மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

அரசியல்

போராடும் விவசாயிகள் மீது போர் தொடுக்கும் அரசு
ஹபிபுர் ரஹ்மான், 1-15 மார்ச் 2024


போராடும் விவசாயிகள் மீது போர் தொடுக்கும் அரசு ஹபீப்

கடந்த 2020ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த விவசாயிகளின் போராட்டம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்றிய பாஜக அரசு மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது. அது முறையாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படாமலும் விவசாயிகளிடம் கருத்துக் கேட்காமலும் கொண்டுவரப்பட்டது. அந்தச் சட்டங்கள் தங்களுக்குப் பாதகமாகவும் கார்ப்பரேட்களுக்குச் சாதகமாகவும் இருப்பதாகக் கூறி அந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் ‘டெல்லி சலோ’ எனும் போராட்டத்தில் இறங்கினர். பஞ்சாபில் தொடங்கிய அந்த விவசாயிகளின் போராட்டம் டெல்லியை நோக்கிச் சென்றது. கிட்டத்தட்ட 13 மாதங்கள் 40க்கும் மேற்பட்ட விவசாயச் சங்கங்கள் இணைந்து நடத்திய அந்தப் போராட்டத்தில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

அதில் 700 விவசாயிகள் உயிரிழந்தனர். விவசாயிகளின் தீரத்துடனான இந்தப் போராட்டம் நடந்து கொண்டிருந்த வேளையில் பஞ்சாப், கோவா, ஹரியானா உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தல் நெருங்கியதால் அதைக் கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறை வேற்ற ஒப்புக்கொண்டது. அந்த மூன்று சட்டங்களையும் திரும்பப்பெற்றது.

ஆனால் ஒன்றிய பாஜக அரசு அந்த சட்டங்களைத் திரும்பப் பெற்றதோடு மட்டும் நின்று விட்டது. அவர்களின் பிற கோரிக்கைகளைக் கிடப்பில் போட்டது. இதனால் கோபமடைந்த விவசாயிகள் கடந்த போராட்டத்தில் தங்களின் மீது பதியப்பட்ட வழக்குகளைத் தள்ளுபடி செய்யவும், பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை வாங்குவதற்கான சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கவும், விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யவும் வேண்டும் என்கிற பிரதான கோரிக்கைகளுடன் மீண்டும் டெல்லியை நோக்கிய ‘டெல்லி சலோ 2.0’ போராட்டத்தை அறிவித்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தொடர்ந்து விவசாயச் சட்டங்களை மையப்படுத்திய விவசாயிகளின் போராட்டத்தைத் தடுக்க பாஜக அரசு பல முயற்சிகளை மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக அண்மை யில் சண்டிகரில் விவசாயிகளுடன் ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி அவர்களை அமைதிப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டது. உணவு நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல்,  வேளாண் அமைச்சர் அர்ஜுன் முண்டா ஆகியோர் கலந்து கொண்ட கூட்டம் நள்ளிரவு வரை நீடித்தது.

மின்சாரச் சட்டம் 2020, உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் கொல்லப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு, போராட்டத்தின் போது விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுதல் ஆகிய வற்றுக்கு அரசு பிரதிநிதிகள் குழு ஒப்புக்கொண்டது.

ஆனாலும் அனைத்துப் பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் சட்டம் இயற்ற வேண்டும், விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும், சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்கவில்லை.

இதையடுத்து கடந்த பிப்ரவரி 13 அன்று அரசியல் சாராத விவசாயக் குழுக்களான கிசான் மஸ்தூர் மோர்ச்சா, சம்யுக்தா கிசான் மோர்ச்சா உள்ளிட்ட குழுக்கள் அழைப்பு விடுத்ததை ஒட்டி பஞ்சாப், ஹரியானா, உத்திரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சார்ந்த விவசாயிகள் தங்களது டெல்லியை நோக்கிய அணிவகுப்பைத் தொடங்கினர். கடந்த முறை விவசாயிகள் 13 மாதங்கள் ஆனாலும் தங்களது கோரிக்கைகள் நிறைவேறிய பின் தான் டெல்லியை விட்டு வெளியேறினர்.

அதேபோல்தான் இந்த முறையும் விவசாயிகள் எத்தனை மாதம், ஆண்டுகள் ஆனாலும் தங்களது போராட்டத்தைக் கைவிடாமல் இருப்பதற்கான முன் தயாரிப்புகளுடன் தான் கிளம்பி வந்தனர். ஆனால் அவர்களின் கோரிக்கைகளை ஏற்கத் தயாராக இல்லாத ஃபாசிஸ பாஜக அரசு அவர்களை டெல்லிக்குள் நுழைய விடாமல் தடுப்பதற்கான தனது வேலைகளை ஆரம்பித்தது.

டெல்லி, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் எல்லைகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்தது. அந்தப் பகுதிகளில் மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். டெல்லி எல்லையிலுள்ள அம்பாலா, குருஷேத்ரா, கைதால், ஜிந்த், ஹிசார், பதேஹாபாத், ஹிசார் ஆகிய இடங்களில் ராணுவத் தரத்துடனான விதவிதமான தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இணையதளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முடக்கப்பட்டன.

பிப்ரவரி 11 அன்றே ராஜஸ்தான் மாநிலம் பஞ்சாப்  ஹரியானாவுடனான தனது எல்லைகளைச் சீல் வைத்து ஸ்ரீ கங்காநகர், ஹனுமன்கர் மாவட்டங்களில் 144 தடை உத்தரவைப் பிறப்பித்தது.

பஞ்சாபிலிருந்து ஏராளமான விவசாயிகள் ஹரியானா வழியாக டெல்லியை அடைய டிராக்டர் அணிவகுப்பைத் தொடங்கி, ஹரியானா  பஞ்சாப் மாநிலங்களுக்கு இடையேயான ஷம்பு  அம்பாலா, கானௌரி  ஜிந்த் ஆகிய எல்லைக்கு வந்தடைந்தனர். அவர்கள் ஹரியானாவிற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அவர்களைத் தடுக்க பஞ்சாப் எல்லையை ஒட்டிய சாலைகளில் இரும்பு ஆணிகள், கம்பி வேலிகள், கான்கிரீட் தடுப்புகள், கற்பாறைகள், அகழிகள், கலவர எதிர்ப்பு வாகனங்கள் எனப் பல அடுக்கு தடுப்புகளுடன் கூடிய விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஹரியானா அரசு செய்திருந்தது. டெல்லி எல்லைப் பகுதியில் ஒன்றிய அரசு, விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதைத் தடுக்க பெருமளவிலான காவல்துறை, துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுத் தடுப்புகளைப் போட்டது. அங்கிருந்து உண்மைத் தகவல்களை வெளிவராமல் தடுக்க இணையச் சேவைகள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைக் கலைக்க தண்ணீர் பீரங்கி, ட்ரோன்கள் மூலம் கண்ணீர்ப் புகைக் குண்டுகள், ரப்பர்க் குண்டுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தித் தாக்கினர். அதனையும் தாண்டி விவசாயிகள்\ அந்தத் தடுப்புகளைக் கடந்து ஹரியானாவிற்குள் நுழைய முயன்றபோது காவல்துறைக்கும் விவசாயிகளுக்கும் மோதல் ஏற்பட்டது. அதில் விவசாயிகள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். பிப்ரவரி 16ஆம் தேதி பஞ்சாபின் ஷம்பு எல்லைப் பகுதியில் டிரோன்கள் மூலமாக விவசாயிகள் மீது நிகழ்த்தப்பட்ட கண்ணீர்ப் புகைக் குண்டுத் தாக்குதலில் 78 வயது மதிக்கத்தக்க கியான் சிங் எனும் விவசாயி மாரடைப்பால் உயிரிழந்தார். அதே நாள் அதே பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ரயில்வே போலீஸ் (GRP) அதிகாரி ஹீராலால்(56) மாரடைப்பால் உயிரிழந்தார்.

கடற்கொள்ளையர்களைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் Long Range Acoustic Device எனப்படும் ஒலிபெருக்கி பயன்படுத்தப்பட்டது. இதன் மூலம் தாக்கப்பட்டவர்களுக்கு செவிப்பறைகள் கிழிந்து காது கேளாத நிலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்த அவர்களின் அடுத்தடுத்த போராட்டங்களையும் ஒன்றிய பாஜக அரசு தனது காலாட்படைகளைப் பயன்படுத்தி வன்முறையால் தடுத்து நிறுத்தியது. அதில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் படுகாய மடைந்தனர். இதற்கிடையில் நான்கு முறை ஒன்றிய அரசு விவசாயிகளிடம் நடத்திய பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்ததையொட்டி மீண்டும் பிப்ரவரி 21ஆம் தேதி 12000 விவசாயிகள் தங்களின் அணிவகுப்பைத் தொடங்கினர்.

அந்த அணிவகுப்பையும் பாஜக அரசு கடுமையான வன்முறையைக் கட்டவிழ்த்துத் தடுத்தது. அதில் ஷம்பு பகுதியில் விவசாயிகள் மீது அரசு நடத்திய மூர்க்கத்தனமான ட்ரோன் மூலம் புகைக்குண்டு, ரப்பர்க் குண்டுத் தாக்குதலில் பல விவசாயிகள் படுகாயமடைந்தனர். அதில் 23 வயது மதிக்கத்தக்க சுபகரன்சிங் (23) எனும் இளம் விவசாயி ரப்பர் குண்டால் பின் மண்டையில் தாக்கி படுகொலை செய்யப்பட்டார்.

அமைதியான முறையில் போராட்டம் நடத்த நம் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் அனுமதித்துள்ள நிலையில், ஃபாசிஸ பாஜக அரசு விவசாயிகளின் போராட்டத்தை வன்முறையைக் கொண்டு தடுக்க முயற்சிப்பது கண்டனத்திற்குரியது.  விவசாயிகளைத் தடுக்க அவர்கள் போட்டுள்ள தடுப்புகளும் அங்கு நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களும் பயன்படுத்தும் உயர்ரக ஆயதங்களும் ஏதோ அந்நிய நாட்டின் படைவீரர்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதைப் போல் இருக்கிறது. விவசாயிகளின் போராட்டத்தைத் தடுக்க பாஜக பயன்படுத்தும் இந்த வன்முறை மிகவும் தவறானது; கண்டிக்கத்தக்கது.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள விவசாயிகள் பெரும்பாலும் பஞ்சாப், ஹரியானா, உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தான்.

இவர்கள் அனைவரும் பாஜகவின் வாக்கு வங்கி கிடையாது. அதனால் இவர்களது கோரிக்கையை ஆதரித்தாலும் ஆதரிக்காவிட்டாலும் வருகிற தேர்தலை அது பெரும் அளவில் பாதிக்காது எனும் பாஜகவின் தலைக்கனம் தான் அது விவசாயிகளை இவ்வளவு மோசமாக நடத்துவதற்கான காரணமாகச் சொல்லப்படுகிறது.

இது மட்டும் இன்றி பாஜக ஆதரவாளர்கள் போராடும் விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு  ஆதரவானவர்கள், நாட்டிற்கு எதிரானவர்கள், எதிர்க்கட்சிகள் தூண்டி விட்டதன் காரணமாகத்தான் இவர்கள் போராடுகின்றனர் என்பன போன்ற பிம்பத்தை சமூக ஊடகங்களில் கட்டமைக்க முயற்சி செய்து வருகின்றனர். டெல்லி உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் 144 தடை உத்தரவைப் பிறப்பித்திருப்பதன் மூலம் பாஜக அங்கு வசிக்கும் பொது மக்களுக்கு இந்த விவசாயிகளின் மீது வெறுப்பை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளையும் செய்து வருகிறது.

இந்தப் பிரச்னை குறித்து தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளில் ஒருவரான ராஜ்வேந்தர் சிங் IBC தமிழுக்கு அளித்த நேர்காணலில் ‘தற்போது அவர்கள் எங்களுக்கு மிக அருகாமையிலிருந்தே கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் ரப்பர் தோட்டாக்களையும் வைத்துச் சுடுகின்றனர். அவை சுடப்படும் போது எங்கள் தலைமீதோ நெஞ்சிலோபட்டால் கண்டிப்பாக உயிர் இழக்கும் அபாயம் இருக்கின்றது .

அரசாங்கம் இவ்வளவு தூரம் கீழே இறங்கி பெரும் வன்முறையை எங்கள் மீது கட்டவிழ்க்கும் என்று எதிர்பார்க்கவில்லை. நாங்கள் எங்களது நாட்டில் எங்களது தலைநகரத்திற்குச் சென்று எங்களுடைய கோரிக்கைகளை முன் வைப்பதற்காகச் செல்கிறோம். நாங்கள் கலவரத்திற்கோ சண்டை போடுவதற்கோ செல்லவில்லை. ஏனென்றால் நாங்கள் இரண்டு மாதத்திற்கு முன்னதாகவே இந்தப் போராட்டத்தை அறிவித்திருந்தோம்.

ஆனால் அரசோ போராட்டம் தொடங்குவதற்குப் பத்து நாள்களுக்கு முன்பே காவல்துறை, ராணுவம், டாஸ்க் ஃபோர்ஸ், ட்ரோன் ஃபோர்ஸ் ஆகியவற்றையெல்லாம் தயார்படுத்திவிட்டது. இது போன்று ட்ரோன்களை வைத்துத் தாக்குதல் நடத்துவதெல்லாம் எதிரி நாட்டுப் படை வீரர்கள் பங்கர்களில் அமர்ந்து தாக்குதல் நடத்தும் போது அவர்களைத் தாக்கப் பயன்படுத்தப்படுவது.

முதல் ட்ரோன் அங்கு வந்தபோது நான் அந்த இடத்தில் தான் இருந்தேன். அந்த ட்ரோன் எங்களைப் படம் பிடிக்கத் தான் வருகின்றது என்று நினைக்கும் வேளையிலே மாருதி 800 காரின் அளவு இருந்த அந்த ட்ரோன் எங்களைக் கண்ணீர்ப் புகைக் குண்டுகளால் தாக்க ஆரம்பித்தது. தரை வழியாக எங்களைத் தாக்குவார்கள் என்பது எங்களுக்குத் தெரியும் அவற்றை நாங்கள் தடுத்துக் கொண்டிருந்தோம். ஆனால் வானத்திலிருந்து இத்தகைய தாக்குதலை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை’ என்று கூறினார்.

மேலும் அதே நேர்காணலில் அவர் அரசாங்கம் பயன்படுத்திய கண்ணீர்ப் புகைக் குண்டுகளின் தோட்டாக்களையும் ரப்பர் தோட்டாக்களையும் காட்டினார். அவை ஒவ்வொன்றும் ஒரு ஜான் அளவிற்கு இருக்கின்றது. அவற்றைப் பார்க்கையிலே தன்நாட்டு மக்கள் மீது பாஜக எத்தகைய கொடூரத் தாக்குதலைக் கட்டவிழ்த்து இருக்கிறது என்று நமக்குப் புரிகிறது. ஆனாலும் மனம் தளராத விவசாயிகள் பட்டங்களைக் கொண்டு ட்ரோன்களைத் தடுத்து வருகின்றனர். கண்ணீர்ப் புகைக் குண்டுகளை ஈரச் சாக்கை கொண்டும், ஆக்சிஜன் மாஸ்குகளைப் பயன்படுத்தியும் தடுக்கின்றனர்.

பாஜக அரசு விவசாயிகளின் மீதான இந்த காட்டுமிராண்டித்தன தாக்குதலைக் கைவிட வேண்டும். விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்தே ஆக வேண்டும். பாஜக விவசாயிகளின் மீது நடத்தும் இந்தத் தாக்குதல் வரும் ஆண்டுகளில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அது தன்னை எதிர்ப்பவர்களை எந்த எல்லைக்கும் சென்று தடுக்கும் என்பதை நமக்கு எச்சரித்துக் காட்டுகிறது. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோல்வியுறச் செய்வதே வருங்காலங்களில் இந்தியாவில் நீதியை, மக்களாட்சியைக் காப்பதற்கான இறுதித் தீர்வு என்பதை நாம் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும். அதற்கான முன்னோட்டமாக விவசாயிகளின் போராட்டம் வெற்றி பெற்றே ஆக வேண்டும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்