உலகின் இன்ப நுகர்ச்சிக்குப் பின்னால், வசதி வாய்ப்புகளுக்குப் பின்னால் அவற்றை இன்னும் அதிகமாக அள்ளிக் குவிக்க வேண்டும், பெருக்கிக் கொள்ள வேண்டும் என்னும் ஆர்வத்தில் வேகவேகமாக ஓடிக் கொண்டிருக்கும் மனிதனை ரமளான் மாதத்தின் நோன்பு சற்று நிறுத்தி இவ்வாறு எச்சரிக்கை விடுக்கிறது.
‘உண்டு மகிழ்ந்து உலக இன்பத்தை அனுபவிப்பதில் மூழ்கி இருக்கும் மனிதனே! இவ்வுலக வாழ்க்கை என்பது மறு உலகத்தை நோக்கிச் செல்கின்ற ஒரு பயணம் ஆகும். இந்தப் பேருண்மையை நீ மறந்து விடாதே! இவ்வுலக வாழ்க்கையை இன்னும் செழிப்பாக, சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும். அதன் இன்ப நுகர்ச்சியைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்று அல்லும் பகலும் நீ பாடுபடுவது போல் மறுவுலக வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்பதிலும் சிறிது கவனம் செலுத்து. அதற்காகவும் முயற்சி செய். உலக மாயைக்குப் பலியாகி பாவங்களில் மூழ்கி மறுமையைப் பாழ்படுத்தி விடாதே. மறுமையில் சுவன பாக்கியத்தை அடைய வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்’.
ரமளான் மாதத்தின் வருகையையும் அதில் நோற்கப்படும் கடமையான நோன்பையும் நாம் ஆழ்ந்து சிந்தித்தால், அது உண்மையான ஆன்மிக உணர்வை ஊட்டுவதற்கான சிறந்த பயிற்சிக் களமாகத் திகழ்வதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
நோன்பு இறையடியார்களை எத்தகைய பயிற்சி வளையத்துக்குள் கொண்டு வருகிறது எனில் ஒவ்வொரு நாளும் பின்னிரவு நேரத்தில் எழுந்து உணவு உட்கொள்ளுதல், அல்லாஹ்வுக்காகவே நோன்பு நோற்கிறேன் என்று உறுதி கொள்ளுதல், அந்த உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் பகல் முழுவதும் நோன்பைப் பேணிக்காத்தல், ஒவ்வொரு இரவும் சிறப்புத் தொழுகையை நிறைவேற்றுதல், திருக்குர்ஆனை அதிகமாக ஓதுதல் இவை நோன்பு நமக்கு வழங்கும் பயிற்சிக் களங்களாகும்.
நோன்பு நோற்றிருக்கும் பகல் நேரங்களில் இறைக்கண்காணிப்பை மனதில் நிலை நிறுத்துகிறது. தாங்க முடியாத வெயில் காலத்தில் கூட, பசியும் தாகமும் கடுமையாக வாட்டி வதைக்கும் நேரங்களில் கூட ஒரு மிடறு தண்ணீர்கூட அருந்தாமல், அதுபற்றி சிறிதும் வருத்தம் கொள்ளாமல் நோன்பைப் பாதுகாக்கச் செய்கிறது. இதைத்தான் பயபக்தி இறையச்சம் என்றும் இதனை அடைவது தான் நோன்பின் உயர் இலட்சியம் எனவும் திருமறை குறிப்பிடுகிறது.
‘இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு முன் இருந்த (நபிமார்களைப் பின்பற்றிய)வர்கள் மீது கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (அதன் மூலம்) நீங்கள் இறையச்சம் உள்ளவர்களாய்த் திகழக்கூடும்’ (திருக்குர்ஆன் 2:183)
ஒருமுறை உமர்(ரலி) அவர்கள், தக்வா இறையச்சம் என்றால் என்ன என்று உபை பின் கஅப்(ரலி) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு உபை ‘முட்கள் நிறைந்த பாதையில் நடந்து செல்லும்போது எப்படி முட்களில்பட்டு ஆடை கிழிந்துவிடக்கூடாது என்பதற்காக ஆடைகளை மடித்துப் பிடித்துக் கொண்டு பேணுதலாகச் செல்வோமோ அது போல உலக வாழ்வில் பேணுதலாக இருப்பது தான் இறையச்சம்’ என்றார்கள்.
இறையச்சம் என்றால் என்ன என்பதற்கு அலீ(ரலி) அவர்கள் ‘மகத்துவமிக்க இறைவனுக்கு அஞ்சுதல். அல்லாஹ்விடமிருந்து இறக்கி அருளப்பட்ட வேதத்தின் படி நற்செயல்களைச் செய்தல், குறைந்த வாழ்வாதாரத்தைக் கொண்டு போதுமாக்கிக் கொள்ளுதல், (உலகத்திலிருந்து) பயணம் புறப்படும் நாளுக்காகத் தயார் செய்தல்’ என்று விளக்கமளித்துள்ளார்கள்.
ரமளான் நோன்பு மூலம் இஸ்லாம் அளிக்கும் முழு மாதப் பயிற்சி இறையச்சம், மறுமைச் சிந்தனை ஆகியவற்றின் அடிப்படைகளில் அமைந்ததாகும். நிலைகுலையாத இறைநம்பிக்கையும் மறு உலகத்தின் மீதான உறுதியும் இருந்தால் தான் ஒரு மனிதன் இத்தகைய நோன்பை அதன் அடிப்படையிலான தொடர் பயிற்சியை மேற்கொள்ள முடியும். அவை தான் அந்தக் கடினமான வணக்கத்தை எளிதாக ஆக்கிட அவனுக்குத் தூண்டுகோலாக இருக்கிறது.
இதனால் தான் இறைநம்பிக்கையாளர்கள் நோன்பு நோற்பதைச் சிரமமாகக் கருதுவதில்லை. ரமளான் நோன்புகளை முழு மனதுடன் நோற்கின்றார்கள். அதில் ஓர் அலாதியான இன்பத்தை உணர்கின்றார்கள். ஒரு மாதம் முழுவதும் நீடிக்கும் அந்தத் தொடர் பயிற்சியின் பயனாக ஏனைய நாள்களிலும் அனைத்து வழிபாடுகளிலும் இன்ப நிலையை அடைகின்றார்கள்.