மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

எட்டும் தூரம்
ஷமீம் ரியாஸ், 1 - 15 பிப்ரவரி 2024


எட்டும் தூரம்

இறைவன் எல்லோருக்கும் எல்லாச் சிறப்புகளையும் ஒரு சேர வழங்கி விடுவதில்லை. அறிவு, அழகு, வீரம், திறமைகள், செல்வங்கள், ஆற்றல்கள், உடல் உறுப்புகள் என எல்லாவற்றிலும் வேறுபாடுகள் கொண்ட மனிதர்கள் உள்ளனர். குறைபாடுகள் இல்லாத மனிதர் என்று உலகில் எவருமே இல்லை. உடலில் குறை உடையவர்களாகிய மாற்றுத் திறனாளி சகோதர சகோதரிகளை நம்மைப் போன்றவர்களாகக் கருதுவதே அவர்களுக்குத் தன்னம்பிக்கை அளித்துச் செயலாற்ற உதவும்.

மாற்றுத் திறனாளிகளாகப் பிறந்தது அவர்களின் குற்றம் அல்ல. எதுவும் யாருக்கும் நிகழலாம். பார்வையற்றவர்களும் பாதையில் வரக்கூடும் என்பதால் தான் பாதையில் உள்ள தீங்கு தரும் பொருட்களை அகற்றுவது தர்மம் என இஸ்லாம் கூறுகிறது. நமது பார்வைகள் கூட மாற்றுத்திறனாளிகளின் மீது உற்று நோக்குவதாக, குவிவதாக இருக்கக் கூடாது. ஏனெனில் அத்தகைய பார்வை அவர்களுக்கு அவமான உணர்வை ஏற்படுத்தும் வாய்ப்பு உண்டு.

கருணை நபி(ஸல்) அவர்கள் மாற்றுத்திறனாளிகளின் திறமைகளையும் அங்கீகரிக்கக் கூடியவர்களாகவே இருந்தார்கள். பார்வையற்றவராக இருந்த அப்துல்லா இப்னு உம்மி மக்தூம்(ரலி) அவர்களைப் பல்வேறு காரணங்களுக்காக 13 முறை மதீனாவின் பொறுப்பாளராக நபி(ஸல்) அவர்கள் நியமித்துள்ளார்கள்.

காதிஸிய்யா போரில் போர்க் கொடியைச் சுமக்கும் சிறப்பு உம்மி மக்தூம்(ரலி) அவர்களுக்கு வழங்கப்பட்டது. அதே போரில் உம்மி மக்தூம்(ரலி) அவர்கள் ஷஹீத் ஆனார்கள். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களின் குட்டையான கால்களைக் கண்டு சிலர் ஏளனமாகச் சிரித்த போது, ‘இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களின் கால்கள் மறுமையில் இறைவனின் தராசில் உஹது மலையை விட கனமானவை’ என்று கூறி நபி(ஸல்) அவர்கள் அந்தத் தோழரைச் சிறப்பித்தார்கள்.

மாற்றுத்திறனாளிகளும் ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள், சமூகத்தின் அங்கம் என்பதை உணர்ந்து அவர்களை அன்புடனும் நேசத்துடனும் பாவித்து, அவர்களுக்கு உரிய வாய்ப்புகளை வழங்கி எல்லோரையும் போல வாழச் செய்வது நமது கடமையாகும். மாற்றுத்திறனாளிகள் தங்கள் குறைகளை நினைத்து மனவேதனை அடையக் கூடாது. அகிலங்களை ஆளும் இறைவன், தான் நாடுவதையே படைக்கின்றான். இது இறைவனின் தீர்மானிக்கப்பட்ட விதியாகும்.

‘இறைவன் தன் அடியாரிடமிருந்து அவருடைய பிரியத்திற்குரிய இரு பொருள்களை (கண்களை) பறித்துக் கொண்டு சோதிக்கும் போது அந்த அடியார் பொறுமை காத்தால் அதற்குப் பகரமாக அவருக்கு இறைவன் சுவனத்தை வழங்குகிறான் என்று அண்ணலார் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஒரு கதவு மூடப்பட்டால் மறு கதவு திறக்கும் என்பதற்கு ஏற்றாற் போல் பார்வையற்றவர்களுக்குக் கூர்மையான காது கேட்கும் திறனும், காது கேளாதவர்களுக்கு கூர்நோக்கான பார்வைத் திறனும் இருக்கும்.

இவ்வாறு தனிப்பட்ட திறமைகளை இறைவன் எல்லோருக்கும் நிச்சயமாகக் கொடுத்திருப்பான். அவர்களின் திறமைகளுக்கு ஏற்பவாய்ப்புகளை வழங்கி அவற்றை அங்கீகரித்து ஊக்கப்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளின் குடும்பமும் சமூகமும் அவர்களுக்கு ஊக்குவிப்பையும், தன்னம்பிக்கையையும் தரத் தவறும் போது அவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மையும், அவநம்பிக்கையும் ஏற்படும். இதனால் அவர்கள் வாழ்வில் எவ்வித பற்றும் இல்லாமல் வாழத் தொடங்குகின்றனர். இதன் விளைவாக அவர்கள் பிற்காலத்தில் எந்தவித முன்னேற்றமும் இன்றி தாழ்ந்த நிலையிலும் வறுமையிலும் தள்ளப்படுகின்றனர். எனவே அவர்களுக்கு ஊக்கமளித்து உதவுவது நமது கடமையாகும். 

மண் சரியில்லை என்றால் அதனை வீணாக்குவதும் பானையாக்குவதும் குயவனின் கைகளில் தானே உள்ளது. ஊனம் என்பது உடலில் இல்லை; மனதில் தான் இருக்கிறது என்ற உணர்வோடு வாழும் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கவே ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 3ஆம் நாள் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

சமுதாயத்தின் ஒரு பகுதியாக இருக்கும் மாற்றுத் திறனாளிகளைப் புறந்தள்ளிவிட்டு ஒரு சமுதாயத்தால் முன்னேறி விட முடியாது. நாம் கொடுக்கும் தன்னம்பிக்கைஅவர்களின் செயல் ஆர்வத்தைத் தூண்டி, இழந்ததை மறந்து, சவால்களைச் சாதனைப் பயணங்களாக மாற்றத் துணை புரியும்.

தனது 21ஆம் வயதில் பக்கவாதத்தால் (நியூரான் நோய்) பாதிக்கப்பட்ட அறிவியல் மேதை ஸ்டீஃபன் வில்லியம் ஹாக்கிங்கின் கூற்று ‘எதை இழந்தீர்கள் என்பது முக்கியமல்ல, என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்’. இவரைப் போன்று சாதனை படைக்க ஊனம் ஒரு தடையல்ல என்பதற்குச் சான்றுகளாகப் பலர் உள்ளனர். 

சவூதி அரேபியாவின் மிகப் பெரும் முஃப்தியாக இருந்து சிறப்பாகப் பணியாற்றிய அப்துல்லாஹ் பின் பாஸ்(ரஹ்) அவர்கள் கண் பார்வையற்றவர் ஆவார். முன்னாள் தேசிய வாலிபால், கால்பந்து வீராங்கனை அருணிமா சின்கா 2011இல் இரயிலிலிருந்து சில திருடர்களால் வெளியே தூக்கி எறியப் பட்டார். அடுத்த ட்ராக்கில் வந்த இரயில் இவர் கால்களை நசுக்கியதால் இரு கால்களையும் இழந்தார். எனினும் இந்த இழப்பையே தனது பக்க பலமாக மாற்றி உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி இந்தியக் கொடியைப் பறக்கவிட்ட முதல் மாற்றுத்திறனாளி பெண் எனும் பெருமைமிகு சாதனை படைத்தார். மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு மணிமகுடமாக விளங்குபவர் தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன்.

கடந்த அக்டோபர் மாதம் 22 முதல் 28 வரை சீனாவில் ஹாங்சோ நகரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய பாரா போட்டியில் இந்திய வீரர்களும் வீராங்கனைகளும்  111  பதக்கங்களை வென்று குவித்துள்ளனர். அதில் 29 தங்கப் பதக்கங்களும் அடங்கும். 

இவர்களைப் போன்று பல மாற்றுத் திறனாளி சாதனை வீரர்களும் வீராங்கனைகளும் இருக்கின்றனர். அவர்களின் தனித்திறமைகளைக் கண்டறிந்து, பட்டைதீட்டி, பறந்து விரிந்த இவ்வுலகில் சிறகு விரித்துப் பறக்கத் தேவையான தன்னம்பிக்கையைத் தருவதே நமது தலைசிறந்த

பணியாகும். இதுவே நாம் அவர்களுக்கு வழங்கும் மிகப் பெரும் பரிசு. ஏனெனில் இந்த தன்னம்பிக்கை தான் துவண்டுபோன அவர்களை வீறு கொண்டு எழ வைக்கும். 

மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகள் தங்கள் மீதான நம்பிக்கையை எப்போதும் கை விடக்கூடாது. என்னால் முடியும் என்ற எண்ணத்தை மனதில் விதைக்க வேண்டும். தாழ்வு மனப்பான்மையை ஒருபோதும் எழ விடக்கூடாது. கடினமான பாதை தானே அழகான இடத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும்! 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்