ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் People's manifesto மக்கள் தேர்தல் அறிக்கையை வருகிற 2024 தேர்தலைக் கருத்தில் கொண்டு இப்போது வெளியிட்டு இருக்கிறோம். நாங்கள் ஒவ்வொரு சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களின் போதும் மக்கள் தேர்தல் அறிக்கையைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றோம்.
மக்களுடைய கருத்தை மக்களின் சார்பாகவே ஒருங்கிணைத்துத் தொகுத்து இந்தத் தேர்தல் அறிக்கையை வெளியிடுகின்றோம். இது ஒரு கட்சி நலனுக்கோ, அமைப்பின் நலனுக்கோ, ஒரு சமுதாயத்தின் நலனுக்காகவோ மட்டுமே வெளியிடப்படுவது அல்ல. ஒவ்வொரு மனிதரையும் தனிப்பட்ட முறையிலும் குழு ரீதியாகவும் அவர்கள் எதிர்பார்க்கின்ற விஷயங்களை ஆய்வு செய்து அவற்றைத் தொகுத்து அதையே இங்கே வெளியிட்டு இருக்கின்றோம்.
நாங்கள் இவ்வளவு விரைவாக இந்தத் தேர்தல் அறிக்கையைத் தயார் செய்துள்ளதன் காரணம், ஒவ்வொரு கட்சியும் தங்களுடைய தேர்தல் அறிக்கையைத் தயாரிப்பதற்கு முன்னால் மக்களிடம் கருத்துக் கேட்பார்கள். அவர்களுக்கு முன்னதாகவே நாங்கள் மக்களின் கருத்துகளை ஒருங்கிணைத்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு கிளை சார்பாக இந்த மக்களின் தேர்தல் அறிக்கையை அவர்களிடம் கொண்டு சேர்த்துவிடுவோம்.
அதிலிருந்து அவர்கள் தங்களின் தேர்தல் அறிக்கையில் நாம் சொல்லும் விஷயங்களையும் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. இதற்கு முந்தைய தேர்தல்களின் போது பல்வேறு கட்சியினர்கள் எங்களுடைய மக்கள் தேர்தல் அறிக்கையின் சாரங்களை தங்களின் தேர்தல் அறிக்கையில் சேர்த்திருப்பது வரலாறு.
இந்த அடிப்படையில் மக்கள் நலன் சார்ந்த தேர்தல் அறிக்கையை நாங்கள் முக்கியத் தலைப்புகளில் வடிவமைத்து இருக்கின்றோம். மக்கள் நலன் சார்ந்த விஷயங்கள் குறித்து இந்த அறிக்கை பேசுகிறது. நீதி, பாதுகாப்பு அனைத்துத் தரப்பினருக்கும் சமமான, சரியான, ஏற்றத்தாழ்வற்ற நீதி, பாதுகாப்பு வழங்குவதற்கான விஷயங்களை இங்கே நாம் பதிவு செய் திருக்கின்றோம்.
இப்போது விவசாயிகளுக்கு என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது தான். அவர்களின் கோரிக்கைகள் எவ்வாறு நிராகரிக்கப்படுகின்றது என்பதை நாம் அறிவோம். அவ்வளவு சிரமங்களுக்கு மத்தியிலும் அவர்கள் தங்களின் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஆனால் நாங்கள் விவசாயிகளின் போராட்டம் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே வேளாண் சார்ந்து ஒன்றிய அரசு கவனம் செலுத்த வேண்டிய விஷயங்களையும் இதில் பதிவு செய்து இருக்கின்றோம்.
தற்போது ஊழல், நவீன ஊழல், அங்கீகரிக்கப்பட்ட ஊழல் போன்றவற்றை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்பொழுது கூட உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திர விஷயத்தில் என்ன தீர்ப்பு வழங்கி இருக்கின்றது என்பதெல்லாம் நாம் அறிந்ததே. அதையும் கூட நேற்றைய தினம் தீர்ப்பு வருவதற்கு முன்னரே இந்தத் தேர்தல் அறிக்கையில் நாங்கள் இணைத்திருக்கிறோம்.
சமூகத்தைப் பாதிக்கின்ற பல்வேறு வகையான விவகாரங்கள் இன்று அரசியல் தளத்தில் பேசப்படாமலேயே இருக்கின்றன. மிக முக்கியமாக ஆபாசம், வட்டியின் கொடுமை சார்ந்த விஷயங்கள், வன்முறை, பிரிவினை வாதங்கள், வெறுப்பு, துவேஷத்தின் அடிப்படையில் இளைஞர்கள் உருவாக்கப்படுவது குறித்து பேசப்படுவதில்லை. போதையினால் மாணவர்களும் இளைஞர்களும் எந்த அளவுக்குப் பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறித்து முழுமையாகப் பேசப்படுவதில்லை. இவையெல்லாம் அரசியல் தளத்தில் பேசப்பட வேண்டும் என்பதற்காக மக்கள் தேர்தல் அறிக்கையிலே இந்த விஷயங்களைப் பதிவு செய்து இருக்கின்றோம்.
மாணவர்கள் கல்வி கற்கின்ற பொழுது அவர்களுக்கு ஏற்படுகின்ற பல்வேறு\ விதமான சிரமங்களை நீக்க வேண்டும். நீட் போன்ற விஷயங்களையும் இதில் நாம் பதிவு செய்திருக்கின்றோம். கல்வி வளாகங்களில் நடைபெறுகின்ற கல்விக்குத் தடையான விஷயங்கள் என்ன இருக்கின்றதோ அதை எல்லாம் தேர்தல் அறிக்கை தரவுகளுடன் எடுத்துரைக்கிறது.
பெண்கள் மதிக்கப்பட வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும் அவர்களுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும். சம அந்தஸ்து அவர்களுக்கு வழங்கப்பட\ வேண்டும் என்ற ரீதியில் பெண் கல்வி, முன்னேற்றம் சார்ந்த விஷயங்கள் இதில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
வெளியுறவுக் கொள்கையையும் நாம் சேர்த்திருக்கின்றோம். வெளியுறவுக் கொள்கையை இந்தியா எப்படி வகுக்க வேண்டும் என்பதை ஆழமான அழுத்தமான இறுதியான ஒரு முடிவின் அடிப்படையிலே வெளியுறவுக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். பல்வேறு நாடுகளில் இந்தியர்கள் வாழ்கிறார்கள். இரட்டைக் குடியுரிமை பெற்று வாழக்கூடிய மக்களும் இருக்கின்றார்கள். இது சார்ந்த விஷயங்களும் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
குறிப்பிட்ட நபர்களிடத்திலே மட்டும் பொருளாதாரம் குவிந்து கிடக்கிறது. குறிப்பிட்ட சமூகத்திடத்திலே மட்டும் வேலை வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றது. இவற்றுக்கு எதிராகவும், இவை சமமாகப் பங்கிட்டுக் கொடுக்கப்பட வேண்டும். ஏழைகள் நடுத்தர நிலைக்கு வரவேண்டும். நடுத்தர மக்கள் உயர வேண்டும். பொருளாதாரத்தின் அடிப்படையிலேயே சமமான சூழலினை உருவாக்குவதற்கான பொருளாதார அமைப்பினையும் வழிவகுத்து இருக்கின்றோம்.
தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்