காஸாவில் போர் நிறுத்தம் கொண்டுவர வலியுறுத்தியும், ஃபலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலையைக் கண்டித்தும் சென்னைப் பல்கலைக் கழகம் சேப்பாக்கம் வளாகத்தில் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு(SIO) சார்பாக மாணவர் ஒன்றுகூடல் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் SIO மாநில பொதுச் செயலாளர் முஹம்மத் ஃபாயிஸ் பேசுகையில், 'கடந்த அக்டோபர் 7ஆம் தேதியிலிருந்து ஃபலஸ்தீன் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடுத்து வருகிறது. இதுவரை அங்கே சுமார் 27,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் பாதிப் பேர் குழந்தைகளும் பெண்களும்தான் என்பது இதயத்தைக் கனக்கச் செய்கிறது.
ஃபலஸ்தீன் மீதான இஸ்ரேலின் தாக்குதலை உலக நாடுகள் கண்டித்தும் இஸ்ரேல் தன் அராஜகத்தை நிறுத்துவதாக இல்லை. பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் போன்ற பொதுத் தளங்களை இஸ்ரேல் குறிவைத்துத் தகர்த்து வருகிறது. இதனால் மாணவர்கள் கல்வி கற்கவே முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது' என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய SIO மாநில கல்வி வளாகச் செயலாளர் ரஹ்மத்துல்லா, ஃபலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்டுவருவது வெறும் தாக்குதல் அல்ல; இனப்படுகொலை. ஈவிரக்கமின்றி இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை செயல்படுகிறது.
உலகின் மிகப் பெரிய ராணுவ பலம் கொண்ட ஒரு நாட்டை ஃபலஸ்தீனர்கள் தம் நெஞ்சுரத்தால் எதிர்கொண்டு வருகின்றனர். இத்தனை காலம் போர் நீடிப்பதும், மக்களைக் கொல்வதைத் தவிர வேறெந்த பலனையும் இஸ்ரேல் ஈட்டாததும் அந்நாட்டுக்கு அவமானமான ஒன்று. இன்றைக்கு உலக அரங்கில் இஸ்ரேல் தனிமைப் படுத்தப்பட்டுள்ளது. மிகச் சில வளர்ந்த நாடுகள் மட்டுமே இஸ்ரேலின் பக்கம் நிற்கின்றன. இஸ்ரேலுக்கு பெரும் நெருக்கடி உலகளவில் ஏற்பட்டிருக்கிறது. இச்சூழல் ஃபலஸ்தீனர்களுக்குக் கிடைத்த வெற்றி' என்று கூறினார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த மாணவர் ஒன்றுகூடல் நிகழ்வில் சுமார் 50 மாணவர்கள் கலந்துகொண்டு, இஸ்ரேலுக்கு எதிராகத் தம் கண்டனங்களைப் பதிவு செய்தனர். பதாகைகள் வைத்து போர் நிறுத்தம் கொண்டுவர வலியுறுத்தினர்.