மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

இஸ்லாம்

ரமளான் அன்றும் இன்றும்..!
முஹம்மது முஜம்மில், 1-15 மார்ச் 2024


ரமளான் அன்றும் இன்றும்..!

எங்கள் பள்ளிப் பருவத்தில் ரமளான் என்றாலே தனி உற்சாகம் பிறந்துவிடும். பெரியவர்கள் சிறியவர்கள் என்று எல்லோரும் எல்லா வேளைகளும் ஜமாஅத்தோடு தொழுவார்கள். அதே போன்று நோன்பு திறக்கும் நேரத்தில் நாங்கள் எல்லோரும் சுறுசுறுப்பாக வேலை (இஃப்தார் ஏற்பாடுகள்) செய்வோம். விடுமுறை நாள்களில் அல்ல, எல்லா நாள்களிலும்! பள்ளிவாசல் எங்கள் வீட்டிலிருந்து கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம். ஆனால் நாங்கள் ஒவ்வொரு வேளை தொழுகைக்கும் நடந்தே செல்வோம்.

பத்தாம் வகுப்புக்குப் பிறகு தான் சைக்கிள். அப்பொழுதெல்லாம் பெரும்பாலும் மக்கள் நடந்தோ அல்லது சைக்கிளிலோ தான் பள்ளிவாசலுக்கு வருவது வழக்கம். இரு சக்கர வாகனம் (பைக்) யாரோ ஒரு சிலர் தான் வைத்திருப்பார்கள், அதுவும் அவர்கள் வீடு திரும்பும் வழியில் எங்கள் பள்ளியில் நோன்பு திறக்க வருவார்கள், அவ்வளவு தான். கார் எல்லாம் பார்க்கவே முடியாது.

காலையில் ஸஹர் உணவு உண்ட பிறகு ஃபஜ்ர் தொழுகைக்குச் செல்ல வேண்டும், லுஹர் தொழுகை மட்டும் எல்லோரும் வேலை வியாபாரம் என்று இருப்பார்கள். ஆங்காங்கே தொழுது கொள்வார்கள். மீதமுள்ள மூன்று தொழுகைகளுக்கு மீண்டும் எல்லோரும் தன்னுடைய வீட்டிற்கு அருகில் இருக்கும் பள்ளியில் ஆஜராகி விடுவார்கள்.

சஹரில் என்ன உண்ண வேண்டும், இஃப்தாரில் என்ன என்ற கேள்விக்கே இடம் இல்லை. காரணம் வீட்டில் சஹரில் இரண்டு ரொட்டியும், குழம்பு, தயிர் சாதம் மட்டுமே உண்பது வழக்கம். நோன்பு திறப்பது பள்ளிவாசலில். இரவில் ஒன்றரை மணி நேரம் இரவுத் தொழுகை நடைபெறும். இதற்கிடையில் பள்ளி, கல்லூரி, வேலை, வியாபாரம் என்று ஆண்களும் சமையல், துணி துவைப்பது, வீட்டைச் சுத்தம் செய்வது என்று பெண்களும் எல்லா வீட்டு வேலைகளும் செய்ய வேண்டும். அனைவரும் குழாயில் தண்ணீர் பிடிக்க வேண்டும், பிடித்தால் தான், சமையல், குளியல், எல்லாவற்றுக்கும் தண்ணீர் வேண்டும்.

அப்பொழுது இஸ்லாத்தைப் பற்றியோ அல்லது திருக்குர்ஆனைப் பற்றியோ எங்களுக்கு முழுவதுமாகத் தெரியாது. கடமையான தொழுகைகள் போக வேறு என்ன தொழுகைகள் இருக்கின்றன, இறைவேதம் என்றால் என்ன, அதில் என்ன இருக்கின்றது, மொழிபெயர்ப்பு, தஃப்ஸீர், நிறுத்தி நிதானமாக ஓத வேண்டும், தஜ்வீத் சட்டங்களின் அடிப்படையில் ஓத வேண்டும், என்றெல்லாம் தெரியாது. குர்ஆனைப் படித்து முடிப்பது, இறுதியில் சில அத்தியாயங்கள் மனனம் செய்வது, எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் இவ்வளவு தான்.

இன்று பத்து வயது சிறுவனை குர்ஆனைப் பற்றி பேச அழைத்தõல் அவன் ஒரு சொற்பொழிவே ஆற்றி விடுவான். அந்த அளவுக்கு இன்று முன்னேறி இருக்கின்றோம். எதுவும் தெரியவில்லை என்றாலும் பெரியவர்கள் சிறியவர்கள் என்று எல்லோரிடத்திலும் அந்த பயமும், பற்றும் அப்பொழுது இருந்தது.

காலங்கள் உருண்டோடி இன்று கால் நூற்றாண்டு ஆகிவிட்டது. ஆனால் இன்று மார்க்கத்தைப் பற்றியும், இறைவேதத்தைப் பற்றியும் அறிவு எந்த அளவுக்கு வளர்ந்து இருக்கின்றதோ அதே அளவிற்கு உணவு மோகமும் உடை மோகமும் வளர்ந்து விட்டது. முன்பு ரமளான் மாதம் முடிந்து பெருநாள் அன்று வருகின்ற மக்களின் முகங்களில் ஒரு சோர்வு தெரியும். உடல் எடை குறைந்திருப்பதை நன்றாகக் காணலாம்.

இது ஒரு பயிற்சிக்கான மாதம். ஒரு மாதம் பொறுமை காத்து இறைவனை அதிகமாக வழிபட்டு, பாவமன்னிப்புக்கோரி இறையச்சத்தை அடைய முயற்சி செய்வதற்குப் பதிலாக நோன்பு திறக்க என்ன என்ன வேண்டும், என்ன உண்ணலாம் என்பதில் கவனம் செலுத்துகிறோம்.

ஒரு பயிற்சி எடுப்பதற்காக வேறொரு நகரத்திற்கோ அல்லது மாநிலத்திற்கோ நாம் சென்றோம் என்றால் அந்தக் கால கட்டத்தில் குறிப்பாக உணவிற்கு நாம் கொஞ்சம் சிரமப்பட்டுத்தான் ஆக வேண்டும். அப்பொழுது நாம் பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டோம், ஏன் என்றால் கையில் சான்றிதழ் கிடைக்கும் என்ற நம்பிக்கை. ஆனால் அதை விடப் பல மடங்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பயிற்சிக்கு, நாம் ஏன் முக்கியத்துவம் கொடுப்பதில்லை? இந்த மாதத்தில் மட்டும் உணவு விஷயத்தில் கொஞ்சம் தியாகம் செய்து விட்டு, வழிபாடுகளில் கவனம் செலுத்தலாமே! அதிக உணவு உண்டால் விளைவு சோம்பல், தூக்கம் இத்யாதி. குறைவான உணவும் தூக்கமும் வழி பாடுகளுக்கு வழி வகுக்கும், மேலும் ரமளானுக்குப் பிறகும் அந்தப் பயிற்சியைத் தொடருவதற்கு நாம் எல்லோரும் முயற்சிக்கலாம்.

தற்பொழுது அதிகமாக பைக்கிலும் காரிலும் தான் மக்கள் பயணம் செய்கின்றார்கள். இதுவும் இறைவனுடைய மாபெரும் கருணையாகும். நாம் இதன் மூலம் நேரத்தைச் சேமிக்கின்றோம். அந்த நேரத்தை வழிபாடுகளில் ஈடுபடுவதற்குச் செலவழிக்கலாம் இல்லை என்றால் ஓய்விற்காகப் பயன்படுத்தலாம்.

‘இறைநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் இருந்த (நபிமார்களைப் பின்பற்றிய)வர்கள் மீது கடமையாக்கப்பட்டது போல், உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கிறது. (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுள்ளவர்களாய்த் திகழக்கூடும்.’ (திருக்குர்ஆன் 2:183) இந்த வசனத்தின் அடிப்படையில் ரமளான் மாதத்தில் இறையச்சம் என்ற அந்த ஒற்றை விஷயம் தான் நம் இலக்காக இருக்க வேண்டுமே தவிர, உணவோ, உடையோ அல்ல. எப்படியாவது நாம் இறையச்சம் பெறவேண்டும். அடுத்த ரமளான் வரை அதைத் தக்க வைக்க முயற்சி செய்ய வேண்டும்.

நாம் சிறு வயதிலிருந்தே ஒவ்வொரு ரமளான் மாதத்திற்கு முன்பு வரும் வெள்ளிமேடையில் இமாம்கள் கூறுவது, கடந்த ரமளானில் நம்மிடம் இருந்தவர்கள் இந்த ரமளானில் இல்லை. மேலும் பெருநாள் அன்று இந்த ரமளானை அடைந்த எத்தனை பேர் அடுத்த ரமளானை அடைவார்கள் என்றும் தெரியவில்லை. அந்த அடிப்படையில் இறைவன் நமக்கு இன்னும் எத்தனை ரமளான்களை எழுதி வைத்திருக்கின்றான் என்பது அவன் மட்டுமே அறிந்த ஒன்று.

ரமளான் வருவதற்கு முன்பாக பெருநாளுக்குப் புதிய ஆடைகளை வாங்கிவிட்டு, உணவு விஷயத்தில் கொஞ்சம் ‘சமரசம்’ செய்து, முழு மாதமும் இறைவனை வழிபடுவதற்கும், திருக்குர்ஆன் இறக்கி அருளப்பட்ட மாதம் என்பதால் அதை அழகாக ஓதுவதற்கும், புரிந்துகொள்வதற்கும், எல்லாவற்றுக்கும் மேலாக மனிதகுலத்திற்கு வழிகாட்டியாக இறக்கி அருளப்பட்ட இந்த வேதத்தின் அடிப்படையில் நம்முடைய மீதமுள்ள வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்