறார். அதே சமயம் இஸ்ரேல் தனது ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து நடத்திக்கொண்டு தான் வருகிறது. ஜபாலியா முகாமில் தங்கியிருந்தவர்கள் பெரும்பாலானோர் தாய்மார்கள், குழந்தைகள். இவர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரம் அப்பாவி ஃபலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் காஸா நகரில் அமைந்துள்ள அல் அஹ்லி மருத்துவமனையில் காயம்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் தாய்மார்கள், குழந்தைகள் கிசிச்சை பெற்று வந்த நிலையில் ஏவுகணையால் அந்த மருத்துவமனையையே தகர்த்தனர். இத்தாக்குதலில் 800 பேருக்கும் மேல் பலியாகிஇருப்பதாக ஐநா பொதுச் செயலாளர் கூறியுள்ளார்.
ஜபாலியா போன்ற 69க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்கியுள்ள ஃபலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் வீசிய குண்டுகள் அப்பாவி மக்களைக் கொன்று வருகிறது. மேலும் 22 மருத்துவமனைகளையும் தாக்கியுள்ளது இஸ்ரேல். மருத்துவமனைகள் மீது அக்டோபர் 17இல் தாக்குதல் நடத்தி மக்களைக் கொன்றது மிகப் பெரிய போர்க் குற்றமாகும். இதற்கான விசாரணையை நெதன்யாகு சந்தித்தே தீர வேண்டும்.
இந்த நிலையில் ஜோபைடன் 600 நாள்களுக்கும் மேல் போர் நடக்கும் உக்ரைனுக்கு ஆயுதம் வழங்குவதோடு 61 பில்லியன் டாலரும் இஸ்ரேலுக்கு ஆயுதம் வாங்கிட 14 பில்லியன் டாலரும் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். இதற்குப் பெயர்தான் போரை நிறுத்தும் செயலா?
இதுவரை ரஷ்யா இந்தப்போரை இருநாடுகளும் நிறுத்த வேண்டும், பேச்சு வார்த்தை நடத்த முன்வர வேண்டுமென்றும் கூறியுள்ளது. ஒருவேளை ஃபலஸ்தீனர்களுக்கு ரஷ்யா, சீனா, அதன் நட்பு நாடுகள் துணைக்கு வந்து ஆயுதம் வழங்கினால் நிலைமை என்னவாகும்? அது மூன்றாம் உலக யுத்தத்திற்குத் தான் வழிவகுக்கும்.
1967இல் 9 அரபு நாடுகள் இஸ்ரேல் ஃபலஸ்தீனர்களின் மீது தொடர்ந்த தாக்குதல், ஃபலஸ்தீனின் பகுதிகளைத் தன் வசமாக்கி வந்ததைக் கண்டித்து ஃபலஸ்தீனர்களுக்கு ஆதரவாகப் போர் தொடுத்தனர். அந்தப் போரில் அரபு நாடுகளை 6 நாள்களில் தோற்கடித்தது இஸ்ரேல். அன்றைக்கு இருந்த நிலையில் இன்று அரபு நாடுகள் இல்லை.
ஈரான் அமெரிக்காவிற்கே சவால்விடும் ஆணுஆயுதம் வைத்துள்ளது. பகிரங்கமாக ஹமாஸ் அமைப்பிற்கும் ஃபலஸ்தீனிற்கும் ஆதரவு தந்துள்ளது. மற்ற அரபு நாடுகளும் அதிநவீன ஆயுதங்களை வைத்துள்ளன. துருக்கி அதிபர் எர்டோகன் ஹாமஸ் அமைப்பினர் விடுதலைப் போராளிகள் எனப் புகழ்ந்து அவர்களுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் 800க்கும் மேற்பட்ட இடங்களில் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்து விட்டன. குழந்தைகள், பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். உலக குழந்தைகள் அமைப்பு 10 இலட்சம் ஃபலஸ்தீன குழந்தைகள் காஸா, மேற்குக்கரையில் ஆபத்தில் இருப்பதாகவும் 50000க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் மருந்து, உணவு, குடிநீர் இல்லாமல் உயிருக்குப் போராடி வருவதாகவும் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் உடனடியாகப் போரை நிறுத்த வேண்டும் என்று ஐநா கோரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையே நடக்கும் போரில் நடுநிலை வகித்த இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவு என்று அறிவித்தது. அரபு நாடுகளுக்கும் ரஷ்யா போன்ற நாடுகளுக்கும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் இந்த அறிவிப்புக்குப் பல்வேறு விமர்சனங்கள் இந்தியாவில் எழுந்துள்ளது. ஆனாலும் மனித நேய அடிப்படையில் ஃபலஸ்தீன மக்களுக்கு உதவும் நோக்கத்தில் 38 டன் அத்தியாவசிய உணவுப் பொருள்கள், மருந்துகளை அனுப்பியுள்ளது. இதில் மனிதநேயம் இருப்பதாகத் தெரியவில்லை. அரசியல் நெருக்கடி தான் காரணம்.
வியட்நாம், கொரியப் போர்களில் அப்பாவி பொதுமக்கள் குழந்தைகள் மீது பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய விஷத்தன்மை மிக்க இரசாயனக் குண்டுகளை அமெரிக்கா வீசியது. அதன் விளைவு இன்று பிறக்கும் குழந்தைகள் கூட அந்நாடுகளில் மூளை பாதிக்கப்பட்டோ, உடல் உறுப்புகளில் குறையோடோ பிறப்பதாக இந்து பத்திரிகை 2002 ஏப்ரல் 3இல் எழுதியது. இது மனித உரிமை மீறலாகும் என்பதோடு அமெரிக்கா நடத்திய போர்க் குற்றம் ஆகும்.
அப்படிப்பட்ட பாஸ்பரஸ் குண்டு தாக்குதலை தற்போது இஸ்ரேல் நடத்தி வருகிறது. இதனால் குழந்தைகள், பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள். இதனை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும். இது மனித உரிமை மீறலாகும். இது கண்டிக்கத்தக்க போர்க் குற்றமாகும். இதற்கு இஸ்ரேல் கடுமையான தண்டனையைச் சந்திக்க வேண்டுமென்று ஐநா பொதுச் செயலாளர் அன்டேனியோ குட்டரோஸ் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
இதே போல் 2003இல் ஈராக்கில் அணு ஆயுதங்களை சதாம் உசேன் வைத்துள்ளார் என்று குற்றம் சுமத்தி அதற்காக ஐநாவின் தூதுவர்கள் இருவர் சென்று ஆய்வு செய்து ஈராக்கில் அணு ஆயுதம் இல்லையென்று அறிவித்த பிறகும் ஐநாவை மதிக்காமல் அமெரிக்காவும் பிரிட்டனும் ஈராக் மீது போர் தொடுத்தன. அங்கே மனித உரிமை மீறலும் போர்க் குற்றமும் அத்துமீறி நடந்தேறியது. பல்லாயிரக்கணக்கில் குழந்தைகளும், முதியோரும், பெண்களும், நோயாளிகளும் கொல்லப்பட்டனர். குண்டுகளை வீசி ஈராக்கைச் சின்னா பின்னமாக்கினர்.
இறுதியில் சதாம் உசேனைக் கொன்றும் தங்கள் கோபத்தைத் தீர்த்துக் கொண்டு ஈராக்கை விட்டு வந்தனரா என்றால் இல்லை. அமெரிக்காவில் புஷ்ஷûக்கு எதிராகவும் பிரிட்டனில் டோனி பிளேயருக்கு எதிராகவும் மக்கள் வீதிக்கு வந்து போராடினார்கள். 119 எம்பிக்கள் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அப்போரைக் கண்டித்து வெளி நடப்பும், எதிர்ப்பும் தெரிவித்தனர். அதன் பிறகே ஈராக்கிலிருந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு இராணுவம் திரும்பப் பெறப்பட்டது.
வியட்நாமில் கிட்டதட்ட 19 ஆண்டுகள் அமெரிக்கா போர் என்ற பெயரில் செய்த மனித உரிமை மீறல் போர்க் குற்றங்கள் அத்தனையும் அநியாயம். அந்தப்போரில் சற்றேறக்குறைய 20 இலட்சம் வியாட்நாம் மக்கள், குழந்தைகள் கொல்லப்பட்டனர். 30 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அந்தத் தாக்குதலுக்கு ஆளாகி அப்பாவி 9 வயது பெண் குழந்தை நிர்வாணமாகக் கதறிக் கொண்டு ஓடி வந்ததைப் பத்திரிகைகள் படம்பிடித்து போட அது உலகெங்கும் பிரசுரமாக அமெரிக்க மக்கள் வியட்நாமில் போர் நடத்தி வரும் அமெரிக்காவின் கொடுமைக்கு எதிராக ஆர்ப்பரித்து எழுந்திடவே அமெரிக்கா தனது இராணுவத்தை அழைத்துக் கொண்டு சென்றது. வியட்நாமில் அமெரிக்கா செய்தது போர்க் குற்றமே. ஆப்கானிஸ்தானில் ஒசாமா பின்லேடன் இருக்கிறார் என்று காரணம் கூறி ஏற்கனவே ரஷ்யாவின் இராணுவத்தால் தாக்குதலுக்கு ஆளான ஆப்கானை அமெரிக்க இராணுவம் தாக்கத் தொடங்கி பல பெண்கள், குழந்தைகளைக் கொன்றது. மஸ்ஜிதுகள் இடிக்கப்பட்டன. அங்கு இறந்த மக்கள் கணக்கிலடங்காதவர்கள். கொல்லப்பட்ட அமெரிக்க இராணுவ வீரர்களே 15,058 பேர் என்று அமெரிக்காவே அறிவித்தது.
இலங்கையில் விடுதலைப் புலிகளை அழிக்கிறோமென்று அப்பாவி பெண்கள், குழந்தைகள் கொல்லப்பட்டதாக சிங்கள அரசால் அறிவிக்கப்பட்டவர்களே 1.5 இலட்சம் பேர் என்றால் உண்மையில் இறந்தவர்கள் 3 இலட்சத்திற்கும் மேல் இருப்பர். இதற்குப் பெயர் போர்க் குற்றமில்லையா? இதுவரை சர்வதேச நீதிமன்றத்தால் 45 நபர்கள் போர்க் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளனர். எத்தனை பேர் தண்டிக்கப்பட்டனர் என்பது தெரியவில்லை.
தற்போது இஸ்ரேல் ஃபலஸ்தீனர்களுக்கிடையே நடைபெறும் யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இந்தியப் பிரதமர் மோடி அதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும். போர்க்குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். அப்போது தான் போர் வெறி கொண்ட நாட்டு அதிபர்கள் அச்சப்பட வாய்ப்புண்டு. ஐநா என்ன நோக்கத்திற்காக அமைக்கப்பட்டதோ, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் எதற்காக அமைக்கப்பட்டதோ அதன் அர்த்தத்தை உலகம் அறியும். போர் ஓழியட்டும்! எதேச்சதிகாரிகள் தண்டிக்கப்படட்டும்! இஸ்ரேல் பிதரமர் நெதன்யாஹு போர்க் குற்றவாளியாகத் தண்டிக்கப்பட வேண்டும்.