அயோத்தியில் இராமர் கோயில் திறப்பு விழா (பிராண பிரதிஷ்டை) 22.01.2024 அன்று விமர்சையாக நடைபெற்று முடிந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியே இராமர் சிலையைத் தூக்கிச் சென்று பீடத்தில் வைத்துள்ளார். மத குருமார்கள் செய்ய வேண்டிய ஒரு சடங்கை சமயச் சார்பற்ற நாட்டின் பிரதமர் செய்திருப்பது உலக வரலாற்றில் இதுவரை இல்லாத ஒன்றாகும். மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் கூட இவ்வாறு நடைபெற்றதாகத் தெரியவில்லை.
இந்தச் சடங்கை நிறைவேற்றுவதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி இராமர் சென்றதா கச் சொல்லப்படும் கோயில்களுக்கெல்லாம் சென்று வழிபட்டும், விரதம் மேற்கொண்டும் இந்தப் பணிக்குத் தன்னைத் தகுதியாக்கிக் கொண்டிருக்கிறார். அவர் முதலில் சென்று வழிபட்டது நாசிக்கிலுள்ள காலாராம் கோவில் இச்செய்தியைப் படித்த போது எனக்கு இது தொடர்புடைய ஒரு வரலாற்று நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது.
இதே காலாராம் கோவிலில் பட்டியலின மக்களை வழிபட அனுமதிக்க வேண்டுமென்று டாக்டர் அம்பேத்கர் 2.3.1930 அன்று மாபெரும் போராட்டத்தைத் தொடங்கினார். அன்று தொடங்கிய போராட்டம் 9.4.1930 வரை நீடித்தது. எனினும் கோயிலின் நெடிய கதவுகள் பட்டியலின மக்களுக்காகத் திறக்கப்படவில்லை. போராடிய மக்கள் மீது காவல்துறை தடியடி நடத்திக் கலைத்தது. சட்டம் ஒழுங்குப் பிரச்னையைக் காரணம் காட்டி மாவட்ட நிர்வாகம் கோயிலை மூடுமாறு உத்தரவிட்டது. கோயில் ஓராண்டு காலம் மூடியே இருந்தது. பட்டியலின மக்களுக்காகக் கதவைத் திறக்காத அந்தக் கோயிலிலிருந்து தான் பிரதமர் மோடி தனது தவப் பயணத்தைத் தொடங்கி முடித்துள்ளார்.
இராமர் கோயில் திறப்பு விழாவில் ஆதி சங்கரர் தோற்றுவித்த நான்கு மடங்களின் தலைவர்களும் கலந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தெரியவில்லை. இவர்கள் சைவர்கள். 'தென்நாடுடைய சிவனே போற்றி' என சிவனை முதற் தெய்வமாக வழிபடுகிறவர்கள். இராமரோ வைணவர். விஷ்ணுவின் அவதாரம். எனவே சைவ மடாதிபதிகள் வைணவரான இராமர் கோயில் பிராண பிரதிஷ்டையைப் புறக்கணித்ததில் வியப்பில்லை. இராமர் வழிபாடு, தங்களின் சிவ வழிபாட்டினைப் பின்னுக்குத் தள்ளி விடுமோ என்ற அச்சமும் இவர்களுக்கு உண்டு.
ஏனெனில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வணங்கப்பட்ட இந்திரனையும் வருணனையும் யாரும் இப்போது வணங்குவதில்லை. உயிரினங்களைப் படைக்கின்ற பொறுப்பின் துறையைக் கவனிக்கின்ற பிரமனுக்கும் எங்கும் கோயில் இல்லை. அவரை யாரும் வணங்குவதும் இல்லை. அந்த நிலை சிவனுக்கு வந்துவிடக்கூடாது என சைவ மடாதிபதிகள் அஞ்சுவதில் பொருள் இருக்கிறது. பெரும் புலவர் கம்பர் இராமாயணத்தைத் தமிழில் இயற்றி அதனைச் சோழ மன்னரின் அரசவையில் அரங்கேற்றம் செய்ய முனைந்த போது அவையிலிருந்த சைவ மத குருமார்கள், 'காப்பிய நாயகன் இராமன் வைணவன். நாமோ சைவ சமயத்தினர். எனவே சைவ சமயத்தைச் சார்ந்த சோழ மன்னனின் அரசவையில் அதனை அரங்கேற்றம் செய்யக் கூடாது' எனத் தடுத்து விட்டனர். இந்த வரலாற்று நிகழ்வையும் சேர்த்துப் பார்ப்பது இந்தப் பிரச்னையைப் புரிந்து கொள்ள உதவும்.
நாட்டிலுள்ள முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் யாரும் இந்தத் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. இது சமய விழா அல்ல. மோடியின் வெற்றியைப் பறைசாற்றும் அரசியல் விழா. எனவே இதில் நாங்கள் கலந்துகொள்ளப் போவதில்லை என வெளிப்படையாகவே அவர்கள் அறிவித்து விட்டனர். பாஜகவின் ஆதரவுக் கட்சிகளின் தலைவர்கள் கூடக் கலந்து கொண்டதாகத் தெரியவில்லை. இந்த நிலையில் இது ஆர்எஸ்எஸ், பாஜக ஆகிய இரு அமைப்புகளின் விழாவாகவே கருதப்பட வேண்டும்.
நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு அழைப்பு இருந்தது. அழைப்புக் கொடுத்தவர்களே 'நீங்கள் விழாவில் கலந்துகொள்ள வேண்டாம்' என அவரிடம் கூறியிருக்கக் கூடும். பழங்குடி இனத்தைச் சார்ந்த அவர் கலந்து கொண்டால் இராமருக்குத் தீட்டு ஏற்பட்டு விடுமல்லவா? எனவே குடியரசுத் தலைவர் அந்தப் பழியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். ஏற்கனவே நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழாவிற்கு அவரை அழைக்கவில்லை என்ற செய்தியும் நமது நினைவிற்கு வந்து தொலைக்கிறது.
கோயில் இன்னமும் முழுமையாகக் கட்டி முடிக்கப்படாத நிலையில் அவசர அவசரமாகத் திறக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. பாஜகவின் அவசரத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் கோயிலைத் திறந்து விட்டால், இந்து சமய மக்களின் (குறிப்பாக வட இந்திய இந்து சமய மக்களின்) உள்ளங்களை வென்று விடலாம். அவர்களின் வாக்குகளை ஒட்டுமொத்தமாக அள்ளி விடலாம் என்று கருதியே பாஜக கவனமாகக் காய்களை நகர்த்தி வருகிறது. வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவதாகக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீது குற்றம் சாட்டிய பாஜக தற்போது இந்து வாக்கு வங்கி அரசியலைக் கனகச்சிதமாகச் செய்து வருகிறது.
இராமர் கோயில் கட்டிமுடித்து திறக்கப் பட்டுவிட்டது. 500 ஆண்டுகளாக இருந்த பாபரி மஸ்ஜிதை இடித்து விட்டு அந்த இடத்தில் கட்டப்பட்ட கோயிலைத் திறந்து விட்டார்கள். 'மாபெரும் வெற்றி' என இந்துத்துவ அமைப்புகள் களி நடனம் புரிகின்றன. சாத்தான்கள் வேதம் ஓதிய கதையாக பிரதமர் நரேந்திர மோடியும், ஆர்எஸ்எஸ்ஸின் மோகன் பாகவத்தும் நல்லிணக்கம் பற்றி பயிற்சி வகுப்பு நடத்துகிறார்கள்.
இந்நிலையில் நாடெங்கிலுமுள்ள முஸ்லிம்கள் கைபிசைந்து கையறு நிலையில் நிற்கின்றனர். முகநூல்களிலும், வலைதளங்களிலும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அநீதி, அநீதி என ஆர்ப்பரிக்கின்றனர். 9.11.2019 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் காரணமாகவே கோயில் கட்டும் பணியை நிறைவேற்ற முடிந்தது. எனவே அந்தத் தீர்ப்பையும் விமர்சனம் செய்து வருகின்றனர். எனினும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்த போதும், தற்போது இராமர் கோயில் கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்ற தருணத்திலும் இந்திய முஸ்லிம் சமூகம் மிகுந்த பொறுமை உணர்வுடனும், எச்சரிக்கை உணர்வுடனும் நடந்து கொண்டுள்ளதாகவே நான் கருதுகிறேன்.
இராமர் கோயிலை மன்னர் பாபர் இடித்தார். அந்த இடத்தில் மஸ்ஜிதைக் கட்டினார் என்பதற்கு வரலாற்றில் எந்த ஆதாரமும் இல்லை. அதே நேரத்தில் 6.12.92இல் பாபரி மஸ்ஜித் இந்துத்துவ அமைப்புகளால் இடித்துத் தகர்க்கப்பட்டது. 9.11.2019 அன்று இந்திய உச்ச நீதிமன்றம் இந்துத்துவ அமைப்புகளுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியது. 22.1.2024 அன்று பாபரி மஸ்ஜித் இடித்துத் தகர்க்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்ட இராமர் கோயில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது ஆகிய செய்திகளை இந்திய வரலாறும், உலக வரலாறும் தனது பக்கங்களில் மிகத் துல்லியமாகப் பதிவு செய்து கொண்டது என்பது மட்டும் உண்மை.