வெள்ளித்திரையில் ஒரு காட்சி: ஒரு பெண் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கின்றாள். சில ரௌடிகள் அவள் ஆடையைப் பிடித்து இழுத்து மானபங்கப்படுத்த முயற்சிக்கின்றார்கள். உடனே ஒரு மனிதன் அந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்டு அந்தப் பெண்ணை அவர்களிடமிருந்து காப்பாற்றுகிறார்.
இன்னொரு காட்சி: ஒரு சிறு வியாபாரி யின் கடையில் சிலர் அத்துமீறி நுழைந்து மாமூல் கேட்கின்றனர். அங்கும் அதே மனிதர் அவர்களை அடித்து, அவர்களிடமிருந்து அந்த வியாபாரியையும் அவரது கடையையும் காப்பாற்றுகிறார்.
இப்படிப் பல காட்சிகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம். நம் இந்திய, தமிழ்த் திரை உலகில், அந்நியப் பெண் அல்லது தன் சகோதரி அல்லது தன் மனைவியைக் காப்பாற்றினாலும் சரி, மற்றவர்களின் வியாபாரத்தைக் காப்பாற்றினாலும் சரி அல்லது தன்னைக் காத்துக்கொண்டாலும் சரி, காப்பாற்றிய அந்த மனிதருக்கு ‘கதாநாயகன்’ என்று பெயர்.
கடந்த 50 அல்லது 60 ஆண்டுகளில் இந்தியத் திரைப்படங்களில் ஒரு கதாநாயகனின் அறிமுகம் இப்படிப்பட்ட காட்சிகளின் மூலமாகத் தான் அரங்கேறும். ஆனால் நிஜ வாழ்க்கையில் இதே நிகழ்வுகள் நடந்தால் அதை யாரும் தட்டிக்கேட்க முன்வர மாட்டார்கள். இந்திய விடுதலைக்காகப் போராடிய காந்தியடிகளையும் கொண்டாடுகின்றோம். பகத்சிங்கையும் கொண்டாடுகின்றோம். இருவரும் முற்றிலும் மாறுபட்ட விதத்தில் போராடினர். ஆனால் இன்றளவும் நாம் இருவர் மீதும் அளவு கடந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கின்றோம். பகத்சிங்கைக் கொண்டாடுவதற்குக் காரணம். அவரும் அவருடைய நண்பர்களும் போராட்டக் களத்தில் துணிந்து நின்றனர், போராடினர், வீர மரணம் எய்தினர்.
இன்றும் நம் நாட்டில் சில இடங்களில் கொத்தடிமைகளாக வேலை பார்க்கும் மக்கள், வாயை மூடிக்கொண்டு கொடுமைகளைச் சகித்துக்கொண்டு வேலை பார்த்தால் ஒன்றும் பிரச்னை இல்லை. எந்த நொடியில் அந்தக் கூட்டம் விடுதலை வேண்டும் என்று கேட்கிறதோ அல்லது கூலி உயர்வு கேட்கிறதோ, அப்பொழுதே,
அந்தக்கணமே அவர்கள் தீவிரவாதிகள் ஆகி விடுகின்றார்கள். தன் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து ஒரு கண்ணியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைப்பவன் தீவிர வாதியா? அது எப்படி? யார் தீவிரவாதி என்று யார் முடிவு செய்வது?
கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகம் 2004ஆம் ஆண்டு வெளியிட்ட பத்திரிகையில், லெபனான் பிரதமர் எமிலி லஹுத் கூறியதைச் சுட்டிக்காட்டுகின்றது. தீவிரவாதம் என்ற சொல்லுக்குச் சரியான விளக்கத்தை அளிக்காமல் ஒருவர் மீது போர் தொடுப்பது போதுமானதாகக் கருதப்பட மாட்டாது. 'It is not enough to declare war on what one deems terrorism without giving a precise and exact definition.' President Emile Lahoud, Lebanon (2004).
ஒருவருடைய வாகனத்தை அவருக்குத் தெரியாமல் திருடினால் அது திருட்டு. ஆனால் ஒருவர் வீட்டில் நுழைந்து இந்த வீட்டின் விலை என்ன என்று கேட்டு, பாதி விலையோ அல்லது அதற்கும் குறைவான தொகையைக் கொடுத்து அவர்களை விரட்டுவது மிகப்பெரிய அநியாயம். அதற்கும் மேல் ஒருபடி தாண்டி அதே வீட்டில் அத்துமீறி நுழைந்து, உள்ளே இருக்கின்றவர்களை வெளியேற்றி இன்னொருவர் குடி இருந்தால், முன்பிருந்தவர் வாயை மூடிச் செல்ல வேண்டுமா அல்லது எதிர்த்துப் போராட வேண்டுமா? முதலில் காவல்துறை, பிறகு நீதிமன்றம், பிறகு அமைச்சருக்கு ஒரு மனு என்று ஒவ்வொரு கட்டமாக நகர வேண்டும். எதுவும் நடக்கவில்லை என்றால் மௌனமாகத்தான் இருக்க முடியும். வேறு வழி இல்லை. நடந்தது என்னமோ ஒரு மாபெரும் அநியாயம் தான். அதில் எந்த வித ஐயத்திற்கும் இடம் இல்லை. ஆனால் தனி மனிதனுக்கென்று ஒரு வரையறை இருக்கின்றது. அதைத்தாண்டி அவனால் ஒன்றும் செய்ய இயலாது.
இதே ஒரு நாட்டிற்கு நடந்தால், அதைப் பார்த்து அவர்கள் மௌனம் காத்தார்கள் என்றால், அவர்களை அந்த நாட்டின் பெண்களும் குழந்தைகளும் கோழைகள் என்றுதான் அழைப்பார்கள். இறுதி மூச்சுவரை நம் நாட்டில் பலர் போராடியதால் தான் நாம் இன்று விடுதலைக் காற்றைச் சுவாசிக்க முடிகின்றது.
நம் முன்னோர்கள் மௌனம் காத்திருந்தால் இன்று நமக்கென்று ஒரு வரலாறு காணமுடியுமா என்பது கேள்விக்குறி!
20ஆம் நூற்றாண்டை மக்களின் நூற்றாண்டு என்று அழைக்கின்றோம். காரணம், பல மக்கள் போராட்டங்களும், புரட்சிகளும் வெடித்தன. பல நாடுகள் விடுதலைக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கின. அதற்குப் பிறகும் அந்த நாடுகளுக்குள்ளே சிறு சிறு போராட்டங்கள் ஆங்காங்கே அரங்கேறின. மாற்றங்கள் வந்தன. புதிய சட்டங்கள் ஏற்றப்பட்டன. இவை எல்லாவற்றிலும் மக்களின் உரிமை கண்டிப்பாக இருந்தது. எல்லாப் போராட்டங்களும் வெற்றி பெறவில்லை. ஆளும் அரசாங்கங்கள் பல விஷயங்களைக் கருத்தில் கொண்டு தான் அந்தப் போராட்டங்களை அங்கீகரித்து அவர்களின் உரிமைகளைக் கொடுக்க முடியும்.
நம் நாட்டில் இன்றைக்கும் பல நியாயமான போராட்டங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. உதாரணம் விவசாயிகள் தங்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று தீவிரமாகப் போராடுகிறார்கள். அவர்கள் தீவிரவாதிகளா? அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், இரயில் ஊழியர்கள் என்று பலர் போராடுகின்றனர். அதற்காக எல்லோரையும் அப்படிச் சித்திரிக்க முடியுமா? தனிப்பட்ட ஒரு மனிதனோ அல்லது ஒரு குழுவோ தனக்காகவும் தன்னைச் சார்ந் திருப்பவர்களுக்காகவும் குரல் கொடுப்பதும், போராடுவதும், அவர்களின் அடிப்படைத் தேவைகளை அவர்களுக்கு வழங்குவதற்கும், அவர்கள் ஒரு கண்ணியமான வாழ்க்கையை வாழ்வதற்கும் போராடுவது தீவிரவாதம் ஆகாது.
1970களிலும், 1980களிலும், ஐநா சபையால் தீவிரவாதம் என்ற சொல்லுக்கு ஒரு ‘வரையறை’ அல்லது ’பொருள் வரையறை’ கொடுக்க இயலாத நிலை ஏற்பட்டது. காரணம் அதில் இருக்கும் உறுப்பினர்களின் மத்தியில் இருக்கும் கருத்து வேறுபாடுகள். ஓர் உறுப்பினர் என்றால் ஒரு நபர் அல்ல. ஒரு நாடு. உலகில் எந்தக் கண்டத்தில், எந்த நாட்டில், எந்த மண்ணில், எந்தப் போராட்டம் நடந்தாலும் அதைத் தீவிரவாதம் என்று சித்திரிப்பது நியாயமற்றது.